Monday, August 08, 2016

கண்ணப்பரின் அன்பும், மணிவாசகரின் சொல்நயமும் ! (எட்டாம் திருமுறை)

திருவாசகத்தை அனுபவித்து படிக்க வேண்டுமானால், நீங்கள் கங்கை புத்தக நிலையத்தின் வெளியீடான திரு.கி.வா.ஜா அவர்களின் திருவாசகம்- சில சிந்தனைகள் என்ற நூலை அவசியம் வாங்கிப்படியுங்கள்.

நாமாக பொழிப்புரை கொண்டு படிப்பதை விட, இந்த புத்தகம் நம் இறைதேடலுக்கு நல்ல வழிகாட்டியாய் இருக்கிறது. ஒரு பாடலை மணிவாசகர் ஏன் அப்படி பாடினார் என்பதான கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது.

மற்ற திருமுறைப்பாடல்களை விட திருவாசகம், மணி வாசகரின் எண்ண ஓட்டத்தினால், அவரின் அடக்கத்தினால், படிக்கும் பக்தர்களுக்கும் அடக்கம் என்னும் பெரும் பண்பை உணர்த்த வல்லது.


தமிழில் எத்தனையோ நூல்கள் இருந்தாலும் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய நூல்கள் திருக்குறளும், திருவாசகமும்.

உருகி உருகி அவர் எழுதியதைபடித்து உருகாதவர் யார்?

மாணிக்கவாசகர் பெரும்பொருளை கையாளும் அமைச்சராக இருந்தவர். அவர் இறைவனை நாடி செல்லவில்லை. இறைவன் தன் பெருங்கருணையினால் அவருக்கு குருவாய் உபதேசித்தார்.


முதல் அனுபவத்திற்கு பிறகு அவரின் மனம் குருவாய் வந்த தயாளாரை நினைத்து நினைத்து உருகியது. நமக்கும் திருவாசகம் என்ற நூல் கிடைத்தது.

இந்த பதிவில் நாம் பார்க்க போகும் பாடல் :


கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,

என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து, என்னை `வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

Picture Credit:By unknown from Tiruchchirappalli (made) - http://collections.vam.ac.uk/item/O41835/painting-the-hunter-tinnen-or-kannappa/, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=14858426

திருமணத்தடை நீங்க, ராகு பரிகார ஸ்தலமாக இருக்கும் காளஹஸ்தி, சென்னையிலிருந்து ஒரு நாளில் சென்று வரக்கூடிய இடம். இங்கு தான் கண்ணப்ப நாயனார் வாழ்ந்தார்.


பஞ்ச பூத தலங்களில் வாயு தலமான காளஹஸ்தியில் கருவறையில் மட்டும் குளிர்ந்த காற்று சுழல்வதை நாம் உணரலாம்.

கண்ணப்பர் வேடுவ குலத்தில் பிறந்தவர். இறைவன் மீது கொண்ட அன்பினால்,தனக்கு தெரிந்த வகையில் பூஜை செய்தார். தாம் வேட்டையாடிய மாமிசத்தை படைத்தார். தன் கொண்டையில் இருந்த பூவை கொண்டு அலங்காரம் செய்தார். தன் வாயில் உள்ள நீரை வைத்து அபிஷேகம் செய்தார். இதை எல்லாம் மறைந்து இருந்து பார்த்த அந்தணர் திகைத்தார். அடுத்தது நடந்தது தான் முக்கியமான பரீட்சை.

சிவனாரின் ஒரு கண்ணில் கண்ணீராக செந்நீர் வழிந்தது. அதிர்ந்த கண்ணப்பர், தன் ஒரு கண்ணை நொண்டி, சிவலிங்கத்தில் வைத்தார். அடுத்த கண்ணிலும் குருதி வழிய தொடங்கியது. 

தன் செருப்பணிந்த கால்களை ஒரு கண்ணில் அடையாளமாக வைத்து, தன் இன்னொரு கண்ணையும் நோண்டி எடுக்க முனைந்தார் கண்ணப்பர். 
நம்மில் பலருக்கு  இறைவன் நமக்கு நல்லது செய்தால் மட்டுமே அவர் இருக்கிறார். நமக்கு வாழ்க்கையில் கொஞ்சம் துன்பங்கள் வந்தால் கூட, கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்பதான புலம்பல்கள் ஆரம்பித்து விடும்.

கண்ணப்பரின் அன்பு, இறைவனிடம் எதையும் எதிர்பார்க்காத அன்புக்கு ஒரு மிக சிறந்த உதாரணம்.

தமிழில் பல வகையான தூது இலக்கியங்கள் இருக்கின்றன. நாரை விடு தூது, கிளி விடு தூது முதலியன. 
இன்றைய காலகட்டத்தில் நமக்கு வகை  வகையான தொழில் நுட்பங்கள் இருக்கின்றன.
நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் வெளியூரில் இருந்தாலும் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது.

 அந்த நாட்களில், மனிதர்களிடம் சொல்ல முடியாத விஷயங்களை,குறிப்பாக பிரிவினால் வரும் துன்பத்தை சொல்ல  தம் மனதைத்தேற்றிக்கொள்ள இவ்வகை பாடல்கள் உதவி இருக்கின்றன.

இங்கே மணிவாசகர் தும்பியை தூது விடுகிறார். 

கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்
கண்ணப்பருக்கு இணையான அன்பு என்னிடத்தில் இல்லை என்று அறிந்தபின்னும் 

என் அப்பன்,என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி

என் அப்பன், எதனோடும் ஒப்பிட முடியாத என்னையும் ஆட்கொண்டு அருளி
வண்ணப் பணித்து
நன்றாக நினைவில் வையுங்கள். மணிவாசகர் அரசியலில் இருந்தார்; அமைச்சர் பதவியில் இருந்தார். இறை அனுபவம் தானாக அவருக்கு கிடைத்தது. அதனால் எப்படி இருக்க வேண்டும் என்ற வகையையும் இறைவன் எனக்கு சொல்லிக்கொடுத்தான் என்கிறார்.

என்னை `வா' என்ற வான் கருணைச்

சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய,  வானளவு கருணையுள்ள  பொடி பூசிய அழகிய திருநீறு அணிந்த சிவனாரிடம் சென்று ஊதுவாய் தும்பியே.

இறைவனைக்காண ஏங்கும் மணிவாசகரின் திருக்கோத்தும்பி பாடல் இது.

மதுரைக்கு சென்றால் அவசியம் திருவாதவூருக்கும் போய் வாருங்கள்.

5 comments:

Hemanth said...

எவ்வளவு அழகு, மாணிக்கவாசகரின் பாடலும் உங்களின் விரிவுரையும்.. எழுதுங்கள் வித்யா - அழகும், கருத்தாழமுள்ள உள்ள வரிகள் !

Vidhya Arune said...

நன்றி ஹேமந்த். தொடர்ந்து ஊக்கம் கொடுத்தமைக்கு என் நன்றி.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
புழுவிற்கடையேன் பாலமுருகன் said...

மாணிக்கவாசகரின் பாடலும் உங்களின் விரிவுரையும் மிக அருமை .. எழுதுங்கள் சகோ

தெரிசை. ஐயப்பன் said...

அருமை நமசிவாய