Tuesday, May 31, 2016

சேரமான்பெருமாள் நாயனார் - பொன்வண்ணத் தந்தாதி!!!

 என் மாமனாருக்கு சமீபத்தில் 70 வயதானது. அவரது ஆசை தன் வாழ்நாளில் 1000 சிவாலயங்களை தரிசிக்க வேண்டும் என்பது  . நாங்கள் சிங்கையிலிருந்து இந்தியா செல்லும்போதெல்லாம், இந்தியாவில் இது வரை பார்க்காத இடங்களுக்கு 4-5 நாட்கள் ஒதுக்கு சுற்றி பார்க்க நினைக்கிறோம்.






இந்த முறை கேரளாவை தேர்ந்தெடுத்தோம். கொச்சினில் ஒரு வீடு எடுத்து தங்கினோம், அங்கிருந்து காலடி, ஆல புழா, வாழச்சால் நீர்வீழ்ச்சி, குருவாயூர், திருவஞ்சிகுளம் என பல ஊர்களுக்கும் சென்று வந்தோம் .

அருமையான சுற்றுலா. அவரின் 70 வயது பிறந்த நாளில் நாங்கள் திரு அஞ்சைக்களம் எனும் மலை நாட்டில் உள்ள ஒரே பாடல் பெற்ற ஊரில், அபிஷேகம் செய்தோம்.
கேரளா கோயில்களில் நடராஜர் சிலை உள்ள ஒரே கோயில் இது.
ப்ரஹாரம் முழுதும் நிறைய ஓவியங்கள் சுந்தரருக்கும் , சேரமான் பெருமாள் நாயனாருக்கும் உள்ள நட்பை சொல்லின.
முற்றிலும் கேரளா பாணி கோயில் இது.

திருவஞ்சிகுளம் என அழைக்கப்படும்  இந்த ஊரை ஆண்டவர்,சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரரிடம் மிகுந்த அன்பு கொண்டவர்.அவரின் பாடல் பற்றியதே இந்த பதிவு.

பால் வண்ணம் பருவம் கண்டு என்ற  பாடலைக்கேட்டு இருப்பீர்கள்.எல்லா அடியும் வண்ணம் என்று இருக்கும் .
 நிறைய கவிஞர் கண்ணதாசன் பாடல்களை கேட்கும் போது அவரது மொழி ஆளுமை நம்மை அசர வைக்கும்.

 நல்ல கவிஞர்கள் பலரும் சமய இலக்கியங்களை ஆழ்ந்து படித்திருப்பார்கள். அதுவே அவர்களுக்கு சொற்கள் மீது நல்ல ஆளுமையை தந்திருக்கும்..
அதற்கு ஒரு நல்ல உதாரணம் பதினோராம் திருமுறையில் உள்ள இந்த பாடல்.


பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    ஆகிய ஈசனுக்கே
.இந்த பாடலை அருளியவர் சேரமான் பெருமாள் நாயனார். சேர நாட்டு அரசர். அப்போது மலை நாட்டு பகுதியிலும் தமிழே மொழியாக இருந்துள்ளது.

என் தேவார ஆசிரியர் திரு.மா.கோடிலிங்கம் சொல்வார்: எங்கம்மா பார்வதி கருப்பு. என் அப்பா சிவனார் நல்ல நிறம்னு.
 சிவனாரை அழல் வண்ண மேனி பிரான் என்று போற்றுவார் அப்பர்.

நிறைய நேரங்களில் நம் குடும்பங்களில் நிறம் பற்றிய பேச்சு எழுவதைப்பார்க்கலாம். குறிப்பாக பெண் பார்க்கும்போது, பெண் சிவப்பாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.

சிவனார் சிவப்பு; அம்மையோ கருப்பு. அம்மைக்கு தன் உடலில் சரி பாதி தந்த சிவனார் சொல்லும் செய்தி, கருப்பும் சிவப்புக்கும் பேதமில்லை என்பதே.


இப்போது பாடலின் பொருளை பார்ப்போம்.
கடைசி இரண்டு அடிகளில் இருந்து தொடங்க வேண்டும்.
தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்  ஆகிய ஈசனுக்கே, பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மேனி பொலிந்திலங்கும்.

தன்னை உணர்தலே மெய்யுணர்வு. தானும்  இறைவனும் வேறில்லை என்று அறியும் அறிவே ஞானத்தின் இறுதி நிலை.

அப்படி தன்னைக்கண்ட (அறிந்த) எனது மேனி, அப்படி கண்டபின் என்ன நிறம் ஆனதோ, அந்த நிறத்தை தன் இயல்பான நிறமாக கொண்டவர் சிவபெருமான். அந்த நிறம் பொன் வண்ணம் ஆகும்.



மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    வீழ்சடை 
தாழ்ந்து தொங்குகின்ற சடைகள்,மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே.

வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மால்விடை

பெரிய இடப(ரிஷப )
 ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறமோ அந்த நிறமே.
பொன்னும் வெள்ளி நிறமுமாக அவருக்கு ஏற்பட்ட இறைக்காட்சியை சொல்கிறார் சேரமான் பெருமாள் நாயனார்.

Saturday, May 28, 2016

அப்பரும் ஆழ்வாரும் ஏற்றிய விளக்குகள் !

ஒரு அப்பர் தேவாரமும், ஆழ்வார் பாசுரமும் ஒரே மாதிரி இருக்கின்றன. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததில்லை. ஒருவர் சிவபெருமானையும், மற்றவர் பெருமாளையும் நோக்கி பாடிய பாடல்களின் பொருள் ஒன்றே.

அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக
இன்பு (உ)ருகு சிந்தை இடுதிரியா- நண்பு (உ)ருகி
ஞான சுடர் விளக்(கு) ஏற்றினேன்- நாரணற்கு
ஞான தமிழ் புரிந்த நான் - (பூதத்தாழ்வார்)

உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக
மடம்படு உணர் நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி
இடம்படு ஞானத்தீயால் எரிகொள விருந்துநோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே ( அப்பர்)

இந்த ஆழ்வார் பாசுரத்தின் பின்னால் ஒரு சுவையான கதை இருக்கிறது.

திருக்கோவிலூரில் மழை பெய்த ஒரு நாளில் பொய்யாழ்வார், பூதத்தாழ்வார், பேய் ஆழ்வார் ஆகிய மூவரும், ஒரு சிறிய இடத்தில் மழைக்காக அண்டி இருந்தனர்.அவர்கள் மூவருக்கு மட்டுமே இடம் இருந்தது. இருள் படர்ந்த இரவு!. அப்போது அவர்கள் மூவரும் தங்களை யாரோ நெருக்குவதாக உணர்கின்றனர். 

மூன்று ஆழ்வார்களும் ,ஆளுக்கு ஒரு பாடல் பாட, பூதத்தாழ்வார் பாடிய இப்பாடலினால் ஒளி வந்தது. கண்ணன் அவர்கள் மூவரையும் பார்த்து புன்னகைக்கிறார்.

இப்போது அப்பரின் பதிகத்தை பார்ப்போம். 
அப்பரின் இந்த பதிகம் திருக்கடம்பூர் கோயிலில் பாடபெற்றது. இந்த கோயில் கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது.கரக்கோயில் வகையை சேர்ந்தது. கரக்கோயில் என்ற வகை கோயில்கள் தேர் போல இருக்கும். தமிழகத்தில் இருக்கும் பாடல் பெற்ற ஒரே கரக்கோயில் இது என்கிறது விக்கி
(Attribute to:By Kadamburvijay - சொந்த முயற்சி, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=16212523)

நிறைய அற்புதமான சிற்பங்கள் உள்ள கோயில்.

அப்பரின் பதிகங்களில் அதிகமாக உவமைகளை காணலாம். இந்த பதிகம் அந்த வகையினதே.

எப்போது ஈசனின் திருவடியைகாணலாம்? உடம்பு என்பதை ஒரு வீடாக கொண்டால், அந்த வீட்டில், உள்ளம் என்பதை ஒரு தகளியாக (அகல் ஆக) உவமை செய்து கொள்வோம். அந்த தகளியில் தீபம் ஏற்ற நமக்கு தேவைப்படும் நெய்யாக நம் இறை உணர்வு இருக்க வேண்டும்.

நம் உயிரே, அந்த தகளியில் உள்ள திரியாக இருக்க வேண்டும். இப்படி ஏற்றப்படும் விளக்கினால் தான் திருக்கடம்பூர் தந்தையின் கழலடியைக்காணலாம்.

துன்பமும் கவலைகளும் நம்மை வந்து நெருக்கும்போது, நாம் சொல்ல வேண்டிய கீழ்காணும் பாடலும், திருக்கடம்பூரின் அப்பர் தேவாரம் தான். கீதையின் சாரமான உன் பணியை செய்; பலனை எதிர்பாராதே என்ற அதே தொனியில் என் கடன் பணி செய்து கிடப்பதே; இறைவனுக்கு கடமை தன் அடியவரான என்னையும் தாங்குதல் என்கிறார் அப்பர் பெருமான்.

நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் 
தென் கடம்பை திருக் கர கோயிலான் 
தன் கடன் அடியேனையும் தாங்குதல் 
என் கடன் பணி செய்து கிடப்பதே 


Saturday, May 14, 2016

உளோம்; போகீர் என்றானே!!! (திருவெண்பாக்கம் சுந்தரர் தேவாரம்)

சுந்தரமூர்த்தி நாயனார், இறைவனைத்தன் தோழனாக பாவித்தார்.

உரிமையாய் இறைவனைக்கோபமாக பேசுவதும், சண்டையிடுவதுமாய், பல சுந்தரரின் பதிகங்கள் இருக்கின்றன. இது ரொம்பவே வித்யாசமான நயம்.

ஒரு சில பதிகங்களில், சுந்தரரை பற்றி எண்ணி வியக்கவும், அதில் உள்ள நகைச்சுவை உணர்வு உண்டாக்கும் மகிழ்ச்சியுமாய் படிக்க முடிகிறது.

இந்த பதிவு திருவெண்பாக்கம் தேவாரம் பற்றியது. பூண்டி ஏரிக்காக முன்பிருந்த கோயில் இடமாற்றம் செய்ய பட்டுள்ளது. அங்கிருந்த சிவலிங்க திருமேனி, புரசைவாக்கம் கோவிலில் இருக்கிறது.

முதலில்,பரவை நாச்சியாரை திருவாரூரில் மணந்த சுந்தரர், அதன் பின்னர் பல தலங்களை தரிசித்து, திருவொற்றியூர் வந்தார்.
அங்கு சங்கிலி நாச்சியாரைக்கண்டார். அவரையும் மணம் முடிக்க ஆசைப்பட்டார்.
சங்கிலி நாச்சியாருக்கு திருவொற்றியூரை விட்டு செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து மணம் முடித்தார்.நாட்கள் கழிந்தன.

 திருவாரூர் கோயில் திருவிழாவைக் காண சுந்தரரின் மனம் ஏங்கியது.
திருவாரூருக்கு கிளம்பினார்.
 பண்ணிய சத்தியம் வேலை செய்தது; திருவொற்றியூர் எல்லையைத்தாண்டியதும் சுந்தரரின் கண் பார்வை போயிற்று.

மனோரமா ஆச்சி ஒரு திரைப்படத்தில் சொல்வார். "எங்க வீட்டுக்காரர் அவர் வீட்ல இல்லைன்னு சொல்ல சொன்னாருங்க".பார்க்கும் மக்கள் அனைவரும் ஆச்சி சொல்லும் தொனிக்கே சிரிப்பார்கள்.

கிராமங்களில் முன்பு தடுப்பு ஊசி போட வந்தாலோ, காப்பீடு பற்றி விலக வந்தாலோ, வீட்டுக்குள்ளே இருந்தபடியே, போயிட்டு வாங்கன்னு அனுப்பி விடுவது வழக்கம்.

திருவெண்பாக்கம் தலத்தில், நீ இங்கு இருக்கிறாயோ என்று கேட்டார் சுந்தரர். அதற்கு இறைவன் "உளோம். நீர் போகலாம்" என்று பதில் அளித்தார்.

கண் பார்வை வரவில்லை. இறைவன் சுந்தரருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் தந்தார்.அதை எடுத்து கோபமாய் சுந்தரர் வீசவும் நந்தியின் கொம்புகள் உடைந்தன.
இந்த தலத்தில் இறைவனின் பெயர் ஊன்றீஸ்வரர்.இறைவியின் பெயர் மின்னொளி அம்மை.

திருவெண்பாக்கம் தேவாரம் முதல் பாடல் (ஏழாம் திருமுறை: 89வது பதிகம்)

“பிழை உளன பொறுத்திடுவர்” என்று அடியேன் பிழைத்தக்கால்
பழி அதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்;
“குழை விரவு வடி காதா! கோயில் உளாயே!” என்ன,
உழை உடையான் உள் இருந்து, “உளோம்; போகீர்!” என்றானே!



(இப்போதுள்ள கோயில் முகப்புத்தோற்றம் )


(கண் பார்வை இழந்த சுந்தரரும், கொம்பு உடைந்த நந்தியும் )



(Pics: Courtesy: http://veludharan.blogspot.sg/)

குழை=குண்டலம். 
குழை அணிந்த, தூங்குங்காதினை உடையவனே!, நான் என்ன  பிழை  செய்தாலும், இறைவன் என்னை பொறுத்துகொள்வார் என்னும் துணிவினால், நான் பிழை செய்தேன். ஆனால் உனக்கு  என்ன பழி வரும் என்று எண்ணி பார்க்காமல் நீ என் கண் பார்வையை மறைத்து விட்டாய்.
இப்போது நீ கோயிலில் இருக்கிறாயோ என்று கேட்டால், மானை ஏந்திய கைகளை உடையவன் உள்ளுக்குள் இருந்து கொண்டு, உளோம் போகீர் என்கிறானே. 


ஒவ்வொரு பாடலும் உளோம் போகீர் என்ற சொற்றொடருடன் இருப்பது இப்பதிகத்தின் அழகு.