பால்வண்ணநாதர் வீற்றிருக்கும் இந்த திருக்கழிப்பாலைத்திருக்கோயில், ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரிலிருந்தே இருந்துவந்திருக்கிறது. இப்போது கொள்ளிடம் இருக்கும் இடத்திற்கும், திருக்கழிப்பாலைக்கும் இடையே பதினோரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. முதலாம் இராஜஇராஜசோழனின் ஆட்சிக்காலத்தில், அணையாத நந்தா விளக்கெரிக்க நிவந்தம் இந்த கோயிலுக்குக் கொடுக்கப்பட்டதாக கல்வெட்டுகள் சொல்கின்றன. காலமாற்றத்தால், பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த கட்டுமானம் சிதிலம் அடைந்து, பின்னர் கோயில் மீண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது.
அப்பர் பெருமான் திருக்கழிப்பாலையில் ஐந்து பதிகங்களைப் பாடியுள்ளதால், அவர் இங்கு பலகாலம் தங்கியிருந்து உழவாரப்பணி செய்திருக்கக்கூடும்.
அப்பர் பெருமான், மணிவாசகப்பெருமான், பெரியாழ்வார் என்று பலரும் தங்களைப் பெண்ணாக பாவித்துப்பாடிய பாடல்கள் பல இருக்கின்றன. அப்பர் பெருமானின் அப்படிப்பட்ட ஒரு பாடல், எப்போதும் சமயச்சொற்பொழிவு செய்பவர்களால் அடிக்கடி எடுத்துக்காட்டப்படுகிறது. அந்த பாடல் முதலில் இந்தப்பதிவில் சிந்திப்பதற்கு உரியதாக இருக்கிறது.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்;
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்;
அன்னையையும் அத்தனையும் அன்றே
நீத்தாள்; அகன்றாள், அகலிடத்தார் ஆசாரத்தை;
தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்;
தலைப்பட்டாள், நங்கை தலைவன் தாளே! (06-25)
இந்த பாடல் ஆறாம் திருமுறை, அப்பர் பெருமான் திருவாரூரில் அருளியது.
தன்னை மறந்து, தன்னுடைய பெயர் கூட மறந்து,இறைவனின் தாள் பணியும் நங்கையாகத் தன்னைப்பாவிக்க நினைக்கும் எல்லாருக்கும் ஏற்றப்பாடல் இது.
இதைப்போன்ற மற்றொரு பாடல், திருக்கழிப்பாலைப்பற்றிய அப்பர் தேவாரத்தில் இருக்கிறது.
ஊனப்பே ரொழிய வைத்தார்
ஓதியே யுணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார்
ஞானமு நடுவும் வைத்தார்
வானப்பே ராறு வைத்தார்
வைகுந்தற் காழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார்
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. (04-30)
பதம் பிரித்துப்படிக்க:
ஊனப்பேர் ஒழிய வைத்தார்
ஓதியே உணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார்
ஞானமும் நடுவும் வைத்தார்
வானப் பேராறு வைத்தார்
வைகுந்தற்கு ஆழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார்
கழிப்பாலை சேர்ப்பனாரே.
இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை மிகவும் புறவயமாகிவருவதைப்பார்க்கிறோம். பிறக்கிற குழந்தைக்குப்பெயர் தேர்வு செய்வதில் தொடங்கி, பெயர் சூட்டுதல், சோறு ஊட்டுதல் என்று அனைத்தும் இணையம் வழியாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.
அப்பர் காட்டுவது அகவயமான மனப்பயிற்சி.பல நூற்றாண்டுகள் கடந்தாலும் அப்பரின் தேவாரங்கள், ஆலய வழிபாட்டு முறைகளுக்கும், நம் அகவயமான இறைத்தேடலுக்கும் வழிகாட்டுகின்றன.
இந்த பாடலின் முதல் நான்கு வரிகளும் சிந்திப்பதற்குரியன. எனக்குத்தெரிந்த ஒரு மத்திய வயதுடையவர் எல்லாரிடமும் சிடுசிடுவென எரிந்து விழுவார்.அவருடைய உண்மையான பெயர் மறைந்து, அவர் இருந்த அடுக்ககக்குடியிருப்பில் "சிடுசிடு மாமா" என்ற புதிய பெயர் அவரது அடையாளம் ஆனது.
இன்னொரு மூதாட்டி தன் இளமைக்காலம் முதலாகவே கோயிலில் தினமும் எல்லா சன்னதிகளிலும் சுத்தம் செய்து, கோலம் போடுவதை ஒரு தொண்டாகச் செய்து வந்தார். சில நேரங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து அவரோடு பேசுவதைப்போல அவரைப்பார்த்தபடி அமர்ந்திருப்பார். இந்த பாட்டிக்கு அவர் செய்த தொண்டே பெயராக ஆனது.- கோலப் பாட்டி.
நம்முடைய உண்மையான அடையாளம் என்ன? நம் ஊனுடலுக்கு உள்ளப்பெயரா? நமது படிப்பா? பார்க்கும் தொழிலா? கழிப்பாலை சேர்ப்பனாராகிய பால்வண்ணப்பெருமான், நமக்கு அவரின் பால் நிறம் போன்ற, மனதை அருளி, நாம் கொண்ட ஊனப்பெயரை ஒழிய வைப்பார் என்கிறார் அப்பர் பெருமான்.
அப்பர் பெருமானைப்பல திருமுறை பயிலும் குழந்தைகள், அவர் கையில் வைத்திருக்கும் "தோசைத்திருப்பும் கரண்டி" போன்ற உழவாரம் என்ற கருவியை வைத்தே அடையாளம் காண்கிறார்கள்.
திருஞானசம்பந்தர் "அப்பரே" என்று அழைத்தமையால்,அப்பருக்கு அவருடைய மற்ற பெயர்கள் ஒழிந்தன. இன்றும் நாம் அவரை அப்பர் பெருமான் என்றே மனமுவந்து சொல்கிறோம்.
இறைவனை நோக்கி நம்முடைய எண்ணம் திரும்பினால், வாழ்க்கை எப்படி அர்த்தமுள்ளதாகும் என்பதை வாழ்ந்துக்காட்டியிருக்கிறார் அப்பர் பெருமான்.
அன்று இன்று போல மின்சாரம் இல்லை, தண்ணீர் வசதி இல்லை. ஒவ்வொரு ஆலயத்தையும் சுத்தம் செய்து, மக்களின் அறவாழ்வுக்கு அடிகோலினார் அப்பர் பெருமான்.
ஓதியே உணர வைத்தார்- ஐந்தெழுத்து மந்திரத்தை, மீண்டும் ஓதுவதாலும், சிவபெருமானைப்பற்றிய நூல்களைப்படிப்பதாலும், அவர் தம்மை உணர வைத்தார்.
ஞானப்பேர் நவில வைத்தார்- இறைவனைப்பற்றிய நினைவோடு தொடர்ந்து இருப்பதால் கிடைக்கும் ஞானம், இந்த உலகவாழ்க்கை எத்தனை நிலையில்லாதது என்பதையும், இறைவன் ஒருவரே பற்றிக்கொள்ளக்கிடைத்தவர் என்பதையும் தெளிவாக்கி, அந்த ஞானம் என்றும் தொடரும்படியாக, இறைவனின் பெயரைத் தொடர்ந்து நவில வைக்கும்.
ஞானமும் நடுவும் வைத்தார்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
என்கிறது திருக்குறள்.
மலர்மிசை ஏகினான் என்பதற்கு, இறைவனை நினைத்துத்தொழும் அடியவர்களின் மனம் என்னும் தாமரையில் இறைவன் வீற்றிருக்கிறார் என்பது பொருள் ஆகும்.
அதைப்போல அப்பர் பெருமான் , தனக்குக்கிடைத்த ஞானம் என்ற பெருவுண்மையை வைக்க ஒரு பெட்டியைப்போல , இறைவன் தான் வீற்றிருக்கும் இதயக்கமலத்தைத்தந்தார் என்கிறார்.
வானப் பேராறான கங்கையையும் சடையில் வைத்தார்; திருமாலுக்குச் சக்கரம் தந்தார்.திருக்கானப்பேர் என்னும் தலத்தின் மீது காதல் கொண்டார் திருக்கழிப்பாலை நாதர்.
இது வரை அப்பரின் பதிகத்தைப்பார்த்தோம்.
அப்பர் பெருமான் பக்தி செய்யும் முறை ஒரு வகை. சுந்தரரின் பாங்கு, ஒரு நண்பனிடம் பழகுவதைப்போன்றது.
பலரும் வாழ்க்கையில் நொந்துபோன காலக்கட்டங்களில், சொந்தங்கள் என்னைக்கைவிட்டன; ஆனால் நல்ல நண்பர்கள் உற்றத்துணையாக இருந்தார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.
உறுதுணையாக இருக்கும் நண்பர்கள், காலம், இடம், சூழ்நிலை என்று எதையும் கருத்தில் கொள்ளாமல், தன்னுடைய நண்பனின் கஷ்டத்தைப்போக்க ஓடோடி வருவார்கள்.
அப்படித்தான் சுந்தரரின் வாழ்க்கைக்கு, அவருடைய காதல், திருமணம், அவர் சந்தித்த சிக்கல்கள் என்று பலவற்றிலும் சிவபெருமான் சுந்தரருக்காக ஓடோடி வந்திருக்கிறார்.
சாக்குபோக்கு சொல்லாமல், எங்கிருந்து அழைத்தாலும் உடனே வருவார் என்கிறார் சுந்தரர்.