Monday, November 14, 2016

என் மனத்தே வைத்தேனே!-அப்பர் தேவாரம்

இன்று ஐப்பசி மாத பௌர்ணமி. எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது.பல வருடங்களுக்கு பிறகு இன்றைய பௌர்ணமி நிலா மிகபெரியதாய்,பூமிக்கு அருகில் நம்மைப்பார்க்க, சிவனாரின் தலையில் இருந்து அருகில் வந்திருக்கிறது.



இந்த பதிவில் ஒரு சில அப்பர் தேவாரங்களைப்பார்க்கலாம்.
திருமீயச்சூர் என்னும் தலம் கும்பகோணத்துக்கு பக்கத்தில் இருக்கிறது. இங்கு தான் முதல் முதலில் லலிதா சஹஸ்ரநாமம் உருவானது. இந்த தலத்தில் அப்பர் பெருமான் பாடிய பாடலில், சொல்லாய் மட்டும் இருக்கிறது நிலா.

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான்நி லாவி யிருப்பனென் னாதனைத்
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே


இந்தப்பாடலின் பொருள் :
என் உடலில் உயிர் இயங்கும் பொழுதில் எல்லாம், நான் என் தலைவராகிய சிவனாரையே எண்ணிக்கொண்டிருப்பேன். இன்பத்தேன் விளங்கிய சிவபெருமான் என்னை என்றும் பேரின்ப வீட்டில் நிலைப்பெறுமாறு வைத்திடுவார். 

(திருமீயச்சூர் கோயில் கோபுரம் - பட உதவி- http://jaisspritualonlinejourney.blogspot.sg/)

ஆசையை அடக்கி நல்வழியில் இருப்பவருக்கு நிச்சயம் வீடுபேறு வாய்க்கும் என்று சொல்லும் நாலடியார் செய்யுள் இது.

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்.

சிவபெருமானையே எண்ணி இருக்கும் அப்பர் பெருமான் நிச்சயம் என்றும் நிலைபெற்று இருக்கும் பேறு பெற்றுள்ளார்.

அப்பர் பெருமானின் அன்பில் இன்னொரு தேவாரம், திருக்கச்சிஏகம்பம் தலப்பாடல்.

தேனோக்குங் கிளிமழலை யுமைகேள்வன் செழும்பவளம்
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே 


காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், பஞ்சபூத தலங்களில் ஒன்று. காமாட்சி அம்மை, சிவபெருமானை மணல் லிங்கமாய் செய்து பூஜித்த இடம். அம்மையின் அன்பில் இருக்கும் சிவனாருக்கு, தழுவ குழைந்த நாதர் என்னும் பெயரும் உண்டு. 

இந்தப்பாடலின் தொடக்க அடி- அம்மையைப்பற்றியதாய் இருப்பது இன்னும் சிறப்பு. 

தேனோக்குங் கிளிமழலை யுமைகேள்வன்: தேனைபோல, கிளி மொழியில் அழகான மழலை மொழி பேசும் அம்பிகையின் கணவர் 

செழும்பவளம்
தானோக்குந் திருமேனி -பவளம் போன்ற நிறம் உடையவர்;
தழலுருவாஞ் சங்கரனை- நெருப்பைப்போன்ற எல்லாருக்கும் நன்மைகளை மட்டுமே செய்யக்கூடியவர்.

வானோக்கும் வளர்மதிசேர் சடையானை-சிவந்த வானத்தை போல இருக்கும் சடையில்,பிறை நிலவை சூடி இருக்கிறார்.

வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை-தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தலைவனாய் இருப்பவனை, என் மனதில் வைத்தேனே !.

அன்போடு இறைவனை மனதில் வைக்க வேண்டும். வைத்தால், இங்கு வாழும் வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்களைத்தாங்கும் வலிமையையும் கிடைக்கும். வீடு பேறாகிய, பிறவா வரத்தையும் பெறலாம்.