Saturday, June 13, 2026

உண்டி கொடுத்த உமையாள் பங்கனார் -அப்பர் தேவாரம்

"நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"

என்று குடபுலவியனாரின் புறநானூறு பாடல்(18) சொல்கிறது. 

 உணவு என்பது அன்பின் மொழி. நல்ல உணவும், அது பரிமாறப்படும் விதமும், அன்பின் ஊற்றை எல்லா மனிதருள்ளும் உண்டாக்குகின்றன.

அம்மா என்பவளின் அன்பான உணவு தான், அவள் மறைந்த பிறகும் முன் நிற்கிறது.

இன்று நாம் வாழும் நவீன உலகம் , நமக்கு  கைபேசியிலிருந்து உணவை வேண்டிய உணவகத்திலிருந்து வாங்கும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இருந்தாலும்  தனக்குத் தேவையான உணவு கிடைக்காமல் வருந்தும் பலரும் இருக்கவே செய்கிறார்கள். 

இந்தியாவில் மட்டுமல்ல கடல் கடந்து எங்கு தமிழர்கள் இருந்தாலும் அங்கு உணவைப் பகிர்வதைப்பார்க்க முடிகிறது.
 
சென்ற ஆண்டு குச்சிங் (Kuching) என்ற மேற்கு மலேசியா ஊருக்கு சிங்கப்பூரிலிருந்து சுற்றிப்பார்க்கச் சென்றோம். 

இரு நூற்றாண்டுகளுக்கு முன்னால் இங்கு காபி பயிரிட என்றிருந்த ஒரு மலைப்பகுதியில் தமிழர்கள் கட்டுவித்த மடங்கு மாரியம்மன் ஆலயம் இருக்கிறது.
இவ்வாலயம் ஒரு நாளில் பகலில் மட்டுமே திறந்திருந்தாலும் அங்கிருந்த பூசாரி எங்களுக்கு கேசரி, கொண்டைக் கடலை சுண்டல் என்று அன்போடுக்கொடுத்தார். 
" ரொம்ப தூரத்துலேந்து வந்தவங்களுக்கு ஒன்னும் கொடுக்காம நான் அனுப்பினா அம்மா என்னைக்கேப்பா" என்று விளக்கம் கொடுத்தார். 


அவரின் அன்பான உபசரிப்பில் மகிழ்ந்தோம். 
தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு என்பது திருமுறையிலும் காணக்கிடைக்கிறது. 

அறுபத்துமூவரில் இளையான்குடி மாறநாயனாரின் புராணம் அவர் அடியவருக்கு அமுது ஊட்ட எண்ணி , அவரும் அவரது மனைவியும் அதற்காக எடுத்த முயற்சியைப் பேசுகிறது. 

"கொண்டு வந்து மனைப்பு குந்து குலாவு பாதம்
                               விளக்கியே
 
  மண்டு காதலி னாத னத்திடை வைத்த ருச்சனை
                               செய்தபின்
உண்டி நாலு விதத்தி லாறு சுவைத்தி றத்தினி
                               லொப்பிலா
வண்டர் நாயகர் தொண்டரிச்சையி லமுது செய்ய
                              வளித்துளார். (பெரிய புராணம்:443-இளையான்குடி மாற நாயனார் புராணம்)


நம் எல்லாருக்கும் அன்னபூரணியைத்தெரியும். காசி நகரில் வீற்றிருக்கும் அவள் கைகளில் ஒரு அட்சய பாத்திரமும், தங்கத்தால் ஆன கரண்டியும் இருக்கும். உலக உயிர்கள் அனைவருக்கும் உணவளிப்பாள் அவள். 

இங்கு தமிழகத்திலும் அப்படி ஒரு கோயில் இருக்கிறது.அந்த கோயிலைத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். 

நம் எல்லாருக்கும் மணிமேகலை காப்பியத்தில் வரும் அட்சய பாத்திரம் தெரியும். இதே அட்சயப்பாத்திரம் மகாபாரதத்திலும் திரௌபதியிடம் அவர்களின் காட்டு வாசத்தின் போது இருக்கும். 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.
இது ஒளவையின் வாக்கு.

தமிழர்களின் வாழ்வியலில், முத்தமிழ், முக்கனி, அறுசுவை, எட்டு திசைகள், நவ தானியங்கள் என்று பலவற்றையும் எண்களோடு இணைத்துச் சொல்லும் பழக்கம் இருந்துவந்திருக்கிறது. 
பசி வந்தால் எந்த பத்து மறையும்?  
மானம் (சுயமரியாதை)
குலம் (குடும்பப் பெருமை)
கல்வி (அறிவு மற்றும் கற்றல்)
வண்மை (கொடைத்தன்மை / ஈகை)
அறிவுடைமை (சிந்தனைத் திறன்)
தானம் (மற்றவர்களுக்கு வழங்குதல்)
தவம் (ஆன்மீக ஆர்வம்)
முயற்சி (செயல் வேகம்)
தாளாண்மை (விடாமுயற்சி)
காமம் (ஆசைகள்)

இப்போது காமராசர் போன்றோர் கல்விமுயற்சியோடு, சேர்த்து ஆரம்பித்த மதிய உணவு திட்டத்தின் மாண்பை நாம் உணரலாம். எளிய குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவை அளித்து, கல்வி கொடுக்க வேண்டும் என்றார் அவர். 

 திருச்சோற்றுத்துறை என்ற ஊர், திருவையாறுக்குப்பக்கத்தில் இருக்கிறது. 
இந்த ஊரை, ஏழூர்களில் ஒன்று என்கிறார்கள். 

திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம்  ஆகியவை  ஏழு ஊர்கள் (சப்த ஸ்தானத் தலங்கள்)எனப் போற்றப்படுகின்றன. 

ஏழு மாமுனிகள் திருவாரூரை மையமாக வைத்து, அதைச்சுற்றி உள்ள ஊர்களில் தங்கள் ஆசிரமத்தைத்தொடங்கி வாழ்ந்து வந்தார்கள்.

 அதில் கௌதமர் என்ற முனிவரின் ஆசிரமம்  அந்நாளில் இருந்த  ஊர் திருச்சோற்றுத்துறை. 
கௌதம முனிவரின் சிலையும் இந்த கோயிலில் இருக்கிறது.இந்த முனிவர் தான் கோதாவரி நதி வர காரணம் ஆனவர். 

கடையெழு வள்ளல்களைப்போல இந்த ஏழு முனிவர்களும் மிகப்புகழ் பெற்றவர்கள். 

இந்த திருச்சோற்றுத்துறை ஊரையும் பஞ்சம் விட்டுவைக்கவில்லை. உணவில்லாமல் மக்களும், மற்ற உயிர்களும் துன்பப்பட்டபோது இங்கு சிவபெருமான், அட்சயபாத்திரத்தை ஓர் அருளாளருக்கு அளித்து அவர் மூலம் பசிப்பிணியைப் போக்கியதாகத் தலபுராணம் சொல்கிறது. 


Courtesy: Shivatemples.com

தொலையாச் செல்வர் என்ற பெயரில் இறைவனும், ஒப்பில்லா அம்பிகை என்கிற பெயரில் அம்மையும் வீற்றிருக்கும் திருச்சோற்றுத்துறையைப்பற்றி ஆறாம் திருமுறையில் உள்ள அப்பரின் கீழ்காணும் பாடல் இங்கு சிந்திக்க ஏற்றது. 

(புகைப்பட உதவி நன்றி. திரு.வேலுதரன்)

சோறு என்ற சொல்லுக்கு முக்தி நிலை என்ற பொருளும் இருக்கிறது. அழுத்தமான அரிசியை எப்படி பதமாகச் சமைத்தால் சோறு என்ற வடிவம் பெறுகிறதோ, அப்படி நம் மனம் பக்குவம் அடைந்தால் மட்டுமே முக்தி வாய்க்கிறது.

இந்த தலத்தின் இறைவன் நாம் தொலைக்காத செல்வமாக முக்திபேறும் வழங்கிக்கொண்டே இருக்கிறார். 

இப்போது அப்பர் பெருமானின் திருத்தாண்டகப்பாடலுக்கு வருவோம்.

வானவனாய் வண்மை மனத்தி னானே
மாமணிசேர் வானோர் பெருமான் நீயே
கானவனாய் ஏனத்தின் பின்சென் றானே
கடிய அரணங்கள் மூன்றட் டானே
தானவனாய்த் தண்கயிலை மேவி னானே
தன்னொப்பா ரில்லாத மங்கைக் கென்றுந்
தேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே (6.044)
வானவனாய்:தேவனாய் 

வண்மை மனத்தினானே:எல்லாருக்கும் கொடுக்கும் கொடை குணம் கொண்டவனே 
இங்கே கீழ்காணும் அபிராமி அந்தாதிப்பாடலிலும் வண்மை என்ற சொல் இருப்பதைக்காணலாம்.
தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்–வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்–பார் எங்குமே (
அபிராமி அந்தாதி :67)

மாமணிசேர் வானோர் பெருமான் நீயே:மாமணி என்பது சிந்தாமணியைக்குறிக்கும். கற்பக விருட்சத்தின் கீழ் நின்று ஒருவர் என்ன கேட்டாலும் கிடைக்குமாம். அப்படி சிந்தாமணியை கொண்டுள்ள தேவர்களுக்கு அவர்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
அப்படிப்பட்ட சிந்தாமணியைக்கொண்ட தேவர்களின் பெருமானே. 

கானவனாய் :வானவன், கானவன், தானவன் என்று இந்த பாடல் முழுவதும் எதுகை நயத்தோடு இருக்கிறது. 
குறிஞ்சி நில மக்களைக் கானவர்கள் என்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் வில்வித்தை கற்றவர்களாக, வேட்டைத்தொழில் செய்வார்கள். கண்ணப்ப நாயனார் கானவர்களுள் ஒருவர். அவரைப்போல ஒரு வேடராக சிவபெருமானும் இருந்திருக்கிறார். 


ஏனத்தின் பின்சென்றானே:ஏனம்-பன்றி. தேவாரம் முழுவதிலும் ஏனம் என்ற சொல்லே  பன்றியைக்குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது அர்ச்சுனனுக்காக சிவபெருமான் பன்றியைத்தொடர்ந்து சென்று வேட்டையாடி போட்டியிட்டக்கதையைக் குறிக்கிறது. 
கடிய அரணங்கள் மூன்றட்டானே:கடிய அரணங்கள் மூன்று அட்டானே- கடிய (வலிமையான) அரணங்கள் (கோட்டைகளை) அட்டானே (அழித்தவனே).
சிவபெருமான் திரிபுரம் எரித்த கதையைத்தான் இந்த வரி சொல்கிறது. ஆனால் திருமூலரின் திருமந்திரம் இந்த நிகழ்வை வேறு விதமாக விளக்குகிறது.

திருமந்திரம் மூன்று கோட்டைகளை- நம் மனதின் கழிவுகள் எனச் சொல்கிறது.
நான், எனது என்னும் அகந்தை இதில் முதல் மலம்.
இரண்டாவது மலம், உலகப்பொருட்களின் மீது நாம் கொண்டிருக்கும் பற்று. இதுவும் ஒரு மாயை.
மூன்றாவது மலம் நம்முடைய நல்வினை/தீவினை ஆகியற்றின் பலன்கள்.

இம்மூன்றையும் அழித்து நமக்கு முக்திபேறான நல்ல முடிவை சிவபெருமான் அருளுகிறார்.

தானவனாய்த் :தான் அவனாய்த் :
உலகத்து உயிர்கள் அனைத்திலும் அவனே ஆக

(மற்றொரு பொருள் :தானவன் - எவற்றையும் கொடுப்பவன்);

தண்கயிலை மேவினானே:
தண் (குளிர்ந்த) கயிலை மலையில் இருப்பவனே. 
இந்த பதிகத்தின் மற்றொரு சிறப்பு, அம்மையின் பெயரும் இந்த தேவாரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகும். 

திருச்சோற்றுத்துறையில் அம்மையின் பெயர், அன்னபூரணி, மற்றும் ஒப்பிலாம்பிகை

தன்னொப்பாரில்லாத மங்கைக் கென்றுந்: தன் ஒப்பாரில்லாத மங்கைக்கு என்றும்:
(ஒப்பாரில்லாத மங்கை-ஒப்பிலாம்பிகை)
தனக்கு ஈடாக யாருமில்லை என்பதான அம்மை- ஒப்பிலா அம்பிகை அவளுக்குத்  

  
தேனவனே:தேன் போன்று இனிமையானவனே 

திருச்சோற்றுத் துறையுளானே:திருச்சோற்றுத்துறையில் வீற்றிருப்பவனே 

திகழொளியே:திகழ் ஒளியே 
எப்போதும் முக்காலங்களிலும் என்றும் திகழும் ஒளி போன்றவனே. 
திகழொளி என்ற சொல் பெரும்பாலும் பெயரெச்சமாகவே பயன்பட்டு வந்திருக்கிறது. 

குமரியொடு வடவிமயத் தொருமொழி வைத்துலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்
(சிலப்பதிகாரம் (வஞ்சி காண்டம்))
நம் அனைவருக்கும் கண்ணகிக்கு கோயில் கட்டிய சேரன் செங்குட்டுவனைத்தெரியும். சேரன் செங்குட்டுவனின் தாயார் மணக்கிள்ளி, தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். 
மணங்கிள்ளி, ஞாயிற்றுச் சோழன் என்ற சோழமன்னனின் மகள் ஆவார். என்றும் ஒளி திகழும் ஞாயற்றுச்சோழன் என்று அவர் இங்கே குறிப்பிடப்பெற்றுள்ளார். 

சிவனேயுன்னபயம் நானே:சிவனே உன் அபயம் நானே. 

உன்னிடம் சரணாகதி அடைகின்றேன். என்னைக்காப்பீராக.  (முற்றும் )

No comments: