நக்கீரர் அருளிய கார் எட்டு என்னும் இந்த இலக்கியம், யாரை நோக்கி பாடப்பட்டு இருக்கிறது என்ற நோக்கில், தனித்து நிற்கிறது.
நம்மில் யாருக்கு தான் மழைக்காலம் பிடிக்காது? "வான் மழை வழாது பெய்க" என்ற ஒரு வாழ்த்து பாடலும் எல்லா கோயில்களிலும் தீப ஆராதனைக்கு முன்னர் பாடுகின்றனர்.
காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்
பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே - ஏந்தொளிசேர்
அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்
கண்டம்போல் மீதிருண்ட கார்.
இந்த பாடல் மேகத்தை முதன்மை பாடுபொருளாகக் கொண்டு, இறைவனை - மேகத்துக்கு உவமையாக்கி பாடப்பட்டு இருக்கிறது. அந்நாளில் புது முயற்சியாக இருந்திருக்க வேண்டும். இதை எதிர் நிலை உவமை அணி என்கிறார்கள்.
ஏந்தொளிசேர் அண்டம்போல்-அண்டம் என்னும் சொல் பிரபஞ்சத்தைகுறிக்கும். எண்ணிலடங்காத நட்சத்திரங்களையும், கோள்களையும், ஒன்றுமில்லாத வேற்று வெளியையும் உள்ளடக்கியது பிரபஞ்சம்.பல ஒளிகொண்ட பொருட்களால் ஒளியை தன் மேல் கொண்டிருக்கிறது. அந்த அண்டத்தை போல இருக்கிறது மேகம் .
மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்
கண்டம்போல்-ஆதியான் = சிவபெருமான். சிவபெருமானை எப்போதும் அழல் வண்ணத்தினார் என்று தான் பல பாடல்களில் சொல்லி இருப்பார்கள். உலகத்தைகாப்பாற்ற விஷத்தை உண்டு அதைதன் மணிகண்டத்தில் அடக்கியதால், கண்டம் மட்டுமே கருத்தவர்.அந்த கண்டத்தைபோல கருத்திருக்கிறது மேகம். கருத்த மேகங்கள் தான் மழைக்கு ஆரம்பம்.
காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்-மழை இல்லையென்றால் இந்த மண்ணில் பூக்கள் ஏது?
காந்தள் மலர்களும், பொன்னைபோல பூக்களையும் சொரியும் கொன்றையும்
பூந்தளவம்-தவளம் என்னும் சொல் வடமொழியில், வெண்மை என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
இங்கே பூந்தவளம் என்னும் சொல், பூக்களால் நிறைந்த முல்லை நிலத்தைகுறிக்கிறது .
ஆரப் புகுந்தின்றே-ஆரத்தழுவினான் என்று நிறைய படித்திருப்போம். ஆரப்புகுந்தது- முல்லை நிலம் மகிழுமாறு, அதில் புகுந்தது இருண்ட மேகம்.