Sunday, September 18, 2016

பெரியவா ! திருச்சாட்டியக்குடி (திருவிசைப்பா -ஒன்பதாம் திருமுறை )

பெரியவா ! கருணை இளநிலா வெறிக்கும்
   பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து
சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால்
   தாழ்ந்தவா காதுகள் ! கண்டம்
கரியவா ! தாமும் செய்யவாய் முறுவல்
   காட்டுமா ! சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம் ! ஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே.        

இந்த பதிவில் நாம் பார்க்க போவது ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா பாடல். இது ராஜராஜசோழரின் குருவான கருவூர் தேவர் அருளியது.நேராக வாசித்தால் எளிதில் கருவூர் தேவரின் பாடல்களின் பொருள் புரியவில்லை.வார்த்தைகளில் வித விதமான கோர்வை நயம்

பாடலின் பொருள் தம்மை நோக்கி கைக்கூப்பிய   திருச்சாட்டியக்குடி மக்களைப்பார்த்து இறைவன் முறுவலித்தார் என்பதே.
திருச்சாட்டியக்குடி திருத்துறைப்பூண்டிக்கு  அருகில் இருக்கிறது.
எனக்கு இந்த பாடலின் முதல் சொல்லைப்பார்த்ததும் காஞ்சி பெரியவரின் நினைவு வந்தது. நம் தாய்தந்தையர் பலரும் தரிசனம் செய்த மகான் காஞ்சி பெரியவர்.


ஏழ்   இருக்கையில் இருந்த ஈசனுக்கே: ஏழு நிலைகள்   உடைய திருச்சாட்டியக்குடி கோயிலில் வீற்றிருக்கும் ஈசனுக்கு
கருணை பெரியவா :கருணை ஒன்று, அதனால் விளையும் பயன்கள் பல. அதனால் சொல் எச்சமாக கருணை பெரியவா என்றார் கருவூர் தேவர்.


இளநிலா வெறிக்கும்
   பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து
சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால்    தாழ்ந்தவா காதுகள்: 


மொழுப்பு-முடி.   சுழி  அம்  குழை-வளைந்த  அழகிய    குண்டலம்.


இறைவனின் தலையில் தவழும் பிறையால் ஒரு சிறு ஒளி தவழ்கிறது.சடையில் உள்ள முடிகள் அவிழ்ந்து சரிந்து இருக்கின்றன. காதுகளில் வளைந்த அழகிய குண்டலங்கள் தாழ்வாக தொங்குகின்றன.
கண்டம்
கரியவா: தொண்டையில் ஆலகால விஷத்தை அடக்கி உயிர்களைக்காத்ததால் கண்டம் கருத்தவர்.

சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம் தாமும் செய்யவாய் முறுவல்
   காட்டுமா:திருச்சாட்டியக்குடி மக்கள் தன் கைக்கூப்பி தொழுதலைக்கண்டு,முகம் மலர்ந்து, இறைவனும் முறுவல் பூத்தார்.


Monday, September 12, 2016

வார்த்தை விளையாட்டு- சம்பந்தர் தேவாரம்

இன்றைய நவீன கவிதைகளை ஒரு முறைக்கு மேல் படித்தால் தான் ஒரு பொருள் விளங்குகிறது. நல்ல நவீன கவிதைகள் நம்மில் ஒரு சிந்தனையையும் தோற்றுவிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

இது எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தரின் 
சித்திரக்கவி  வகைகளில் ஒரு வகையான மாலை மாற்று பதிகம்.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. 

இது தமிழா என்று புருவம் உயர்த்துபவர்களும்  இருக்கலாம்!!.இரு வழி யொக்கும் (Palindrome) சொற்கள்/ சொற்றொடர்களுக்கு உதாரணமாக விகடகவி ,தேரு வருதே ,என்பவற்றை   சொல்லலாம். இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் ஒரே மாதிரி இருக்கும் அமைப்பு.

ஆங்கில உதாரணங்கள் : Malayalam, Madam, civic முதலியன.

இப்படி சொற்களாக, சொற்றொடர்களாக, வாக்கியங்களாக நிறைய இருக்கின்றன.
இப்படி நம்மால் கவிதை எழுத முயற்சிக்க முடியுமா? திருப்பி போட்டு வாசித்தாலும் பொருள் இருக்கணும்!!!.

முதல் பாடலின் பொருள் :

யாமாமா= யாம் கடவுள்களா?

நீ ஆம் ஆம்!= நீ மட்டும் தான் கடவுள் 

மா யாழீ= பெரிய யாழை ஏந்தியவனே

காமா = எல்லாராலும் விரும்பப்படுபவனே


காண் நாகாநாங்கள் பார்க்கும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே.
 நாகம் கூட அமைதியாய் இறைவனின் தோளில் இருக்கிறது.
காணா காமா = காமனை மன்மதனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே
காழீயாசீர்காழியில் எழுந்தருளும் இறைவனே.


Do not Bring us to The Test  என்று ஒரு கிறிஸ்தவர்கள் ஒரு பிரார்த்தனையை சொல்வார்கள் 
மா மாயா = பெரிய மாயங்களைச்செய்பவனே 
நீ மா மாயா= எங்களை பிற 
சோதனைகளிலிருந்து, மாயைகளிலிருந்து காப்பாற்று  இதுவே பிரார்த்தனை.!


ஒலி வடிவில் கேட்க: 

இலக்கணத்திலும் தமிழ் சொல்வன்மையிலும் சிறந்தவர்களால் மட்டுமே பாடக்கூடிய ஒரு வகை சித்திரக்கவி.இந்த மாலை மாற்று பதிகம் எனப்படும்  பதிகம்.
முழு பதிகமும் இங்கே:

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

Tuesday, September 06, 2016

பூசலார் நாயனார் புராணம்- திருநின்றவூர் (பெரிய புராணம்)

(Pic Courtesy: Dinamalar)
பூசலார் நாயனாரைப்பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?தன் மனதில் ஈசனுக்கு கோயில் கட்டினார்.
ஒரு சிலர்கோயிலில் இருக்கும் ஒரு சில நிமிடங்கள் கூட  செல்பேசியும் கையுமாக அலைவதைப்பார்க்கிறோம். மனது ஒருமிக்க பிரார்த்தனை செய்வது எல்லாருக்குமா வாய்க்கிறது?
பூசலாரிடம் பணம் இல்லை. ஈசனுக்கு கோயில் கட்ட எண்ணுகிறேன் என்று பொருள் உதவி கேட்டார். யாரும் கொடுக்கவும் இல்லை. தன் மனதில் ஒரு கோயில் கட்ட முடிவெடுத்தார்.
திரு.பாலகுமாரன் பூசலாரைப்பற்றி ஒரு நாவல் எழுதி இருக்கிறார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே
என்கிறது திருமந்திரம். இது சொல்வது தான் பூசலாரின் வாழ்க்கை.

மண்ணில் ஒரு  பெரிய கோயில் கட்டினால் எத்தனை நேரமும் உழைப்பும் ஆகுமோ, அதை விட மேலான தவம்!!. தனி ஒருவராக வேறு எந்த எண்ணமும் இல்லாமல், அவர் செய்த பணி; எத்தனை பிரகாரங்கள், எத்தனை சன்னதிகள், எத்தனை கோஷ்ட மூர்த்தங்கள் என்று விரிவான திட்டம். அதை மனதில் ஒன்றன்றாய் செய்து முடிக்கிறார்.இணையில்லாத இறை அன்பு. பக்தியின் உச்ச நிலை அதுவே இறைவனையும் ஈர்த்தது.
காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர்  கோயில் கட்டப்படும் நேரம். பல்லவர்களின் சிற்பக்கலை ரசனையைப்பற்றி சொல்லவா வேண்டும் ?
கோயில் பணி முடிந்த நிலையில் பல்லவ மன்னனின் உறக்கத்தில் ஈசன் சொன்னார். " இந்த தேதியில் பூசலார் கட்டிய கோயிலின் குட முழுக்கு. அதனால் நீ எழுப்பும் கோயிலின் குடமுழுக்கின் தேதியை மாற்றுக !".
சரியான நேரத்தில் பூசலாரின் வாழ்வின் மேன்மையை இறைவன் உலக மக்களுக்கு பல்லவ மன்னனின் வழியாக உணர்த்தினார்.

ஊரெல்லாம் தேடி பூசலாரைக்கண்ட மன்னன் ,நீங்கள் எழுப்பிய கோயில் எங்கே என்கிறான். பூசலார் பொருள் இல்லாமையால் தான் மனதினால் முயன்ற கோயிலைப்பற்றி சொல்லுகிறார். பல்லவ மன்னன் அவரின் அருள் வாழ்க்கையை எண்ணி வியந்து, அங்கே ஒரு சிவாலயம் எழுப்பினார்  என்பது வரலாறு.
சென்னையில் உள்ள திருநின்றவூர் இருப்பூர்தி வழியாக எளிதில் செல்ல கூடிய கோயில்.
பூசலாரைப்போல கோயில் கட்ட முடியாவிட்டாலும், அவர் பக்தியில் ஒரு துளி நமக்கு வர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

இறைவனின் பெயர்: இருதயாலீஸ்வரர்
இறைவியின் பெயர்: மரகதவல்லி
பெரிய புராணம் எளிதால் எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் தான் சேக்கிழாரால் அருளப்பட்டது.


கீழே பூசலாரின் புராணத்தில் இருந்து சில அடிகள்.

தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் தொழுது 'நீர் இங்கு
எண் திசை யோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது ?' இங்கு
அண்டர் நாயகரைத் தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மைக்
கண்டு அடி பணிய வந்தேன்; கண் நுதல் அருள் பெற்று' என்றான்.
மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி,
'என்னை ஓர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள் செய்தாரேல்
முன்வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில்
இன்னதாம்' என்று சிந்தித்து எடுத்த வாறு எடுத்துச் சொன்னார்.