திருமுருகாற்றுப்படை என்பது பதினோராம் திருமுறையில் உள்ளது . கடைச்சங்ககாலப்புலவர் நக்கீரரால் எழுதப்பட்டது.
சமீபத்தில் தமிழின் மூத்த எழுத்தாளர், திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் சங்க இலக்கியங்களைக்கற்பதால் கிடைக்கும் நன்மைகளைப்பற்றிப்பேசிய உரை என்னை வெகுவாகக்கவர்ந்தது.
சென்ற பங்குனி உத்திரத்தில் சுமார் 350 வரிகளை உடைய திருமுருகாற்றுப்படையிலிருந்துத் தொடங்கலாம் என்று படித்துப்பார்த்தேன்.
யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் எழுதிய உரை, தமிழ் இணைய நூலகத்தில் கிடைக்கிறது.
அதிலிருந்து நான் புரிந்துக்கொண்டவற்றை, எனக்கும் நினைவில் இருத்திக்கொள்ள ஒரு கற்றல் வாய்ப்பாக அமையும் என்று இங்கே பதிவிடுகிறேன்.
முதலில் திருமுருகாற்றுப்படை வந்த கதையைப்பார்ப்போம்.
ஆங்கிலத்தில் "Being in the Right Place at the Right time".
என்று சொல்வது அலுவலக சூழலில் அதிகம் பயன்படுத்தப்படும் தொடர். பணி உயர்வு ஒருவருக்குக்கிடைக்கும் பட்சத்தில் அவர் சரியான இடத்தில்,சரியான நேரத்தில் இருந்தார் என்பார்கள்.
சங்கக்கால புலவர் நக்கீரர். அவர் ஒரு முறை இமயமலையை நோக்கிச்சென்றார். இன்று போல, பேருந்து, ரயில் வசதிகள், பயணம் அழைத்துச் செல்லும் முகவர்கள் என்று யாரும் இல்லாத காலம். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தே பயணப்பட்டார்.
வழியில் ஒரு அடர்ந்தக்காட்டில் ஓர் ஆலமரமும் அதனருகே ஓர் ஆறும் இருந்தன. நக்கீரர், அங்கே குளித்துவிட்டு, அந்த மரத்தின் கரையில் சிவபூஜை செய்யத்தொடங்கினார்.
அவர் கண்கள் திறந்திருந்தன. ஒரு பழுத்த இலை தண்ணீரில் பாதியும், தரையில் பாதியுமாக விழுந்தது. அவர் பார்த்தபோதே நீரிலிருந்த பாதி மீனாகவும், தரையிலிருந்த பாதி பறவையாகவும் மாறியது. ஒன்றை ஒன்று இழுக்க ஆரம்பித்தன. அதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த நக்கீரருக்கு, தனது பூஜையில் கவனச்சிதறல் உண்டானது.
இன்று நாம் கவனச்சிதறல் இல்லாத கணங்களே இல்லை என்னும் இடத்தில இருக்கிறோம். ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும்போதே, நம் கண்கள் தொடுதிரையைப்பார்க்கின்றன.
அங்கு என்ன நடந்திருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? ஆம்!
உடனே ஒரு பூதம் ஓடோடி வந்து நக்கீரரைக்கைது செய்து இழுத்துச் சென்றது. "நான் சிவபூஜையில் கவனம் இல்லாமல் இருந்தவர்களைக் கைது செய்து, ஆயிரம் பேர் வரை சேர்த்து,ஒரே நேரத்தில் உண்ணலாம் என்று நினைத்திருந்தேன். நேற்று வரை 999 பேர் கிடைத்தனர். நீ தான் அந்த ஆயிரத்தில் ஒருவன். ஆயிரமாவது ஒருவன்!" என்றது பூதம்.
அந்த பூதம் குளிக்க சென்ற இடைவெளியில்,மற்ற கைதிகள் எல்லாரும் சேர்ந்து நக்கீரரைத்திட்ட ஆரம்பித்தனர்.
நக்கீரர், மற்றவர்களுக்கும் தனக்கும் வழி கிடைக்க, நம்பிக்கையோடு, நேர்மறை எண்ணத்தோடு பாடியதே திருமுருகாற்றுப்படை.
பாடியதோடு அந்த செயல் நிற்கவில்லை. அனைவரும் முருகப்பெருமானின் அருளால் விடுதலை பெற்றனர்.
இன்று நமக்கான மனவிடுதலைக்காக , நிம்மதிக்காக திருமுருகாற்றுப்படையை நாடலாம். அப்படி என்ன இருக்கிறது இந்த சிற்றிலக்கிய நூலில்? வாருங்கள். சேர்ந்தே அனுபவிப்போம்.
இந்த கதையில் அவர் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்தாரா என்பதை அவரவர் யோசனைக்கே விட்டுவிடுகிறேன். ஆனால், நேர்மறை எண்ணங்கள் இருந்தால், எல்லா இடமும் நல்ல இடம் தான். எல்லா நேரமும் இறைவனை நினைத்தால் விடுதலை கிடைக்கும் என்பதையே இந்த கதை சொல்கிறது.
முருகு என்றால் என்றும் இளமையான என்று பொருள். தலையில் நரை இல்லாத, இளமை அழகோடு என்றும் இருப்பவர் முருகப்பெருமான் அவருடைய ஆறு படைவீடுகளையும் பற்றி விரிவாகப் பேசுகிறது திருமுருகாற்றுப்படை.
முதல் தொடர் : 1-6 வரிகள்
உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொள
உ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (5)
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
எனக்கு இந்த செய்யுளின் தொடக்கம் மிகவும் பிடித்தது. உலகம் என்று தொடங்குவதால் மட்டுமல்ல. இந்த பாடல் தொடங்கும்போதே, உலகின் இருளை நீக்கும் சூரியனோடு தொடங்குகிறது.
உலகம் என்ற சொல் சங்க இலக்கியங்கள் முதல் கம்பராமாயணம் வரை, பலவற்றிலும் முதல் சொல்லாக, மங்கலச் சொல்லாகப்பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
உலகம் உவப்ப- உலகத்தில் உள்ள உயிர்கள் மகிழுமாறு. சூரியனின் பூரண ஒளியை பல மாதங்களுக்குத் தொடர்ச்சியாய் அனுபவிக்காத பல ஐரோப்பிய தேசங்கள் இருக்கின்றன. இவற்றில் எல்லாம் நிறைய பேர் மனசோர்விற்கு ஆளாகி, தற்கொலைக்கூட செய்து கொள்கிறார்கள். உலகின் முதல் ஆதாரம் சூரியன். அந்த ஒளி இல்லையேல் நாம் இல்லை. எனவே சூரியனைப்போற்றியபடி, அதன் வருகையால் மகிழும் உயிர்களைச்சொல்லி ஆரம்பிக்கிறது திருமுருகாற்றுப்படை.
ஏர்பு வலன் திரிதரு பலர் புகழ்
ஞாயிறு கடல் கண்டு ஆங்கு
ஏர்பு- எழுந்து,
வலன் திரிதரு- சுற்றி வந்து
பலர்- பல சமயத்தவரும்
புகழ்- போற்றும்
ஞாயிறு- சூரியன்
கடல் கண்டு ஆங்கு- கடலில் தோன்றுவதைக்கண்டு
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை:பகைவர்களை அழிக்கும் இடி போன்ற அடிகளைக்கொடுக்கக்கூடிய பெரிய கைகளை உடைய முருகப்பெருமான்
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்-
மறுவில் கற்பின்:
குற்றம் ஒன்றும் சொல்லமுடியாத உயரிய கற்புநெறியை உடைய தெய்வயானையின்
வாணுதல்- வாள் +நுதல்- ஒளியை உடைய நெற்றியை உடைய தெய்வயானை
கணவன்- அவளுடைய கணவனான முருகப்பெருமான்.
எது பக்தியில் கற்பு? தான் வழிபடும் கடவுளைத் தன் வாழ்நாள் வரையிலும் விடாது தொடர்வது என்று ஆறுமுக நாவலர் தனது உரையில் சுட்டுகிறார். அப்படி முருகப்பெருமானை விடாது தொடரும் தெய்வயானையை நமக்கு உதாரணமாகக்காட்டுகிறார் நக்கீரர்.
1 comment:
Super Vazgha valamudan congratulations arumai Arumai keep it up
Post a Comment