Monday, July 17, 2023

மனமே முருகனின் மயில்வாகனம்- மயிலாடுதுறை தேவாரம் அறிவோம்

 தென்னக இசையின் தாயான காரைக்கால் அம்மையின் வழியாக தான் இந்தளம் என்ற பண் அறிமுகம் ஆனது. இந்தோள ராகமும் இதுவே.

இந்த ராகத்தில் அமைந்த மனமே முருகனின் மயில்வாகனம் என்ற திரையிசைப்பாடல், மயில் ஆடும் துறையைப்பற்றிய சிந்தனைகளைக் கொண்டு வந்தது.

அம்பிகை மயிலாகத்தவம் செய்த இரண்டு தலங்கள்- மயிலாப்பூர் (திருமயிலை) மற்றும் மயிலாடுதுறை.

திருமயிலை சென்னை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
மயிலாடுதுறை இப்போது மாவட்டத்தலைநகராக இருக்கிறது. பல பாடல் பெற்ற தலங்கள் அருகில் இருக்கின்றன. 

 அம்பிகை, தட்சனின் யாகத்துக்குச் சென்று, அவமானப்பட்டு, மயில் ரூபம் எடுத்து ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் தவமிருந்து எம்பெருமானை அடைந்த தலம் மயிலாடுதுறை. 
 
Picture Courtesy: Veludharan.blogspot.com

சோழன் பெருவிரைவு ரயில் மாயவரம் எனப்படும் மயிலாடுதுறையில் முன்னெல்லாம் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நின்று செல்லும். இந்த ஊர் கோயிலுக்கு இது வரை செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. 

இந்து சமயத்தைப்பொருத்தவரை குறியீடுகளின் வழி, பல தத்துவங்கள் சொல்லப்படுகின்றன. முருகனின் பின்னால் இருக்கும் மயில் மனதைக்குறிக்கிறது என்கிறார்கள். நம் மனம் தூய்மையாக இருந்தால் அது இறைவன் அமரும் வாகனம் ஆகும்.

அம்பிகை இறைவனின் இடப்புறம் இருந்து, இறைவனின் சரிபாதியாக, உணர்ச்சிகளைக்கொண்டு முடிவெடுப்பவளாக இருக்கிறாள்.எனவே அவள் உணர்ச்சிகள் தோன்றும் மனதின் உருவாக மயில் ரூபம் கொண்டாள் என்று நான் புரிந்துக்கொள்கிறேன். 

இந்த ஊரை அருணகிரிநாதர் பாடாமல் விட்டிருக்க வாய்ப்பில்லை.
திருப்புகழில் தேடியபோது, சிகண்டியூர் என்றார் அருணகிரியார்.
சிகண்டி என்றால் மயில். 
கந்தர் அலங்காரம் பாடல் 26
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
   கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
      சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
         காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே

அருணகிரிநாதர் தன் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தபோது, முருகன் அவரை ஆட்கொண்டு உபதேசம் புரிந்தவற்றை, அவர் கந்தர் அலங்காரம் என்ற நூலில் எழுதியுள்ளார். எப்போது வேண்டுமானாலும் மயில் மீது முருகன் வள்ளியோடு வருவார். குருநாதனான அவர் சொன்ன உபதேசத்தைப்பின்பற்றுபவர் மட்டுமே காலம் கடந்து வாழ்வார்கள் என்கிறார் அருணகிரிப்பெருமான். 

மிகவும் பழமையான ஊர். காசிக்கு நிகராக சொல்லப்படும் ஊர்கள் திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர்,  திருவாஞ்சியம், சாய்க்காடு மற்றும் மயிலாடுதுறை. ஐப்பசி மாதம் முழுவதும், மயிலாடுதுறை காவிரியில் மூன்று தேவியரும், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளும் நீராடவருவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. 

இங்குள்ள அம்பிகையின் பெயர் அபயாம்பிகை. அபிராமி அம்மைப்பதிகம் போல, இங்கு வாழ்ந்த நல்லதுக்குடி கிருஷ்ணஸ்வாமி என்பவர் எழுதிய அபயாம்பிகை பதிகம் யாருமில்லாத அவருக்கு, அம்பிகை அருள் செய்ததைக்காட்டுகிறது. 



பேச்சுவழக்கில் எல்லாருக்கும் இந்த ஊர் மாயவரம். வடமொழியில் மாயூரம். அப்பர், சம்பந்தர் தேவாரங்களில் மயிலாடுதுறை என்றிருப்பதைப்பார்த்து 1980ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊர் இது. 


அப்பர் இறைவனின் திருவடி நிழலை விரும்பிப்பற்றியவர். எத்தனையோ துன்பங்கள் அவருடைய வாழ்க்கையில் வந்து சென்றன.தந்தைத்  தாயை சிறுவயதில் இழந்தது முதல், சூலை நோய் கொண்டு அவதிப்பட்டது, கடலில் கல்லைக்கட்டி இடப்பட்டது, சுண்ணாம்பு காளவாய் என்று சொல்லப்படும் சூடான அறையில் வைக்கப்பட்டது, மதம் கொண்ட யானையை எதிர்கொண்டது என்று பல உயிரைக்கூட விட்டுவைக்காத சோதனைகளை இறைவனின் பெருவருளால் தாண்டி வந்தார். 
நம்மில் பலருக்கு சோதனைகள் வரும்போது, இறைவன் இருக்கிறாரா என்ற கேள்வியும், ஏன் நான் மட்டும் அவதிப்படுகிறேன் என்ற கேள்வியும் வருவதுண்டு. 

ஏன் அப்பர் எல்லாரையும் போல சலித்துக்கொள்ளாமல், இறைவனின் திருவடியைப்பற்றினார் என்று யோசித்ததுண்டா? அது ஒன்றே வழி.  இன்றைய காலகட்டத்தில், பலரும் நேர்மறை எண்ணங்களைப்பற்றி சொல்கிறார்கள்.  (Power of Positive Thinking).

அப்பர் பெருமான் அன்று பூத்த மலர்களைக்கொண்டு அதிகாலையில் வழிபாடு செய்வதைப்பற்றி, பல தேவாரங்களில் குறிப்பிட்டிருப்பார். அவர் செய்த தொண்டால், தான் இன்றும் நமக்கு ஆலயங்களைத்தரிசிக்க முடிகிறது. 

மனதை மாற்ற சிலர் நெருக்கமானவர்களிடம் புலம்புவார்கள். சிலர் குடியைக்கையில் எடுப்பார்கள். ஆனால், இறைவனைப்பற்றுதலைப்போன்ற ஆறுதலும், நம்பிக்கையும் வேறு எதிலும் கிடைக்காது. 

ஐந்தாம் திருமுறையிலுள்ள மயிலாடுதுறை அப்பர் பெருமான் அருளிச் செய்த திருப்பதிகத்திலிருந்து சில பாடல்களைப்பார்ப்போம்.

நீற்றினான், நிமிர்புன்சடையான், விடை-
ஏற்றினான், நமை ஆள் உடையான், புலன்
மாற்றினான், மயிலாடுதுறை என்று
போற்றுவார்க்கும் உண்டோ, புவி வாழ்க்கையே.?

இந்த உலக வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது தான். ஆனால் திருநீறு அணிந்து, நிமிர்ந்து நிற்கும் பொலிவான சடையுடையவனும், நந்தியைத் தன் வாகனமாகக்கொண்டவனும், என்னை ஆள்பவனும், என்னுடைய புலன்களை மடை மாற்றம் செய்தவனும் ஆனவன் மயிலாடுதுறையில் இருக்கும் சிவபெருமான். அவனைப்போற்றுவோருக்கு உலக வாழ்க்கையும், அதனால் உண்டாகும் துன்பங்களும் இல்லை என்கிறார் அப்பர் பெருமான். 
கோலும், புல்லும், ஒரு கையில் கூர்ச்சமும்,
தோலும், பூண்டு துயரம் உற்று என் பயன்?
நீல மா மயில் ஆடு துறையனே!
நூலும் வேண்டுமோ, நுண் உணர்ந்தோர்கட்கே?

இந்த பாடலில் அப்பர் சொல்லும் கோல் என்பது யோகதண்டம் எனப்படும் மூன்று பாகங்களாகப்பிரிந்த ஒரு கோல்.  புல் என்று அவர் சொல்வது தர்ப்பைப்புல்லைக்குறிக்கிறது. கூர்ச்சம் என்பது தர்ப்பைகளை சேர்த்துக்கட்டி வைக்கப்பட்டிருப்பதைக்குறிக்கிறது. பொதுவாக, கூர்ச்சம் இறைவனையோ, உயிரையோ எழுந்தருளச் செய்யப் பயன்படும் ஒன்றாகும். தோல் என்பது மான் தோலைக்குறிக்கிறது. பூணூல் அணியும் யாருக்கும், முதன்முதலாக அவர்கள் அணியும்போது அதில், மான் தோலின் சிறுபகுதி  சேர்க்கப்படும். அது அவர்களுக்கு தியானத்தின் மேல் நிலையை அடைய உதவும்.
இந்த மூன்றும் உடையவர்கள், இறைவனை உணர வேண்டும். அப்படி இல்லாமல், இந்த பொருட்களைக்கொண்டிருந்தும் துயரத்தோடு அவர்கள் இருந்தால், இந்த பொருட்களால் பயன் ஏதும் இல்லை. 
நீல மயில் உடைய மயில்கள் ஆடும் மயிலாடுதுறை ஈசனே,  மெய்ப்பொருளான உன்னை உணர்ந்தவர்களுக்கு, நூல் எனப்படும் முப்புரிநூல் வேண்டுமா? தேவை இருக்காது என்கிறார் அப்பர்.
மறைமுகமாக இறைவனை அடைய தூய மனமே வேண்டும் என்று சொல்கிறார் என்று நான் எடுத்துக்கொள்கிறேன். 

இதன் தொடர்பில் திருமந்திரத்திலும் இதே போன்ற ஒரு பாடல் இருக்கிறது. 
நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரம்உயிர்
ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே .
 

புறத்தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு பலனில்லை. நூலும், சிகையும் தம்பால் பொருந்தப் பெற்ற அந்தணர்கள், பரமாத்மா ஜீவாத்மா  என்னும் இரண்டையும் நன்குணர்வர் எனில், அது வேதத்தை நன்கு ஓதி, வேதாந்தத்தை நன்கு உணரும் பொழுதே ஆகும்.
 இதுவே இந்த திருமந்திரப்பாடலுக்கான விளக்கம். 

அண்டர் வாழ்வும் அமர ரிருக்கையும்
கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே ((அப்பர் தேவாரம் மயிலாடுதுறை )
எது வாழ்வின் குறிக்கோள்? 
அண்டர் வாழ்வும்- தேவலோக வாழ்க்கையும் 
அமரர் இருக்கையும் - தேவலோக பதவிகளும்
கண்டு- அனுபவித்து
வீற்றிருக்கும் கருத்து ஒன்றிலோம்- அவற்றுக்கெல்லாம் தலைவனாக வீற்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
வண்டு சேர்மயிலாடுதுறை அரன்- வண்டுகள் பல மொய்க்கும் பொழில்கள் உடைய மயிலாடுதுறையில் இருக்கும் சிவனின்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே- தொண்டர்களின் பாதங்களை என் தலையில் சூடித் துதிப்பதே குறிக்கோள்

என்கிறார் அப்பர் பெருமான். பணிவு என்பதன் அடையாளமாக இருந்தவர் அப்பர் பெருமான். தொண்டு என்ற சொல்லுக்கும் பணிவு என்று பொருள் உண்டு. இறைவனின் தொண்டருக்குத்தொண்டராய் இருப்பதன் மூலம் வீடுபேறு கிடைக்கும், இந்த உலக வாழ்க்கையிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும் எனபதால் அதுவே குறிக்கோள் என்கிறார் அப்பர் பெருமான்.