Saturday, April 29, 2017

உ.வே.சா ஒரு முறை தானே வருவார்! எப்போது நாம் நம் இலக்கியங்களை விரும்பிப்படிப்போம்?- திரு எழு கூற்றிருக்கை

திரு.நாஞ்சில் நாடனின் சிற்றிலக்கியங்களை வாசிக்க வேண்டும், நம் தமிழ் இலக்கியங்களை நேசிக்கவேண்டும் என்ற அவர் வலைப்பக்கம், நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து படிக்க வேண்டும், ஆசையாய் படிக்க வேண்டும் என்று சொன்னது. உண்மை தான்!



தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம் என்னும் சிங்கை தமிழ் மொழி விழாவின் அடிநாதத்தோடு, தமிழை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டியதன் அவசியத்தையும் மனதில் கொள்வோம்.

தமிழின் 96 வகை சிற்றிலக்கியங்களில், சித்திரக்கவி வகையை சார்ந்த திரு எழு கூற்றிருக்கையும் அடங்கும்.
இந்த செய்யுளைப்படிக்கும்போது ஒரு புதிருக்கு விடைகாணும் மகிழ்ச்சி இருந்தது. புதிது புதிதாய், விறல், திறல், புறவம், சம்பை, நாட்டம் என பல புதிய சொற்கள் அறிமுகம் ஆயின. 😃

திருஎழுகூற்றிருக்கை என்றால் என்ன?
 (Picture: For representation only) 

எண் வரிசை( பொருளால்) ஒரு தேர் போல தோன்றும் அமைப்பு கொண்ட செய்யுள் தான் திருஎழுகூற்றிக்கை.
மற்ற மொழிகளில் இது போன்ற செய்யுள் இருக்கிறதா என்று தெரியவில்லை.

இந்த படத்தில் இருப்பது திருஞானசம்பந்தர் எழுதியது. எல்லா தேவார பதிகங்களை தினசரி பாராயணம் செய்ய திருஞானசம்பந்தரின் தந்தையால் முடியவில்லை. அவருக்கு உதவ எண்ணி  சம்பந்தர் பாடிய செய்யுள்இது .

நவீன படைப்புகள் ஒரு பக்கம் இருக்க, நம் முன்னோர் எழுதிய இலக்கியங்களை மறுபடி கரையான் அரிக்க செய்வது நல்லதா? 

வீடு வீடாக சென்று கரையான் அரிக்க கிடந்த சுவடிகளை, மீது நமக்கு இலக்கியங்களை மறுபடி கொண்டு சேர்த்த தமிழ் தாத்தா உ.வே.சா ஒரு முறை தானே வருவார்? 
தமிழ் தாத்தா உ. வே.சாமிநாத அய்யர் 

பொருளாலும் சொல் முறையாலும், நாம் முயற்சி செய்து படித்தால், நம்முடைய எழுதும் முயற்சிக்கும், நம் மொழிப்புலமைக்கும், மனமுதிர்ச்சிக்கும் நிச்சயம் ஆழ்ந்து கற்றல் துணை செய்யும்.
கோலம் போடுவது போல , சொல்லால் ஆன சித்திரம்.மிகுந்த சொற்புலமையும், ஆழ்ந்த பொருள் அறிவும் இருந்தால் மட்டுமே செய்ய முடிந்த அற்புதம்.

யாரெல்லாம் திருஎழுகூற்றிக்கை எழுதி இருக்கிறார்கள்?

1.திருஞானசம்பந்தர்




இணையத்தில் அருணகிரிநாதருடையதை தவிர மற்ற மூன்றுக்கும் முழு உரை இல்லை.முழு பதிகம் மட்டுமே கிடைக்கிறது. 

இந்த பதிவில் நாம் சம்பந்தரின் திருஎழுகூற்றிக்கையைப்பார்ப்போம்.

இசை வடிவில் கேட்க

தேரின் மேல்பாகம் :

மேல் தட்டு :1

ஓர் உரு வாயினை
மான் ஆங்காரத்து ஈர் இயல்பு ஆய்
ஒரு விண் முதல் பூதலம்
1
2
1
சொல்லுக்கும்கற்பனைக்கும் கடந்த இறைவன்,
 படைத்தல்காத்தல்அழித்தல்மறைத்தல்அருளுதல் 
என்ற ஐந்து தொழில்களை செய்வதற்காக ஒரு உருவமாய் இருக்கிறார்
ஆங்காரத்து-ஐந்தொழில் ஆற்ற
சக்தியோடு சேர்ந்து அர்த்தநாரி உருவம் கொண்டாய்
ஐம்பூதங்களையும் படைத்தாய்
மேல் தட்டு  :2
ஒன்றிய
இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்துஅளித்துஅழிப்பமும்மூர்த்திகள் ஆயினை
இருவரோடு
ஒருவன் ஆகி நின்றனை;
1
2
3
2
1
ஐம்பூதங்களை அவற்றுக்குரிய செயல்பாடுகளை ஒழுங்காக செய்யுமாறு இறைவனே 
ஒருமித்தார் . அப்படி செய்ததால் மட்டுமே நமக்கு வாழ  இந்த பூமி சாத்தியம் ஆனது.

இருசுடர் = சூரியன் சந்திரன்
உம்பர்கள்தேவர்கள்
பிறவும்மற்ற உயிர்கள்
என்று அனைத்தையும் படைத்துகாத்துஅழிக்கும் முத்தொழிலும் செய்கிறாய்.
பிரம்மா ஒரு புறமும்விஷ்ணு ஒரு புறமுமாக , இறைவா நீர் மும்மூர்த்தியாகவும்அதே நேரத்தில் ஒரே ரூபமாகவும் இருக்கிறீர்

மேல் தட்டு  :3 (1-2-3-4-3-2-1)
ஓர் ஆல் நீழல்-இறைவன் ஆல மர நிழலில் வீற்று இருக்கிறார். ஆலமரம் என்பதும் ஒரு குறியீடு தான். பரந்த நிழலைத்தருவது ஆலமரம். நமக்கு நிழல் தரும் திருவடி அதுவே.
 ஒண் கழல் இரண்டும்- இந்த அடி எனக்கு மாணிக்க வாசகரை நினைவுபடுத்தியது. இறைவனின் திருவடிகள் இரண்டையும் ஒன்றாக சொல்கிறார்.
முப்பொழுது ஏத்திய-மூன்று வேளைகளிலும் தொழுத

 நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை-நான்கு சனகாதி முனிவர்களுக்கு, எல்லையில்லா பெருவாழ்வளித்தாய்.
நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை-     நாட்டம்(கண்கள்).இறைவனின் கண்கள்,எவ்வகை இருளையும் போக்குவதாய் ,  சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பாக இருக்கிறது.
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை-கங்கையையும், பாம்பினையும் தலையில் வாய்த்திருக்கும் இறைவன், பிறை நிலவையும் தலையில் சூடி இருக்கிறார்.

மேல் தட்டு 4: (1-2-3-4-5-4-3-2-1)

ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;

ஒருதாள்= தாள் (தண்டு) இறைவனின் திருவடி தாமரையை சுட்டுகிறது.  
ஈர் அயில்= வாள், மழு (கோடரி போன்ற) அயில்(இரும்பினால்) ஆன ஆயுதங்களை ஏந்தியவர். (கந்த சஷ்டி கவசத்தில் அயில் வேல் காக்க என்பது இரும்பினால் ஆன வேல் )
மூ இலைச் சூலம்= திரி சூலம் ஏந்தியவர்
நால்கால் மான்மறி= நான்கு வேதங்களும் இறைவனின் கையில் இருக்கும் மானின் கால்களாக இருக்கின்றன.
மறி= மான் குட்டி  (செம்மறி ஆடு என்ற சொல்லும் இப்படி தான் வந்திருக்குமோ? )

ஐந்தலை அரவம் ஏந்தினை= ஐந்து தலைகளையும் உடைய நாகத்தை இறைவன் கழுத்தில் ஏந்தி இருக்கிறார். ஐந்து தலைகளும் நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்தை சுட்டுகின்றன.


காய்ந்த நால் வாய் மும் மதத்து இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை-
நால்வாய்-தொங்குகின்ற வாய். (நிறைய அவ்வையாரின் செய்யுள்களில் விநாயகரின் வாயை நால்வாய் என்கிறார்).

இந்த சிற்பம் திருவதிகை கோயிலில் எடுத்தேன். கஜசம்ஹாரமூர்த்தி. கஜாசுரன் என்னும் அரக்கனை வதம் செய்து ஈரத்தோலை அணிந்தவர்.
சிவபெருமானின் உருவங்கள் உக்கிரமாக சொல்லப்பட்டாலும், நம்மை காக்கவே, விஷத்தைக்கூட விழுங்கிய திருநீலகண்டர் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.


மேல் தட்டு 5: (1-2-3-4-5-4-3-2-1)
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்ஏத்த நின்றனை (1-2-3-4-5-4-3-2-1)


இறைவனைப்பற்றிய இலக்கியங்கள் எல்லாமே உள்முகமாக நம் மனதை நோக்கிய வேறு செய்தியை சொல்பவை.



ஒரு தனு இருகால் வளைய வாங்கி,முப்புரத்தோடு நானிலம் அஞ்ச, கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை
மேரு மலையை வில்லாக்கி, இருக்காலை வளைத்து , முப்புரம் (மூன்று கோட்டைகள்) நானிலம் அஞ்ச அரக்கர்களை அழித்தார்.

திரிபுரம் எரித்த வரலாறு படிக்க இங்கே சுட்டுங்கள்

ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்ஏத்த நின்றனை

முதல் பாதி திரிபுரம் எரித்த வரலாற்றையும் (வெளிப்புறமாக), அடுத்தபாதி உட்புறமாக , எப்படி நம்மை வெற்றிகொள்ள வேண்டும் என்பதை சொல்கிறது இந்த அடிகள் . 

ஐம்புலன்களை அடக்கி, மனம் , புத்தி, சித்தம், அகங்காரம்-    என்னும் நான்கு கூறுகளைக்கொண்ட அந்தக்கரணம் அடக்கி, முக்குணம்- சத்வம், தேஜஸ், தமோ குணங்கள், இரு வளி ஒருங்கி - சுவாசத்தை சொல்வதாய் நான் எடுத்துக்கொள்கிறேன்,மனதை ஒருநிலைப்படுத்திய தேவர்கள்
ஏத்த நின்றனை- தேவர்கள் புகழ நின்றனை இறைவா.
மேல் தட்டு 6: (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)
ஒருங்கிய மனத்தோடு- மனதை ஒருநிலைப்படுத்தி ,
இரு பிறப்பு ஓர்ந்து-அன்னையின் கருவில் ஒரு முறையும், பூணூல் அணியும்போது ஒரு முறையும் என அந்தணர்களுக்கு இப்பிறப்பு என்பதை சொல்கிறார் சம்பந்தர்.
 முப்பொழுது குறை முடித்து-மூன்று பொழுதும் முறையான கிரியைகளை செய்து (சந்தியா வந்தனம்)
நால்மறை ஓதி-நான்கு வேதங்களை ஓதி
ஐவகை வேள்வி அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி-,வரல் முறை பயின்று,
ஷடங்கம் எனப்படும் வேதத்தின் ஆறு அங்கங்களையும் , 
வரல் முறை- எப்படி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற சொல்முறை பயின்று  
எழுவான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை-எழுவான் என்பது கிழக்கு திசை என பொருள்படுகிறது. அப்படி எடுத்துக்கொள்ளாமல் அந்தணர்கள் செய்யும் வேள்வியால், எழுகிற அக்கினி பிழம்பு எழும் சீர்காழி நகரில் இருப்பவர் இறைவன் 

அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை-அறுபதம்(வண்டு) ரீங்காரமிடும் சீர்காழியை விரும்பினை  
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை-நரகர்கள் தன்னைக் கொடியவன் என்று இகழும் பழி நீங்க யமன் வழிபட்டதால், கடல் சூழ்ந்த சீர்காழி வெங்குரு எனவும் அழைக்கப்படுகிறது. 
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை-இது கிருத்தவர்கள் சொல்லும் நோவாவின் கப்பல் போல தான்மூவுலகும் அழிந்தாலும், உலகம் மறுபடி உருவாக வேண்டிய உயிர்பொருள், தோணி வடிவில் மிதந்ததால், இந்த ஊர் தோணிபுரம் (சீர்காழி) எனவும் பெயர் பெற்றது;
தொலையா இருநிதி வாய்ந்த ந்தராய் ஏய்ந்தனை-சங்கநிதி,பதுமதி என்ற இருநிதிகளோடு பொருந்தியவராக இறைவன் இருக்கிறார் 

 வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை-சீர்காழியில் இன்னொரு பெயர் சிரபுரம். (இது அமுதம் பெற வந்த ஒரு அரக்கனின் சிரம் கொய்யப்பட்ட கதை).
 தட்டு 7: (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)
ஒருமலை எடுத்த- இராவணன் இமய மலையை எடுத்தான் 
 இருதிறல் அரக்கன்- திறல் (வலிமை)- பெருவலிமையுடைய அரக்கன்
விறல் கெடுத்து அருளினை- விறல்(வெற்றி)-அரக்கனின் வெற்றியை கெடுத்து அருளினை (பெரும்பாலான சம்பந்தரின் பாடல்களில் இந்த செய்தி நிச்சயம் வரும்). அரக்கன் என்று பயன்படுத்துவது ஒரு குறியீடு தான். ஆணவத்தை அழிப்பதையும், நான் என்ற அகந்தையையும் அழிப்பதையே சொல்கிறது.
புறவம் புரிந்தனை-இது சிபிச்சக்ரவர்த்தி புறாவுக்காக தன் தொடையை அறிந்து கொடுத்த வரலாற்றை சொல்கிறது. சிபி ராஜாவுக்கும், புறவுக்கும் முக்தி கிடைத்த சீர்காழி புறவம் என்ற பெயரிலும் இருக்கிறது. சீர்காழிக்கு உள்ள பெயர்கள் அனைத்தையுமே சம்பந்தர் பாடி என்றுமே அவை நமக்கு தெரியுமாறு செய்து விட்டார். மற்ற தலங்களுக்கும் இப்படி நிறைய பெயர்கள் இருந்திருக்கும்.

முந்நீர்த் துயின்றோன்- முந்நீர்(கடல்)-பாற்கடலில் உறங்கும் விஷ்ணு , நான்முகன்- பிரம்மன் ,
அறியாப்பண்பொடு நின்றனை- அண்ணாமலையார் கதையை சொல்கிறார். எல்லா சிவன் கோயில்களிலும் லிங்கோத்பவர் சிற்பம் இதைத்தான் காட்டும் ; 
சண்பை அமர்ந்தனை- சீர்காழி என்னும் சண்பையில் அமர்ந்த இறைவா. சண்பை என்பது ஒரு பூவின் பெயராக கூட இருக்கும். எங்கள் மன்னைக்கு இன்னொரு பெயர் செண்பக ஆரண்யம் 
ஐயுறும் அமணரும்- சம்பந்தர் வாழ்த காலத்தில், பல சமயங்களுக்கு நடுவே எப்போதும் மனவேறுபாடு இருந்து வந்திருக்கிறது. அதைப்பதிவு செய்வதாய் தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அமணர்(சமணர்) சூன்யத்தை தான் நம்புகின்றனர். இறைவன் இருக்கிறார் என்பதில் ஐயம் கொள்கின்றனர் என்கிறார்
 அறுவகைத் தேரரும்- தேரர்(பௌத்தர்), இந்த சொல் இன்னும் இலங்கையில் புழக்கத்தில் இருக்கிறது. ஆறு வகையான பிரிவுகள் அன்றைய பௌத்தத்தில் இருந்திருக்கலாம்.
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை- ஊழி(ப்ரளயக்காலம்). அதை உணர முடியாத அளவில் தோணிபுரம் என்னும் சீர்காழி என்றும் நிலைபெற்றிருக்கும். அந்த காழியில் அமர்திருப்பவனே.
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை-எச்சன் என்னும் சொல் அக்கினி, யாகம் செய்பவர் என்பதான பொருளில் இருக்கிறது.இது ராவணனின் இசையை இறைவன், இராவணன் கொண்ட பக்தியினால் மெச்சியதாக நான் எடுத்துக்கொள்கிறேன். என் அனுமானம் தவறாக இருக்கலாம் 
ஆறுபதமும்- ஆறு விதமான விழிப்புநிலைகளை இது குறிக்கிறது. ஆழ்ந்த உறக்கம், துரியம்,துரியாதீதம் முதலியன.
ஐந்து அமர் கல்வியும்- அவர் காலத்தில் ஐந்து வகையான கல்வி இருந்திருக்கலாம். எனக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. இறைவன் கல்வியின் ரூபமாக இருக்கிறார் என்றும் கொள்ளலாம்,
மறை முதல் நான்கும்- நான்கு வேதங்களும் 

மூன்று காலமும்தோன்ற நின்றனை;- கடந்த/நிகழ்எ/திர் காலம் என்ற முக்காலத்தையும் தோன்ற வைத்து நின்றாய்  
இருமையின் ஒருமையும்- இறைவன் வேறு, நாம் வேறு என்பது ஒரு கொள்கை.அனைத்தும் ப்ரஹ்மம் என்பது அத்வைதக்கொள்கை. அதைதான் இந்த அடி நினைவுபடுத்துகிறது 

, ஒருமையின் பெருமையும்- எல்லாமாக, எல்லா உயிர்களுமாக பிரபஞ்சமாக நீக்கமற நிறைந்த ஒருமை இறைவனின் பெருமையும்
மறு இலா மறையோர்- தங்களுக்கு உள்ள கடமைகளை(வேதங்களை முறையாய் படிப்பது, வேள்விகளை செய்து எல்லாருக்காகவும் பிரார்த்திப்பது) என்று வாழும் குறை இல்லாத மறையவர்கள் 
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை- கவுணியர் என்பது சம்பந்தரின் குலம். தன்னை சொல்லிக்கொள்கிறார். இதுபோன்ற முத்திரை அவருடைய எல்லா பதிகங்களில் இருக்கும்.
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்
அனைய தன்மையை ஆதலின், நின்னை

நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே- இது வரை சம்பந்தர் சொன்ன கருத்துகளை அவருடைய தந்தை அறிவார்.
இந்த கருத்துகளை அறிந்தவர் யாரும் நீள்நிலத்தில் (இந்த பூமியில்), நினைய வல்லவர் இல்லை- இறைவனை,நினைக்காமல் இருக்க மாட்டார்கள்.


முழு பதிகம் :
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;
ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,
நால்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி,
வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த ந்தராய் ஏய்ந்தனை;
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;

ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்,மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

Friday, April 07, 2017

மன்னையின் பாடல் பெற்ற பாமணி சிவன் கோயில்!

நான் மன்னார்குடியில் வளர்ந்தாலும், இந்த கோயிலின் மகத்துவம் என் பள்ளிநாட்களில் அறிந்திருக்கவில்லை. சமீபத்தில் குடமுழுக்கு கண்ட தேவாரத்திருத்தலம்.

மன்னை என்றால் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கோயில் தான் அனைவரும் அறிந்தது. இந்த நாகநாத சுவாமி கோயில் மன்னையிலிருந்து 2  கி.மி. தூரத்தில் தான் இருக்கிறது.

எங்கள் சின்ன செங்கமலம் !


மன்னையில் ஓடும் நதி, காவிரியின் கிளை ஆறான பாமணி. இந்த ஆற்றின் அருகே அமைந்த தலம்.

இந்த கோயிலின் சிறப்புகள் பல.

1.புற்று மண்ணால் ஆன சிவலிங்கத்திருமேனி. ஆதிசேஷன் பூஜித்த தலம். பெரும்பாலும் புற்றுக்கோயில்களில் நித்ய அபிஷேகம் செய்ய மாட்டார்கள். இங்கு மாம்பழ சாறில் அபிஷேகம் தினமும் செய்யப்படுவது சிறப்பு.தலவிருட்சம் மாமரம்.

2.திருவாரூர் தலம் காலத்தால் மிக பழமையானது என்பார்கள். முசுகுந்த சக்கரவர்த்தி காலத்தியது என்று சொல்வார்கள். இந்த கோயிலில் முசுகுந்தர் பச்சை திராட்சை படைத்தது வழிபட்டார் என்பதால், பச்சை திராட்சையை இறைவனுக்கு படைப்பதும் சிறப்பு.



3.சர்வ தோஷ நிவாரணம் தரும் தலம் இது. தட்சிணாமூர்த்தி சிம்மத்தின் மீது இருப்பது மிக அபூர்வமான  ஒன்றாகும் . 



4.சனீஸ்வரரும் பைரவரும் சேர்ந்து இருப்பதால், சனிதோஷ நிவாரண தலமாக இருக்கிறது. 

5.ஆதிசேஷனுக்கு மனித தலையுடன் தனி சன்னதி இருக்கிறது. ராகு கேது தோஷம் நீங்க வழிபாடு செய்ய உகந்த தலம்.

இந்த தலத்தைப்பற்றிய திருஞானசம்பந்தரின் பாடல் அன்றைய சோழ தேசத்தின் நெல்வயல்களின் அழகை வர்ணிக்கிறது.

அங்கமு நான்மறையும் அருள்செய் தழகார்ந்த வஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோ னுறைகோயில்
செங்கய னின்றுகளுஞ் செறுவிற் றிகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.



அங்கமும் நான்மறையும் அருளிச்செய்து -வேதங்கள் நான்கையும், வேதங்களின் ஆறு அங்கங்களையும் உருவாக்கியவர் சிவபெருமான்.ஆறு அங்கங்களும் ஷடங்கங்கள் என்று சொல்லப்படுகின்றன. இவற்றிலிருந்து தான் நாம் பரவலாய் பயன்படுத்தும் சடங்கு என்ற சொல் உருவாயிற்று.ஆறு அங்கங்கள்  எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் , நிகண்டு,தினமும் முழுஅக்கறையோடு செய்ய வேண்டிய கர்மாக்கள், பாஇலக்கணம் ஆகியவை.


அழகார்ந்த வஞ்சொல் மங்கையோர் கூறுடையான் -வாக்கினிலே இனிமை வேண்டும் என்பது பாரதியாரின் வரி. அம்பாள் அருள் வடிவம். அன்பின் ஊற்று. உலக மாதாவாகிய அன்னை, இனிய அழகான சொற்களை  பேசுபவராக இருக்கிறார். மனதுக்கு  இதம் தரும் சொல்லையே பேசும் அன்னை, சிவபெருமானின் ஒரு பாகமாக இருக்கிறார்.

மறையோன் உறை கோயில்- மறைகளாக இருப்பவரும் இறைவனே.வேதப்பொருளாய் உள்ள இறைவன் உறையும் கோயில் எப்படி இருக்கிறது தெரியுமா? 
செங்கயல் நின்றுகளும்  செருவிற் திகழ்கின்ற சோதிப்பங்கயம் நின்று அலரும் வயல் சூழ் பாதாளே.

தாமரை எப்போதும் சூரிய ஒளியில் தான் மலர்கிறது. (பங்கயம்-தாமரை). செங்கயல் மீன்கள் வயல்களில் புரள்கிற ஒளியில் தாமரை இரவிலே மலரும் அளவில் வயல்கள் சூழ்ந்த பாதாளேஸ்வரம் என்னும் கோயிலில் தான் இறைவன் இருக்கிறார்.

எப்போதும் நீர்வளத்துக்கும் , எல்லாருக்கும் வயிறார உணவிட்டும் வந்த தேசத்தில், இப்போது வறட்சி.விவசாயிகளின் தொடர் போராட்டம்.

வான்முகில் வழாது பெய்யட்டும். காவிரியில் எப்போதும் நீர் இருக்கட்டும்.எல்லாருக்கும் உணவு கொடுக்கும் உழவர் வாழ்க்கை நன்றாக இருக்க என் பிரார்த்தனைகள்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் மக்களை பாதாளேஸ்வரர் என்னும் பாமணி நாகநாதர் காக்கட்டும் .

(Inputs from Dinamani.com, Dinamalar.com, Thevaaram.com).