Saturday, October 19, 2024

சும்மாடு எது? அப்பர் வழி கேட்போம்

 சும்மாடு என்ற சொல்லை அறிந்திருக்கிறீர்களா? இப்போதுள்ள 2k kids எனப்படும் தலைமுறை, தெரியாது என சொல்லக்கூடும். 

இந்தப்படத்தைப் பார்த்தபடி  வாசியுங்கள். பல எளிதான தமிழ் சொற்களைப்புழக்கத்தில் கொண்டுவர இது உதவும். 

எப்போதாவது மனம் எதோ இனம்புரியாத சஞ்சலத்தில் இருந்தால், திருமுறையை எடுத்து அதில் ஏதாவது பாடலைப்படிக்கும் போது அது என் மனதுக்கு ஆறுதல் அளிப்பதை உணர்ந்திருக்கிறேன். 

அப்படிதான் இந்த வாரம், பணியிடத்தில் உள்ள சுமை கொஞ்சம் அதிகம், அதோடு நாள்பட்ட சளி, இருமல் என்று உடல் வலி, திடீரென மனதில் வந்த பெற்றோர், உடன்பிறந்தோரின் முகங்கள், யாரை எப்போது பார்ப்பது என்ற ஏக்கம், என எல்லாமும் கலந்ததாய் இருந்தது மனது. அப்பரின் பாடல் கண்முன்னே தென்பட்டது. உடனே ஒரு தெளிவும் பிறந்தது!

நம்மில் பெரும்பாலானோரை விட அதிக சிக்கலானது தான் அப்பர் பெருமானின் வாழ்க்கை. ஆனால், இறைவனின் திருவடி ஒன்றைப்பற்றிக் கொண்டதனால் அவரது வாழ்க்கை பெருவாழ்வாக, இன்றும் சிந்திக்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. 


இன்றளவும் நமக்கு கோயில்கள், சுத்தமாய்க் கிடைத்திருப்பதற்கு, அவர் செய்த உழவாரப்பணியே காரணம். 

அப்பர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டில் இன்று நாம் வாழ்வது இருபத்தோராம் நூற்றாண்டு. இந்த சும்மாடு என்ற சொல் அப்போதே வழக்கத்தில் இருந்திருக்கிறது.

 படத்தில் உள்ள கூடை சுமக்கும் அம்மா தன் கூடைக்குக்கீழே சுருட்டி வைத்திருக்கும் துணி தான் சும்மாடு- சுமையை சுமக்க உதவும் ஒன்று, (ஒரு செல்வம் ). 

அதே போல அத்தா என்ற சொல், அப்பாவைக்குறிக்கும்.இறைவனையும் குறிக்கும்  இன்றும் இஸ்லாமியக்குடும்பங்களில் அத்தா என்று அப்பாவைச் சொல்வார்கள்.

மணிவாசகப்பெருமான், அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே என்பார்.

இவை இரண்டையும் ஒரே பாடலில் திருவானைக்காத் தேவாரத்தில் கண்டேன். 

இன்று வரை இந்த தலம் காணக் கிடைக்கவில்லை. "கோனைக்காவி" என்று தொடங்கும் தேவாரத்தைப்பயின்றிருக்கிறேன். என்றாவது அது வாய்க்கும் என்றே நம்புகிறேன். 

அப்பர் பெருமான் தாய் தந்தை இருவரையும் இழந்த பின்னர், சமண மதத்தைப்பின்பற்றினார். மீண்டும் சைவத்தைத் தழுவியபிறகும், வாழ்வின் நிலையாமை பற்றிய எண்ணங்கள் அவரிடம் மேலோங்கி இருப்பதைக்காணலாம். 

திருவானைக்காத் தலத்திற்கென்று ஒரு தலபுராணம் உள்ளது. ஒரு  யானையும், ஒரு  சிலந்தியும் ஒரே நேரத்தில் சிவபூஜை செய்யலாயின. சிலந்தி தன் எச்சிலைக்கொண்டு சிவலிங்கத் திருமேனியின் மேலே உருவாக்கிய வலையை, யானை பிய்த்தெறிந்தது. சிலந்தி யானையின் தும்பிக்கைக்குள் போய், யானையை வருத்தியது. இரு விலங்குகளும் சிவலோகம் சென்ற பின்னர், சிலந்தி  கோச்செங்கச்சோழனாகப்பிறவி எடுத்தது. முற்பிறவியில் செய்த முயற்சியைத்தொடர்ந்து , சோழ அரசனாக யானை புகாத மாடக்கோயில்கள் பலவற்றைத் தன் தேசம் முழுக்க எழுப்பினான். அவ்வகையான எழுப்பப்பட்ட ஆலயங்களுள் ஒன்று திருவானைக்கா ஆலயம். 

மற்ற ஆலயங்கள், திருஆக்கூர்,குடவாசல், உறையூர்(திருமுக்கீஸ்வரம்),நல்லூர்,  முதலியவை ஆகும். 

கோச்செங்கட்சோழ நாயனார்  63 நாயன்மார்களில் ஒருவர். 

இவர் வாழ்ந்த காலம் கி.மு. 500 ஆக இருக்கலாம். கரிகாலச் சோழன், கிள்ளி வளவன், கோச்செங்கச் சோழன் போன்றோர், ராஜராஜ சோழனை விட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள். இவர்களின் காலம் சங்க காலம் என்றே அறியப்படுகிறது. 

வழக்கமாக வைணவர்கள் சைவர்களைப்புகழ மாட்டார்கள் என்ற கருத்து நிலவுகிறது. திருமுறைகளைத்தொகுத்தவர், நம்பியாண்டார் நம்பி. அவருடைய ஊர் திருநாரையூர். அந்த ஊரில் உள்ள வைணவ ஆலயத்தைப்பாடிய திருமங்கை ஆழ்வார், வீரமுள்ள அரசரான கோச்செங்கட்சோழனனின் பெருமையைப்பாடுவதாக பல பாசுரங்கள் இருக்கின்றன. 


பைங்கணாள் அரி உருவாய் வெருவ  நோக்கிப்  

பருவரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி 

அங்கை வாள் உகிர் நுதியால் அவனது  ஆகம் 

அங்குருதி பொங்குவித்தான் அடிக் கீழ் நிற்பீர் 

வெங்கண் மாகளிறு உந்தி வெண்ணியேற்ற 

விறல் மன்னர் திறல் அழிய வெம்மா உய்த்த 

செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் 

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (1501-பிரபந்தம் )

பைங்கணாள்-குளிர்ந்த கண்களை உடைய பெருமாள் -விஷ்ணு 

இந்த பாடலில், பெருமாளின் குளிர்ந்த கண்களும், சோழனின்  சிவந்த கண்களும், சூடான (வெம்மையான), வெள்ளை யானையின் கண்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. இணையத்தில் எங்கும், பிரபந்தத்தையும், திருமுறையையும் சேர்த்து கையாளும் கட்டுரைகள் இல்லை என்பதால் இங்கே பகிர்ந்துள்ளேன். 
அரி -சிங்கம் 
வெருவ -அச்சம் ஏற்படுத்துமாறு 

பருவரை -பருமனான மலை 

ஆகம்-உடல் 

விறல் -வீரம் 

திறல்-வலிமை

வெம்மா-கோபம், வெம்மை  

குளிர்ந்த கண்களையுடைய பெருமாள், சிங்க உருவம் கொண்டு, ஹிரண்யன் அச்சப்படுமாறு அவனை நோக்கி, தனது பருத்த மலை போன்ற தோள்களால் இரண்யனைபிடித்து வாங்கி, தனது கைகளால், வாழ் போன்ற கூர்மையான நகங்களால், அவனது உடலைக்கிழித்தி, இரத்தத்தைப் பொங்க வைத்தார். அவரின் அடிநிழனில் கீழ் நில்லுங்கள். வெண்மையான கண்களையுடைய யானையை உந்தி நகர்த்தி, வெண்ணியாற்றங்கரையில், பல வீரமான மன்னர்களின் வலிமை அழியுமாறு, கோபம் கொண்ட, சிவந்த கண்களை உடைய கோச்செங்கெங்கச்சோழன் சேர்ந்த கோயிலான திருநறையூர் மணிமாடம் சேருங்கள்.

இந்த திருநாரையூரில் உள்ள மாடக்கோயில் , கோச்செங்கட்சோழரால் எழுப்பப்பட்ட்டது. இன்றைய நாளில் இந்த ஊர் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 

திருவானைக்கா பஞ்சபூத தலங்களுள் , நீருக்கானது. இறைவன் இருக்கும் கருவறை எப்போதும் காவேரி நீரால் சூழப்பட்டிருக்கும். அம்மை அகிலாண்டேஸ்வரியின் புகழும் உலகறிந்த ஒன்றாகும். காளமேகப்புலவர், அகிலாண்டேஸ்வரியின் அருள் பெற்ற பின்னர் தான் கவி ஆனார். இந்த தலத்தில் ஆதி சங்கரர், ஸ்ரீ சக்ரங்களை அன்னையின் காதணிகளாக அணிவித்துள்ளார்.

இப்போது தேவாரத்தைப்பார்ப்போம் 

எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்

    எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்

செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை

    சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்

சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்

    திருவானைக் காவுடைய செல்வா என்றன்

அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்

    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே (06-62-01)

  எம்மாடு சும்மாடாம்? மாடு என்றால் செல்வம். எந்த செல்வம் நம்மை சுமக்கும்? நம்முடைய வாழ்வு முடியும்போது அம்பானி அளவு செல்வம் இருந்தாலும், அந்த செல்வம் நம்மை சுமக்காது.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை. (திருக்குறள்: 40)

ஒருவருக்கு அழியாத செல்வம் கல்வி மட்டுமே என்கிறார் திருவள்ளுவர். மாடு என்ற சொல் செல்வத்தைக்குறிக்கிறது. 

எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் ஏவர் நல்லார்?

எத்தாயர்:

அப்பர் பெருமான் வாழ்ந்த காலத்தில் ஆண்கள் பரவலாக பலதாரம் கொண்டவர்களாக இருந்திருக்கக்கூடும். தாய் என்று வரும்போது அது பெற்றவளையோ, வளர்த்தவர்களையோ, அல்லது அன்னை என்ற இடத்தில் இருப்பவர்களையோ குறிக்கலாம் என்பதால் அங்கு பன்மை விகுதி உள்ளது.

எத்தாயர் என்பது, எத்தனை சிறந்த தாயாராக இருந்தாலும் என்ற பொருளிலும் கையாளப்படலாம்.  

தாயாக இருப்பவர்களிலும், தந்தை எனப்பட்டவரிலும், சுற்றத்தவர்கள் என்றிருப்பவர்களிலும் யார் நல்லவர்? 

செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை:

நம் வாழ்க்கை முடிந்தால் இதில் யாரும் வந்து உதவமாட்டார்கள். 

சிறுவிறகால் தீமூட்டிச் :
உடனே சிறுவிறகால் தீமூட்டி, நம் உடலை எரித்து நிற்பர்.
அதென்ன சிறுவிறகு ?அதிக நேரம் எடுக்காமல், விரைவாக பற்றுதலுக்காக சிறுவிறகைப்பயன்படுத்துவார்களாம். 
செல்லா நிற்பர்:
செல்லா நிற்பர் என்ற தொடர், சிவபுராணத்தில் ஒரு அடியை நினைவில் கொணர்ந்தது. 
"செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்" 
செல்லா நின்ற :எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் தாவர சங்கமம் .

செல்லா நிற்பர்: செல்லா என்பது இறந்தகாலத்தில் இருக்கிறது. நிற்பது என்பது எதிர்காலத்தில் இருக்கிறது. அந்த உடல் எரிந்துமுடிக்கும் வரை கூட நிற்காமல் செல்வர் என்பதனைக்குறிக்க இறந்தகாலத்தை எதிர்க்காலத்துக்குள்  புகுத்திக் சொல்கிறார். 

சித்தாய வேடத்தாய்:சித்து என்பது அறிவு, ஞானம், ஞானம் வந்தால், துன்பம் போய்விடும். அறிவு வடிவான பெருமானே !

நீடு பொன்னித்    திருவானைக் காவுடைய செல்வா:நீண்டு ஓடும் பொன்னி எனப்படும் காவிரிக்கரையில் உள்ள திருவானைக்காவின் தலைவனே,செல்வனே  

அத்தா:இறைவனே 

உன்  பொற்பாதம் அடையப் பெற்றால்:உன்னுடைய பொன்னான திருவடிகளை நான் அடைந்தால்

அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே:அதென்ன அல்லகண்டம்? இந்த வரி இந்த பதிகத்தின் எல்லா பாடல்களிலும் கடைசியில் வருகிறது. கண்டம் என்றால் என்ன என்று தமிழர்களில் யாரைக்கேட்டாலும், ஆசிய கண்டம், ஐரோப்பா கண்டம் என்று சொல்வார்கள். தமிழில் கண்டம் என்ற சொல்லுக்கு பல பொருட்கள் இருக்கின்றன. யானையின் கழுத்தில் உள்ள கயிறு, தாள வகையில் ஒன்று, பகுதி,ஜோதிடக்காரர்கள் மொழியில் வர இருக்கும் ஆபத்து  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதில் கண்டம் என்ற சொல், தொண்டை என்ற பொருளில் பயன்படுத்தப்படும் போது அது வடமொழியிலிருந்து வந்திருப்பதை உணரலாம். நீலகண்டம், நீலம்பாய்ந்த கழுத்து/தொண்டைப்பகுதி. 

அல்லகண்டம் என்ற சொல் துன்பத்தைக்குறிக்கும்.இப்போது பலரும், நல்லை அல்லை என்ற திரையிசைப்பாடலை முணுமுணுக்கிறார்கள். அல்லை என்ற சொல் நல்லது அல்லாத - கெட்ட என்ற பொருளில் அறியப்படும். 

உன் திருப்பாதத்தை நான் அடையப்பெற்றால் நான் துன்பம் அடைவேனா? 

உன் திருவடியை அடைந்தபிறகு எனக்கு துன்பங்கள் ஏற்படாது. 

அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்வேன்: துன்பம் என்ற ஒன்று எனக்கு ஏற்படாது. அப்படி இல்லாத ஒன்றைக்கொண்டு நான் என்ன செய்வேன். ஒன்றும் செய்யமாட்டேன் என்கிறார் அப்பர் பெருமான். 



இந்த பாடல் என்னோடு உங்களுக்கும் ஆறுதலைத்தந்திருக்கும் என்றே நம்புகிறேன் !

Sunday, June 09, 2024

மானமும், தானமும், ஞானமும், வானமும்- திருவாழ்கொளிபுத்தூர் தேவாரங்கள்

 தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் ஆசானான திரிசிரபுரம்.மஹாவித்துவான்.மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் ஒரு பாடலோடு இந்த பதிவைப்பார்ப்போம்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை தான் கந்தர் சஷ்டி கவசம் இயற்றிய தேவராய சுவாமிகளுக்கும் தமிழ் ஆசான். அன்றைய நாளில் மாயூரம் உட்பட பல சிவாலயங்களுக்கு இவர் புராணம் இயற்றியுள்ளார்.

கீழேக்காணும் இந்தப்பாடல் திருவாளொளி புற்றூர் புராணத்தில் இருக்கிறது.


பரிப்பவன் பரிக்கும் போதும் -. அதென்ன பரிப்பவன்? 

இப்போது தான் பாரதம் ஒரு தேர்தலைச் சந்தித்திருக்கிறது. பரதன் என்ற சொல்லுக்குத் தாங்குபவன் என்பது ஒரு பொருளாகும்.  

இந்த செய்யுளில் உள்ள பரிப்பவன் என்ற சொல்லுக்கு, காப்பாற்றுபவன் தாங்குபவன் என்பது பொருள். பரிப்பவன்-காப்பாற்றுபவன். பறிப்பவன் அல்ல. 

தமிழ் இருநூற்றண்டுகளில் எத்தனை சொற்களை இழந்திருக்கிறது என்பதை இதுபோன்ற பாடல்களைக்கொண்டு அறியலாம். 

மும்மூர்த்திகளுக்கும் அவரவருக்கான வேலைகள் இருக்கின்றன. ஒருவர் படைக்கிறார், ஒருவர் பரிக்கிறார்-காப்பாற்றுகிறார், மற்றவர் துடைக்கிறார்-நம் வாழ்க்கையை முடித்துவைக்கிறார். இந்த மூன்று தொழில்கள் நடக்கிறபடி நடக்கட்டும். நாம் இந்த மூன்றின்போதும், நல்ல நறுமணம் கமழுமாறு செய்து, துதிகள் பாடி, தேங்காய் உடைக்கும்போது அந்த ஊற்றை உற்றவனும், நம்முடைய பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சிக்கான வாயிலை அடைப்பவனுமாகிய சித்தி விநாயகரை எண்ணுவோம் என்கிறார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று நான் புரிந்துகொண்டேன். 

தேங்காய் உடைப்பது என்பது நம்முடைய துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை வேண்டும் என்பதற்காக விநாயகருக்குச் செய்யும் பிரார்த்தனை. பிறவி என்ற துன்பத்தைப்போக்க, அவரைப்பற்றிக்கொள்வோம். 

இணையத்தில் எங்கும் மேலே சொன்னப்பாடலுக்கு விளக்கம் இல்லை. 

திருவாள் ஒளி புற்றூர் :

காவிரி வடகரையில் பாடல் பெற்ற 29ஆவது தலம். வைத்தீஸ்வரன் கோயில் அருகே இருக்கிறது.

வாசுகி என்னும் பாம்பு பாற்கடலைக்கடைந்த பிறகு தன் உடல் வேதனைத்தீர வேண்டிக்கொண்டத் திருத்தலம்- அதனால் புற்றூர்.

அர்ச்சுனன் கானகவாசம் செய்தபோது தண்ணீர் தேடி இங்கு வந்த போது, ஒரு முதியவர் உருவத்தில் வந்த சிவபெருமான், அர்ச்சுனனின் வாளை வாங்கிக்கொண்டு ஒரு கோலைக்கொடுத்து . அதை அங்கிருந்த இடத்தில் தட்டிப்பார்த்து நீர் இருக்கும் இடத்தை அறிந்துக்கொள்ளச் சொன்னார்.

முதியவர் மறைந்துவிட்டார்.

தண்ணீர் கிடைத்த இடத்தில் ஒரு புற்றும் அந்த புற்றுக்குள் ஒரு லிங்கமும் இருந்ததாகவும், அர்ச்சுனனின் வாள் அந்த புற்றுக்குள் ஒளி மிகுந்து காணப்பட்டதாகவும் தலபுராணம் சொல்கிறது.

இந்த தலத்திற்கு சம்பந்தரின் தேவாரமும், சுந்தரரின் தேவாரமும் அழகு சேர்க்கின்றன.

சுந்தரரின் தேவாரத்தில் அவர் மண்ணி ஆற்றைப்பற்றியும் குறிப்பிடுகிறார் .

  குடமுனி கரத்தில் ஏந்துங் குண்டிகை இருந்து நீங்கிப்

படிதனில் வேறு வேறாய்ப் பற்பல நாமந் தாங்கிக்

கடல்கிளர்ந் தென்னச் செல்லுங் காவிரி யென்னு மாற்றின்

வடகரை மண்ணி யின்பால் வந்தனன் கருணை வள்ளல்! (கந்தபுராணம் )

கந்தபுராணம் அகத்தியரின் குண்டலத்திலிருந்து வந்து , பலப்பல பெயர்களோடு, கடல்போலத் திகழும் காவிரியின் வடகரையில் உள்ள மண்ணி என்னும் ஆற்றுக்குக் கந்தன் வந்ததாகச் சொல்கிறது. 

தமிழ்க்கடவுள் வந்த இடம் என்றால், இந்த இடத்தின் பழமைக்கும் மாட்சிக்கும் வேறு ஏதேனும் சொல்ல அவசியம் இல்லை. 

மண்ணுதல் என்ற சொல்லுக்கு கழுவுதல் என்றும் பொருள் இருக்கிறது.

நம்முடைய தீவினைகளைக்கழுவும் வகையில் இந்த தலத்தில் மண்ணி ஆறு பரவியிருக்கிறது. 

மண்ணி ஆற்றின் மலர் நீலோத்பவம். சோழநாட்டில் நீர்வளம் உள்ள இடங்களில் எல்லாம் இந்த மலரைப்பார்க்கலாம். இந்த மலர் இலங்கை நாட்டின்தேசிய  மலரும் கூட. 



படைக்கண் சூலம் பயில வல்லானை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,

கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை, காமன் ஆகம்தனைக் கட்டு    அழித்தானை,

சடைக்கண் கங்கையைத் தாழ வைத்தானை, தண்ணீர்மண்ணிக் கரையானை, தக்கானை,

மடைக்கண் நீலம் மலர் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, -மறந்து என் நினைக்கேனே? . (7.57 திருவாழ்கொளிபுத்தூர்)

இன்றைய நாளில் வாள் ஒளி புற்றூர் மருவி திருவாழ்கொளிப்புத்தூர் என்று வழங்கப்படுகிறது.

படைக்கண் சூலம் பயில வல்லானை- தன் கரங்களில் தங்கியுள்ள படைக்கருவிகளில் சூலம் என்ற ஒன்றைப்பழக வல்லவனும்

பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை- இந்த வரியைப்பாருங்கள். இதே போல பாவிப்பார், மனம் பாவிப்பானை என்று திருக்கச்சி ஏகம்பத்தின் தேவாரத்தில், தனக்கு இடக்கண் கிடைத்தபோதும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார். 

அந்த தேவாரத்தைக்கீழே காணலாம் 

உற்றவர்க்கு உதவும் பெருமானைஊர்வது ஒன்று உடையான்உம்பர் கோனை,

பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைபாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,

அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற

கற்றை வார் சடைக் கம்பன் எம்மானைகாணக் கண் அடியேன் பெற்ற ஆறே! . (கச்சி ஏகம்பம்-சுந்தரர் தேவாரம்) 


பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை-தன்னை மனதில் பாவிப்பவர்களின் மனதில் பரவி, அதைத்தன் அகமாகக்கொள்வார் சிவபெருமான் 

கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை-விரும்பி, மனதில் கர்வமேதுமின்றி, மண்டையோட்டுத்தலையில் பிச்சை வாங்குகிறார் சிவபெருமான்.

நம்மில் பலபேருக்கு செய்யும் தொழிலைப்பற்றிய கர்வம் இருக்கிறது. ஆன்மீக முன்னேற்றம் வேண்டுவோருக்கு இருக்க வேண்டிய மற்றொரு குணம் கர்வம் துறத்தல் என்பதையும் சிந்திப்போம். 

காமன் ஆகம்தனைக் கட்டு    அழித்தானை-உடலழகு மீது கர்வம் கொண்ட மன்மதனை உடல் அழியச் செய்தார். 

ஒரே அடியில் கர்வமில்லாத சிவபெருமானையும், கர்வம் கொண்ட மன்மதனையும் சொன்னது சிறப்பு !

சடைக்கண் கங்கையைத் தாழ வைத்தானை-கங்கையைச்  சடையில் அது அங்கிருந்து உலகுக்கு வரும்படி தாழ  வைத்தவனும் 

தண்ணீர்மண்ணிக் கரையானை-

கங்கையைச்  சொன்ன அதே அடியில் மண்ணி ஆற்றையும் சொல்கிறார் சுந்தரர்.

 தண்ணீர்-குளிர்ந்த நீரை உடைய மண்ணி ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான் 

தக்கானை- எல்லாத் தகுதிகளும் உடையவனை  (Ultimate Fit)

மடைக்கண் நீலம் மலர் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை-நீர்மடைகளில் நீலோத்பவ  மலர் மலர்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போன்ற  பெருமானை

மறந்து என் நினைக்கேனே? மறந்து வேறொன்றையும் நினைக்க முடியாது.

தக்கேசி எனப்படும் பண்ணில் அமைந்த இந்த பாடல், எப்படி சிவபெருமானை மறக்க முடியும் என்ற பொருளில் அமைந்ததாக இருக்கிறது. 

திருஞானசம்பந்தர் தன்னுடைய இளம்வயதில் முக்தி அடையப்பெற்றவர். அவருடைய திருவாழ்கொளிபுத்தூர் தேவாரம் பாடல் அமைந்த விதத்தில் வித்யாசமாக இருக்கிறது.

ஓராயிரம் பாடலிலே உன் பாடலை நான் அறிவேன், ஆயிரம் மலர்களே போன்ற பல திரையிசைப்பாடல்களில் ஆயிரம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வருவதைப்பார்க்கலாம். இந்த தேவாரத்தில், ஆயிரம் என்ற சொல் சிவபெருமானுக்கு அடைமொழியாக பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

எண்ணில் ஈரமும் உடையார்; எத்தனையோ இவர் அறங்கள்

கண்ணும் ஆயிரம் உடையார்; கையும் ஓர் ஆயிரம்

                                                       உடையார்;

பெண்ணும் ஆயிரம் உடையார்; பெருமை ஓர் ஆயிரம்

                                                       உடையார்;

வண்ணம் ஆயிரம் உடையார் வாழ் கொளிபுத்தூர் உளாரே

எண்ணில் ஈரமும் உடையார்:மனதில் இரக்கம் மிகுந்தவர் சிவபெருமான். தொண்டர்களின் மனக்கவலைகளுக்கு இறங்குபவர். 
எத்தனையோ இவர் அறங்கள்-அவர் பல அறச்செயல்கள் செய்பவர். 

கண்ணும் ஆயிரம் உடையார்; கையும் ஓர் ஆயிரம்

                                                       உடையார்

கண்களும், கரங்களும் ஆயிரம் உடையவர். எத்தனைக்கோடி உயிரினங்களையும் காப்பாற்றுபவர் என்பதால், அவருக்கு ஆயிரம் கண்களும், கரங்களும் தேவை தானே. 
பெண்ணும் ஆயிரம் உடையார்-
ஆயிரம் பெண்களைக்கொண்டவர் என்று பொருள் கொள்ளக்கூடாது. ஆற்றல் என்பது பெண்வடிவம். சிவனும் சக்தியும் ஒன்றே என்பதால், ஆயிரம் விதமான ஆற்றல்களைக்கொண்டவர்.

பெருமை ஓர் ஆயிரம்

                                                       உடையார்-

 தன்னுடைய இயல்பின் மூலமாகவும், செயல்களின் மூலமாகவும், ஆயிரம் பெருமை உடையவர். 
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ் கொளிபுத்தூர் உளாரே
ஆயிரம் வண்ணம் கொண்டவர்- திருவாழ்கொளிபுதூரில் வாழும் சிவபெருமான் .
அதே தேவாரத்தில் உள்ள இன்னும் இரண்டு பாடல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

பரவுவாரையும் உடையார்; பழித்து இகழ்வாரையும்

                                                      உடையார்;

விரவுவாரையும் உடையார்; வெண் தலைப் பலி கொள்வது

                                                      உடையார்;

அரவம் பூண்பதும் உடையார்; ஆயிரம் பேர் மிக

                                                      உடையார்;

வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

பரவுவாரையும் உடையார்-பரவுவார்- புகழ்வோரையும் தன்னுடையவர்களாக நினைப்பவர் சிவபெருமான். இது பெரும்பாலான மக்களின் இயல்பு. தங்களுக்கு வாழ்க வாழ்க என்று புகழ்பவர்களை எல்லாருக்கும் பிடிக்கும்.
ஆனால், 
பழித்து இகழ்வாரையும்   உடையார்- தன்னை இகழ்ந்து பேசுபவர்களை வெறுக்காது அவர்களையும் தன்னுடையவர்களாக நினைப்பவர் சிவபெருமான். விருப்பு, வெறுப்பு போன்ற குணநலன்களைக்கடந்தவர். 

விரவுவாரையும் உடையார்-
பரவுவார்
இமையோர்கள்... விரவுவார் மெய்யன்பின் அடியார்கள்’ என்கிறது திருவாசகம்
உண்மையான அன்போடு, கூடி இறைவனில் கலக்கும் அளவுக்கு அன்புடைய தொண்டர்களையும் உடையவர்.

வெண் தலைப் பலி கொள்வது

                                                      உடையார்,அரவம் பூண்பதும் உடையார்-பிரம்மனின் தலையோட்டில் பலி தேர்பவர்;பாம்புகளை அணிந்திருக்கிறார் 

ஆயிரம் பேர் மிக   உடையார்-ஆயிரம் பேர் கொண்டவர்

வரவும் ஆயிரம் உடையார்-வரமும் ஆயிரம் உடையார்

வாழ்கொளிபுத்தூர் உளாரே

சிவபெருமான் யாரிடமும்  வரவு எதிர்பார்க்கவில்லை. அவர் நமக்கு ஆயிரம் வரங்கள் அருள்பவர். அவர் வாழ்கொளிபுத்தூரில் உள்ளவர்.


ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு படிநிலைகளைக்கடந்து வாழ்கிறோம். இருபது வயதுத்துடிப்பில், மானம் பெரிதாகத்தோன்றும். கொஞ்சம் முதிர்ச்சி வந்தபிறகு, தானம் செய்வது மனதுக்கு அமைதி அளிப்பதாக நினைக்கிறோம். பிறகு ஞானத்தை நோக்கிய தேடலுக்கு நகர விழைகிறோம். முடிவாக வானுலகம் நோக்கிப்பயணிக்கிறோம். 

இந்த எல்லா வாழ்க்கையையும் உடையவர் சிவபெருமான்.
அவருக்கு நம்மைப்புரியும் என்பதான ஆறுதலைத்தருகிறது இந்தப்பாடல் .

மான வாழ்க்கைய துடையார்
     மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்
தான வாழ்க்கைய துடையார்
     தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த
ஞான வாழ்க்கைய துடிடயார்
     நள்ளிருண் மகளிர்நின் றேத்த
வான வாழ்க்கையை துடையார்
     வாழ்கொளி புத்தூ ருளாரே. 

மான வாழ்க்கை அது உடையார்-மானமுள்ள பெருமையான வாழ்க்கையை உடையவர் சிவபெருமான் 
மலைந்தவர்-தம்மை எதிர்த்தவர் 
(வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட மட்டித்திட்டு
உயர் கொக்கைக் குத்தி மலைந்த வீரா ...திருப்புகழ் )

மதிற்பரி சறுத்தார்- மதில்களை அழித்தார். (திரிபுரங்களை அழித்தவர் )
 தான வாழ்க்கை அது உடையவர்-தானங்கள் பல செய்கின்ற வாழ்க்கை உடையவர் 
தவத்தோடு நாம் புகழ்ந்தேத்த ஞான வாழ்க்கையது உடையார் -தவத்தின் மூலமாக வரும் ஞானமும் அடையப்பெற்றவர் 
நள்ளிருளில் மகளிர் நின்றேத்த வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளி புத்தூருளாரே-
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் சிவபெருமான். அவருக்கு நள்ளிரவில் இன்னிசை கீதங்கள் பாடுகின்றனர் வானுலக மங்கையர். அவர்களின் புகழ்வான கீதங்களைக்கேட்டபடியே வானுலக வாழ்க்கையும் கொண்டவர் திருவாழ்கொளிபுத்தூரில் உள்ள ஈசனார். 

அவரைப்புகழ்ந்து ஏத்துவதால் நமக்கும் சிறப்பான மான, தான, ஞான, வான வாழ்க்கை அமையப்பெறலாம். (முற்றும்) 

Friday, February 16, 2024

எங்கிருந்து அழைத்தாலும் வருவார்- திருக்கழிப்பாலை நாயகர்


பால்வண்ணநாதர் வீற்றிருக்கும் இந்த திருக்கழிப்பாலைத்திருக்கோயில், ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரிலிருந்தே இருந்துவந்திருக்கிறது. இப்போது கொள்ளிடம் இருக்கும் இடத்திற்கும், திருக்கழிப்பாலைக்கும் இடையே பதினோரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. முதலாம் இராஜஇராஜசோழனின் ஆட்சிக்காலத்தில், அணையாத நந்தா விளக்கெரிக்க நிவந்தம் இந்த கோயிலுக்குக் கொடுக்கப்பட்டதாக கல்வெட்டுகள் சொல்கின்றன. காலமாற்றத்தால், பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த கட்டுமானம் சிதிலம் அடைந்து, பின்னர் கோயில் மீண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. 

அப்பர் பெருமான் திருக்கழிப்பாலையில் ஐந்து பதிகங்களைப் பாடியுள்ளதால், அவர் இங்கு பலகாலம் தங்கியிருந்து உழவாரப்பணி செய்திருக்கக்கூடும். 

அப்பர் பெருமான், மணிவாசகப்பெருமான், பெரியாழ்வார் என்று பலரும் தங்களைப் பெண்ணாக பாவித்துப்பாடிய பாடல்கள் பல இருக்கின்றன. அப்பர் பெருமானின் அப்படிப்பட்ட ஒரு பாடல், எப்போதும் சமயச்சொற்பொழிவு செய்பவர்களால் அடிக்கடி எடுத்துக்காட்டப்படுகிறது. அந்த பாடல் முதலில் இந்தப்பதிவில் சிந்திப்பதற்கு உரியதாக இருக்கிறது.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;

    மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்;

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;

         பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்;

அன்னையையும் அத்தனையும் அன்றே

    நீத்தாள்; அகன்றாள், அகலிடத்தார் ஆசாரத்தை;

தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்;

         தலைப்பட்டாள், நங்கை தலைவன் தாளே! (06-25)

இந்த பாடல் ஆறாம் திருமுறை, அப்பர் பெருமான் திருவாரூரில் அருளியது.

தன்னை மறந்து, தன்னுடைய பெயர் கூட மறந்து,இறைவனின் தாள் பணியும் நங்கையாகத் தன்னைப்பாவிக்க நினைக்கும் எல்லாருக்கும் ஏற்றப்பாடல் இது.

இதைப்போன்ற மற்றொரு பாடல், திருக்கழிப்பாலைப்பற்றிய அப்பர் தேவாரத்தில் இருக்கிறது. 

ஊனப்பே ரொழிய வைத்தார்

ஓதியே யுணர வைத்தார்

ஞானப்பேர் நவில வைத்தார்

ஞானமு நடுவும் வைத்தார்

வானப்பே ராறு வைத்தார்

வைகுந்தற் காழி வைத்தார்

கானப்பேர் காதல் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. (04-30)

பதம் பிரித்துப்படிக்க:

ஊனப்பேர் ஒழிய வைத்தார்

ஓதியே உணர வைத்தார்

ஞானப்பேர் நவில வைத்தார்

ஞானமும் நடுவும் வைத்தார்

வானப் பேராறு வைத்தார்

வைகுந்தற்கு ஆழி வைத்தார்

கானப்பேர் காதல் வைத்தார்

கழிப்பாலை சேர்ப்பனாரே. 

இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை மிகவும் புறவயமாகிவருவதைப்பார்க்கிறோம். பிறக்கிற குழந்தைக்குப்பெயர் தேர்வு செய்வதில் தொடங்கி, பெயர் சூட்டுதல், சோறு ஊட்டுதல்  என்று அனைத்தும் இணையம் வழியாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. 

அப்பர் காட்டுவது அகவயமான மனப்பயிற்சி.பல நூற்றாண்டுகள் கடந்தாலும் அப்பரின் தேவாரங்கள், ஆலய வழிபாட்டு முறைகளுக்கும், நம் அகவயமான இறைத்தேடலுக்கும் வழிகாட்டுகின்றன.

இந்த பாடலின் முதல் நான்கு வரிகளும் சிந்திப்பதற்குரியன. எனக்குத்தெரிந்த ஒரு மத்திய வயதுடையவர்  எல்லாரிடமும் சிடுசிடுவென எரிந்து விழுவார்.அவருடைய உண்மையான பெயர் மறைந்து, அவர் இருந்த அடுக்ககக்குடியிருப்பில் "சிடுசிடு மாமா" என்ற புதிய பெயர் அவரது அடையாளம் ஆனது.

இன்னொரு மூதாட்டி தன் இளமைக்காலம் முதலாகவே கோயிலில் தினமும் எல்லா சன்னதிகளிலும் சுத்தம் செய்து, கோலம் போடுவதை ஒரு தொண்டாகச் செய்து வந்தார். சில நேரங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து அவரோடு பேசுவதைப்போல அவரைப்பார்த்தபடி அமர்ந்திருப்பார். இந்த பாட்டிக்கு அவர் செய்த தொண்டே பெயராக ஆனது.- கோலப் பாட்டி.

நம்முடைய உண்மையான அடையாளம் என்ன? நம் ஊனுடலுக்கு உள்ளப்பெயரா? நமது படிப்பா? பார்க்கும் தொழிலா? கழிப்பாலை சேர்ப்பனாராகிய பால்வண்ணப்பெருமான், நமக்கு அவரின் பால் நிறம் போன்ற,  மனதை அருளி, நாம் கொண்ட ஊனப்பெயரை ஒழிய வைப்பார் என்கிறார் அப்பர் பெருமான். 

அப்பர் பெருமானைப்பல திருமுறை பயிலும் குழந்தைகள், அவர் கையில் வைத்திருக்கும் "தோசைத்திருப்பும் கரண்டி" போன்ற உழவாரம் என்ற கருவியை வைத்தே அடையாளம் காண்கிறார்கள். 

திருஞானசம்பந்தர்  "அப்பரே" என்று அழைத்தமையால்,அப்பருக்கு  அவருடைய மற்ற பெயர்கள் ஒழிந்தன. இன்றும் நாம் அவரை அப்பர் பெருமான் என்றே மனமுவந்து சொல்கிறோம்.

இறைவனை நோக்கி நம்முடைய எண்ணம் திரும்பினால், வாழ்க்கை எப்படி அர்த்தமுள்ளதாகும் என்பதை வாழ்ந்துக்காட்டியிருக்கிறார் அப்பர் பெருமான். 

அன்று இன்று போல மின்சாரம் இல்லை, தண்ணீர் வசதி இல்லை. ஒவ்வொரு ஆலயத்தையும் சுத்தம் செய்து, மக்களின் அறவாழ்வுக்கு அடிகோலினார் அப்பர் பெருமான்.

ஓதியே உணர வைத்தார்- ஐந்தெழுத்து மந்திரத்தை, மீண்டும் ஓதுவதாலும், சிவபெருமானைப்பற்றிய நூல்களைப்படிப்பதாலும், அவர் தம்மை உணர வைத்தார்.

ஞானப்பேர் நவில வைத்தார்- இறைவனைப்பற்றிய நினைவோடு தொடர்ந்து இருப்பதால் கிடைக்கும் ஞானம், இந்த உலகவாழ்க்கை எத்தனை நிலையில்லாதது என்பதையும், இறைவன் ஒருவரே பற்றிக்கொள்ளக்கிடைத்தவர் என்பதையும் தெளிவாக்கி, அந்த ஞானம் என்றும் தொடரும்படியாக, இறைவனின் பெயரைத் தொடர்ந்து நவில வைக்கும்.

ஞானமும் நடுவும் வைத்தார்:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்

என்கிறது திருக்குறள்.

மலர்மிசை ஏகினான் என்பதற்கு, இறைவனை நினைத்துத்தொழும் அடியவர்களின் மனம் என்னும் தாமரையில் இறைவன் வீற்றிருக்கிறார் என்பது பொருள் ஆகும்.

அதைப்போல அப்பர் பெருமான் , தனக்குக்கிடைத்த ஞானம் என்ற பெருவுண்மையை வைக்க ஒரு பெட்டியைப்போல , இறைவன் தான் வீற்றிருக்கும் இதயக்கமலத்தைத்தந்தார் என்கிறார்.

வானப் பேராறான கங்கையையும் சடையில் வைத்தார்; திருமாலுக்குச் சக்கரம் தந்தார்.திருக்கானப்பேர் என்னும் தலத்தின் மீது காதல் கொண்டார் திருக்கழிப்பாலை நாதர்.

இது வரை அப்பரின் பதிகத்தைப்பார்த்தோம்.

அப்பர் பெருமான் பக்தி செய்யும் முறை ஒரு வகை. சுந்தரரின் பாங்கு, ஒரு நண்பனிடம் பழகுவதைப்போன்றது. 

பலரும் வாழ்க்கையில் நொந்துபோன காலக்கட்டங்களில், சொந்தங்கள் என்னைக்கைவிட்டன; ஆனால் நல்ல நண்பர்கள் உற்றத்துணையாக இருந்தார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.

உறுதுணையாக இருக்கும் நண்பர்கள், காலம், இடம், சூழ்நிலை என்று எதையும் கருத்தில் கொள்ளாமல், தன்னுடைய நண்பனின் கஷ்டத்தைப்போக்க ஓடோடி வருவார்கள். 

அப்படித்தான் சுந்தரரின் வாழ்க்கைக்கு, அவருடைய காதல், திருமணம், அவர் சந்தித்த சிக்கல்கள் என்று பலவற்றிலும் சிவபெருமான் சுந்தரருக்காக ஓடோடி வந்திருக்கிறார்.

சாக்குபோக்கு சொல்லாமல், எங்கிருந்து அழைத்தாலும் உடனே வருவார் என்கிறார் சுந்தரர்.

சிவபெருமான் நம்முடையத்தொடர்பு எல்லைக்குள் தான் இருக்கிறார். 
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும் உடனாகி நின்றருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே. (சுந்தரர் தேவாரம்-(07-23))

உலகத்தின் பல இடங்களில் இன்று தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள்.நினைத்த நேரத்தில், குடும்பத்தினரோடு, முகம் பார்த்து இணையவழி பேசமுடிகிறது என்றாலும், சில ஆண்டுகளுக்கு முந்தைய கோவிட் காலம் ஒவ்வொருவருக்கும்  ஓவ்வொரு விதமான நெருக்கடிகளைக் கொணர்ந்தது.இதுவரை அனுபவித்திராத பலத் துன்பங்களில் ஆட்படுத்தியது.
இன்றைய காலக்கட்டத்தில், வேலைக்குப்போகும் பலருக்கும், பொருளாதார சூழலால், வேலைபோகும் என்ற பயம் மனதில் எப்போதும் இருக்கிறது. 
நம்முடைய மனக்குழப்பங்கள் நீங்க நாமும் சுந்தரரைப்போல அழைப்போம் வாருங்கள். 

உலகில் எங்கேயிருந்து உன்னை நினைந்தாலும், அங்கே வந்து, என்னோடு உற்றத்துணையாய் உடனிருந்து, என்னுடைய துன்பமான வினைகளை அகற்றி, என்னுடைய மனத்துன்பங்களிலிருந்து விடுதலைப்பெற வைக்கும் நீயே, என்னை ஆளும் கங்கை நாயகா, கழிப்பாலையை  விரும்பித் தன் இடமாகக்கொண்டு வீற்றிருக்கும் இறைவா என்று தன்நண்பனைப் பரவுகிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.