தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் (Brihadeswara Temple, Thanjavur), 1000 ஆண்டுகளைக் கடந்து, வானளாவி நிற்கும் நிறைஅழகு அதிசயம் ;
தமிழர் நாகரீகத்தின் உச்சத்தை பறைசாற்றும், இந்தக்கோயில்- ஒவ்வொருவரும்,
கண்ணாரக் கண்டும், கையாரக்கூப்பியும், எண்ணார எண்ணத்தால், எண்ணியும், இன்புற வேண்டிய ஒரு சிவாலயம்.
ராஜராஜ சோழர், தேவாரப்பாடல்களைத்தேடி, நம்பியாண்டார் நம்பியின் துணையோடு, திருமுறைகளாய்த்தொகுத்து, நமக்கு தந்தார்.அவர் இறையன்பில், எழுப்பிய சிவாலயம் இது.
வாயிலார் நாயனார், மனதில் சிவாலயம் எழுப்பினார்; ராஜ ராஜ சோழர், தம் மக்களையும், கருவூலத்தையும் கொண்டு, சிவாலயத்தை, உலகில் அமைத்தார்.
இலங்கையின், பெரிய புத்தர் சிலைகளையும், விகாரங்களையும், கண்டு, அதைப்போல பெரிய கோயிலாய்,பொன்னியின் செல்வர், அமைத்தார்.
இலங்கையின், பெரிய புத்தர் சிலைகளையும், விகாரங்களையும், கண்டு, அதைப்போல பெரிய கோயிலாய்,பொன்னியின் செல்வர், அமைத்தார்.
"இறைவன் எவ்வளவு பெரியவன்"
என்று, எத்தனை சாதாரணமான மனிதர்களுக்கும், சொல்லாமல் சொல்லும் இந்த அழகிய கற்றளி:-
"ஒரு சின்னமலையோ, மடுவோ இல்லாத தஞ்சைப்பகுதியில்", 60 கிலோமீட்டர் தூரத்திலிருந்து, கருங்கற்களைக்கொண்டு வந்து, கணக்கிலடங்காத சிற்பங்களுடனும், ஓவியங்களுடன், சிவபெருமானுக்கு, மிகுந்த அன்புடன், ராஜராஜ சோழரால், கட்டித்தரப்பட்ட வீடாகும்.மிக துல்லியமான வடிவியல் கணக்கீடுகளைக்கொண்டு,அமைத்து, ஆகம விதிப்படிக்கட்டப்பட்ட இக்கோயில், சோழர்கள் காலத்தில், முக்கிய அரசு விழாக்கள், நடக்குமிடமாக இருந்திருக்கிறது.
(பட உதவி: விக்கிபீடியா)
இந்த கோயிலின் பல சிறப்புகளில், எனக்கு தெரிந்த சில:1.கருவறை மேலுள்ள விமானம், 216 அடி உயரமுள்ளது. முன் கோபுரம், 30 அடி உயரமே உடையது. கருவறை மேலுள்ள விமானம் மிக உயரமாய் இருப்பது இந்த கோயிலின் சிறப்பு. இந்த கோயிலின் கருவறை கோபுரத்தின் நிழல் தரையில் விழாது
2.கோபுரக்கலசம், 80 டன் எடையினாலான ஒரே கல்லில் ஆனது.
3.இந்த கோயிலின் நந்தி, 16 அடி நீளமும், 13 அடி உயரமும் உடையது. ஒரே கல்லில், செதுக்கப்பட்டது.
4.கோயிலின், முதல் தளத்தில், பரத நாட்டியத்தின் 81 முத்திரைகளை விளக்கும், சிற்பங்கள் உள்ளன.
தஞ்சை கோவிலை பற்றி தேவாரப்பாடல்கள் இல்லை. ஏனெனில் இந்த கோயில், தேவார மூவர் காலத்திற்கு பின்னரே கட்டப்பட்டது.
கருவூர் தேவர் தஞ்சை பெரிய கோயிலைப்பற்றி பாடிய பாடல்கள், ஒன்பதாம் திருமுறையில் உள்ளன.
அவற்றில் ஒரு பாடலை இங்கு கொடுத்துள்ளேன்.
உலகெலாம் தொழ வந்து எழு கதிர்ப்பரிதி
ஒன்று நூறாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ
அங்ஙனே அழகிதோ
அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்து இவர்க்கே.
எத்தனை அழகு இந்த கோயில்?
(பரிதி= சூரியன்;அரணம் = கோட்டை; பருவரை=பெரிய மலை;
இஞ்சி= கோட்டை;ஞாங்கர்=சூரியன்)
உலகம் என்பது ஒரு மங்கல சொல்; பெரிய புராணமும் உலகெலாம் என்றே தொடங்குகிறது.
உலகெலாம் தொழ வந்து, ஒன்று நூறாயிர கோடி,எழு கதிர்ப்பரிதி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ
அங்ஙனே அழகிதோ
ஒரு 100,000 கோடி சூரியன்கள், உலகம் தொழ எழுந்தால், அந்த ஒளி எப்படி இருக்குமோ அப்படி ஒரு பேரழகாம், இராஜ ராஜேசுவரத்தில், உள்ள சிவன்.
பலஅரணம்,குலாம்
படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்து இவர்க்கே.
கோயிலின் அழகு எப்படி?தஞ்சையின் அழகு எப்படி?
கோட்டைகள் பல; அழகிய, பெரும்பொருள் கொண்டு எழுப்பப்பட்ட எழு நிலை மாடங்கள் இருக்கின்றன. அந்த மாடங்களின் மேற்பகுதியில், வெள்ளித்தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கின்றன.அந்த தகடுகள், ஒரு பெரிய மலையின், மேல் சந்திரன் தவழ்வது போன்றே இருக்கிறது.இப்படிப்பட்ட அழகான கோட்டைகள் சூழ்ந்தது தஞ்சை.அங்கு கோயில் கொண்டுள்ளார், சிவனார்.
இந்த பதிவு நம்மை இன்னும் பல முறை தஞ்சைக்கோயிலை நோக்கிப்பயணிக்கத்தூண்டுமென்று நம்புகிறேன்!!!