Saturday, June 13, 2026

உண்டி கொடுத்த உமையாள் பங்கனார் -அப்பர் தேவாரம்

"நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"

என்று குடபுலவியனாரின் புறநானூறு பாடல்(18) சொல்கிறது. 

 உணவு என்பது அன்பின் மொழி. நல்ல உணவும், அது பரிமாறப்படும் விதமும், அன்பின் ஊற்றை எல்லா மனிதருள்ளும் உண்டாக்குகின்றன.

அம்மா என்பவளின் அன்பான உணவு தான், அவள் மறைந்த பிறகும் முன் நிற்கிறது.

இன்று நாம் வாழும் நவீன உலகம் , நமக்கு  கைபேசியிலிருந்து உணவை வேண்டிய உணவகத்திலிருந்து வாங்கும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இருந்தாலும்  தனக்குத் தேவையான உணவு கிடைக்காமல் வருந்தும் பலரும் இருக்கவே செய்கிறார்கள். 

இந்தியாவில் மட்டுமல்ல கடல் கடந்து எங்கு தமிழர்கள் இருந்தாலும் அங்கு உணவைப் பகிர்வதைப்பார்க்க முடிகிறது.
 
சென்ற ஆண்டு குச்சிங் (Kuching) என்ற மேற்கு மலேசியா ஊருக்கு சிங்கப்பூரிலிருந்து சுற்றிப்பார்க்கச் சென்றோம். 

இரு நூற்றாண்டுகளுக்கு முன்னால் இங்கு காபி பயிரிட என்றிருந்த ஒரு மலைப்பகுதியில் தமிழர்கள் கட்டுவித்த மடங்கு மாரியம்மன் ஆலயம் இருக்கிறது.
இவ்வாலயம் ஒரு நாளில் பகலில் மட்டுமே திறந்திருந்தாலும் அங்கிருந்த பூசாரி எங்களுக்கு கேசரி, கொண்டைக் கடலை சுண்டல் என்று அன்போடுக்கொடுத்தார். 
" ரொம்ப தூரத்துலேந்து வந்தவங்களுக்கு ஒன்னும் கொடுக்காம நான் அனுப்பினா அம்மா என்னைக்கேப்பா" என்று விளக்கம் கொடுத்தார். 


அவரின் அன்பான உபசரிப்பில் மகிழ்ந்தோம். 
தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு என்பது திருமுறையிலும் காணக்கிடைக்கிறது. 

அறுபத்துமூவரில் இளையான்குடி மாறநாயனாரின் புராணம் அவர் அடியவருக்கு அமுது ஊட்ட எண்ணி , அவரும் அவரது மனைவியும் அதற்காக எடுத்த முயற்சியைப் பேசுகிறது. 

"கொண்டு வந்து மனைப்பு குந்து குலாவு பாதம்
                               விளக்கியே
 
  மண்டு காதலி னாத னத்திடை வைத்த ருச்சனை
                               செய்தபின்
உண்டி நாலு விதத்தி லாறு சுவைத்தி றத்தினி
                               லொப்பிலா
வண்டர் நாயகர் தொண்டரிச்சையி லமுது செய்ய
                              வளித்துளார். (பெரிய புராணம்:443-இளையான்குடி மாற நாயனார் புராணம்)


நம் எல்லாருக்கும் அன்னபூரணியைத்தெரியும். காசி நகரில் வீற்றிருக்கும் அவள் கைகளில் ஒரு அட்சய பாத்திரமும், தங்கத்தால் ஆன கரண்டியும் இருக்கும். உலக உயிர்கள் அனைவருக்கும் உணவளிப்பாள் அவள். 

இங்கு தமிழகத்திலும் அப்படி ஒரு கோயில் இருக்கிறது.அந்த கோயிலைத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். 

நம் எல்லாருக்கும் மணிமேகலை காப்பியத்தில் வரும் அட்சய பாத்திரம் தெரியும். இதே அட்சயப்பாத்திரம் மகாபாரதத்திலும் திரௌபதியிடம் அவர்களின் காட்டு வாசத்தின் போது இருக்கும். 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.
இது ஒளவையின் வாக்கு.

தமிழர்களின் வாழ்வியலில், முத்தமிழ், முக்கனி, அறுசுவை, எட்டு திசைகள், நவ தானியங்கள் என்று பலவற்றையும் எண்களோடு இணைத்துச் சொல்லும் பழக்கம் இருந்துவந்திருக்கிறது. 
பசி வந்தால் எந்த பத்து மறையும்?  
மானம் (சுயமரியாதை)
குலம் (குடும்பப் பெருமை)
கல்வி (அறிவு மற்றும் கற்றல்)
வண்மை (கொடைத்தன்மை / ஈகை)
அறிவுடைமை (சிந்தனைத் திறன்)
தானம் (மற்றவர்களுக்கு வழங்குதல்)
தவம் (ஆன்மீக ஆர்வம்)
முயற்சி (செயல் வேகம்)
தாளாண்மை (விடாமுயற்சி)
காமம் (ஆசைகள்)

இப்போது காமராசர் போன்றோர் கல்விமுயற்சியோடு, சேர்த்து ஆரம்பித்த மதிய உணவு திட்டத்தின் மாண்பை நாம் உணரலாம். எளிய குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவை அளித்து, கல்வி கொடுக்க வேண்டும் என்றார் அவர். 

 திருச்சோற்றுத்துறை என்ற ஊர், திருவையாறுக்குப்பக்கத்தில் இருக்கிறது. 
இந்த ஊரை, ஏழூர்களில் ஒன்று என்கிறார்கள். 

திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம்  ஆகியவை  ஏழு ஊர்கள் (சப்த ஸ்தானத் தலங்கள்)எனப் போற்றப்படுகின்றன. 

ஏழு மாமுனிகள் திருவாரூரை மையமாக வைத்து, அதைச்சுற்றி உள்ள ஊர்களில் தங்கள் ஆசிரமத்தைத்தொடங்கி வாழ்ந்து வந்தார்கள்.

 அதில் கௌதமர் என்ற முனிவரின் ஆசிரமம்  அந்நாளில் இருந்த  ஊர் திருச்சோற்றுத்துறை. 
கௌதம முனிவரின் சிலையும் இந்த கோயிலில் இருக்கிறது.இந்த முனிவர் தான் கோதாவரி நதி வர காரணம் ஆனவர். 

கடையெழு வள்ளல்களைப்போல இந்த ஏழு முனிவர்களும் மிகப்புகழ் பெற்றவர்கள். 

இந்த திருச்சோற்றுத்துறை ஊரையும் பஞ்சம் விட்டுவைக்கவில்லை. உணவில்லாமல் மக்களும், மற்ற உயிர்களும் துன்பப்பட்டபோது இங்கு சிவபெருமான், அட்சயபாத்திரத்தை ஓர் அருளாளருக்கு அளித்து அவர் மூலம் பசிப்பிணியைப் போக்கியதாகத் தலபுராணம் சொல்கிறது. 


Courtesy: Shivatemples.com

தொலையாச் செல்வர் என்ற பெயரில் இறைவனும், ஒப்பில்லா அம்பிகை என்கிற பெயரில் அம்மையும் வீற்றிருக்கும் திருச்சோற்றுத்துறையைப்பற்றி ஆறாம் திருமுறையில் உள்ள அப்பரின் கீழ்காணும் பாடல் இங்கு சிந்திக்க ஏற்றது. 

(புகைப்பட உதவி நன்றி. திரு.வேலுதரன்)

சோறு என்ற சொல்லுக்கு முக்தி நிலை என்ற பொருளும் இருக்கிறது. அழுத்தமான அரிசியை எப்படி பதமாகச் சமைத்தால் சோறு என்ற வடிவம் பெறுகிறதோ, அப்படி நம் மனம் பக்குவம் அடைந்தால் மட்டுமே முக்தி வாய்க்கிறது.

இந்த தலத்தின் இறைவன் நாம் தொலைக்காத செல்வமாக முக்திபேறும் வழங்கிக்கொண்டே இருக்கிறார். 

இப்போது அப்பர் பெருமானின் திருத்தாண்டகப்பாடலுக்கு வருவோம்.

வானவனாய் வண்மை மனத்தி னானே
மாமணிசேர் வானோர் பெருமான் நீயே
கானவனாய் ஏனத்தின் பின்சென் றானே
கடிய அரணங்கள் மூன்றட் டானே
தானவனாய்த் தண்கயிலை மேவி னானே
தன்னொப்பா ரில்லாத மங்கைக் கென்றுந்
தேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே (6.044)
வானவனாய்:தேவனாய் 

வண்மை மனத்தினானே:எல்லாருக்கும் கொடுக்கும் கொடை குணம் கொண்டவனே 
இங்கே கீழ்காணும் அபிராமி அந்தாதிப்பாடலிலும் வண்மை என்ற சொல் இருப்பதைக்காணலாம்.
தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்–வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்–பார் எங்குமே (
அபிராமி அந்தாதி :67)

மாமணிசேர் வானோர் பெருமான் நீயே:மாமணி என்பது சிந்தாமணியைக்குறிக்கும். கற்பக விருட்சத்தின் கீழ் நின்று ஒருவர் என்ன கேட்டாலும் கிடைக்குமாம். அப்படி சிந்தாமணியை கொண்டுள்ள தேவர்களுக்கு அவர்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
அப்படிப்பட்ட சிந்தாமணியைக்கொண்ட தேவர்களின் பெருமானே. 

கானவனாய் :வானவன், கானவன், தானவன் என்று இந்த பாடல் முழுவதும் எதுகை நயத்தோடு இருக்கிறது. 
குறிஞ்சி நில மக்களைக் கானவர்கள் என்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் வில்வித்தை கற்றவர்களாக, வேட்டைத்தொழில் செய்வார்கள். கண்ணப்ப நாயனார் கானவர்களுள் ஒருவர். அவரைப்போல ஒரு வேடராக சிவபெருமானும் இருந்திருக்கிறார். 


ஏனத்தின் பின்சென்றானே:ஏனம்-பன்றி. தேவாரம் முழுவதிலும் ஏனம் என்ற சொல்லே  பன்றியைக்குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது அர்ச்சுனனுக்காக சிவபெருமான் பன்றியைத்தொடர்ந்து சென்று வேட்டையாடி போட்டியிட்ட நிகழ்வைக் குறிக்கிறது. 
கடிய அரணங்கள் மூன்றட்டானே:கடிய அரணங்கள் மூன்று அட்டானே- கடிய (வலிமையான) அரணங்கள் (கோட்டைகளை) அட்டானே (அழித்தவனே).
சிவபெருமான் திரிபுரம் எரித்த கதையைத்தான் இந்த வரி சொல்கிறது. ஆனால் திருமூலரின் திருமந்திரம் இந்த நிகழ்வை வேறு விதமாக விளக்குகிறது.

திருமந்திரம் மூன்று கோட்டைகளை- நம் மனதின் கழிவுகள் எனச் சொல்கிறது.
நான், எனது என்னும் அகந்தை இதில் முதல் மலம்.
இரண்டாவது மலம், உலகப்பொருட்களின் மீது நாம் கொண்டிருக்கும் பற்று. இதுவும் ஒரு மாயை.
மூன்றாவது மலம் நம்முடைய நல்வினை/தீவினை ஆகியற்றின் பலன்கள்.

இம்மூன்றையும் அழித்து நமக்கு முக்திபேறான நல்ல முடிவை சிவபெருமான் அருளுகிறார்.

தானவனாய்த் :தான் அவனாய்த் :
உலகத்து உயிர்கள் அனைத்திலும் அவனே ஆக

(மற்றொரு பொருள் :தானவன் - எவற்றையும் கொடுப்பவன்);

தண்கயிலை மேவினானே:
தண் (குளிர்ந்த) கயிலை மலையில் இருப்பவனே. 
இந்த பதிகத்தின் மற்றொரு சிறப்பு, அம்மையின் பெயரும் இந்த தேவாரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகும். 

திருச்சோற்றுத்துறையில் அம்மையின் பெயர், அன்னபூரணி, மற்றும் ஒப்பிலாம்பிகை

தன்னொப்பாரில்லாத மங்கைக் கென்றுந்: தன் ஒப்பாரில்லாத மங்கைக்கு என்றும்:
(ஒப்பாரில்லாத மங்கை-ஒப்பிலாம்பிகை)
தனக்கு ஈடாக யாருமில்லை என்பதான அம்மை- ஒப்பிலா அம்பிகை அவளுக்குத்  

  
தேனவனே:தேன் போன்று இனிமையானவனே 

திருச்சோற்றுத் துறையுளானே:திருச்சோற்றுத்துறையில் வீற்றிருப்பவனே 

திகழொளியே:திகழ் ஒளியே 
எப்போதும் முக்காலங்களிலும் என்றும் திகழும் ஒளி போன்றவனே. 
திகழொளி என்ற சொல் பெரும்பாலும் பெயரெச்சமாகவே பயன்பட்டு வந்திருக்கிறது. 

குமரியொடு வடவிமயத் தொருமொழி வைத்துலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்
(சிலப்பதிகாரம் (வஞ்சி காண்டம்))
 கண்ணகிக்கு கோயில் கட்டிய சேரன் செங்குட்டுவனை உங்களுக்குத் தெரிந்திருக்கும். 

சேரன் செங்குட்டுவனின் தாயார் மணக்கிள்ளி, தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். 

மணங்கிள்ளி, ஞாயிற்றுச் சோழன் என்ற சோழமன்னனின் மகள் ஆவார். என்றும் ஒளி திகழும் ஞாயற்றுச்சோழன் என்று மணங்கிள்ளியின் தந்தையான சோழ அரசர்  சிலப்பதிகாரத்தில்  குறிப்பிடப்பெற்றுள்ளார். 

சிவனேயுன்னபயம் நானே:சிவனே உன் அபயம் நானே. 

உன்னிடம் சரணாகதி அடைகின்றேன். என்னைக்காப்பீராக. 
இறை சிந்தனையோடு நம் கடமைகளைச் செய்துகொண்டே வருவோம்.
நல்ல கதி எல்லாருக்கும் கிடைக்கட்டும். 
(முற்றும் )

Saturday, February 14, 2026

தலை எங்கு போகும்- அப்பர் தேவாரங்கள்

நேற்று சிங்கப்பூரில் உள்ள புனிதமரம் பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் காலை நேரம் நின்ற போது, புதிதாய் வந்திருக்கும் ஓதுவாமூர்த்தி, திரு அங்க மாலையைப் பாடிக்கொண்டிருந்தார். 

தலையே நீ வணங்காய் என்று ஆரம்பிக்கும் இந்த அப்பர் தேவாரம், கண், மூக்கு, வாய் என்று ஒவ்வொரு அங்கமும் இறைபணி செய்யவே இருக்கின்றன என்பதனை அழுத்திச் சொல்லும். 

அதில் வரும் வாக்கே நோக்கிய மங்கை  மணாளனை என்ற வரி வரும் போது என் குருவை நோக்கி, மனம் எப்போதும் செல்லும். 

மூக்கே நீ முரலாய்-முதுகாடுறை முக்கணனை 

வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்



இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் சென்னை திருவான்மியூரில் பெரும்பாண நம்பி ஐயா
திரு.கோடிலிங்கம் அவர்களிடம் தேவாரம் கற்றுக்கொண்டிருந்தேன். இந்த வரி வரும்போது, அவர், வாக்கே நோக்கிய மங்கை 
மணாளனைஎன்றால், "அடுத்து அம்பாள் என்ன சொல்ல போறான்னு சிவபெருமான் காத்துக்கொண்டிருப்பாராம். அப்படி ஒரு கணவர் உனக்கு வாய்க்க வேண்டும். நீ கல்யாணம் பண்ணிக்கோ" என்று  அறிவுறுத்துவார். புன்னகையோடு கடந்த நாட்கள் அவை. இன்று அவர் வாக்குப் பலித்து எங்கள் வீட்டில் இந்த நிகழ்வைத் சொல்லி மகிழ்வதும் உண்டு. 

இன்று மஹாசிவராத்திரி. பலரும் சிவாலயங்களுக்குச் செல்வீர்கள். 

இரவு முழுதும் பல சிவாலயங்களுக்குப் போவது என்பது இன்றைய நாளில் அதிகரித்திருப்பதும் மகிழ்ச்சி தரும் ஒன்று.

மீண்டும் திரு அங்க மாலைக்குள் செல்வோம். 

தலையே நீ வணங்காய்- தலை மாலை தலைக்கணிந்து,

தலையாலே பலிதேரும் தலைவனைத் 

தலையே நீ வணங்காய்

தலைக்கனம் என்ற சொல் கர்வத்தைக் குறிக்கிறது. அவனுக்கு மண்டைக்கனம் அதிகம் என்று சிலர் சொல்லக்கேட்டிருப்பீர்கள். 

தலை தான் நாம் ஒருவர் மற்றவரை அடையாளம் காண உதவும் உடல்பாகம். நம் எல்லாருக்கும், நம் வாழ்க்கையில் அன்பாக இருந்தவர்கள் அனைவரின் முகமும், தலையும் நினைவில் இருக்கும்.

தலை என்பதை தலைமுடியாக/சிகையாகக் கொள்ளாமல், முகத்தோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். 

ஏன் சிவபெருமான் தலைமாலை அணிந்திருக்கிறார்? தேவாரம் முதல், அபிராமி அம்மைப் பதிகம் வரை பல இடங்களில், சிவபெருமான், தலைமாலை அணிந்தவராகவும், கையில் மண்டையோட்டில், பலி தேறுபவராகவும், அவருக்கு அன்னமிடுபவளாக அம்பாளும் சொல்லப்பட்டிருக்கின்றனர்.

உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், யாரும் இருக்க மாட்டார்கள். எந்த உயிரும் இருக்காது. ஓரறிவு முதல், ஆறறிவு உள்ள யாரும் இருக்க மாட்டார்கள். பிரம்மா, விஷ்ணு போன்றவர்களும் இருக்க மாட்டார்கள்.
பாற்கடலைக் கடையும்போது வந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் மட்டுமே என்றும் நிலைத்திருப்பார். 
அதன் குறியீடாகவே அவர் தலைமாலை அணிந்திருப்பவர் என்று அப்பர் பெருமான் தேவாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறார்.

அப்பர் பெருமான் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் பண்பு கொண்டவர். எப்போதும் இறைவனையே சிந்தித்த அருளாளர். 
காரைக்கால் அம்மையார், அரவா நீ ஆடும் போதுன் அடியின் கீழிருக்க என்று கேட்டுக்கொண்டார். 

இன்றும் திருவாலங்காட்டில், இறைவனின் காலுக்கருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார்.
அப்பர் என்ன கேட்டார் தெரியுமா? 
இன்று காலை இந்த பாடல் கண்ணில் பட்டது. இன்று நாம் பரவலாக கேட்கும் ஒரு சொல். 

பரபரப்பு 



இல்லங்க.

 
கலாய்ச்சுட்டாங்க 

இல்லங்க.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இல்லங்க.

வருமானவரி சோதனை அதுவும் இல்லங்க 

அதுக்குப்பிறகு ஒண்ணு நடக்குமே. அதே தான். 
தலைமறைவு ஆனார். 

தலைமறைவு என்ற சொல்லை அஞ்ஞாத வாசம் என்றும் சிலர் அறியலாம். ஆம் மஹாபாரதத்தில் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள், தலைமறைவு வாழ்க்கை வாழ நேரிட்டது. பெரும்பாலும் இதனை எதிர்மறை கோணம் கொண்ட சொல்லாக அறியலாம்.

சுதந்திர போராட்டக்காலத்தில், பெரிதும் புழக்கத்தில் இருந்த சொல் தலைமறைவு . இன்று குற்றவாளிகள் பிடிபடும்நேரம் வரை பதுங்கியிருத்தலைச் சொல்கிறது.
இந்த சொல் பெரும்பாலும் தற்காலிகமான ஒன்றாகவே கையாளப்பட்டது. 

அப்பர் பெருமான் அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ என்பார். 


 
அப்பர் பெருமான் இவ்வுலக வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்தவர். கல்லில் கட்டி, கடலில் போட்டார்கள். இறைவன் திருவருளால் கரையேறினார்.
கரையேறியதும், ஈன்றாளுமாய் எனத்தொடங்கும் இந்த பாடலைப்பாடினார். 

இறைவன், தாய், தகப்பன், உடன் பிறந்தோராகவும் இருக்கிறார். எப்போதும் தோன்றாத் துணையாய் உடன் இருக்கிறார் என்று உணர்ந்திருக்கிறார். 

சுண்ணாம்பு அறையில் இட்டார்கள்; மதயானையை ஏவினார்கள்.ஒன்றும் ஆகாமல் சிவபெருமான் காப்பாற்றினார். 

 எப்போதும் அவரை ஏதாவது ஒரு துன்பம் தொடர்ந்தபடி இருந்தாலும், அவர் இறைவன் திருவடியை மட்டுமே மனதில் கொண்டு தனது, பணியை மேற்கொண்டார்.

 தெய்வங்கள் பலவும் ஆயுதங்களும், மலர்களும் ஏந்திக்கொண்டு காட்சி அளித்தாலும், அப்பர் பெருமான் கையில் இருப்பது, களையை எடுக்க உதவும் உழவாரம் மட்டுமே. 


 அப்பர் பெருமான் அவ்வாறு உழவாரப்பணி செய்யவில்லை என்றால் இந்த நூற்றாண்டு வரை நம் கோயில், குளங்கள் இருந்திருக்காது. 
அப்படிப்பட்ட அப்பர் பெருமானும் சிவபெருமானிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்.
என்ன கேட்டிருப்பார்? 

இறைவனின் சுற்றமாகத் தன்னை எப்போதும் நம்புபவர். நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்று முழங்கியவர்.

ஈசனின் திருவடி நிழலின் அருமையை உணர்ந்தவர். 

என்ன கேட்டிருப்பார்? 

பூக்களைக்கொண்டு பூசை செய்வதை அப்பர் பெருமான் அங்கங்கே தேவாரத்தில் வலியுறுத்தி இருப்பார்
என்ன கேட்டிருப்பார்? 

முருகார் நறுமல ரிண்டை தழுவிவண் டேமுரலும்

பெருகா றடைசடைக் கற்றையி னாய்பிணி மேய்ந்திருந்த

இருகாற் குரம்பை யிதுநா னுடைய திதுபிரிந்தால்

தருவா யெனக்குன் றிருவடிக் கீழொர் தலைமறைவே.  (4-113-2)


பதம் பிரித்த பாடல்:
முருகார் நறுமலர் இண்டை தழுவி,வண்டே முரலும் பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் ,பிணி மேய்ந்திருந்த இருகால் குரம்பை இது நான் உடையது, இது பிரிந்தால் தருவாய் எனக்கு உன் திருவடிக்கீழ் ஓர் தலைமறைவே .


முருகார் :
முருகு ஆர்ந்த- மணம் நிறைந்த 
நறுமலர் இண்டை தழுவி: நறுமலர்களால் ஆன தலைமாலையை அணிந்து 
இண்டை என்பது தலைமாலையைக் குறிக்கும்.  (Head Garland)
வண்டே முரலும்:தமிழில் ஒவ்வொரு சத்தத்திற்கும் நல்ல சொற்கள் இருக்கின்றன. நம் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் தனித்தனியே சொற்கள் தெரிந்திருக்கும். 
குதிரை ஒலி, பன்றி ஒலி, யானை ஒலி, நாய் ஒலி, வண்டின் ஒலி என்று பலவற்றுக்கும் சொற்கள் இருக்கின்றன. வண்டின் ரீங்காரத்தை முரல்வது என்று சொல்வார்கள். 
செயற்கை மலர்களை வாங்கி வைத்தால், வண்டு வந்து முரலாது.
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய்:
பெருகு ஆறு, கங்கை. அந்த நதி சிவபெருமான் கற்றைச் சடையினுள் அடைந்திருக்கிறது. 
பிணி மேய்ந்திருந்த:பிணியைக் கூரையாகக் கொண்ட

 
நோய் வந்தால் தீரும். பிணி என்பது தீராத ஒன்று. 
பிறவியைத் தான் அனுபவிக்கும் பிணியாக அப்பர் சொல்கிறார். 

இருகால் குரம்பை:
குரம்பை என்பது குடில், சிறிய குடிசை.
இருகால்களைத் தூணாகக்கொண்ட குடிசை இந்த உடல் 
இது நான் உடையது:நான் உடையது இது.என்னிடம் இருப்பது இந்த உடல் 
இது பிரிந்தால் தருவாய்:இந்த உடல் பிரிந்தால் நீ எனக்கு ஒன்றைத் தரவேண்டும்  

எனக்கு உன் திருவடிக்கீழ் ஓர் தலைமறைவே:
உன்னுடைய திருவடிக்கீழே நான் தலைமறைவாக இருக்க வேண்டும். 
தலைமறைவு என்ற சொல்லை நல்ல கோணத்தில், நம்பிக்கையோடு அது என்றும் நிலைத்திருக்கும் இடமாக வரமாகக்கூறுகிறார் அப்பர் பெருமான்.
நாமும் அப்படியே வேண்டுவோமா? (முற்றும்)