கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே!
திருமுல்லைவாயில் சுந்தரர் தேவாரம்- ஏழாம் திருமுறை
திருமுல்லைவாயில் பாடல் பெற்ற 22வது தொண்டை நாட்டுத்தலம்.மேலே உள்ள சிற்பம், தலவரலாற்றைக்குறிக்கிறது.
தொண்டைமானின் யானையின் கால்களில் முல்லைக்கொடி சுற்றிக்கொண்டது. அவற்றை நீக்கும் போது, எழுந்த குருதியில் தான் இந்தத்தலம் சிவபெருமானின் உறைவிடம் என்று அறியப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அடையாற்றில் உள்ள புற்றுநோய் மையத்தில் பணியாற்றிய திரு.செல்வம் என்பவரின் குழுவோடு சேர்ந்து உழவாரப்பணி செய்யும் பேறு கிட்டியது. நாங்கள் சென்ற கோயில் ஆவடிக்கு அருகில் உள்ள வடதிருமுல்லைவாயில்.
டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் சிங்கப்பூரில் நடந்த நாற்பதாவது திருமுறை மாநாட்டில், மேலே கொடுத்துள்ள பாடலை, மாணவியர்கள் அருமையாகப்பாடினார்கள். அவர்கள் பாடிய ராகம் காம்போதி (தக்கேசி பண்).
அதைக்கேட்டபோது மீண்டும் திருமுல்லைவாயில் பற்றிய நினைவுகளை அசைபோடலானேன்.
பாடலின் பொருளைப்பார்ப்போம்.
கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா
எப்போதும் தாளத்தோடும் சுருதியோடும் அமைந்த பாடல் சுகமானது. மனக்கவலைகளை மாற்றும் அருமருந்தாக வல்லது. அப்படித்தான், அழகர் ஆடும் நடனமும், லயம் எனப்படும் தாளம் பிசகாமல் இருக்கிறது. அதைக்கொடியிடை கொண்ட அம்மை பார்க்கிறாள். இந்த வடதிருமுல்லைவாயிலில் உள்ள அம்மையின் பெயர் கொடியிடை அம்மை.
மூவர் பாடிய தேவாரப்பாடல்களில் பல இடங்களில் வேதமாகவும், வேதத்தின் பொருளாகவும் சிவபெருமான் போற்றப்படுகிறார். சுந்தரரும், அருமறையின் பொருளே என்று பாடுகிறார்.
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய்
அழகான கண்களை உடையவனே (அங்கணா). ஸ்ரீரங்கம் ரங்கநாதப்பெருமானின் கமலக்கண்ணழகைப்பாடும் பாசுரங்கள் பல. சிவபெருமானின் கண்ணழகைபோற்றும் தேவாரம் இது.
நீ எங்கே இருக்கிறாய் என்று உன்னைத்தேடிய வானவர்களுக்கு கூட அகப்படாமல், நீ இந்தத் திருமுல்லைவாயில் தலத்தை சேர்ந்தாய்.
திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே!
உனது திருப்புகழைப்பாடுகின்ற விருப்பத்தோடு, பல தலங்களுக்கும் சென்று பாடும் எனது, துயரத்தை (துன்பத்தை) போக்குவாய்.
இந்தப்பாடலில் திருப்புகழ் என்ற சொல் வருகிறது.
பின்னாளில் வந்த அருணகிரிநாதர் திருப்புகழ் இந்தத்தலத்திலும் பாடியிருக்கிறார். Thirupugazh link:
இந்தத் திருப்புகழில் சிவபெருமான் நடனம் ஆடுவது பற்றிக்குறிப்பிடப்படுகிறது. உன் அடியார்களோடு சேர்ந்து, சிறந்த நெறியைப்பிடித்தொழுகும் வாழ்வை எனக்குத்தருவாய் என்று அருணகிரியார் இறைஞ்சுகிறார்.
தேன் என இனிக்கும் திருவருட்கடலே எனத்தொடங்கும் அருளியல் வினாவல் திருவருட்பாவில் சுந்தரா, சுந்தரன் தூதா என்று வள்ளலார், சிவபெருமானை அழகன் என்றும், சுந்தரமூர்த்தி நாயனாரின் தூதர் என்றும் பாடிப்பரவுகிறார்.
சுந்தரமூர்த்தி நாயனார், அருணகிரிநாதர், மற்றும் வள்ளலார் பாடியத்தலம் இது.
சென்னையை சுற்றி, திருவுடை(மேலூர்), வடிவுடை ( திருவொற்றியூர்) மற்றும் கொடியிடை (வடதிருமுல்லை வாயில்)அம்மன் கோயில்களுக்கு பௌர்ணமி தோறும் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகம்.
இதில் கொடியிடை அம்மன் க்ரியா சக்தியாவாள். நாம் சரியாகக்கேட்டால், அள்ளிதருவாள் அம்மை.
அம்மையையும் அப்பனையும் தரிசித்து வாருங்கள் !
1 comment:
thiruvarutpa
திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய
திருவருட்பா பாடல்
இந்த இணையதளத்தில் (பிரித்து படிக்கும் முறை) என்று இருக்கும் இந்த button-னை click செய்தால் எளிய முறையில் திருவருட்பாவை பிரித்து படிக்க தெரிந்து கொள்ளலாம்.
Post a Comment