பன்னிரு திருமுறைகள்:
1-3:சம்பந்தர் அருளிய தேவாரப் பதிகங்கள்
4-6:அப்பர் பெருமான் அருளிய தேவாரப் பதிகங்கள்
7: சுந்தரர் அருளிய தேவாரப் பதிகங்கள்
8:மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்
9:திருவிசைப்பா, சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு முதலியன
10.திருமூலர் அருளிய திருமந்திரம்
11.திரு ஆலவாய் ஈசன் அருளிய திருமுகப்பாசுரம், கபிலரின் திருவிரட்டை மணிமாலை, காரைக்கால் அம்மையாரின் அற்புத திருவந்தாதி முதலியன
12.சேக்கிழார் அருளிய பெரிய புராணம்
திருமுறை பயிலும் மாணவி நான். திருமுறையிலுள்ள அழகான பாடல்களில், சிலவற்றை இந்த தளத்தில், தந்து வருகிறேன்.
Sunday, December 03, 2006
நால்வர் வாழ்த்து
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
விளக்கம்:
இப்பாடலில், ஒவ்வொரு அடியும், சைவக்குரவர்களில், ஒவ்வொருவரைக் குறிக்கும்.
சைவத் திருமுறைகளைப் பாடத்துவங்குமுன், சைவக்குரவர், நால்வரையும், வாழ்த்துவது மரபாகும்.
1.பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
இந்த அடி, சம்பந்த பெருமானைக் குறிப்பதாகும்.
பூமியை ஆளுகிற அரசன், (கூன் பாண்டியனின்), வெப்பு நோய் தீர்த்த, சம்பந்தரின் ( சரண் புகுபவர்களின் காவலனின்), கழலடிகளைப் போற்றுவோம்.
2.ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
இந்த அடி அப்பர் பெருமானைக்குறிப்பதாகும்."கற்றுணைப் பூட்டி ஓர், கடலில், பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே.."என்று உலகுக்கு விளங்க வைத்த திருநாவுக்கரசர் அடிகளைப் போற்றுவோம்.
3.வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
திரு நாவலூரில் பிறந்த சுந்தரரின், (வன் தொண்டரின்), பாதங்களைப் போற்றுவோம்.
இறைவனைப் பாடும் போது, வசை மொழிகளால், (பித்தா !) எனப் பாடியதால், வன் தொண்டர், என்ற பெயரும், சுந்தரருக்கு உண்டு.
4. ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி
உலகம், உய்ய, தம், அன்பால், இறைவனைச் சிக்கெனப்பிடித்த, திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரின், திருவடிகளைப் போற்றுவோம்.
Subscribe to:
Posts (Atom)