Wednesday, April 06, 2016

பிறவி பெருங்கடல் கடந்தோம் !- (காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதி )

எத்தனை எத்தனை விதமான உயிரினங்கள் இருக்கின்றன  உலகத்தில். 

நாம் பல நேரங்களில்- இருப்பது ஒரு வாழ்க்கை;  வாழ்க்கையை முழுமையாய் அனுபவித்து விட வேண்டும் என்று சிலர் சொல்வதை கேட்கலாம். உங்கள் வீட்டுச்சின்ன பிள்ளையின் புத்தகத்தை வாங்கி பாருங்கள்.

 எத்தனை எத்தனை ஜீவ ராசிகள்; ஒரு வனவிலங்கு பூங்காவிற்கு போனாலே புரியும்; நாம் குரங்காய் பிறந்திருக்கலாம்; ஒட்டக சிவுங்கியாய் இருந்திருக்கலாம்; முதலையாக கூட பிறந்திருக்கலாம்;திமிங்கலமாக கூட பிறவி எடுத்திருக்கலாம்

கிளிகளில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட வகைகளை இங்கு சிங்கை பறவை பூங்காவில் காணலாம்.







அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் 
பிற்பயக்கும் நற்பா லவை.-திருக்குறள் .

பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.

எங்கள் ஊரில் நகர மன்ற தலைவராய் இருந்தார் ஒரு பெண்மணி. அவர் வெறும் கைப்பாவை; அவர் கணவர் அவர் பெயரால் செய்த அட்டகாசம்  ரொம்பவே அதிகம். சாலை போடுவதில் தொடங்கி, இறப்பு சான்றிதழ் வரை எல்லாவற்றுக்கும் லஞ்சம்.
ஊர் பணத்தைக்கொள்ளை அடித்து, பணக்காரர்  ஆனார்.
இப்போது கணவர் கான்சர் நோயாளி; ஒரே மகன் வெளி நாட்டு விபத்தில் காலமாகி அவன் உடல் இங்கு வந்து சேரவே இரு வாரங்கள் ஆகி விட்டன.
இப்போது இந்த செல்வத்தால் பயன் என்ன?

பிறவி கணக்கு பாவ புண்ணியம்  பார்த்தே தான்; அதனால் தான் நற்பண்புகளை  நம்முடைய திருக்குறள், நாலடியார், நல்வழி முதலிய நூல்கள் வலியுறுத்துகின்றன.

இறைவன் திருவடியில் பற்று வைத்து அற வழியில் நடப்பவர்களால் மட்டுமே, பிறவி என்னும் பெருங்கடலை கடக்க முடியும்.
பிறந்து மொழி பயின்ற நாள் முதல், இறைவன் மீது அன்பு உடையவர் காரைக்கால் அம்மையார். அந்த நாட்களில் கணவன் சொல்லே மந்திரம் என்பதாய் தான் பெண்களின் வாழ்க்கை இருந்திருக்கும். 

பரமதத்தன் வேறொரு பெண்ணை திருமணம் செய்த பின், மனித உடலோடு வாழ பிடிக்காமல், பேய் உரு கொண்டார் அம்மையார்.

இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.

வினைக்கடலை யாக்குவிக்கும் பிறவிக் கனைக்கடல்

(கனை=மிகுதியான; பெரிய )
பிறவி வினைகளை உண்டாக்குகிறது; வினைகள் மீண்டும் பிறவிக்கு காரணமாகின்றன.
ஒன்று மற்றொன்றை உண்டாக்கும் சங்கிலி தொடர்கிறது.
இந்த சங்கிலியிலிருந்து விடுபட்டோம் நெஞ்சே; இனி கவலை இல்லை; இறைவன் அடி சேர்ந்தோம் என்கிறார் அம்மையார்.



2 comments:

gayathri said...

Very true! Well written

Hari said...

Unmai