Wednesday, December 02, 2009

வேண்டதக்கது அறியோய் நீ !

வேண்டதக்கது அறியோய் நீ ! வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ! வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில், அதுவும் உந்தன் விருப்பன்றே!

திருவாசகம்-குழைத்த பத்தில், உள்ள இப்பாடல், உண்மையான பக்தியுடையோர், இறைவன், எதைத் தந்தாலும், அதை விருப்பத்தோடு, ஏற்றுக்கொள்ளும் தெளிவான மன நிலையைக்கொண்டிருப்பர் என்பதை தெளிவுபடுத்துகிறது

உண்மை பக்தி, இறைவன், சொல்லின்படி நடப்பது. இறைவன், நாம், வேண்டும்,எதையும், முழுதாய், தரும், கருணை வடிவானவர். ஆதலால், வேண்டத்தகாதவற்றை வேண்டினாலும், தருபவர். ஆனால், இறைவனிடத்தில், உண்மை அடியவர், இறைவன், தரும், எதையும், ஏற்றுக்கொள்வர்.

இறைவன், மாணிக்க வாசகருக்கும், மற்ற நாயன்மாருக்கும், துன்பம், தந்த போதும், அவர்கள், பக்தி நிலையில் இருந்து மாறவில்லை.

'இடரினும் தளரினும், எனதுறு நோய் தொடரினும், உனகழல், தொழுதெழுவேன்'- சம்பந்தரின் பதிகம், ஒப்பு நோக்கத் தக்கது.

Saturday, September 05, 2009

அழகிய பிரார்த்தனை

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளையேற்றான் தன்னைத்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றன்
தாயானைத் தவமாய தன்மையானைத்
தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானைத் தென்கூடல் திருவாலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே

-அப்பர் பெருமான் அருளிய பதிகம்.

வாயானை- திரு ஆலவாயானை (மதுரையில் வீற்றிருப்பவரும்)
மனதில் இருப்பவரும், மனதில் எண்ணமாய் இருப்பவரும், அந்த எண்ணத்தை, நிறைவேற்றுபவரும், தூய்மையானவரும், தூய வெள்ளை யானை உடையவரும், என் தாய் போன்றவரும், தவமே உருவானவரும், தேவர்களுக்கு என்றும், சேய்மையானை ( தூரமாய் இருப்பவரும்),ஆகிய திருவாலவாய் ஈசன், திருவடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.


ஒப்பு நோக்க:

புறத்தார்க்கு சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க- மாணிக்க வாசகர்

Thursday, May 28, 2009

திருத்தாளமுடையார், ஓசைக்கொடுத்த நாயகி......!

தலம்: திருக்கோலக்கா
தலப்பெயருக்கானக் காரணம்:
அம்பிகையின் அண்ணனாகிய திருமால், ஈசனின் திருமணக்கோலத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க விரும்பினார். திருமாலின வேண்டுகோளுக்கு இணங்கி, ஈசன் தன் மணக்கோலத்தைக்காட்டியதால், இந்த ஊருக்கு, திருக்கோலக்கா என்ற பெயர் வந்தது. (சீர்காழிக்கு அருகில் உள்ள தலம்).

தலப்பெயர் சரி, இறைவனுக்கும் , இறைவிக்கும், இந்த பெயர்கள் வந்ததற்கு , சம்பந்தர் வாழ்க்கையில், நடந்த ஒரு திருவிளையாடலே காரணம்
.

சம்பந்த பெருமான், சிறுபிள்ளையாய், தன் சின்னக்கைகளில், தாளம் போட்டவாறு, " மடையில் வாளை" என்ற பதிகம் பாடி திருக்கோலக்கா வந்தார். இறைவன், அந்த பிள்ளைக்கு இரங்கி, ஒரு பொன் தாளம் தந்தார்; தாளம் ஒலிக்கவில்லை.!!.. அம்பிகை, அந்த தாளத்தில், ஓசைக்கொடுத்தாள். அதனால், இறைவனுக்கு திருத்தாளமுடையார் என்றும், இறைவிக்கு ஓசைக்கொடுத்த நாயகி என்றும், பெயர்கள் உண்டானது.
"தோடுடைய செவியன்" என்ற முதல் பதிகத்துக்கு அடுத்து, சம்பந்தர் பாடிய பதிகம் " மடையில் வாளை பாய" எனத் தொடங்கும் திருக்கோலக்காப் பதிகம் ஆகும். அந்த பதிகம் பின்வருமாறு: (சம்பந்தர் சுவாமிகள் அருளியது)
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையும் கொண்ட வுருவம் என்கொலொ.

பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே

நலங்கொள் காழி ஞானசம் பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.

மிக அழகான பதிகம் இது!. முதல், இரண்டு அடிகளில், திருக்கோலக்காவின் அழகையும், அடுத்த இரண்டு அடிகளில், இறைவனின் அழகையும், பாடினார், சம்பந்தர்.