Wednesday, March 30, 2016

திருவிடைமருதூர்-சுந்தரர் தேவாரம் (7ஆம் திருமுறை)

ஐவகை அரையர்அவர் ஆகி
ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார்

அவ்வகைஅவர் வேண்டுவ தானால்

அவரவர்வழி யொழுகிநான் வந்து

செய்வகையறியேன் சிவலோகா

தீவ ணா சிவ னே எரியாடீ

எவ்வகைஎனக் குய்வகை யருளாய்

இடைம ருதுறை யெந்தைபி ரானே.

இந்த சுந்தரர் தேவாரம் அலுவலக சூழலை தான் கண் முன்னே கொண்டு நிறுத்தியது.

உங்களுக்கு மேலே ஒரு 35 வயதில் ஒரு அதிகாரியும், அவருக்கு மேலே நாற்பதுகளில் ஒரு அதிகாரி என்று வைத்து கொள்ளுங்கள். இருவருக்கும் ஒருவரை ஒருவருக்கு அத்தனை பிடித்தமில்லை என்று வைத்து கொள்வோம்.

இப்போ உங்களை கூப்பிட்டு, இந்த இளைய அதிகாரி ஒரு வேலையை இன்றே முடிக்க வேண்டும் என்றும், மற்றொரு வேலை முக்கியமில்லை என்றும் சொல்கிறார். 
நீங்களும் தலையாட்டி வேலையை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

மதிய இடைவேளைக்கு பிறகு, வயதில் மூத்த அதிகாரி உங்களை அழைத்து வேலை விஷயமாய் கேட்கிறார். எந்த வேலையை காலை வரை செய்தீர்களோ அது முக்கியமில்லை என்கிறார். 

நீங்கள் பந்தாடபட்டதாய் உணர்கிறீர்கள். உங்கள் வாதத்தை அவர்கள் இருவரும் கேட்பதை இல்லை.
இப்படியே பல மாதங்கள் கடப்பதாய் வைத்து கொள்வோம். இந்த இரு அதிகாரிகளும் எங்கும் பணி மாற்றம் ஆக வாய்ப்பில்லை என்று வைத்து கொள்வோம்.

இப்போது ஒன்று, வேறு வழி இல்லாமல் சகித்து கொண்டு வேலையில் இருப்பீர்கள்; உங்களுக்கு மன அழுத்தம் அதிகமாய் இருக்கும்;
 இல்லை எனில் , நீங்கள் வேறு வேலை தேடி கொண்டிருப்பீர்கள்.

இந்த உவமையை இப்போது தேவாரத்தில் பொருத்தி பார்ப்போம்.

நம் உடலில் உள்ள ஐந்து புலன்களும், தத்தம் வழியில் நம்மை அரசாளுமானால் நம் நிலை என்ன?
அரையர் என்றால் அரசர் என்று பொருள்.

திருமுறையில் பல இடங்களில் எந்தை என்ற சொல் வரும். என் தந்தை என்பதன் சுருக்க வடிவம் இது.
மாணிக்க வாசகர் "எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்; யான் இதற்கிலன் ஓர் கைம்மாறே "என்பார்.

ஐம்புலன்களாகிய  ஐந்து அரசர்களும் (ஐவரும்) என்னை தம் வழியில் செலுத்துவதால்  அவரவர் வேண்டும் வழியில் செல்கிறேன் நான். வேறென்ன செய்வது? செய்வகை அறியேன்.

இந்த அரசர்களின்பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் என தெரியவில்லை;அரசாட்சி முறையில் தேர்தல் மாதிரி வாய்ப்புகளும் இல்லை :)





இவர்களிடமிருந்து நான் உய்யும் வழியை  நீ காட்டு; இடைமருதூரில் உள்ள எந்தையே; நெருப்பை போன்ற செந்நிறம் உடையவனே; சிவபெருமானே, தீயோடு நின்று ஆடுபவனே என்கிறார் சுந்தரர்.

நிறைய சமய இலக்கியங்கள் ஐம்புலன்களுக்கு கட்டளை இடுவதையும், மனதிற்கு கட்டளை இடுவதையும் பார்க்கிறோம். திரு அங்க மாலை போன்ற பதிகங்கள் இவற்றுக்கு உதாரணம்.

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது 
வாஅய்மை வேண்ட வரும்.

இது திருக்குறள். ஆசை அறுத்த நிலை மட்டுமே தூய நிலை; ஆசையை அறுப்பதற்கு ஐம்புலன்களும் நமக்கு உதவியாய் இருக்க வேண்டுமே தவிர நம்மை ஆளக்கூடாது.

இன்றுள்ள பணபுழக்கம், பார்க்கும் ஆடைகளை வாங்கி குவிக்க கண் சொல்கிறது, செவி விளம்பர பக்கம் சாய்கிறது. 

நம் பெரியவர்கள் ஏகாதசி விரதம், திங்கள் விரதம் என நாக்கை கட்டுபடுத்தி ஒன்றொன்றாய் நம் புலன்களை இறை தேடலில் செலுத்தினார்கள்.

ஐம்புலன்களை கட்டுப்பாட்டில் வைப்பது என்பது நம்மில் பலருக்கு  யாரோ எங்கோ முன்னொரு காலத்தில் செய்த ஒரு பழக்கம் மட்டுமே; நாம் அதை ஆராய்ந்ததில்லை. 

ஆளரவமில்லாத ஒரு தீவுக்கு ஒரு 3 நாட்கள் செல்கிறோம் என்று வைத்து கொள்வோம். நம் கண்கள் வழக்கமாய் இணைய வாசலில் தேடும்  Facebook, whatsapp முதலியவை எப்படியாவது கிடைக்குமா என்று தேடுபவராய் நீங்க இருந்தால் உங்கள் மனம் உங்கள் கட்டுபாட்டில் இல்லை என்று தான் பொருள்.


சின்ன சின்ன சுய சோதனைகளில் தெரியும், நம் புலன்கள் நம்மை எப்படி அரசாள்கின்றன என.

இந்த திருத்தல புகைப்படங்கள் என் சகோதரி திருமதி.கிருஷ்ணவேணி அனுப்பியவை. பெரிய நந்தி.நிம்மதியான கிராமிய மணம் வீசும் சூழல். இன்னும் இடைமருதூர் சென்றதில்லை நான். 

இறைவா, எங்களை உன் வழி நடத்து; ஐம்புலங்களிலிருந்து நாங்கள் உய்யும் வழி காட்டு.






Wednesday, March 23, 2016

புள்ளிருக்கு வேளூர்- வைத்தீஸ்வரன்கோவில் தேவாரம்

இன்று பங்குனி உத்திரம்; பங்குனி மாத பௌர்ணமி நாள்; முருகன் தெய்வ யானையை மணந்த நாள்; 
ஹோலி பண்டிகையும் இன்றே.
ஆண்டாள் ரங்க மன்னாரை மணந்த நாள்; பார்வதி பரமேஸ்வரர் திருமண நாள் என பல சிறப்பு பெற்ற நாள்.
இங்கு சிங்கையில் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள, பால சுப்பிரமணியர் கோவிலில் காவடிகள் ஆடி வந்து கொண்டிருகின்றன.

நிறைமதி சூழ் வானம் எப்படி இருள் அகன்றிடுமோ அப்படி நாம் மன இருளை இறைவன் நீக்க வேண்டும் என பிரார்த்திக்கும் அப்பர் பெருமான் தேவாரம் இங்கே.

இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி
இடர்பாவம் கெடுத்து ஏழையெனை உய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போல்
சிவலோக தெறியரிய சிந்தை தந்த
அருளானை ஆதி மா தவத்து ளானை 
ஆறங்க நால் வேதத்து அப்பால் நின்ற
பொருளானை புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே 

(ஆறாம் திருமுறை- அப்பர் தேவாரம்)


வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பண்டைய பெயர்- புள்ளிருக்கு வேளூர்.
ஜடாயு முக்தி பெற்ற தளம்; வேதங்கள் சிவ பெருமானை பூஜித்த  தலம். இங்கு முருகன் செல்ல பிள்ளை. வேள்- முருக பெருமான்.- செல்வ முத்துக்குமார சுவாமி - இவர் தன் தாய் தகப்பனை தினமும் இங்கு பூஜிக்கிறார்.

மாலை நேர கற்பூர ஆரத்திக்கு சென்று பாருங்கள்; ஒரு புடவையையும், வேட்டியையும் மாறி மாறி மேல தூக்கி போட்டு பிடிப்பார்கள். அதே நேரம் முருகனுக்கு கற்பூர தீபம் ஆகும்.
குழந்தை குமரனை தூங்க வைக்க அம்மையும் அப்பனும் காட்டும் விளையாட்டு இது.

முருகனுக்கு உகந்த பங்குனி உத்திரத்தில் புள்ளிருக்கு வேளூர் தேவாரம் பற்றி எழுதுவது பொருத்தமாக இருக்கும்.

தீராத ரோகங்களைத் தீர்த்து வைக்கிறார் இங்குள்ள வைத்தியநாதர்.
அது மட்டுமல்ல; நம் மனதில் உள்ள தேவை இல்லாத பயங்கள்; தெளிவு இல்லாத மன நிலை , இறைவன் பாதத்தில் சரணாகதி செய்த பொழுதில்  தெளிகிறது.
பிறப்பெனும் பேதைமை நீங்க- சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு என்கிறது திருக்குறள்.


உண்மை பொருளை நோக்கி பயணிக்க பயணிக்க, பிறவி பிணி தீர்ந்து, தெளிவு பிறக்கிறது.


(Image Courtesy: Dinamalar and Indianrail)


அப்பர் பெருமான் சொல்கிறார்-

 என் இருண்ட உள்ளத்தின் இருளை நீக்கி
என் தீவினைகளையும், துயரங்களையும் போக்கி , நான் உய்ய- பிறவி பிணியிலிருந்து விடுபட-என் தெளிவற்ற மனதில் (தெருளாத சிந்தை), தெளிவை உண்டாக்கி , சிவலோக நெறியை அறியும் வழியை எனக்கு வழங்கிய அருளாளன்- சிவ பெருமான்.
இவர்  தொடக்கத்திலிருந்தே  (ஆதி நாள் முதலாகவே) பெரிய தவத்தில் நிலை பெற்று இருப்பவர். நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் அப்பால் நின்றவர்; புள்ளிருக்கு வேலூரில் உள்ள இந்த இறைவனை போற்றாமல் நாட்களை வீணடித்து விட்டேனே.