Saturday, September 25, 2021

ஆயிரத்தில் ஒருவன் -திருஆக்கூர் (தான்தோன்றி மாடம்)-சிறப்புலி நாயனார் புராணம்

 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்பது உடைத்து.(குறள்:1057)

இகழ்ந்து, கேலி செய்யாது, கொடுத்து உதவுபவரைக்கண்டால், உதவி கேட்பவரின் மனம் உள்ளுக்குள் மகிழும் என்கிறார் திருவள்ளுவர். 

மனதில் அருள் இருந்தால் மட்டுமே, இரப்பவரை கேலி செய்யாமல், அவர்கள் மனம் மகிழுமாறு உதவ முடியும். 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் பெருமான் அருளுக்கு உருவம் ஆனார். 

இன்றைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலருக்கும் பல வித துன்பங்கள்!.

 நிறைய பேர் வேலை இழக்கின்றனர். தானத்தில் பெரிதாய் சொல்லப்படும் அன்னதானத்தை முடிந்தவர்கள் மனமுவந்து செய்யவேண்டியது இப்போது தான். 

இறைவனுக்கு பால், தயிர், மஞ்சள், தேன்,சந்தனம், இளநீர், விபூதி போன்ற திரவியங்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை எல்லாவற்றிலும் சிறப்பானது ஐப்பசி பௌர்ணமி நாளில் செய்யப்படும் அன்னாபிஷேகம். 

அன்னம் பரப்பிரம்மம் . ஒருவர் என்ன வகையான உணவை சாப்பிடுகிறாரோ, அதைக்கொண்டு, அவர்களின் குணநலன்கள் இருக்கும் என்று ஸ்ரீமத் பகவத் கீதையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. 

தான்தோன்றி என்ற சொல் இலங்கை போன்ற நாடுகளில், தானாக மனம் போன போக்கில் நடப்பவரைக்  குறிப்பிடும் சொல்லாக இன்றைய நாளில் இருக்கிறது. முகக்கவசம் அணியாமல் தான்தோன்றியாய் அலைகிறார்கள் என்று திட்டுகிறார்கள்.

தான் தோன்றி என்ற சொல் மறைந்து இன்றைய தமிழக நாளிதழ்கள் பரவலாக சுயம்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன.

சுயம்பு என்ற சொல் வடமொழி மூலம் கொண்டது. தான் தோன்றி என்ற சொல்லே தமிழ் மூலம் உடையது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை தானாக தோன்றி  சுயம்புவாக இறைவன் காட்சியளித்த தலங்கள் பல இருக்கின்றன. அவற்றில், உறையூர் தான்தோன்றிநாதர் கோயில், கரூர் பக்கத்திலிருக்கும் வைணவ ஆலயமான தான்தோன்றிமலை, மற்றும் திரு ஆக்கூர் எனப்படும் தான்தோன்றிமாடத்தில் இருக்கும் சிவாலயம் போன்வையும் அடங்கும்.

தான்தோன்றிமாடம் எனப்படும் திருஆக்கூரின் சிறப்பு, இங்கு அரசர் ஒருவர் ஆயிரம் பேருக்கு செய்த அன்னதானத்தில், ஒருவர் குறைவாக இருக்க, ஆயிரமாவது நபராக- ஆயிரத்தில் ஒருவராக, சிவபெருமான் வந்து உணவருந்தினார். இன்றும் உற்சவருக்கான திருநாமம் ஆயிரத்தில் ஒருவன்;கையில் கோலேந்தி நிற்கிறார்.
  
மாடக்கோயில்கள் என்னும் வகையான கோயில்கள் தமிழகத்திலுள்ள பலவகையான கோயில்களில் ஒரு வகை.

மாடக்கோயில் மற்றும் கரக்கோயில் :
(உள்படம்: திருக்கடம்பூர் ஆலயம் )

தேர் போன்ற அமைப்புள்ள கருவறை உள்ள கடம்பூர் கரக்கோயில் வகையை சார்ந்தவை. 

மாடக்கோயில் என்பது யானை ஏறமுடியாத வகையில் படிக்கட்டுகளோடு அமைந்த கருவறைக்கொண்டவை.

குடவாசல், அம்பர்மாகாளம், திருமருகல், திருஆக்கூர் எனப்படும் தான்தோன்றிமாடம் போன்றக் கோயில்கள் மாடக்கோயில் வகையை சேர்ந்தவை. 



Attribution: Ssriram mt, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons for the picture of Kudavasal


நாம் இந்தப்பதிவில் பார்க்கப்போவது திருஆக்கூர் என்னும் தான்தோன்றிமாடம் பற்றிய பாடல்களைத்தான்!
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கணான் என்னும் மன்னன் எழுப்பிய 64 மாடக்கோயில்களில் ஒன்று திருஆக்கூர் எனப்படும் தான்தோன்றி மாடத்தில் அமைந்துள்ள சிவாலயம் ஆகும்.
சிறப்புலி நாயனாரின் ஊர் திருஆக்கூர்.

 இந்தப்பதிவில் ,பெரியபுராணத்தில் வரும் சிறப்புலி நாயனார் பற்றிய பாடல்களைப் படித்து உணரப்போகிறோம். 

சிறப்புலி நாயனாரைப் பற்றி பெரியபுராணத்தில் ஆறு பாடல்கள் இருக்கின்றன. சிறப்புலி நாயனார், சிவனடியார்களுக்கு அமுதூட்டும் தொண்டினைத்  தன் வாழ்நாள் முழுவதும் செம்மையாகச் செய்தார். 

சிறப்புலி நாயனார், 63 நாயன்மார்  வரிசையில் முப்பத்தைந்தாவது நாயன்மார். இவருக்கு அடுத்து வருபவர், பிள்ளைக்கறியோடு திருஅமுதுபடைத்த சிறுத்தொண்ட நாயனார் என்பது குறிப்பிடத்தக்கது 


சிறப்புலி நாயனார் புராணம் 


பொன்னி நீர் நாட்டின் நீடும் 
  பொற்பதி புவனத்து உள்ளோர்
இன்மையால் இரந்து சென்றோர்க்கு 
  இல்லை என்னாதே ஈயும்
தன்மையார் என்று நன்மை 
  சார்ந்த வேதியரைச் சண்பை
மன்னனார் அருளிச்செய்த மறைத் 
  திருவாக்கூர் ஆக்கூர் (1)


பொன்னி நீர் நாட்டின் நீடும்  பொற்பதி - பொன்னி எனப்படும் காவிரி நீரின் வளம் கொண்ட நாட்டின் (சோழ நாட்டின்), நீடும் (பழமையான) பொன்போன்ற அழகிய ஊர் (பொற்பதி) 

புவனத்து உள்ளோர் இன்மையால் இரந்து சென்றோர்க்கு   இல்லை என்னாதே ஈயும் தன்மையார் 
- புவனம் (உலகம்). உலகத்தில் உள்ளவர்கள், பொருள் இல்லை என்ற காரணத்தால், இரந்து (பொருள் வேண்டி) செல்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் தன்மை உள்ளவர்கள் 

என்று நன்மை   சார்ந்த வேதியரைச் சண்பை
மன்னனார் அருளிச்செய்த மறைத்   திருவாக்கூர் ஆக்கூர்.
- கொடுப்பதால் வரும் நன்மையை உணர்ந்ததால் , அந்த வழியையே சார்ந்த (கடைப்பிடித்த) வேதியர்கள் என்று சண்பை மன்னனார் (சம்பந்தர்) அருளிச்செய்த மறை போன்ற  திருவாக்கு பெற்ற ஊர் (தேவாரப்பாடல் பெற்ற ஊர் ) திரு ஆக்கூர் என்னும் தலமாகும். 

தூ மலர்ச் சோலை தோறும் ,
  சுடர் தொடுமாடம் தோறும்
மாமழை முழக்கம் தாழ,
 மறை   ஒலி முழக்கம் ஓங்கும்
பூ மலி மறுகில் இட்ட ,  
புகை அகில் தூபம் தாழ
ஓம நல் வேள்விச் சாலை ,
  ஆகுதித் தூபம் ஓங்கும். (2)


இரு கோடுகள் பற்றி எல்லாரும் அறிந்திருக்கிறோம். இங்கு சேக்கிழார் பெருமான் அந்த நுட்பத்தைப்பயன்படுத்தி திரு ஆக்கூரின் பெருமை பேசுகிறார். 

தூ மலர்ச் சோலை தோறும் ,  சுடர் தொடுமாடம் தோறும்- ஆக்கூரில் உள்ள  தூ( தூய்மையான) மலர்ச்சோலை தோறும், மற்றுமுள்ள, சுடர்(ஒளிபொருந்திய) தொடு (பெரிய) மாடம்(மாளிகைகள்) தோறும்.

தொடுவானம்(Horizon) என்று சொல் தமிழில், தொடமுடியாத தூரத்தில்  பூமியும் வானமும் சேரும் இடத்தைக்குறிக்கும். 

எப்படி தொடுவானம் தொடமுடியாத அளவு பெரியதோ  அப்படி தொடுமாடம்- பெரியமாடம் என்று எடுத்துக்கொள்கிறேன். 

மாமழை முழக்கம் தாழ, மறை   ஒலி முழக்கம் ஓங்கும்
மாமழை முழக்கம் தாழ, மறை   ஒலி முழக்கம் ஓங்கும்-
பெரியமழையாக இருந்தாலும் அதன் முழக்கம் (பெருஒலி) தாழ (குறையச்செய்யும் அளவில்), மறையொலி முழக்கம் (வேதம் சொல்லும் ஒலி) ஓங்கியிருக்கிறது. 

பூ மலி மறுகில் இட்ட ,  புகை அகில் தூபம் தாழ
திருக்காறாயில்  என்னும் தலத்தின் தலவிருட்சம் அகில் மரம். இன்றைய உலகம் பல செயற்கையான ரசாயனக் கலவைகளால் கொண்டு செய்யப்படும் வாசனைகளைக்கொண்டது. சிறப்புலி நாயனார் வாழ்ந்த காலத்தில் எங்கும் இயற்கையின் நறுமணம் தான்.

பாடல் வரியைப் பார்ப்போம். பூ என்ற சொல்லுக்கு மலரைத் தவிர அழகு என்ற பொருளும் இருக்கிறது. பூ (அழகு), மலி (பொருந்திய), மறுகில் (வீதியில்) இட்ட, புகையில், அகிலின் தூபம் (நறுமணம்) , தாழுமாறு 
ஓம நல் வேள்விச் சாலை ,  ஆகுதித் தூபம் ஓங்கும்.
வேள்விச்சாலையில் செய்யப்படும் ஆகுதியிலிருந்து வரும் நறுமணம், அகில் தூபத்தை விட ஓங்கியதாக இருக்கிறது.

ஆலை சூழ் பூக வேலி 
  அத்திரு ஆக்கூர் தன்னில்
ஞாலமார் புகழின் மிக்கார் நான் 
  மறைக் குலத்தின் உள்ளார்
நீலமார் கண்டத்து எண் தோள் 
  நிருத்தர்தம் திருத்தொண்டு ஏற்ற
சீலராய்ச் சாலும் ஈகைத் 
  திறத்தினில் சிறந்த நீரார் (3)

ஆலை சூழ் பூக வேலி 
  அத்திரு ஆக்கூர் தன்னில்
ஆலை என்ற சொல் பொதுவாக தாவரத்தைக்குறிக்கும். இங்கு ஆலை என்ற சொல் கரும்பை குறிக்கிறது. பூகம் என்பது பாக்குமரம் .
கரும்புவயல்கள் எங்கும் சூழ்திருக்க, பாக்குமரங்கள் வேலி போல அமைந்திருக்க, நீர்வளம் நிறைந்த திருஆக்கூரில், 


ஞாலமார் புகழின் மிக்கார் நான் 
  மறைக் குலத்தின் உள்ளார்
ஞாலம் (உலகம்) நிறைந்த புகழ் உடையவரும், நான்மறைகளை ஓதும் குலத்தில் உள்ளவரும் 

நீலமார் கண்டத்து எண் தோள் 
  நிருத்தர்தம் திருத்தொண்டு ஏற்ற
தன் அடியவர்களைக் காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்தி, அதைத்தன் கண்டத்தில் இருத்தியதால், நீலகண்டன் என்ற பெயர்கொண்டவர் சிவபெருமான்.

நீலம் அடர்ந்த கண்டம் உடையவர், எட்டு தோள்களைக்கொண்டவராக, நிருத்தர் (நடனம் ஆடுபவர்-கூத்தப்பெருமான்- சிவபெருமான்).அவருக்காக திருத்தொண்டு ஏற்றவர்,

சீலராய்ச் சாலும் ஈகைத் 
  திறத்தினில் சிறந்த நீரார் 
 

சீலம்- ஒழுக்கம்
சால்- மேன்மை (Excellence)

சீலராய்ச் சாலும்-ஒழுக்கத்தில் மேன்மையானவரும், 
ஈகைத்திறன் என்னும் பண்பில் சிறந்தவருமான, நீரார் (திருநீறு பூசியவர்)- சிறப்புலி நாயனார். 

ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த 
  போது அடியில் தாழ்ந்து
மூளும் ஆதரவு பொங்க 
  முன்பு நின்று இனிய கூறி
நாளும் நல் அமுதம் ஊட்டி 
நயந்தன எல்லாம் நல்கி
நீளும் இன்பத்துள் தங்கி 
  நிதிமழை மாரி போன்றார் (4)

அங்கணர் என்ற சொல் பெரியபுராணத்தில், சுந்தரர் வரலாறு சொல்லும் தடுத்தாட்கொண்ட புராணத்திலும் வருகிறது.
ஒப்பு நோக்க :
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்

‘முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே

என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்’ என்றார்


ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த 
  போது அடியில் தாழ்ந்து
 அங்கணர் - இறைவன் 

ஆளும் அங்கணருக்கு அன்பர்- 

இந்த உலகை ஆளும் இறைவனுக்கு  அன்பனான சிவனடியார்கள் ,

அணைந்த  போது அடியில் தாழ்ந்து

தம்மை அணைந்த போது (நாடிவந்த போது), அடியில் தாழ்ந்து (அவர்கள் திருவடியில்) தன் தலைப்பட தாழ்ந்து, 

மூளும் ஆதரவு பொங்க 
  முன்பு நின்று இனிய கூறி

நாயன்மார்கள் அரைகுறையாக எதையும் செய்தவர்கள் இல்லை. எந்தத்தொண்டு செய்தாலும் அதை முழுமனதோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தார்கள்.
இந்தப்பாடல் சொல்வது சிறப்புலி நாயனார் எப்படி தன்னை நாடி வந்து அணைந்த சிவனடியார்களிடம் நடந்துகொண்டார் என்பதே ஆகும். 

முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
யான் இட்ட தீ மூள்கவே மூள்கவே - பட்டினத்தார்.

தீ மூள்கவே என்கிறார் பட்டினத்தார். நாம் ஊடகங்களின் வழியாக, நன்கு அறிந்த பயன்பாடு போர் மூளும்.

இங்கே சிறப்புலி நாயனாருக்கு மனதில் சிவனடியார்களை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் மூள்கிறது. அந்த எண்ணம் பொங்கி எழ, அவர்களின் முன்னே போய் நின்று, இனிய வார்த்தைகளை சொல்லுகிறார். 

நாளும் நல் அமுதம் ஊட்டி 
நயந்தன எல்லாம் நல்கி

 நாள்தோறும், நல்லஉணவாக அவர்களுக்குக் கொடுக்கிறார் . ஊட்டி என்ற சொல் இங்கே கவனிக்கத்தக்கது.

 இன்றைய நாளில் ஊட்டி என்ற சொல் பிள்ளைக்கு ஊட்டுவதுதான். அப்படி அன்பாக அமுதுபடைத்தார் என்றும் கொள்ளலாம்.
நயந்தன எல்லாம்- அவர்கள் என்ன விரும்பியவற்றை எல்லாம் 
நல்கி (கொடுத்து) 

நயம் என்ற சொல் மகிழ்ச்சியையும் குறிக்கும். நயந்தன எல்லாம் நல்கி என்ற தொடர், சிவனடியார்கள் என்ன கொடுத்தால் மகிழ்வார்களோ, அவற்றை எல்லாம் கொடுத்து என்று கொள்ளலாம். 

நீளும் இன்பத்துள் தங்கி 
  நிதிமழை மாரி போன்றார்

சுந்தரரின் வரலாற்றைப் பேசும்போது, மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் என்ற அடி பெரிதும் பேசப்படுகிறது. இறையின்பம் என்பது இறவாத ஒன்று, மாற்றமில்லாத ஒன்று. 

அந்த இன்பம் சிறப்புலிநாயனாருக்கு, சிவனடியார்களுக்கு உணவும், அவர்களுக்கு என்ன தேவையோ அவற்றைக்கொடுப்பதாலும்  கிடைக்கிறது.

நீளும் இன்பம்- மேன்மேலும் நீளுகிற இன்பம் அவருக்குக் கிடைக்கிறது.

அந்த இன்பத்தில் தங்கி, அதிலிருந்து மீள விரும்பாமல் இருக்கிறார் சிறப்புலி நாயனார். அவர் சிவனடியார்களுக்கு, பொருள் மழையைத் தருகின்ற மேகம் (மாரி) போன்றவர். 

அஞ்சு எழுத்து ஓதி அங்கி 
  வேட்டு நல் வேள்வி எல்லாம்
நஞ்சணி கண்டர் பாதம் 
  நண்ணிடச் செய்து ஞாலத்து
எஞ்சலில் அடியார்க்கு என்றும் 
  இடையறா அன்பால் வள்ளல்
தஞ்செயல் வாய்ப்ப ஈசர் 
  தாள் நிழல் தங்கினாரே.

அஞ்சு எழுத்து ஓதி அங்கி 
  வேட்டு நல் வேள்வி எல்லாம்

நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி

அங்கி   வேட்டு- அங்கி என்றால் தீ. இங்கு அந்தணர்கள் வளர்க்கும் முத்தீ. 

இன்றும் அக்னிஹோத்ரம் செய்பவர்கள் இருக்கிறார்கள். இது அந்தணர்களுக்கு தினமும் செய்யவேண்டிய கடமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.  

நல் வேள்வி எல்லாம்- எல்லாருக்கும் நன்மை செய்ய நினைத்து செய்யப்படும் வேள்வி, நல்வேள்வி 

நஞ்சணி கண்டர் பாதம் 
  நண்ணிடச் செய்து

மேலே சொன்ன வேள்விகளை, நஞ்சணி கண்டர் (நஞ்சை அணிந்த கண்டத்தை உடைய சிவபெருமான்)
பாதம் நண்ணிடச்செய்து - நன்றி என்ற சொல் இன்றும் கிராமப்புறங்களில் நண்ணி என்று சொல்லப்படுவதைப் பார்க்கலாம். இறைவனின் பாதத்தில், நன்றியாக ,தான் செய்யும் தொண்டினைச்  சமர்ப்பிக்கிறார், சிறப்புலி நாயனார். 

ஞாலத்து
எஞ்சலில் அடியார்க்கு என்றும் 
  
எஞ்சல் இல் ஞாலத்து அடியார்க்கு என்றும் என்று மாற்றிப் படிக்க வேண்டும்.

எஞ்சல் என்றால் குறை. குறை இல்லாதவர்களாக இந்த உலகத்தில் வாழும் அடியார்களுக்கு 

இந்த இடத்தில் எனக்கு அனுமனைப்போற்றும் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது.

அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
வெஞ்சினைக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி !
மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி !
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென  விருப்பாய் ! போற்றி !

கம்பராமாயண தொடர்வகுப்புகளில், திரு.அ.கி.வரதராஜன் ஐயா, இன்றென இருத்தி என்று சீதை, அனுமனை வாழ்த்துவதை விரிவாக விளக்கினார்.

இந்தப்பாடலின் கடைசி அடி, எஞ்சல் இல் ஊழி எல்லாம் இன்றென இருப்பாய் போற்றி.  

குறைவு இல்லாமல், ஊழி எல்லாம் (உலகம் இருக்கிற காலம் எல்லாம்), இன்றென இருப்பாய் போற்றி (இன்று போல என்றும் சிரஞ்சீவியாக இருப்பவனே) உன்னைப் போற்றுகிறோம். 

இடையறா அன்பால் வள்ளல்
தஞ்செயல் வாய்ப்ப ஈசர் 
  தாள் நிழல் தங்கினாரே.

தமிழ் போல ஒரு மொழி எங்கேயும் இல்லை. சொல்லழகைப் பாருங்கள்.
இடையறா அன்பால்- நம்முடைய சுற்றம், நட்பு என்ற எதிலும் அன்பு அவ்வப்போது மிகுதியாகும், குறையும். ஆனால் சிறப்புலி நாயனார் இடைவிடாது சிவனடியார்களின் மேல் எப்போதும் அன்பு செலுத்துகிறார். 

வள்ளல்
தஞ்செயல் வாய்ப்ப ஈசர் 
  தாள் நிழல் தங்கினாரே


வள்ளல்தன்மையோடு, தான் அன்பாக செய்யும் செயல் வாய்ப்ப( தனக்குக்கிடைத்த வாய்ப்பாகக்கொண்டு), ஈசர் தாள் நிழலில் தங்கினார் சிறப்புலி நாயனார்.

இறைவன் திருவடி நிழல், மாசில் வீணையும், மாலை மதியமும், வீசத்தென்றலும், வீங்கிளவேனில் போன்றது என்ற அப்பர் பெருமான் பாடலையும் நினைவில் கொள்வோம். 

அறத்தினின் மிக்க மேன்மை
அந்தணர் ஆக்கூர் தன்னில்
மறைப்பெரு வள்ள லார்வண்
சிறப்புலி யார்தாள் வாழ்த்திச்
சிறப்புடைத் திருச்செங் காட்டங்
குடியினிற் செம்மை வாய்த்த
விறற்சிறுத் தொண்டர் செய்த
திருத்தொழில் விளம்பல் உற்றேன் (6)

விறல் =வீரம், பெருமை, சிறப்பு 
வண்மை- ஈகை, அழகு, புகழ் 

இந்த ஒரே பாடலில், சிறப்புலி நாயனாருக்கும், சிறுத்தொண்ட நாயனாருக்கு தரப்பட்டிருக்கும் அடைமொழியைப்பாருங்கள்.

அறத்தினின் மிக்க மேன்மை
அந்தணர் ஆக்கூர் தன்னில்

மேன்மை மிக்க அறத்தைக் கடைப்பிடிக்கும் அந்தணர் (மேன்மை மிக்க அறத்தின் அந்தணர்) வாழும் ஆக்கூர் தன்னில்

மறைப்பெரு வள்ள லார்வண்
சிறப்புலி யார் தாள் வாழ்த்திச்
மறைபெருவள்ளலார் (சைவத்திரு என்ற அடைமொழியைப்போல), மறைபெரு வள்ளலாரான 
சிறப்புலியாரின் தாளை வாழ்த்தி, 
(திருவடிகளைப்போற்றி)

சிறப்புடைத் திருச்செங் காட்டங்
குடியினிற் செம்மை வாய்த்த
விறற்சிறுத் தொண்டர் செய்த
திருத்தொழில் விளம்பல் உற்றேன்

சிறப்புடைய திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில்,  செம்மை -( நேர்மை, சரியான நெறியில் நிற்கும் குணம்) வாய்த்தவரான, வீரம் மிகுந்த சிறுத்தொண்டர். அவர் செய்த திருத்தொழில்- வேறு எந்த நாயன்மாரும் செய்யாத ஒன்று!

தன் பிள்ளையைக்கறியாக சமைத்து அமுதுப்படைத்தவரின் செயலை விளம்பல் உற்றேன் ( சொல்ல ஆரம்பிக்கிறேன்). 

மயிலாடுதுறை வட்டத்தில் இருக்கும் திருஆக்கூருக்கு சென்று வாருங்கள்.

திரு.வேலுதரன் அவர்கள் சென்று வந்த பதிவையும் உங்களுக்காக இணைத்திருக்கிறேன்.

கைக்குள்ளே உலகத்தின் தரவுகள் அனைத்தும் கையில் கிடைக்கும் காலம் இது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இப்படி  உலகம் இல்லை.

 சேக்கிழார் பெருமான் பெரியபுராணம் என்ற நூலைப்  படைத்ததால், நமக்கு சிறப்புலி நாயனார் போன்ற நாயன்மார்களின் உயரிய வாழ்க்கையைப் பற்றி அறியும் நற்பேறு  வாய்த்திருக்கிறது.

சேக்கிழார் பெருமானின் பொன்னடிகளைப்போற்றுவோம். 🙏

திருச்சிற்றம்பலம்!

3 comments:

தணிகை said...

நன்று 🙏🙏🙏

bgood said...

Nicely written lot of details to digest, should read again in peace 🙂

கி.முத்துக்கிருஷ்ணன். said...

அற்புதம். மறைத்துளிகலல்ல வாராது வந்த மாமழைதாதுளிகள். ஒரே மூச்சில் பருகினேன். எனக்கு சொல்ல வேறு வார்த்தகளில்லை. மேலும் எதிர்பார்க்கிறேன். வாழ்க உன் தொண்டு.