Tuesday, March 06, 2018

திருவெறும்பூர் அப்பர் தேவாரம்

சமீபத்தில் திரு.இந்திரா பார்த்தசாரதி அவர்களின், " மரத்தில் மறைந்தது பூச்சி" என்ற சிறுகதையை வாசித்தேன். கதை முற்றிலும் நகைச்சுவையாக கரப்பான் பூச்சிக்கு பயப்படும் ஒரு பெரியவரை பற்றியதாக இருந்தது. 

அந்த பெரியவர், உலகில் மனிதன் தோன்றும் நாட்களுக்கு முன்னரே தோன்றிவிட்ட கரப்பான் பூச்சியை வைத்து ஏன் ஒரு தலப்பெயர் கூட இல்லை என்று யோசிப்பார். 


எறும்புக்கு கூட திருவெறும்பூர் என்ற தலம் இருக்கிறதே!
ஆமாம். ஏன் கரப்பானை விட்டு விட்டார்கள்? எறும்புக்கு உள்ள சுறுசுறுப்பும், கூட்டமாக நகரும் ஒழுங்கும் மற்ற பூச்சிகளுக்கு நிச்சயம் இயல்பு இல்லை. 


இந்த கதையை படிக்கும் போது எனக்கு திருவெறும்பூர் நினைவுக்கு வந்தது. 
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை போய் இருக்கிறேன். 


திருச்சியில் ,பாரத வெகுமின் நிறுவனத்திற்கு மிக அருகில் இருக்கும் தலம் திருவெறும்பூர். அறுவதடி உயர குன்றுக்கோயில். 
ஆதித்த சோழர் (871-907AD),  திருபுறம்புயம் போரில் சோழர்களுக்கு கிடைத்த வெற்றிக்கு காணிக்கையாக கட்டிய பல கோயில்களில் இதுவும் ஒன்று என்று விக்கி (Wiki) அண்ணன் சொன்னார். 




காவிரி தென்கரை கோயில்களில் ஏழாவது பாடல் பெற்ற தலம். 
கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டாகத் திட்டென்னை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே


நம் உடல் மெல்ல மெல்ல தின்னப்படுகிறது. இளமையில் உள்ள உடல், நிச்சயம் முதுமையில் இல்லை. தோல் சுருக்கம் பெற்று, உடலின் பாகங்கள் சரிவர இயங்காமல் போய் விடுகிறது. இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பல வருடங்களில் நடக்கும் மாற்றங்கள். 

ஐம்பொறிகளும் எறும்புகளை போல மெல்ல ஊர்ந்து, நம் உடலை தின்றுகொண்டிருக்கின்றன. 

கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள

கறும்பி - சிறிது சிறிதாகத் தின்று .
மெய்,கண், மூக்கு, வாய், செவி- ஐம்பொறிகள். நாள்பட்ட பயன்பாட்டில் என்ன ஆகும் என்பது நமக்கு தெரியும்.

திறம்புதல்-மாறுபடுதல்  (Not Aligned). மற்றும் பல உள- அந்தக்கரணங்கள்- மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும் வெளிப்பார்வைக்கு தெரியாத, நாம் எது மெய்ப்பொருள் என்பதை அறிய நமக்கு உதவும் பொருட்கள். 

எல்லா நேரங்களிலும் நம் அந்தக்கரணங்கள் ஒன்றுபட்டா இருக்கின்றன? இன்றைய உலகில் இருக்கும் மனசிதறல்களில், திறம்புதலே அதிகம். 

குறும்பி யூர்வதோர் கூட்டாகத் திட்டென்னை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே

குறும்பி- அழுக்கு 
கூட்டகத்து - உடலிடத்துள் . இட்டு - அடைத்து .

இறைவனாகிய திருவெறும்பியூரர், இயற்கையாக செய்த காயம் இது. இதில் எறும்புகள் போல ஐம்பொறிகளும் ஊறிக்கொண்டிருக்கின்றன. அந்தக்கரணங்கள், திறம்பி திரிகின்றன.உடலும் அழுக்கை உற்பத்திசெய்துகொண்டே இருக்கிறது. இந்த கூட்டில் இறைவன் என்னை அடைத்திருக்கிறார். 

அப்பர் சொல்வது இறைவனின் திருவடியை மட்டுமே வேண்டும் மனநிலை. 

உடலை மிக கொண்டாடாமல், காயத்தை வெறும் உயிரை அடைத்த கூடாக எண்ணி, இறைவா எனக்கு பிறவா நிலை தா என வேண்டும் மனநிலை. இதை போன்ற பாடல்களை தாயுமானவரின் பாடல் திரட்டிலும் பார்க்கலாம். 


(Photo Credit: TheHindu, Wiki)

3 comments:

ராஜி said...

நானும் திருவெறும்பூர் போய் இருக்கேன். பதிவும் போட்டிருக்கேன்

மா அருச்சுனமணி, சிட்னி, ஆஸ்திரேலியா said...

அன்புடையீர்!

திருமுறைகளில் தோய்ந்து, இன்பம் துய்த்து, 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என அவற்றைப் பதிவுகளாக்கி எமக்குத் தந்துள்ள உங்களின் அன்புள்ளத்தில் இறைவனைக் காண்கிறேன்.

உங்கள் குருநாதர் சிவத்திரு கோடிலிங்கம் அவர்களது திருவடிகளுக்கும் உங்களது திருவடிகளுக்கும் வணக்கங்கள் பல. வளர்க உங்கள் பணி.

அன்பன்
மா அருச்சுனமணி
உலக சைவப்பேரவை ஆத்திரேலியா.

Vidhya Arune said...

நன்றியும் அன்பும். Manickam Arjunamani