Sunday, November 25, 2018

பட்டினத்தார் அருளிய திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (பதினோராம் திருமுறை)

"காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே"

என்ற பட்டினத்தாரின் வாக்கிலுள்ள உண்மை

எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே.
பட்டினத்தார் தன் உலக வாழ்க்கையின் கடைசி வருடங்களை

திருவிடைமருதூரில் கழித்தார்.

அவர் அருளிச்செய்த திருவிடைமருதூர் மும்மணிக்கோவையிலிருந்து
ஒரு சில பாடல்களை இந்தபதிவில் பகிர்கிறேன்.

ஒரு சில பாடல்கள் எழுபது அடிகள் கூட கொண்டவையாக
இருக்கின்றன. மும்மணிக்கோவை என்பது, வெண்பாவும், ஆசிரியப்பாவும்,
கட்டளைகளித்துறையில் அமைந்த பாடல்களையும் மாறிமாறி
கொண்டிருக்கிறது. ஒரு சில பாடல்களில் அந்தாதி அமைப்பை
பார்த்தேன். இது தமிழின் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். 

அம்பாளின் சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில்
மகாலிங்க ஸ்வாமி அருள்பாலிக்கிறார்.


மருது என்ற பெயரைக்கேட்டால் பெரும்பாலும் தமிழர்களுக்கு
மருதுபாண்டியர்கள் நினைவு தான் வரும்.

"மருதா மருதா" என்று சிவனை
அருந்தமிழில் அழைக்கிறார் பட்டினத்து பிள்ளை.

ஐந்து தேர்கள் கொண்ட சிறப்புடையது இந்தக்கோயில்.
சமீபத்திய வருடங்களில் பூஜ்யஸ்ரீ தயானந்த ஸ்வாமிகளின் அருளாசியுடன்,
ஐந்து தேர்களோடு சிறப்பாக திருவிழா நடந்தேறியது.



கண்ணெண்றும் நந்தமக்கோர்
  காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல
  எழுத்தென்றும் - ஒண்ணை
மருதஅப்பா என்றும் உனை
  வாழ்த்தாரேல் மற்றும்
கருதஅப்பால் உண்டோ கதி.

அப்பா... மருதப்பா, உன்னை கண்ணென்றும்,
எங்களை காக்கும் காப்பென்றும், நாங்கள் கற்ற எண்ணும்,
எழுத்தும் நீயே என்றும் உன்னை வாழ்த்துவதே எங்களுக்கு கதியை,
நல்ல வழியைத்தரும். அப்படி வாழ்த்தாவிடில் எங்களுக்கு ஏது கதி?


திருமுறையில் உள்ள அனைத்து பாடல்களுமே, பெரும்பாலும், தீயவினை மாளும் வழியைக்காட்டுவனவாக உள்ளன. கெட்ட செயல்களை செய்தால் தான் பாவம் என்றில்லை. 


விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசி பாடல், மனம் வாக்கு, செயல் 
என்று நான் எதை செய்தாலும், அதை நாராயணனுக்கு 
அர்ப்பணிக்கிறேன் என்று முடியும். இப்போதுள்ள நுகர்வு
 கலாச்சாரத்தில், அளவுக்கு மீறிய ஆசையும், பொறாமை,
 போட்டிகளும் இல்லாத மனிதர்கள் இல்லை.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
என்கிறார் வள்ளுவர்.

கப்பலில் பெருவணிகம் செய்த செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்
பட்டினத்தார். பெருநெறியை பிடித்தொழுகினார்;
அனைத்தையும் உதறினார்.

வழிபிழைத்து நாமெல்லாம்
  வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்கள்
  எல்லாம் - பொழில்சூழ்
மருதிடத்தான் என்றொருகால்
  வாய்கூப்ப வேண்டா
கருதிடத்தாம் நில்லா கரந்து.
எப்படியோ இறைவனின் கருணையால் இதுவரை
பிழைத்துவந்துவிட்டோம். வந்த வழியில் சேர்த்த பாவங்கள் எல்லாம்,
பொழில் சூழ்ந்த மருதனை வாயால் கூட அழைக்கவேண்டாம்.
மனத்தால் நினைத்தாலே அந்த பாவங்கள் மறைந்துவிடும் என்கிறார்
பட்டினத்தார்.


அன்றென்றும் ஆமென்றும்
  ஆறு சமயங்கள்
ஒன்றொன்றொடு ஒவ்வா
  துரைத்தாலும் - என்றும்
ஒருதனையே நோக்குவார்
  உள்ளத் திருக்கும்
மருதனையே நோக்கி வரும்.

பட்டினத்தார் காலத்திலும், சமயப்பிரிவினைகள் இருந்திருக்கின்றன.
ஒன்றோடு ஒன்று அவை ஒவ்வாமை கொண்டிருந்திருக்கின்றன.

ஒருவனே இறைவன் என்ற கருத்தை கொண்டிருக்கும் மனிதர்களுக்கு

குழப்பம் இல்லை. அவர்கள் உள்ளம் மருதனைதான் நோக்கி ஓடி வரும்
என்கிறார் பட்டினத்தார். எளிதில் தினமும் சொல்லும்படியான எளிமையான
பாடல்களைத்தான் இந்தப்பதிவில் பகிர்ந்துள்ளேன்.

Sunday, August 26, 2018

வாழ்ந்தே போம் இறைவா!- பதிகமும் பாசுரமும் !

இறைவனை தாயாக, தோழனாக, தன் குழந்தையாக என்று பல உறவுநிலைகளில் வைத்து நாயன்மார்களும், ஆழ்வார்களும் ,பக்தி செய்வதைப்பார்க்கிறோம். பல நாள் விண்ணப்பம் செய்தாலும், நம் பிரார்த்தனைகள் ஈடேற வில்லை என்றால்  ஒரு ஏமாற்ற நிலை வரும். அந்த நிலையில் சிலர், கடவுள் உண்மையாக இருக்கிறாரா என்ற கேள்வியை முன்வைப்பார்கள். ஒரு சிலர் இறைவனோடு கொண்ட கோபத்தில், கோவிலுக்கு போவதைத்தவிர்ப்பார்கள். 
( Thiruvarur Temple-Pic Credit-gosthala.com)

உண்மையான பக்தி கொண்டவர்களால் ஒரு போதும் கடவுளை விட்டு விலகி இருக்க முடியாது. "வேண்டத்தக்கதை அவன் அறிவான், நம் விருப்பத்தையும் இன்னொரு முறை அவனிடம் சொல்லிடலாமே" என்றே விழைவார்கள். 
அப்படிச்செய்யும்  மறு விண்ணப்பமாய் விரியும் ஒரு பதிகமும், பாசுரமும் இந்தப்பதிவில் பகிர்கிறேன். 

இறைவனைத்தன் தோழனை எண்ணிய சுந்தரர் பாடிய பதிகத்திலிருந்து -
அன்றில் முட்டா தடையுஞ் சோலை
ஆரூ ரகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த
காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார்
தங்கண் காணாது
குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால்
வாழ்ந்து போதீரே!


(படத்தில் இருப்பது தான் அன்றில் பறவை ) அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே- 
 நாள் தவறாமல், அன்றில் பறவை உணவுத்தேடி வருகின்ற சோலைகளை உடைய திருவாரூரை தன்னுடைய வீடாகக்கொண்ட  தியாகேசரே!

கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி யவைபோல-கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக் கன்றுகள் போல

என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணாது- நாள்தோறும் தப்பாது பாடியே உம்மிடத்துப் பயன்பெறுகின்ற அடியார்கள் , பலநாள் பாடியபின்னும் தங்கள் கண் காணப்பெறாது

குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே!- கோபம் வந்தால் இந்நாளில் சிலர், "எங்கியாவது போய் முட்டிக்கறேன். நீ நல்லா இரு!" என்று வழக்கு மொழியில் சொல்வதைப்போல, அந்நாளில் குன்றில் முட்டி, குழியில் விழுகிறேன் என்று சொல்லி இருப்பார்கள் போலத்தெரிகிறது. இறைவனே நீ மட்டும் நன்றாக இரு என்று இறைவனைக் கோபத்தோடு வாழ்த்துகிறார் சுந்தரர். 


ஆசை வழுவா தேத்து

          மெமக்கிங் கிழுக்காய்த்து - அடியோர்க்கு
 தேசமறிய உமக்கே
          யாளாய்த் திரிகின்றோமுக்கு
 காசினொளியில் திகழும்
          வண்ணம் காட்டீர் எம்பெருமான்
   வாசி வல்லீர் இந்த
          ளூரீர் வாழ்ந்தே போம்நீரே

                      பெரியதிருமொழி 4-9-4 (1331)


ஒன்பதாம் திருமொழியில் உள்ள பாசுரம் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்தது.  திருஇந்தளூர் என்ற தலம் மாயவரத்தில் உள்ளது. பரிமள ரங்கர் கோயில் என்று அழைக்கப்படும் இந்தத்தலம் 108 திவ்யதேசங்களில் ஒன்று. 

எனக்கு இந்த பாசுரத்தைப்படிக்கும் போது, "வாசி தீரவே" என்ற திருஞானசம்பந்தர் தேவாரம் தான் நினைவுக்கு வந்தது.

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கிங்கு இழுக்காய்த்து- இறைவன் மீது கொண்ட அன்பு, ஆசையில் எந்த குறையும் இன்றி,  ஏத்துகின்ற எங்களுக்கு இழுக்காகி விட்டது. 

தேசமறிய உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு -இந்த நாடே அறியும்படி,உன்னுடைய அடியவராக திரிகின்ற எனக்கு 

காசினொளியில் திகழும்   வண்ணம் காட்டீர்- காசு என்ற சொல்லுக்கு பொன் என்றும் பொருள் உண்டு. தங்கம் போல மிளிர்கின்ற உனது மேனி வண்ணத்தை காண்பியுங்கள். 
(Thirundhalur- temple Gopuram-PC-mayuram-raja.blogspot.com)

திருஇந்தளூர் தலத்தில் திருமங்கை ஆழ்வார் வரும்போது கருவறை கதவு சாத்தியிருந்தது. இறைவன் தனக்கு முகம் காட்டவில்லை என்ற வருத்தத்தை அவர் பதிவு செய்கிறார். 

         வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம்நீரே
வாசி -வேறுபாடு. என்னிடம் வேறுபாடு காட்டுவதில் வல்லவராய் இருக்கிறீர், இந்தளூரில் இருக்கிற பெருமாளே, நீர் நல்லபடியாய் வாழ்ந்தேபோம்! என்கிறார் ஆழ்வார்.

Wednesday, May 02, 2018

பெருவியப்பை போன்ற இறைவன்- திருநெல்வாயில் அரத்துறை

நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார்
ஐயொப் பானை யரத்துறை மேவிய
கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.





அப்பர் தேவாரங்களில் நம்மை அதிகம் சிந்திக்கவைப்பவை அவர் பயன்படுத்தும் உவமைகள். அவர் அனுபவித்த பரம்பொருளை, நம்மையும், அந்த உவமைகள் வழி அனுபவிக்க வைக்கிறார். 

நெய் ஒப்பானை- இறைவன் நெய்யை போன்று இருக்கிறார். ஒரு லிட்டர் பாலில் நம் கண்முன்னே அந்த பாலில் இருக்கும் நெய் தெரிகிறதா என்ன? தயிரை கடைந்தால் மட்டுமே வெண்ணை மேலெழும்.இறைவனும் அப்படி தான். நம் மனதில் இருக்கிறார் என்பதே தெரியாமல் மறைந்து இருக்கிறார். பக்தி உணர்வு மேலெழ, நாம் இறைவனை உறவாக எண்ணி அருகே அன்பால் உருக உருக மட்டுமே, இறைஇன்பம் கிட்டும். 

நெய்யிற் சுடர் போல்வதோர் மெய் ஒப்பானை -நெய் தீபத்தில் தெரியும் புகையில்லாத அழகான சுடரின் ஒளி போன்றவர் இறைவன். 

விண்ணோரும் அறிகிலார் -தேவர்களும் அறியாத இறைவன்.நம் நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ வழிபாட்டுத்தலங்களில், பணம் இருப்பவர் ஒரு விதமாகவும், பணமில்லாதவர்கள் வேறு விதமாகவும் நடத்தப்படுவதை பார்க்கிறோம். ஆனால் கருவறையில் இருக்கும் இறைவனை அறிய பக்தி மட்டுமே போதுமானது. தேவர்கள், மேலானவர்கள் என்று சொல்லப்பட்டாலும், அவர்களும் அறியக்கூடிய ஒருவர் இல்லை இறைவன். 

ஐயொப்பானை- ஐ - வியப்பு -எதைப் பார்த்து நமக்கு வியப்பு உண்டாகும்? என்ன அழகான உவமை இது!.  ஒரு வீட்டில் பேச ஆரம்பிக்கிற வயதில் ஒரு குழந்தை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த குழந்தை புதிதாய் சொல்லும் ஒரு சொல்லே, பெற்றவர்களுக்கு பெரு வியப்பையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கிவிடும். 

அல்லது, இயற்கையின் பேரழகு நிறைந்த இடங்களில், பெரிய நீரருவி போன்ற இடங்களில் இருக்கும் போதோ, நமக்கு எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று நாம் நினைக்கும் தருணங்களில், இத்தகைய பெருவியப்பு சாத்தியமே. 

அரத்துறை மேவிய கையொப்பானை -கை ஒப்பானை - 
(கை- ஒழுக்கம்-அறம் )-ஒழுக்கத்தை போல இருக்கிறார் இறைவன். இந்த சொல் கோர்வை தான் இந்த பதிகத்தின் மொத்த சாரம்.
நாம் எந்த வேலை செய்தாலும், அதை ஒழுக்கத்தோடு செய்தால், அந்த ஒழுக்கத்தில் இறைவன் இருக்கிறார்.  

கண்டீர் நாம் தொழுவதே -இப்படிப்பட்ட இறைவனை கண்ணார கண்டு தொழுங்கள். 

Tuesday, March 06, 2018

திருவெறும்பூர் அப்பர் தேவாரம்

சமீபத்தில் திரு.இந்திரா பார்த்தசாரதி அவர்களின், " மரத்தில் மறைந்தது பூச்சி" என்ற சிறுகதையை வாசித்தேன். கதை முற்றிலும் நகைச்சுவையாக கரப்பான் பூச்சிக்கு பயப்படும் ஒரு பெரியவரை பற்றியதாக இருந்தது. 

அந்த பெரியவர், உலகில் மனிதன் தோன்றும் நாட்களுக்கு முன்னரே தோன்றிவிட்ட கரப்பான் பூச்சியை வைத்து ஏன் ஒரு தலப்பெயர் கூட இல்லை என்று யோசிப்பார். 


எறும்புக்கு கூட திருவெறும்பூர் என்ற தலம் இருக்கிறதே!
ஆமாம். ஏன் கரப்பானை விட்டு விட்டார்கள்? எறும்புக்கு உள்ள சுறுசுறுப்பும், கூட்டமாக நகரும் ஒழுங்கும் மற்ற பூச்சிகளுக்கு நிச்சயம் இயல்பு இல்லை. 


இந்த கதையை படிக்கும் போது எனக்கு திருவெறும்பூர் நினைவுக்கு வந்தது. 
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை போய் இருக்கிறேன். 


திருச்சியில் ,பாரத வெகுமின் நிறுவனத்திற்கு மிக அருகில் இருக்கும் தலம் திருவெறும்பூர். அறுவதடி உயர குன்றுக்கோயில். 
ஆதித்த சோழர் (871-907AD),  திருபுறம்புயம் போரில் சோழர்களுக்கு கிடைத்த வெற்றிக்கு காணிக்கையாக கட்டிய பல கோயில்களில் இதுவும் ஒன்று என்று விக்கி (Wiki) அண்ணன் சொன்னார். 




காவிரி தென்கரை கோயில்களில் ஏழாவது பாடல் பெற்ற தலம். 
கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டாகத் திட்டென்னை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே


நம் உடல் மெல்ல மெல்ல தின்னப்படுகிறது. இளமையில் உள்ள உடல், நிச்சயம் முதுமையில் இல்லை. தோல் சுருக்கம் பெற்று, உடலின் பாகங்கள் சரிவர இயங்காமல் போய் விடுகிறது. இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பல வருடங்களில் நடக்கும் மாற்றங்கள். 

ஐம்பொறிகளும் எறும்புகளை போல மெல்ல ஊர்ந்து, நம் உடலை தின்றுகொண்டிருக்கின்றன. 

கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள

கறும்பி - சிறிது சிறிதாகத் தின்று .
மெய்,கண், மூக்கு, வாய், செவி- ஐம்பொறிகள். நாள்பட்ட பயன்பாட்டில் என்ன ஆகும் என்பது நமக்கு தெரியும்.

திறம்புதல்-மாறுபடுதல்  (Not Aligned). மற்றும் பல உள- அந்தக்கரணங்கள்- மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும் வெளிப்பார்வைக்கு தெரியாத, நாம் எது மெய்ப்பொருள் என்பதை அறிய நமக்கு உதவும் பொருட்கள். 

எல்லா நேரங்களிலும் நம் அந்தக்கரணங்கள் ஒன்றுபட்டா இருக்கின்றன? இன்றைய உலகில் இருக்கும் மனசிதறல்களில், திறம்புதலே அதிகம். 

குறும்பி யூர்வதோர் கூட்டாகத் திட்டென்னை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே

குறும்பி- அழுக்கு 
கூட்டகத்து - உடலிடத்துள் . இட்டு - அடைத்து .

இறைவனாகிய திருவெறும்பியூரர், இயற்கையாக செய்த காயம் இது. இதில் எறும்புகள் போல ஐம்பொறிகளும் ஊறிக்கொண்டிருக்கின்றன. அந்தக்கரணங்கள், திறம்பி திரிகின்றன.உடலும் அழுக்கை உற்பத்திசெய்துகொண்டே இருக்கிறது. இந்த கூட்டில் இறைவன் என்னை அடைத்திருக்கிறார். 

அப்பர் சொல்வது இறைவனின் திருவடியை மட்டுமே வேண்டும் மனநிலை. 

உடலை மிக கொண்டாடாமல், காயத்தை வெறும் உயிரை அடைத்த கூடாக எண்ணி, இறைவா எனக்கு பிறவா நிலை தா என வேண்டும் மனநிலை. இதை போன்ற பாடல்களை தாயுமானவரின் பாடல் திரட்டிலும் பார்க்கலாம். 


(Photo Credit: TheHindu, Wiki)