Showing posts with label 11th thirumurai. Show all posts
Showing posts with label 11th thirumurai. Show all posts

Sunday, November 25, 2018

பட்டினத்தார் அருளிய திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (பதினோராம் திருமுறை)

"காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே"

என்ற பட்டினத்தாரின் வாக்கிலுள்ள உண்மை

எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே.
பட்டினத்தார் தன் உலக வாழ்க்கையின் கடைசி வருடங்களை

திருவிடைமருதூரில் கழித்தார்.

அவர் அருளிச்செய்த திருவிடைமருதூர் மும்மணிக்கோவையிலிருந்து
ஒரு சில பாடல்களை இந்தபதிவில் பகிர்கிறேன்.

ஒரு சில பாடல்கள் எழுபது அடிகள் கூட கொண்டவையாக
இருக்கின்றன. மும்மணிக்கோவை என்பது, வெண்பாவும், ஆசிரியப்பாவும்,
கட்டளைகளித்துறையில் அமைந்த பாடல்களையும் மாறிமாறி
கொண்டிருக்கிறது. ஒரு சில பாடல்களில் அந்தாதி அமைப்பை
பார்த்தேன். இது தமிழின் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். 

அம்பாளின் சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில்
மகாலிங்க ஸ்வாமி அருள்பாலிக்கிறார்.


மருது என்ற பெயரைக்கேட்டால் பெரும்பாலும் தமிழர்களுக்கு
மருதுபாண்டியர்கள் நினைவு தான் வரும்.

"மருதா மருதா" என்று சிவனை
அருந்தமிழில் அழைக்கிறார் பட்டினத்து பிள்ளை.

ஐந்து தேர்கள் கொண்ட சிறப்புடையது இந்தக்கோயில்.
சமீபத்திய வருடங்களில் பூஜ்யஸ்ரீ தயானந்த ஸ்வாமிகளின் அருளாசியுடன்,
ஐந்து தேர்களோடு சிறப்பாக திருவிழா நடந்தேறியது.



கண்ணெண்றும் நந்தமக்கோர்
  காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல
  எழுத்தென்றும் - ஒண்ணை
மருதஅப்பா என்றும் உனை
  வாழ்த்தாரேல் மற்றும்
கருதஅப்பால் உண்டோ கதி.

அப்பா... மருதப்பா, உன்னை கண்ணென்றும்,
எங்களை காக்கும் காப்பென்றும், நாங்கள் கற்ற எண்ணும்,
எழுத்தும் நீயே என்றும் உன்னை வாழ்த்துவதே எங்களுக்கு கதியை,
நல்ல வழியைத்தரும். அப்படி வாழ்த்தாவிடில் எங்களுக்கு ஏது கதி?


திருமுறையில் உள்ள அனைத்து பாடல்களுமே, பெரும்பாலும், தீயவினை மாளும் வழியைக்காட்டுவனவாக உள்ளன. கெட்ட செயல்களை செய்தால் தான் பாவம் என்றில்லை. 


விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசி பாடல், மனம் வாக்கு, செயல் 
என்று நான் எதை செய்தாலும், அதை நாராயணனுக்கு 
அர்ப்பணிக்கிறேன் என்று முடியும். இப்போதுள்ள நுகர்வு
 கலாச்சாரத்தில், அளவுக்கு மீறிய ஆசையும், பொறாமை,
 போட்டிகளும் இல்லாத மனிதர்கள் இல்லை.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
என்கிறார் வள்ளுவர்.

கப்பலில் பெருவணிகம் செய்த செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்
பட்டினத்தார். பெருநெறியை பிடித்தொழுகினார்;
அனைத்தையும் உதறினார்.

வழிபிழைத்து நாமெல்லாம்
  வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்கள்
  எல்லாம் - பொழில்சூழ்
மருதிடத்தான் என்றொருகால்
  வாய்கூப்ப வேண்டா
கருதிடத்தாம் நில்லா கரந்து.
எப்படியோ இறைவனின் கருணையால் இதுவரை
பிழைத்துவந்துவிட்டோம். வந்த வழியில் சேர்த்த பாவங்கள் எல்லாம்,
பொழில் சூழ்ந்த மருதனை வாயால் கூட அழைக்கவேண்டாம்.
மனத்தால் நினைத்தாலே அந்த பாவங்கள் மறைந்துவிடும் என்கிறார்
பட்டினத்தார்.


அன்றென்றும் ஆமென்றும்
  ஆறு சமயங்கள்
ஒன்றொன்றொடு ஒவ்வா
  துரைத்தாலும் - என்றும்
ஒருதனையே நோக்குவார்
  உள்ளத் திருக்கும்
மருதனையே நோக்கி வரும்.

பட்டினத்தார் காலத்திலும், சமயப்பிரிவினைகள் இருந்திருக்கின்றன.
ஒன்றோடு ஒன்று அவை ஒவ்வாமை கொண்டிருந்திருக்கின்றன.

ஒருவனே இறைவன் என்ற கருத்தை கொண்டிருக்கும் மனிதர்களுக்கு

குழப்பம் இல்லை. அவர்கள் உள்ளம் மருதனைதான் நோக்கி ஓடி வரும்
என்கிறார் பட்டினத்தார். எளிதில் தினமும் சொல்லும்படியான எளிமையான
பாடல்களைத்தான் இந்தப்பதிவில் பகிர்ந்துள்ளேன்.

Thursday, June 30, 2016

பொய்யாத விநாயகர்- பதினோராம் திருமுறை- நம்பியாண்டார் நம்பி

மலேசியாவில் உள்ள மலாக்காவுக்கு போன வருடம் சென்றியிருந்தோம்.
ஊர் சுற்றி பார்க்கும்போது, ஒரு நாள் மாலையில் இந்த பொய்யாத விநாயகர் கோயிலுக்கு போனோம்.
அந்த நாள் பாணி செட்டியார் கோயில். உள்ளே கிணறு இருந்தது, பல விக்கிரகங்கள் வெண்கலத்தில் இருந்தன. அந்த காலத்து ஓட்டு வீடு பாணி அமைப்பு.






பக்கத்திலேயே ஒரு தர்கா, அந்த பின்னர் ஒரு சீனக்கோயில் என நாங்கள் மாலை 6.30 மணிக்கு திரும்பும்போது, ரொம்பவே சிலிர்க்கும் அனுபவம். கோயில் மாலை நேர தீபாராதனையை அடுத்து, தர்காவிலும், சீனக்கோயிலிலும் பிரார்த்தனைகள் நடந்தன.
அந்த பக்கம் போனால் நீங்களும் பார்த்து வாருங்கள்!!!.நம் பிரார்த்தனைகளை இந்த பொய்யாத விநாயகர் நிச்சயம் பொய்க்க விடமாட்டார்.

இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது, பதினோராம் திருமுறையில் உள்ள, நம்பியாண்டார் நம்பி அவர்கள் அருளி செய்த பாடல்.
திருநாரையூரில் உள்ள பொல்லா பிள்ளையாரைப்பற்றிய பாடல்.
பொல்லா என்ற சொல்லுக்கு உளியால் செதுக்கப்படாத என்று பொருள்.

தானாக சுயம்புவாய் வந்தவர் இந்த பொல்லா பிள்ளையார். நம்பியாண்டார் நம்பி  ராஜராஜ சோழரின் கட்டளைப்படி, திருமுறைகளைத்தொகுத்துக்கொடுத்தார். அவர் இந்த பொல்லா பிள்ளையாரின் ஆசி பெற்று தன் பணியைச்செய்தார்.

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய்
பின்னவலம் செய்வதென்னோ பேசு.


இந்த பாடல் ரொம்பவே அழகாக இருக்கிறது.


நெஞ்சே! பூங்கொம்பு போன்ற(கொம்பனைய) வள்ளியின் கணவன் (முருகன்), குறுகாமே (வந்து அடையும் முன்னரே), வம்பனைய மாங்கனியை (புதிதாக வந்த மாங்கனியை), பெற, நாரையூர் நம்பனை(தன் தாய் தந்தையரை) வலம் வந்தார். உலகை வலம் வருதலை விட, இந்த வழியே சிறந்தது என்று தேர்ந்தார்.

தாய் தந்தையரை வலம் வந்து, தன் துதிக்கையைதாழ்த்தி துதித்து, மாங்கனியை பெற்றார். அந்த விநாயகரை சொல் நெஞ்சே. சொன்னால், நோய் (வினைகள்), மற்றும் அவலம் (துன்பம்) நம்மை என்ன செய்யும்?

Wednesday, April 06, 2016

பிறவி பெருங்கடல் கடந்தோம் !- (காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதி )

எத்தனை எத்தனை விதமான உயிரினங்கள் இருக்கின்றன  உலகத்தில். 

நாம் பல நேரங்களில்- இருப்பது ஒரு வாழ்க்கை;  வாழ்க்கையை முழுமையாய் அனுபவித்து விட வேண்டும் என்று சிலர் சொல்வதை கேட்கலாம். உங்கள் வீட்டுச்சின்ன பிள்ளையின் புத்தகத்தை வாங்கி பாருங்கள்.

 எத்தனை எத்தனை ஜீவ ராசிகள்; ஒரு வனவிலங்கு பூங்காவிற்கு போனாலே புரியும்; நாம் குரங்காய் பிறந்திருக்கலாம்; ஒட்டக சிவுங்கியாய் இருந்திருக்கலாம்; முதலையாக கூட பிறந்திருக்கலாம்;திமிங்கலமாக கூட பிறவி எடுத்திருக்கலாம்

கிளிகளில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட வகைகளை இங்கு சிங்கை பறவை பூங்காவில் காணலாம்.







அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் 
பிற்பயக்கும் நற்பா லவை.-திருக்குறள் .

பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.

எங்கள் ஊரில் நகர மன்ற தலைவராய் இருந்தார் ஒரு பெண்மணி. அவர் வெறும் கைப்பாவை; அவர் கணவர் அவர் பெயரால் செய்த அட்டகாசம்  ரொம்பவே அதிகம். சாலை போடுவதில் தொடங்கி, இறப்பு சான்றிதழ் வரை எல்லாவற்றுக்கும் லஞ்சம்.
ஊர் பணத்தைக்கொள்ளை அடித்து, பணக்காரர்  ஆனார்.
இப்போது கணவர் கான்சர் நோயாளி; ஒரே மகன் வெளி நாட்டு விபத்தில் காலமாகி அவன் உடல் இங்கு வந்து சேரவே இரு வாரங்கள் ஆகி விட்டன.
இப்போது இந்த செல்வத்தால் பயன் என்ன?

பிறவி கணக்கு பாவ புண்ணியம்  பார்த்தே தான்; அதனால் தான் நற்பண்புகளை  நம்முடைய திருக்குறள், நாலடியார், நல்வழி முதலிய நூல்கள் வலியுறுத்துகின்றன.

இறைவன் திருவடியில் பற்று வைத்து அற வழியில் நடப்பவர்களால் மட்டுமே, பிறவி என்னும் பெருங்கடலை கடக்க முடியும்.
பிறந்து மொழி பயின்ற நாள் முதல், இறைவன் மீது அன்பு உடையவர் காரைக்கால் அம்மையார். அந்த நாட்களில் கணவன் சொல்லே மந்திரம் என்பதாய் தான் பெண்களின் வாழ்க்கை இருந்திருக்கும். 

பரமதத்தன் வேறொரு பெண்ணை திருமணம் செய்த பின், மனித உடலோடு வாழ பிடிக்காமல், பேய் உரு கொண்டார் அம்மையார்.

இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.

வினைக்கடலை யாக்குவிக்கும் பிறவிக் கனைக்கடல்

(கனை=மிகுதியான; பெரிய )
பிறவி வினைகளை உண்டாக்குகிறது; வினைகள் மீண்டும் பிறவிக்கு காரணமாகின்றன.
ஒன்று மற்றொன்றை உண்டாக்கும் சங்கிலி தொடர்கிறது.
இந்த சங்கிலியிலிருந்து விடுபட்டோம் நெஞ்சே; இனி கவலை இல்லை; இறைவன் அடி சேர்ந்தோம் என்கிறார் அம்மையார்.