Tuesday, July 17, 2007

எல்லாம் சிவமே! (Ellam Sivame)

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ


துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீ
-அப்பர்

தேவாரத்தில் உள்ள இந்த பாடலை,சமிஸ்கிருதத்தில், உள்ள Thvameva maathacha pitha thvameva என்ற பாடலோடும் நாம் ஒப்பிட்டு நோக்கலாம்.

சிவனே, நீரே எனக்கு அம்மாவாகவும், அப்பாவாகவும், அண்ணனாகவும், மனைவியாகவும், மாமனாகவும், மாமியாகவும் உள்ளீர்; நல்ல வழியில் வந்த செல்வமாகவும் (ஒண்பொருள்) நீர் உள்ளீர்;

என் சுற்றமாகவும், கிளையாகவும், ஊராகவும் இருப்பவரும் நீரே. நான், உபயோகிக்கும் பொருளாகவும், நான் பயன்படுத்தும் ஊர்தி வகையாக இருப்பவரும் நீர்.பொன்னாகவும், மணியாகவும், முத்தாகவும் இருப்பவர் நீரே.


எல்லாம் நீரே என்று சொல்லும், அப்பர், இறைவனை என்ன வேண்டுகிறார்? விடையேறும் பெருமானே! துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ - எனக்கு துணை நின்று சுற்றம், ஊர், நுகர்பொருள் போன்றவற்றில் உள்ள பற்றினை முழுமையாகத்துறக்குமாறு அருள் புரிவாயாக!

No comments: