Saturday, August 23, 2025

கண்களும் தோள்களும் -திருவொற்றியூர் தேவாரம்

 எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னை கண்காள் காண்மின்களோ !

இந்த பாடல் வரி அப்பரின் திரு அங்க மாலையில் வரும் வரி.

திருமுறை முழுவதிலும் எண்தோள் உடையவன் என்று அங்கங்கே சிவபெருமானைக்குறிப்பிட்டிருப்பார்கள். 

இந்த வரியைச் சிந்தித்துக்கொண்டே  இந்த பதிவில் என்னோடு உடன் வாருங்கள். 

சமீபத்தில், அலுவலக வேலையாக பாங்காக்(Bangkok) நகருக்குப்பயணமானேன். 

நம்ம ஊரின், விமான நிலையங்களில், கோயில்கள் சிற்பங்கள் என்று நம் கலை அம்சங்கள் சுட்டிக்காட்டப்படுவதைப்போல பாங்காக் விமான நிலையத்தின் குடிநுழைவு வாயிலுக்கு அருகில் இந்த சிற்பம் இருந்தது. 

தேவர்களும் அசுரர்களும் மேருமலையை மத்தாக்கி, வாசுகியைக்கயிறாக்கி, பாற்கடலைக்கடைந்துக்கொண்டிருந்தார்கள். அவர்களை வேடிக்கைப்பார்த்தப்படி,மிக வேகமாக மனிதர்கள்,பயணம் என்ற பெயரில்  உலகின் ஒரு மூலையிலிருந்து வேறொரு ஊருக்குச் சென்றுக்கொண்டிருந்தனர். 

இந்த சிற்பத்தின் மத்தியில் இருப்பவர் மஹாவிஷ்ணு. என் மனம் உய்ய வைத்த பிரானை நோக்கி நகர்ந்தது. அவர் அங்கே காட்சிப்படுத்தப்படவில்லை. ஆலகால விஷம் வந்தபோது அவர் தான் காப்பாற்றினார். 

அலுவலக நண்பர்கள் கிழக்காசியப் பகுதிகளில் சுற்றிக்கொண்டிருந்தால்,  இந்தியாவிற்கும், தாய்லாந்து போன்ற தேசங்களுக்கும் இருக்கும் தொடர்பைப்பற்றி பேசுவார்கள்.

புலியூர் கேசிகன் என்ற ஒரு எழுத்தாளர் கிட்டத்தட்ட நூறு நூல்கள், தனித்தமிழ் ஆராய்ச்சிக்கென வெளியிட்டுள்ளார். தீராத தமிழ்க்காதல் கொண்டவர். 

காளமேக புலவரின் பாடல்களைத்திரட்டி ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். 


சிவபெருமானுக்கு மூன்று கண்கள் என்று எல்லாரும் சொன்னாலும், அவருக்கு எஞ்சி இருப்பது அரைக்கண் என்கிறார் காளமேகப்புலவர்.

முதலில் இருந்த மூன்று கண்களில் பாதியை அம்மைக்குக்கொடுத்துவிட்டார்.

மீதமிருக்கும்  ஒன்றரைக்கண்ணில், ஒரு கண்ணைக் கண்ணப்பர் நோண்டி எடுத்துவிட்டார். மீதம் இருப்பது அரைக்கண்ணே என்கிறார் காளமேகப்புலவர். 

இதைப்போல பாடல்கள் தேவாரத்தில் நிச்சயம் இருக்கும் அல்லவா ?

தேடிக்கண்டுகொண்டேன்!கீழ்க்காணும் திருவொற்றியூர் பதிகத்தை!

இன்றரைக் கண்ணுடை யாரெங்கு 
  மில்லை இமய மென்னுங்
குன்றரைக் கண்ணன் குலமகட் 
  பாவைக்குக் கூறிட்டநாள்
அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை 
  யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி 
  யூருறை உத்தமனே (04-086:அப்பர் தேவாரம்)

காளமேகப்புலவர் சொன்னதை அவருக்குப்பல நூற்றாண்டுகள் முன்னரே அப்பர் தன்னுடையப்பதிகத்தில் சொல்லிவிட்டார். 

இன்றரைக் கண்ணுடை யாரெங்கு 
  மில்லை:இன்று அரைக்கண் உடையவர் என்று ஒருவரும் உலகில் இல்லை. 

இமய மென்னுங்- இமயம் என்னும்

குன்றரைக் கண்ணன் குலமகட் 
  பாவைக்குக் கூறிட்டநாள் அன்று  :

இந்த வரியை இரண்டாகப்பிரிக்க வேண்டும்.தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தில் கண்ட பொழிப்புரை இந்த வரியைப்பிரிக்க வழிகாட்டியது. #tvu

 குன்றர் ஐக்கு: இமயம் என்னும் குன்றத்தின் ஐ-தலைவன்/அரசன்.இமவான் 

 அண் நல் குலமகள் பாவைக்குகூறிட்ட  ஞான்று :
இமவான் பெற்றெடுத்த மகள் அல்ல பார்வதி. இமவானுக்குக்கிடைத்தவள். 

இமவானுக்குப்பக்கத்தில், அண்மையில் கிடைத்த நல் குலமகளான பாவை- பார்வதிக்கு தன் உடலைக்கூறிட்ட பொழுது - பிரித்துக்கொடுத்தபோது 

அரைக் கண்ணுங் கொடுத்துமை 
  யாளையும் பாகம்வைத்த: அரைக்கண்ணும் கொடுத்து, உமையாளைத் தன் உடலின் பாகத்தில் சரிபாதியாகச் சேர்த்து  வைத்த 

ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி 
  யூருறை உத்தமனே :

ஒன்றரைக் கண்ணன் கண்டீர், ஒற்றியூர் உறை உத்தமனே: ஒன்றரை கண்ணுடையவன், ஒற்றியூரில் கோயில் கொண்டுள்ள உத்தமனான சிவபெருமான்.

இப்போது கண்களோடு சேர்த்து, தோள்களை ஆராய்வோமா?

இன்று வரை வழக்கில் உள்ள சொற்றொடர், தோளில் பாரத்தைச்  சுமப்பது.

தோள்வலிமையைப்போற்றி, கம்பன் முதல் பலக்கவிஞர்களும் பாடியிருக்கிறார்கள்.

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா

உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா

களிபடைத்த மொழியினாய் வா வா வா

கடுமை கொண்ட தோளினாய் வா வா வா

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா

எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா

ஏறுபோல் நடையினாய் வா வா வா.

 சமீபத்திய நூற்றாண்டில் மஹாகவி பாரதியும், திடமான தோள் கொண்ட இளைஞர்களை வா வா வா என்று அழைக்கிறார்.



கீழ்காணும் படம் நான் தங்கியிருந்த விடுதியின் வாசலில் எடுத்தது. மஞ்சள் நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இவர் சிவபெருமான் எனத்தெளிவு கொண்டேன். கையில் சூலமும், பக்கத்தில் இருந்த ரிஷபமும் அவரது கோலத்தை உணர்த்தின. 

எட்டு தோள்கள் இருக்கவேண்டுமென்றால், நான்கு முகங்கள் இருக்க வேண்டும் என்ற கணக்கில் இந்த சிலை இருக்கிறது. 

திருமுறையில் நான்முகன் என்று பிரம்மாவைத்தான் குறிப்பிடுகிறார்கள்.
சிவபெருமானை எண் தோள் உடையவன் என்று அப்பர், மாணிக்கவாசகர் என்று பலரும் சொல்கிறார்கள்.
அடுத்து பார்க்கப்போகும் திருவாசகம் குழைத்தப்பத்தில் உள்ள பாடல். 

பலரும் அறிந்த பாடல். அன்றே எனது ஆவியும், உடலும், உடைமை எல்லாவற்றையும் குன்றைப்போல வலிமையான சிவபெருமானே, நீ என்னை ஆட்கொண்டபோதே எடுத்துக்கொண்டாய். இன்று  ஓர் இடையூறு (துன்பம்) எனக்கு உண்டா?  எட்டு தோள்களையும், மூன்று கண்களையும் உடைய எம்மானே, சிவபெருமானே. நான் நல்லது செய்தாலும், அல்லது செய்தாலும், நான் அதற்குப்பொறுப்பல்ல. 

ன்றே என்றன் ஆவியும்

    உடலும் உடைமை எல்லாமும்

குன்றே அனையாய் என்னைஆட்

    கொண்ட போதே கொண்டிலையோ

இன்றோர் இடையூ றெனக்குண்டோ

    எண்தோள் முக்கண் எம்மானே

நன்றே செய்வாய் பிழைசெய்வாய்

    நானோ இதற்கு நாயகமே 



பாங்காக் நகரில் இருந்து திரும்பும்போது, சிங்கப்பூரின் சாங்கியில் உள்ள இந்த பேரூற்று,எனக்கு சிவபெருமானின் தலையில் உள்ள கங்கை பெருக்கெடுத்து ஓடுவதைப்போல தோன்றியது.
உங்களுக்கும் தானே? அடுத்த பதிவில் சந்திப்போம். 

2 comments:

Anonymous said...

வாழ்க வளமுடன் அருமை அருமை வித்யா நன்றாக உள்ளது படங்கள் அருமை மனசும் கொள்ளை போனது உன்னுடைய தமிழ் பாராட்டுக்கள்

Veludharan said...

அருமை மா..