Friday, November 14, 2014

திருமந்திரம் அறிவோம்!

2014 தொடக்கத்திலிருந்து, ஒரு கையேட்டில், அழகான, ஆழமான பொருள் கொண்ட பாடல்களைத்தேடி எழுதி வைக்கலானேன்.

இறையருளால், இம்முயற்சி அழகாக கை வரப்பெற்றது.

பல பதிகங்களும், திருமந்திரம், வள்ளலார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், குற்றாலக்குறவஞ்சி, பிரப்பந்தம் முதலியவற்றிலிருந்து, எனக்குப் பல புதிய (#100) பாடல்கள்  அறிமுகம் ஆயின.

புத்தாண்டின் தொடக்கத்தில் எடுக்கும் புதிய தீர்மானங்களில், இது போன்ற தீர்மானங்களால், நமக்கு,பலன்கள் பல.

தேடித்தேடிப்படிக்கத்தூண்டுவதால்,  நல்ல உற்சாகம் தரும் முயற்சி இது; இறையருளை நாடி மனம் பயணிக்க உதவுகிறது; எளிதில் மனம் ஒன்றுகிறது.

என் திருமுறை ஆசிரியர், திரு.மா. கோடிலிங்கம் ,கடந்த முறை பார்த்த போது பல புத்தகங்களைத்தந்தார்.அந்த புத்தகங்களும், சைவம், மதுரை மின் தொகுப்புப்பக்கங்களும், இதற்கு, மிக மிக உதவின.

இந்த தொகுப்பை, தினசரி வழிபாட்டுக்கு என வைத்துக்கொண்டுள்ளேன். சிற்றுந்திலோ, மின் தொடர் வண்டியிலோ போகும் போதும், படித்துக்கொண்டே செல்லலாம்.

திருமந்திரத்திலிருந்து ஒரு பாடல் இங்கே!இந்த பாடல், எல்லோரும் வாழ்க்கையில் கடைப்பிக்க வேண்டிய நல்ல செயல்களை நினைவு படுத்துகிறது.

யாவர்க்குமாம் இறைவர்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுரை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே

நான்கு அடிகளுமே, நாலு விதமான அறங்களை வலியுறுத்துகின்றன. 1.இறைத்தொண்டு,
2.ஜீவகாருண்யம்,
3. மனித நேயம்
4.இனியவை கூறல்,

இன்னொரு வகையில் பார்த்தால், 2-4  அடிகளில் உள்ள அறங்களைக்கடைப்பிடித்தால்,இறைவன், உங்கள் அருகில் இருப்பார்; ஒரு சிறு இலையை சமர்ப்பித்து வழிபட்டால் போதும்.

1.கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார்- "ஒரு பக்தன் உண்மையான பக்தியோடு, ஒரு இலையோ, ஒரு பூவோ, கனியோ, தண்ணீரோ சமர்ப்பித்தாலும், அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்".

அதே பொருளை நினைவுப்படுத்துகிறது, முதல் அடி!

2."பசுவிற்கு வாயுரை- அது உண்ண புல் போன்ற உணவு ஒரு வாய் அளவேனும் தாருங்கள்.".பசுவை பேணிக்காப்பது நம் பெரியவர்கள் காட்டும் நெறிமுறையே.

3."ஐயமிட்டு உண் என்கிறது ஆத்திசூடி":-யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி.
உண்ணும்போது, ஒரு கைப்பிடியாவது, பிறருக்குக்கொடுத்து உண்ணுங்கள்;
அவ்வைப்பாட்டியும், வள்ளுவரும், சொன்ன மொழியே இது.

4.பாரதியார்- நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர்; இல்லை என்றோர்- இன்சொல் அருளீர் என்றார்.

யாராவது துன்பப்பட்டால், அவர்களுக்கு, ஆறுதலால், இன்மொழி சொல்லுங்கள்.
இன்சொல் மனதில் சோர்வை நீக்கும்;மனதில் தெம்பை அளிக்கும்.
இனியவை கூறல் என்றே ஒரு அதிகாரம் வைத்தார் திருவள்ளுவர். இன்றைய நவீன மேலாண்மை கொள்கைகளும் இதையே தான் வலியுறுத்துகின்றன.