Showing posts with label 1st thirumurai. Show all posts
Showing posts with label 1st thirumurai. Show all posts

Friday, April 25, 2025

தாயினும் நல்ல தலைவர்-கோணப்பிரான்

மலைக்கோயில்களைப் பார்த்திருப்போம்;கடற்கோயில்களைப் பார்த்திருப்போம். இரண்டும் ஒன்றுசேர இருக்கும் ஒரு கோயிலைக்கண்டதுண்டா?சுனை, மலை,கடல் என மூன்றும் சேர்ந்தத் தலம் இலங்கையில் உள்ள திரிகோணமலை என்னும் திருகோணமாமலை.
சென்ற வாரம் என் மகனுக்கு, திரிகோணம் பற்றிய பிதாகரஸ் தேற்றம் (Pythagoras Theorem) சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். திரிகோணம் (முக்கோணம்) என்ற சொல் பற்றிய எண்ணம் இந்த பதிவாக நீள்கிறது.

கோணம் என்ற சொல்லுக்கு, வளைவு, முனை, சிகரம் எனப்பல பொருள் இருக்கின்றன.
திரிகோணமலை- முப்புறமும் மலை சூழ்ந்த ஊர்.




(Image courtesy: Mr.Veludharan)

தேவாரம் முழுவதிலும் இராவணன் திருக்கயிலை மலையைத்தூக்க முயன்ற குறிப்புகள் இருக்கும்.
அவ்வாறு ஆசைப்பட்ட இராவணனின் ஊரில், பாடல் பெற்ற ஒரு ஊராகக் கடல், சுனை, மலை கொண்ட ஊராக அமைந்திருக்கிறது கோணமலை.
இது இலங்கையின் பாடல் பெற்ற இருதலங்களுள் ஒன்று.
திருகோணமாமலை இலங்கையில் கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கிறது.








((Image courtesy: Wikipedia-Trinconomalai)


thevaaram.org இணையப்பக்கத்தில், மலை என்று தேடினால் கீழ்காணும் இந்த ஐந்து ஊர்கள் தான் வருகின்றன.



இவற்றில் கணிதவடிவோடு கூடிய பெயருடைய தலம் கோணமலை.

திருஞானசம்பந்தர் தமிழகத்தில் இருந்தபடியே இந்தத்தலத்தைப் பாடினார் என்பார்கள்.
கோணமாமலையைப்பற்றி படிக்கும்போது முன்பிருந்த கோயில், மலைஉச்சியில் இருந்ததாகப் படித்தேன். முந்தைய கோயிலைப் போர்த்துகீசியர்கள் பதினேழாம் நூற்றாண்டில் முற்றிலுமாக அழித்துவிட்டார்கள்.
மலையின் உச்சியில் உள்ள அந்த கோயிலின் கீழே, அலை கடல் வந்து சிவபெருமானின் திருவடி தொழுதபடி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கோயில் இந்தோனேசியாவின், பாலி தீவிலும் இருக்கிறது.




(Pura Uluwat, Bali, Indonesia)

பூரா உலுவாத்து ((Pura Uluwatu) என்று அழைக்கப்படும் பாலித்தீவின் கோயில்,மலை உச்சியில் இருக்கும் ஒன்றாகும். அங்கிருந்து பார்த்தால், கீழே, இந்தியப்பெருங்கடல் தெரியும். அந்த கோயில் சங் ஹ்யங் விதி வசா (Sang Hyang Widhi Wasa)எனப்படும், ருத்ர மூர்த்திக்கான ஆலயமாக பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து, மஜாபாஹித் பேரரசின் காலத்தில் உருவாக்கப்பட்டது.

இது நான் பகிர நினைத்த கிளைச்செய்தி. பாலியில் கடலும், சுனையும், மலையும் தனித்தனியாக வெவ்வேறு கோயில்களின் அருகில் இருக்கின்றன.

பூரா உலுவாத்து அருகே ஆர்ப்பரித்த இந்தியப்பெருங்கடல், பல ஆண்டுகள் ஆனாலும் என் மனதில் எப்போதும் அலைந்துகொண்டே இருக்கிறது.


இதே பாலித்தீவில் , விஷ்ணுவுக்கான கோயிலில் தீர்த்தா எம்புல் என்ற பெயரில் நன்னீர் சுனை ஒன்று இருக்கிறது.




(Tirta Empul, A natural fountain in Bali, Indonesia)


இப்போது மீண்டும் திருகோணமலைக்குத்திரும்புவோம்.

சிலருக்கு பெரும் சுற்றங்கள் இருக்கமாட்டார்கள். உறவினரோடு பல காரணங்களால் தள்ளி இருக்கலாம். அப்படி இருந்து, மனம் வருந்துபவர்களுக்கு, ஆறுதல் அளிப்பவராக இருக்கிறார், கோணப்பிரான்.

மலையில் ஆறுதல் அடைபவராக இருந்தால் மலை. கடல் வேண்டுமென்றால் கடல். சுனை வேண்டுமென்றால் சுனை.அதுவே சிவபெருமானின் பல திருவேடங்கள் என்றும் தோன்றுகிறது.

அவ்வையின் அமுத மொழியாக வரும் பின் வரும் பாடலும் அதைத்தான் சொல்கிறது.

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரு முண்டு. (மூதுரை :20)

உடன் பிறந்தவர் மட்டுமே சுற்றத்தார் என்று நினைத்துக்கொண்டு இருக்க வேண்டியது இல்லை. சர்க்கரை-நோய் போன்ற சில வியாதிகள் நாம் பிறக்கும்போதே நம்முடன் சேர்ந்தே பிறந்து நம்மைக் கொல்கின்றன (Type 1 Diabetes Mellitus). நம்முடன் பிறக்காமல், பெரிய மலையில் எங்கோ பிறந்து வளர்ந்த மூலிகை, இடையிலே நம்மை வந்து தாக்கும் பிணியைப் போக்குகின்றன. இந்த மருந்து போன்றவர்களும் நம்முடன் இருக்கிறார்கள்.
மலை மீது உள்ள மூலிகை போன்றவர் சிவபெருமான்.

நாம் அனைவரும் யாருடைய உறவினர்கள் என்பதை நினைவுபடுத்தும் மற்றொரு பாடல் இதோ.

அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. (4.2.11)

தமர் என்றால் உறவினர். இறைவனின் உறவினர் நாம்; அதனால் நாம் அஞ்சுவதற்கு இம்மண்ணுலகத்தில் ஒன்றும் இல்லை என்று நம்மை வாழ்க்கை சவால்களை எதிர்நோக்க தயார்ப்படுத்துகிறார் அப்பர் பெருமான்.
நிற்றி ஈண்டு’ என்று, புக்கு
நெடியவன் - தொழுது, தம்பி,
‘கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன்,
நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்;
தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன்
ஒருவன்
’ என்றான். (கம்பராமாயணம் :1964)
மேற்காணும் கம்பராமாயணச் செய்யுளுக்கும், கோணமாமலை தேவாரத்துக்கும் தொடர்பு இருக்கிறது.
இந்த செய்யுள், இலக்குவன் ராமனுக்கு, குகனை அறிமுகம் செய்யுமிடத்தில் வருகிறது. மனத்தால் நல்லவன் குகன். தேனும், மீனும் தந்த அன்பை எண்ணி, தாயினும் நல்லவன் என்று இலக்குவன், குகனை அறிமுகப்படுத்துகிறான்.

அதிக பழக்கம் இல்லாத போதும் அவன் செய்த விருந்தோம்பல், குகனைப் பற்றிய பிம்பத்தை மேம்படுத்தியது. எனவே தாயின் நல்லான் என்றான் இலக்குவன்.

இதைப்போலவே , தாயினும் நல்லவர் என்று அடியவர்கள் கோணபிரானைப் போற்றிப் பரவுவதாகச் சம்பந்தர் சொல்கிறார்.

தாயினு நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.

(முதல் திருமுறை:1254 )
இதன் பொருள்:
தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம்மடி போற்றி இசைப்பார்கள்-தாயைவிட நல்ல தலைவர் என்று அடியார்கள்
சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பரவுவார்கள்.
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா
மாண்பினர்
-பல வருடங்கள் கழித்துப்பார்த்த வகுப்பு தோழன்/அல்லது தோழியின் பெயர் வாயில் வர மறுக்கிறது.
அடியவர்களின் மனதில் தூய்மை இருப்பதால், மனதிலும், வாக்கிலும் சிவபெருமான் நிறைந்திருக்கும் மாண்பு கொண்டவராக அருள் பாலிக்கிறார்.
அவருடைய பெயரும் மறக்காது. மனதிலும் நினைத்திருப்போம்.

காண்பல வேடர்
-வீட்டுக்கென்று ஒரு உடை, அலுவலகத்தில் வேறு உடை, கோயிலுக்கு வேறு உடை என்று எப்படி நாம் இருக்கிறோமோ, அப்படி, சிவபெருமானும் பல வேடங்களை உடையவராக காட்சியளிக்கிறார்.

நோயிலும் பிணியும் தொழிலர்பால் நீக்கி-
நோய் தீர்ந்துவிடும். பிணி தீராதது (Chronic)
பிறவிப்பிணி என்ற சொற்றொடரை வள்ளுவர் பயன்படுத்தியிருப்பார்.

பிறவி என்பது தீராப்பிணி.
இறைவனை வழிபடுவதை ஒரு தொழிலாக, தினமும் செய்பவருக்கு, நோய், பிணி இரண்டும் ஏற்படாதவண்ணம் கோணப்பிரான் காத்திடுவார்.

நூலினர்-முப்புரி நூல் அணிந்திருக்கிறார் சிவபெருமான் ,
ஞாலம் நுழைதரு சுனையும்
இப்படி இணையத்தில் யாரும் கொண்டுகூட்டி பொருள் சொல்லிப்பார்க்கவில்லை. ஆனால் இது தான் சரி என்று எனக்குப்படுகிறது.

கம்பராமாயணத்தில், வான மா மழை நுழைதரு மதி என்று ஒரு தொடர் வருகிறது.

கைகேயி, மழைக்காலமேகத்தின் நடுவே நுழைந்த சந்திரனைப்போல தன் கூந்தலில் நுழைந்திருந்த மலர்மாலையை எடுத்துப்போட்டாள் என்பார் கம்பர்.

கடல் உலகைச் சூழும் ஒன்று. 
சுனை ஊற்றெடுக்கும் . 
பாறைகளின் வழி உலகுக்குள் நுழையும் ஒன்று.

ஞாலம் நுழைதரு சுனையும்
என்பது கொண்டுகூட்டச் சரியென்றே நினைக்கிறேன்.

கோயிலும்கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.


திருக்கோயிலும், சுனையும் கடலுடன் சூழ விளங்கும்
திருக்கோணமாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

வாய்ப்புக்கிடைத்தால் நாமும் இயற்கை எழில்கொஞ்சும் கோணமாமலையைத் தரிசிக்கலாம். தாயை விட நல்லவர். அவரின் தாள் பணியலாம். (முற்றும் )

Saturday, March 13, 2021

மனக்கவலை மாற்றும் திருக்கோளிலி தேவாரம்!

 சப்த விடங்க தலங்களில் ஒன்று திருக்கோளிலி. உளியைக்கொண்டு செய்யப்படாத, சுயம்புமேனி சிவலிங்கங்களைக்கொண்ட தலங்கள் சப்தவிடங்க தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில், ஆதித்தலமான திருவாரூரும் ஒன்று. 

திருக்கோளிலி தலத்தில் தேவார மூவரும் பாடியிருக்கிறார்கள். எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் இருந்தாலும், மனக்கவலையோடு, இங்கே தூக்கம் தொலைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

உலகமே கொரோனா தீநுண்மியின் தாக்கத்தில், பயணங்கள் இல்லாமல், ஸ்தம்பித்துபோய் இருக்கும் இந்தக்காலத்தில், நம் அனைவரின் மனதிலும்  எதிர்காலம் பற்றிய கவலை இல்லாமல் இல்லை.

கோள் என்ற சொல் இந்தத்தேவாரத்தில், மாறுபாடு, நவகிரஹங்களால் ஏற்படும் துன்பம் என்ற பொருளில் ஞானசம்பந்தப்பெருமானால் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப்பதிவில் உள்ள தேவாரப்பாடல், முதல் திருமுறையில் உள்ள தேவாரப்பதிகம் ஆகும் (01-062).

இன்றைய நாளில் இந்த ஊரின் பெயர் திருக்குவளை என்றும் சொல்கிறார்கள். குவளை மலர்களால் தினமும் அர்ச்சனை செய்யப்படுகிறது. 


குவளை என்பது அல்லிமலரைக்குறிக்கும். நீர் வளமுள்ள நிறைய குளங்கள் அமைந்திருக்கும் பகுதியில் அமைந்த சிவாலயம். 

அல்லி மலரை, ஆம்பல் ,செங்கழுநீர் என்றும் சொல்கிறார்கள். சென்னையில் திருவல்லிக்கேணி அல்லி மலர்கள் அதிகம் இந்தப்பகுதி. 

இப்போது கலங்கிய நீரை தெளிவாக்குவதற்குக்கூட ரசாயனங்களைப்பயன்படுத்துகிறோம். சென்னை போன்ற நகரங்களில், குடிநீரை காசுக்கொடுத்து வாங்குபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். 

இந்தத்திருக்கோளிலி தலத்தின் தலவிருட்சம் தேற்றா மரம். கலங்கிய நீரில் இந்த மரத்தின் கொட்டைகளை அரைத்துப்போட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். எந்த விதமான உடல் நலிவு உள்ளவர்களையும் தேற்றும் வகையானது இந்த தேற்றா மரம். 


கிளை கிளைக்கும் :

நாளாய போகாமே 

  நஞ்சணியுங் கண்டனுக்கே

ஆளாய அன்புசெய்வோம் 

  மடநெஞ்சே அரன்நாமம்

கேளாய்நங் கிளைகிளைக்குங் 

  கேடுபடாத் திறம்அருளிக்

கோளாய நீக்குமவன் 

  கோளிலியெம் பெருமானே

அறியாமை உடைய மடநெஞ்சே!. நாளை என்று தள்ளிப்போடாமல், இன்றே நஞ்சைத்தன் தொண்டையில் அடக்கி, தம் அடியவரைக்காத்த திருநீலகண்டரை நினைந்து அன்பு செய். அரன் நாமத்தைக்கேள். அதனால், உன் கிளை, கிளைக்கும். நீ மட்டுமல்ல, உன் சுற்றத்தினரின் (கிளை) துன்பங்களும் தீரும். கேடுபடாத திறம் அருளி (துன்பம் இல்லாத வகை அருளி) ,கோள்களால் ஏற்படும் துன்பத்தையும் போக்குவான் திருக்கோளிலியில் வீற்றிருக்கும் எம்பெருமான். 

ஆடரவத் தழகாமை யணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.

மலர்போன்ற மென்மையான சேவடிகளைக்கொண்டவர் சிவபெருமான். அவ்ரதுதிருவடிகளை மென்மையான குவளை மலர்களைக்கொண்டு அர்ச்சிப்பது எத்தனை பொருத்தம் கொண்டது!

கேழல்- பன்றி 

ஆடரவத்து-ஆடுகின்ற பாம்பை அணிந்து 

அழகு ஆமை அணி - அழகிய ஆமை ஓட்டையும்  

கேழல் கொம்பு ஆர்த்த -பன்றியின் கொம்பையும் மாலையாகக்கோர்த்து அணிந்திருக்கிறார் சிவபெருமான். 

தோடு அரவத்து ஒரு காதன்- ஒரு காதில் பாம்பே தொடங்க இருக்கிறது (ஒப்பிட்டு நோக்க. தோடுடைய செவியன் )

துணைமலர் நல்சேவடிக்கே -இருமலர்களைப்போன்ற மென்மையான சேவடியை 

 பாடு அரவத்து இசை பயின்று பணிந்தெழுவார்  - பாட்டோசையுடன் துதிபாடல்களைப்பாடி தொழுபவர்களுக்கு 

தம்மனதில் கோடு அரவம் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே-

மனதில் உள்ள மாறுபாட்டை நீக்குபவர் திருக்கோளியில் உள்ள திருக்கோளிலி நாதர் ஆவார்.



இந்தத்தலத்தில் மற்றொரு அற்புதம் சுந்தர மூர்த்தி நாயனாருக்காக குண்டையூர் கிழார் கொடுத்த நெற்பொதிகளை சுமந்து வர ஆட்கள் இல்லாமல் போகவே, சுந்தரமூர்த்தி நாயனார், நீள நினைந்தடியேன் எந்தத்தொடங்கும் தேவாரப்பாடலைப்பாடியவுடன், பூதகணங்கள் அவருக்கு உதவின. இதை மாசிமகத்தன்று ஒரு திருவிழாவாக இன்றும் கொண்டாடுகின்றனர்.

Friday, April 07, 2017

மன்னையின் பாடல் பெற்ற பாமணி சிவன் கோயில்!

நான் மன்னார்குடியில் வளர்ந்தாலும், இந்த கோயிலின் மகத்துவம் என் பள்ளிநாட்களில் அறிந்திருக்கவில்லை. சமீபத்தில் குடமுழுக்கு கண்ட தேவாரத்திருத்தலம்.

மன்னை என்றால் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கோயில் தான் அனைவரும் அறிந்தது. இந்த நாகநாத சுவாமி கோயில் மன்னையிலிருந்து 2  கி.மி. தூரத்தில் தான் இருக்கிறது.

எங்கள் சின்ன செங்கமலம் !


மன்னையில் ஓடும் நதி, காவிரியின் கிளை ஆறான பாமணி. இந்த ஆற்றின் அருகே அமைந்த தலம்.

இந்த கோயிலின் சிறப்புகள் பல.

1.புற்று மண்ணால் ஆன சிவலிங்கத்திருமேனி. ஆதிசேஷன் பூஜித்த தலம். பெரும்பாலும் புற்றுக்கோயில்களில் நித்ய அபிஷேகம் செய்ய மாட்டார்கள். இங்கு மாம்பழ சாறில் அபிஷேகம் தினமும் செய்யப்படுவது சிறப்பு.தலவிருட்சம் மாமரம்.

2.திருவாரூர் தலம் காலத்தால் மிக பழமையானது என்பார்கள். முசுகுந்த சக்கரவர்த்தி காலத்தியது என்று சொல்வார்கள். இந்த கோயிலில் முசுகுந்தர் பச்சை திராட்சை படைத்தது வழிபட்டார் என்பதால், பச்சை திராட்சையை இறைவனுக்கு படைப்பதும் சிறப்பு.



3.சர்வ தோஷ நிவாரணம் தரும் தலம் இது. தட்சிணாமூர்த்தி சிம்மத்தின் மீது இருப்பது மிக அபூர்வமான  ஒன்றாகும் . 



4.சனீஸ்வரரும் பைரவரும் சேர்ந்து இருப்பதால், சனிதோஷ நிவாரண தலமாக இருக்கிறது. 

5.ஆதிசேஷனுக்கு மனித தலையுடன் தனி சன்னதி இருக்கிறது. ராகு கேது தோஷம் நீங்க வழிபாடு செய்ய உகந்த தலம்.

இந்த தலத்தைப்பற்றிய திருஞானசம்பந்தரின் பாடல் அன்றைய சோழ தேசத்தின் நெல்வயல்களின் அழகை வர்ணிக்கிறது.

அங்கமு நான்மறையும் அருள்செய் தழகார்ந்த வஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோ னுறைகோயில்
செங்கய னின்றுகளுஞ் செறுவிற் றிகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.



அங்கமும் நான்மறையும் அருளிச்செய்து -வேதங்கள் நான்கையும், வேதங்களின் ஆறு அங்கங்களையும் உருவாக்கியவர் சிவபெருமான்.ஆறு அங்கங்களும் ஷடங்கங்கள் என்று சொல்லப்படுகின்றன. இவற்றிலிருந்து தான் நாம் பரவலாய் பயன்படுத்தும் சடங்கு என்ற சொல் உருவாயிற்று.ஆறு அங்கங்கள்  எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் , நிகண்டு,தினமும் முழுஅக்கறையோடு செய்ய வேண்டிய கர்மாக்கள், பாஇலக்கணம் ஆகியவை.


அழகார்ந்த வஞ்சொல் மங்கையோர் கூறுடையான் -வாக்கினிலே இனிமை வேண்டும் என்பது பாரதியாரின் வரி. அம்பாள் அருள் வடிவம். அன்பின் ஊற்று. உலக மாதாவாகிய அன்னை, இனிய அழகான சொற்களை  பேசுபவராக இருக்கிறார். மனதுக்கு  இதம் தரும் சொல்லையே பேசும் அன்னை, சிவபெருமானின் ஒரு பாகமாக இருக்கிறார்.

மறையோன் உறை கோயில்- மறைகளாக இருப்பவரும் இறைவனே.வேதப்பொருளாய் உள்ள இறைவன் உறையும் கோயில் எப்படி இருக்கிறது தெரியுமா? 
செங்கயல் நின்றுகளும்  செருவிற் திகழ்கின்ற சோதிப்பங்கயம் நின்று அலரும் வயல் சூழ் பாதாளே.

தாமரை எப்போதும் சூரிய ஒளியில் தான் மலர்கிறது. (பங்கயம்-தாமரை). செங்கயல் மீன்கள் வயல்களில் புரள்கிற ஒளியில் தாமரை இரவிலே மலரும் அளவில் வயல்கள் சூழ்ந்த பாதாளேஸ்வரம் என்னும் கோயிலில் தான் இறைவன் இருக்கிறார்.

எப்போதும் நீர்வளத்துக்கும் , எல்லாருக்கும் வயிறார உணவிட்டும் வந்த தேசத்தில், இப்போது வறட்சி.விவசாயிகளின் தொடர் போராட்டம்.

வான்முகில் வழாது பெய்யட்டும். காவிரியில் எப்போதும் நீர் இருக்கட்டும்.எல்லாருக்கும் உணவு கொடுக்கும் உழவர் வாழ்க்கை நன்றாக இருக்க என் பிரார்த்தனைகள்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் மக்களை பாதாளேஸ்வரர் என்னும் பாமணி நாகநாதர் காக்கட்டும் .

(Inputs from Dinamani.com, Dinamalar.com, Thevaaram.com).