Sunday, February 12, 2017

கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி (பதினோராம் திருமுறை )

நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த  கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

இந்த பதிவில் பார்க்கப்போகும் அந்தாதி, சற்றே வித்தியாசமானது.

நம் எல்லாருக்கும் பரவலாக தெரிந்த அந்தாதி அபிராமி அந்தாதி. முந்தைய பாடலின் கடைசி சொல்லை வைத்து, அடுத்த பாடல் தொடங்கும், ஒரு வகை பாமாலை அந்தாதி.



இந்த கயிலை பாதி, காளத்தி பாதி அந்தாதியில் பாடல்கள் ஒவ்வொன்றும் முந்தைய பாடலில் கடைசி சொல்லில் தொடங்குகின்றன. ஆனால் பாட்டு ஒவ்வொன்றும், கயிலை, காளத்தி என்று மாறி மாறி இருக்கின்றன.

ஏன் கயிலை பாதி, காளத்தி பாதி?


திருக்காளத்தி (காளஹஸ்தி) தென்கயிலை எனப்போற்றப்படுவது. இந்தத்தலத்தின் இறைவர் திருகணநாதேஸ்வரரும், இறைவி ஞானப்பூங்கோதையும் இவருடைய ஆத்மார்த்த, இஷ்ட தெய்வங்கள். எனவே கயிலையையும், காளத்தியையும் நூறு பாடல்களில் மாறி மாறி பாடியுள்ளார்.
முதல் பாடலில் நக்கீர தேவர் வெண்பா விளக்கேற்றி வழிபடுகிறார்.  இதே போல அப்பரும் ஆழ்வாரும் ஏற்றிய விளக்குகளாய் உள்ள பாடல்களைக்கொண்ட முந்தைய பதிவின் இணைப்பு இங்கே:அப்பரும் ஆழ்வாரும் ஏற்றிய விளக்குகள் !

ஏன் விளக்கேற்ற வேண்டும்? இத்தனை மின்விளக்குகள் இருக்கும் இன்றைய நாட்களிலும் கூட?
இன்றைய காலகட்டத்தில் நமக்கு பல்வேறு விதமாய் நம் மனம் அலைபாய்கிறது. இணையம், அலைபேசி என்று நம் தூக்கம் கூட தொலைந்த இரவுகள் அதிகம்.

இணையத்தில் படித்த ஒரு செய்தி:ஒரு அம்மா, இந்தியாவிலிருந்து தன் மகள், மருமகனோடு கொஞ்ச நாட்கள் இருக்க சென்றாராம். இருவரும் வேலைக்கு செல்வதால், ஆளுக்கு ஒரு நேரத்தில் வீட்டுக்கு வருவார்களாம்.முறையாய் யாரும் வீட்டில் விளக்கேற்றுவதில்லை. அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த அம்மா, தினமும் காலையும் மாலையும் விளக்கேற்றி, அவர்களையும் தினமும் வழிபடு செய்ய வைத்திருக்கிறார். எதிர்மறை எண்ணங்கள் தொலைந்ததாக அவர்கள் சொன்னார்களாம்.


தினம் தோறும் விளக்கேற்றி வழிபாடு செய்யும் வீடுகளில், எதிர்மறையான சிந்தனைகள் குறையும். மனது ஒருமைப்பட, நாம் செய்கிற வேலையை திறம்பட முடிக்க, தீப வழிபாடு உதவும்.நெய் விளக்கு எதிர்மறை அலைகளை அகற்றக்கூடியது.திருக்கோயில்களுக்கு செல்லும்போது நெய் தீபம் ஏற்றுவதை ஒரு தொண்டாக செய்யுங்கள்.

சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா

நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகற் கேற்றினேன் பெற்று.

மிக எளிமையாக நாலு வரியில் நம் மனதில் பதியுமாறு உள்ள பாடல்கள் கொண்ட அந்தாதி இது.
கவிஞர் நம்மை போலவா விளக்கேற்றுவார்? அவருக்கு சொல் என்பது திரி, பொருள் என்பது நெய். இது இரண்டையும் ஏந்தும் நல்லிடிஞ்சில்-அகல் அவருடைய நாக்கு.

அந்த நாட்களில் நம்மை போல, விரல்நுனியில் தட்டச்சு செய்யவா முடியும்? அவர் பாடலை சொல்ல சொல்ல, ஒருவர், ஓலைச்சுவடியில் எழுதி இருப்பார். இது போன்ற பாடல்களைப்பார்க்கும்போது, நமக்கு இருக்கும் ஒரு வசதியும் இல்லாத காலத்தில் அவர்களின் நேரம் எத்தனை பயனுள்ளதாய், மொழிக்கும், சிற்பம் முதலிய நுண்கலைகளுக்குமாக செலவழிக்கப்பட்டுள்ளது என்று எண்ணி வியக்கிறேன்.புறத்தில் ஏற்றாமல் தம் அகத்தில் ஏற்றியதால் இன்னும் சிறப்பான, ஒளியான விளக்கு!.

இந்த முதல் பாடலில், பெண் பாகற்கு (சிவனுக்கு) சொல், பொருள், நாக்கு என்ற மூன்றைக்கொண்டு உருவாக்கப்பட்ட வெண்பா விளக்கை ஏற்றுகிறார் .

இந்த அந்தாதியில் நிறைய பாடல்கள் பொருள் திறத்தால் நம்மை அசரவைக்கின்றன. எழுதப்பட்ட காலம் 1200  ஆண்டுகளுக்கு முன்னர்!

இந்த அந்தாதியிலிருந்து இன்னும் சில பாடல்கள்:


உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும் 

ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய
பூக்கையிற் கொண் டெப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சு
மாக்கயிலை என்னும் மலை.
(புத்தேளிர்=தேவர்கள்).


இறைவன் எப்படிப்பட்டவர்?

பல உருவங்களில் நாம் வழிபட்டாலும், அவர் உணர்வதற்கு அரியவர்.அப்பர் பெருமான் சொல்வதைப்போல,பெண் , ஆண் என்ற வேற்றுமைகளைக்கடந்தவர். அந்த இறைவனின் இருப்பிடம், மாக்கயிலை என்னும் மலை. அந்த மலையில், தேவர்கள் கூட நெருக்கமாய் தொடுத்த பூக்களோடு எப்பொழுதும் இறைவனை இறைஞ்சுகின்றனர்.
இறைவனின் பெயரின் சிறப்பு :
நாமாவளி என்று ஒரு வகை பிரார்த்தனையை செய்கிறோம். இறைவனின் பெயரை மறுபடி மறுபடி சொல்லும் பிரார்த்தனை. இந்த நமச்சிவாயத்தை மறுபடி மறுபடி சொன்னால் என்ன நடக்கும் என்று அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்று எல்லாருமே நமச்சிவாய பதிகங்களில் சொல்லி இருக்கிறார்கள். வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது, நாதன் நாமம் நமச்சிவாயவே என்பது சம்பந்தரின் மொழி.

வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித்

தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயவே
கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்
தெம்பெருமான் ஓரஞ் செழுத்து.
வேகம்= எழுச்சி மிக்க, பயன்மிகு 

தூயவேகம்பெருமாதேவியொடு மன்னு கயிலாயத்தெம்பெருமான் :பெரும்பாலும் கோயில் பெயர்களுக்கு முன்னால் அருள்மிகு என்று சொல்வது வழக்கம். பெருமாதேவியாகிய பார்வதி, தொண்டர்களுக்கு அருள்பாலிப்பவர். உலகிற்கு அம்மை.அருட்கடல். அவரோடு கைலாயத்தில் இருக்கிறார் சிவனார். அம்மையோடு இருப்பதால், உடலின் சரிபாதியோடு இருப்பதால், அவர் விரைவாய் நம் தொல்வினைகளை தீர்த்து வைப்பார்.

வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே ஓரஞ்செழுத்து: எப்படி மருந்துகள் நோய்களை தீர்க்கின்றனவோ, அது போல நமச்சிவாய என்னும் மருந்து, பிறவி நோயைத்தீர்க்கும்.
எப்படி வழிபட வேண்டும்?

நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால் நம்பர்
தமக்கழகு தாமே அறிவர் -அமைப்பொதும்பிற்
கல்லவா நீடருவிக் காளத்தி ஆள்வாரை
வல்லவா நெஞ்சமே வாழ்த்து.

ஒரு சிலர் சொல்வார்கள், மந்திரங்கள் தெரியாது, எப்படி பூஜை செய்ய வேண்டும் என்று தெரியாது என்று. திருக்காளத்தி கண்ணப்பர் வாழ்ந்த ஊர். அவர் செய்த பூஜை அவருக்கு தோன்றிய அளவில் செய்யப்பட்ட பூஜை. ஆனால் அன்போடு செய்யப்பட்ட பூஜை.அதைத்தான் இறைவனும் விரும்புகிறார்.


நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால்
நம்பர் தமக்கழகு தாமே அறிவர்- சிவபெருமான் தாம் செய்யத் தக்கதைத் தாமேயறிவார்.நாம் அவருக்கு சொல்லவேண்டியதில்லை.நமக்கு இசைந்தவாறு (முடிந்தவாறு) நாம் இறைவனை வேண்டினால்,நாம் வேண்டியதை எப்படி தர வேண்டும் என்பதை அவர் அறிவார்.
அமைப்பொதும்பிற்
கல்லவா நீடருவிக் காளத்தி ஆள்வாரை
வல்லவா நெஞ்சமே வாழ்த்து.

(அமை-மூங்கில், பொதும்பு-மரச்செறிவு, நம்பர்=சிவபெருமான்;வல்லவா - இயன்ற அளவு)

மூங்கில் மரங்கள் அடர்ந்துள்ள, கல் என்னும் ஓசையோடு வீழும் நீண்ட  அருவிகளைக்கொண்ட காளத்தி நாதரை, முடிந்தவரை நெஞ்சமே நீ வாழ்த்து.