Saturday, December 31, 2016

கையில் கைபேசியுடன் கைக்கூப்பினர் ஒரு பால்!- கோவிலுக்குள் எப்படி இருக்க வேண்டும்?


இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் தற்கொலைகள் குறைவு. மனதில் எதிர்மறை சிந்தனைகள் அதிகம் இருந்தாலோ, மனதளவில் ஊக்கம் குறைவாக இருந்தாலோ, கோயிலுக்கு சென்று வந்தால், நம் மனம் தானாய் அமைதி அடைவதைப்பார்க்கலாம்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையின் மொழி.
ஆ- மனது; லயம்- ஒருமித்தல். மனது ஒருமிக்கும் இடம் ஆலயம்.
சமீபத்தில் ஒரு நாள் கோயிலுக்கு சென்ற பொது, அன்றைய அபிஷேக உபாயதாரர், முழுக்க முழுக்க தன் கைப்பேசியில் பேசுவதும், ஆலயக்கருவறைகளைக்கைப்பேசியில் படம் எடுப்பதுமாக இருந்தார்.

உண்மையில் மனக்கண்ணில் இறைவன் உள்ளே இருக்க வேண்டுமென்றால் எப்படி நம் நடத்தை இருக்க வேண்டும்?
மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் சொல்வார், ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
இறைவன் தன்னை ஆராயாதவர்கள், எண்ணாதவர்கள் உள்ளத்தில் ஒளிந்து தான் இருக்கிறார்.



(இந்த பதிவில் படங்களில் அணி சேர்ப்பது,  சமீபத்தில் குடமுழுக்கு கண்ட சிங்கப்பூர் சிவ துர்கா ஆலயம்.)

இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்;
துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

இந்த பாடல் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சியில் இருக்கிறது.
பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கோயிலில் இருக்கிறார்கள். ஒரு சிலர் கையில் இசை வாத்தியங்களோடு இருக்கின்றனர்; இன்னும் சிலர், தோத்திரங்களை சொல்லியபடி இருக்கின்றனர்; இன்னும் சிலர்- துன்னிய (நெருக்கமாக தொடுத்த), மலர் சரங்களோடு இருக்கின்றனர். இன்னும் சிலர் இறைவனை எண்ணி தொழுகின்றனர். ஒரு சிலர் உணர்ச்சி மேலிட்டு அழுகிறார்கள். இது பக்தியின் இன்னொரு உச்சம். இன்னும் சிலர், இறைவனுக்கு முன்னால் நாம் எத்தனை சிறியவர்கள் என்று எண்ணி அடக்கத்தால் துவண்டு நிற்கின்றனர். இன்னும் சிலரோ, கைகளைதலைக்கு மேல் தூக்கி, இறைவனை துதிக்கின்றனர். திருப்பெருந்துறையில் உள்ள ஆத்மநாதர், அனைவரின் ஆத்மாவையும் அறிவார். அவரை எழுந்திருக்க அன்பர்கள் வேண்டுகின்றனர்.


புது வருடம் பிறக்கப்போகிறது. புதிதாய் நிறைய நல்ல பழக்கங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்போம். உடற்பயிற்சி, மனப்பயிற்சி எல்லாம் தான். அதோடு சேர்ந்து, இனி ஆலயங்களில் கைப்பேசியை வெளியே எடுப்பதில்லை என்பதையும் சேர்த்துக்கொள்வோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!!

Tuesday, December 27, 2016

திருகலாகிய சிந்தை திருத்தலாம்!- திருமருகல் அப்பர் தேவாரம்

பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகலாகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
மருகலானடி வாழ்த்தி வணங்கவே!- அப்பர் தேவாரம் 


ஒரு காலத்தில் தமிழ் பாடல்கள் இல்லாமல் தான் கர்நாடக சங்கீத மேடைகள் இருந்தன. இன்று உள்ள சூழல் முற்றிலும் வேறு.
புது புது பாடல்களைத்தேடி தமிழிசைக்கு என்று ஆசையாய் மேடை ஏற்றும் சூழல் நிச்சயம் வரவேற்புக்குரியது.

சில நாட்களுக்கு முன்னர் திரு.விஜய் சிவா அவர்களின் திருமுறை இசை வட்டைக்கேட்க நேர்ந்தது. அதில் இந்த தேவாரமும் ஒன்று.


அபிராமி அம்மையை துதிப்பதால் என்ன கிடைக்கும் என்று அபிராமி பட்டர் சொல்வார்
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

இதை அம்மையை நினைத்து தொழுபவர்களுக்கு கிடைக்கும் பலன்களாகவும் பார்க்கலாம்.  அம்மா, தனம் தா, கல்வி தா, அழகான தெய்வ வடிவான தோற்றத்தைத்தா,நெஞ்சில் வஞ்சனையில்லாத நல்ல உறவுகளைத்தா, நல்லன எல்லாம் தா என்னும் பிரார்த்தனையாகவும் பார்க்கலாம். 


ஒரு பக்கம் ஏழையாக இருப்பவர்கள்  அடுத்தவர்  பொருள் கையில் கிடைத்தால் , காவல்  நிலையத்தில்  கொடுப்பதையும் , மறுப்பக்கம்  எத்தனை கோடி கோடியாய் பணம் இருந்தாலும், பேராசை தீராமல் , தன் அதிகாரத்தை  பயன்படுத்தி ஊர்  காசைக்கொள்ளையடிக்கும்  கூட்டத்தையும் பார்க்கிறோம்.
இவர்களில்  யாருக்கு  நிம்மதியான  உறக்கம்  இருக்கும் ? மனதில் கலக்கம்  இல்லாத  பொழுதுகள்  விடியும்? 



இந்த பதிகத்தில் நான்காவது பாடலிலிருந்து அகப்பொருளாய், ஒரு தலைவி திருமருகல் பெருமானை நினைத்து மருகுவதாய் பாடி இருக்கிறார் அப்பர் பெருமான்.

திருமருகல் நாகபட்டினத்திற்கு அருகே உள்ளது. 
இந்த தலத்தின் வரலாற்றில்,திருமணம் செய்து கொள்ள எண்ணி வீட்டை விட்டு வெளியேறியவர்கள் திருமருகல் வந்தவுடன், மணமகனை பாம்புக்கடித்து அவன் இறந்து விடுகிறான்.

இனி என்ன செய்வது என்று தெரியாமல் அலறித்துடித்த பெண்ணைத்தேற்றி, மணமகனை உயிரோடு எழுப்பினார் திருஞான சம்பந்தப்பெருமான். தேவார மூவர் மூன்று பேரின் வரலாற்றிலும் இப்படி விதி முடிந்தவர்களை மீண்டும் எழசெய்த அற்புதங்கள் உண்டு.

அப்பர் பெருமான் இந்தத் தலத்தின் வரலாற்றை எண்ணியே அகப்பொருளில் இந்த பதிகத்தின் பல பாடல்களைப்பாடி இருக்க வேண்டும். 


திருமருகல் பெருமானை நினைப்பவருக்கு தவம் பெருகும்; பிறப்பெனும் பேதைமை நீங்கும், இறைவனடி சேருகின்ற பேறு கிடைக்கும்.


புத்தி கோணலாய், நேர்வழியில் செல்லாதவர்கள் மனம் திருந்தும். 

பரமானந்தம் என்னும் தேன் பருகக்கிடைக்கும். 
பருகலாம், பெருக்கலாம் என்று ஆம் விகுதி சேர்த்து சொல்லி இருப்பதால், படிப்பவர்கள் ஒரு வேளைக்கிடைக்கலாம் என்பதாய் அர்த்தம் கொள்ள தேவை இல்லை. இது நிச்சயம் திருமருகல் பெருமானை வணங்கி, வாழ்த்துவதால் வரும் பயன்களாம்.