Sunday, July 24, 2016

பாரில் அறங்கள் வளரும், அம்மா!

மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல
     மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்
     பாரில் அறங்கள் வளரும், அம்மா!

இது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வரிகள்.

பரவலாக எல்லாருக்கும் முதல் இரண்டு வரிகள் தெரிந்திருக்கும்.
ஒரு குடும்பம் தர்ம வழியில், அறம் சார்ந்த வழியில் செல்ல வேண்டுமானால், அது அந்த வீட்டின் பெண் நினைத்தால் மட்டுமே நடக்கும்.
அதனால் தான் கவிமணி, பெண்ணின் கைநயத்தால் வளரும் அறங்கள் என்றார்.

இந்த பதிவில் நாம் அறம் வளர்த்த நாயகி உடன் உறை ஐயாறப்பர் பற்றிய தேவாரத்தைப்பார்க்க  போகிறோம்.


அப்பர் தன்னுடைய முதிய பருவத்தில் திருக்கைலாய காட்சிக்கு ஏங்குகிறார். கைலை யாத்திரை மேற்கொள்கிறார். இறைவன் அவரை திருவையாறு செல்லுமாறும் அங்கு திருக்கைலாயக்காட்சி காணலாம் என்றும் அனுப்பி வைக்கிறார்.
அரிசிலாறு , வெண்ணாறு , வெட்டாறு , குடமுருட்டியாறு  மற்றும்  காவேரியாறு ஒன்று கூடும் ஊர், திருவையாறு.

ஐந்து ஆறுகள் சேர்ந்தது திரு ஐ ஆறு= திருவையாறு .

இந்த ஊரில் கால் வைத்ததும் எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாய் அப்பரின் கண்ணுக்குத்தெரிகின்றன. அம்மை அப்பனாய் இறைவன் இருக்கிறார் என்பதற்கும், இல்லறம் என்பதை நம் சைவ பெரியவர்கள் எப்படி மதித்தார்கள் என்பதற்கும், இதுவே நல்ல எடுத்துக்காட்டு.



இந்த பதிகத்தில் ஒவ்வொரு பத்தியின் இறுதியிலும் கண்டறியாதன கண்டேன் என்று வரும்.
அப்பர் சிவபெருமானை மட்டுமே அது வரை பெரிதாய் வழிபட்டவர். அவருக்கு இறைவன், அம்மையும் அப்பனும் வேறல்ல என்று அவர் இது வரை காணாத உண்மையை சொல்கிறார்.
தண்மதிக் கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி
உண்மெலி சிந்தையானாகி உணரா உருகா வருவேன்
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

தண்மதி= குளிர்ந்த நிலவு.

அன்றில் பறவை தன் இணை இல்லாமல் உயிர் வாழாது. அந்த அன்றில் பறவை, தன் இணையோடு தன் எதிர் வந்ததாக சொல்கிறார் அப்பர்.

தண்மதிக் கண்ணியினானைத்

குளிர்ந்த சந்திரனது தனது சடையில் அணிந்து கொண்ட சிவபிரானை

தையல் நல்லாளொடும் பாடி

பெண்களில் சிறந்தவளாகிய உமை அம்மையுடன் இணைத்துப் பாடியபடியே
(பெண்களில் நல்லவள் அதனால் தானே அம்மையின் பெயர் அறம் வளர்த்த நாயகி.)


உண்மெலி சிந்தையானாகி உணரா உருகா வருவேன்
குழைந்த உள்ளத்துடன் 
சிவபிரானது திருவடிச் சிறப்பினை உணர்ந்து உருகி வந்த நான் திருவையாறு தலத்தினை அடைந்தேன்

அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது

தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் திருவையாற்றை அடையும்போது 
வண்ணப் பகன்றிலொடாடி வைகி வருவன கண்டேன்

அழகிய வண்ணமுடைய அன்றில் பறவை தனது துணையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.

தஞ்சாவூரிலிருந்து  12 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள  தலம். வாய்ப்பு இருந்தால் நிச்சயம் சென்று வாருங்கள். அருகில் தியாகராஜரின் சமாதியையும் காணலாம். இயற்கை அழகு உடைய ஊர்.

நமக்கும்  திருக்கைலாய  காட்சி  திருவருளால் கிடைக்கட்டும்  !

Tuesday, July 19, 2016

இயற்கை எழில் கொஞ்சும் -இலம்பையங்கோட்டூர் சம்பந்தர் தேவாரம்!!!

சம்பந்தரின் தேவார பதிகங்களில், இயற்கை அழகு பற்றிய வர்ணனை நிச்சயம் இருக்கும்.   

ஏன் அவர் இயற்கை அழகை ஒவ்வொரு தளத்திலும் வர்ணித்தார் என்று யோசிக்கிறேன்.
அப்பரையும், சுந்தரரையும் விட, சம்பந்தரின் தேவாரத்தில் இந்த வர்ணனைகள் அதிகம் இருக்கின்றன.

சம்பந்தர் அவதரித்த காலத்தில் இப்போது இருப்பதைப்போல, தொழிற்சாலைகள் இருந்திருக்காது. அவர், இயற்கையின் பூரண அழகை போகும் ஒவ்வொரு ஊரிலும் பார்த்திருப்பார்.அவர் இயற்கையின் ரசிகர் .


மற்றொரு காரணமாக நான் நினைப்பது, பல நூற்றாண்டுகள் கடந்து வாழும் நம் போன்றவர்களுக்கு அந்த ஊர் அப்போது எப்படி இருந்தது என்பதை சொல்லும் டைம் கேப்ஸுல் (Time Capsule)ஆகவும், பதிகங்களைப்பயன்படுத்தி இருக்கிறார்.

அப்படி ஒரு பதிகம் இதோ. 
தலம்: இலம்பையங்கோட்டூர்
இந்த தலம்  காஞ்சீபுரம் வட்டத்தில் இருக்கிறது. பிரளய காலத்தில் சிவனார் அமைதியாய் தவமிருக்க தேர்வு செய்த இடம் என்றும் தலக்குறிப்பு கூறுகிறது.

இயற்கை அழகு மிகுந்த இது போன்ற கிராமிய மணம் கமழும் கோயில்களுக்கு போய் வந்தால், இயல்பாகவே நம் மன இறுக்கம் தளர்ந்து விடும்.

உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன், ஒற்றியூர் உறையும்
                                         அண்ணாமலை அண்ணல்,
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக, வெள்ள நீர் விரிசடைத்
                                                             தாங்கிய விமலன்-
குளம்பு உறக் கலை துள, மலைகளும் சிலம்ப, கொழுங்கொடி
                          எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள,
இளம்பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
                        பேணி, என் எழில் கொள்வது இயல்பே?





(Temple Pics Courtesy: http://sivayatra.blogspot.sg/2014/12/blog-post.html)

இந்த பதிகத்தின் பொருளை இப்போது பார்ப்போம்: 

இந்தியாவில்  உருவான மான் இனம்  கலை மான். நிறைய  இலக்கியங்களில்  கலைமானைப்பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.



(Pic Courtesy: http://araathuhistory.blogspot.com/2011/12/blog-post.html)

குளம்பு உறக் கலை துள, மலைகளும் சிலம்ப

கலை மான்கள் தங்கள் கால் குளம்புகள் நிலத்தில் பதியுமாறு துள்ள, அங்கே எழும்பும் ஓசையை மலைகள் எதிரொலிக்கின்றன.

இது கிட்ட தட்ட 1300 ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பதிகம். அப்போது இந்த கோயிலின் அருகில் குன்றுகள் இருந்திருக்க கூடும்.

கொழுங்கொடி
                          எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள


கூவிளம்= வில்வம் 
வளமையான  கொடிகள் , வில்வ  மரத்தை சுற்றிப்படர்ந்திருக்கின்றன.

Pic courtesy: http://ayurvedaherb.blogspot.sg/2016_01_01_archive.html
இளம்பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
                        பேணி
இளம்பிறை தவழும் வான் அளவிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு 

என் எழில் கொள்வது இயல்பே?
ஒரு பெண்ணாக தன்னை பாவித்து பாடி இருக்கிறார் சம்பந்தர்.

உன்னை தரிசிக்க வந்த என் அழகைக்கொள்வது நீதியோ என்கிறார்.

உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன்,
ஒற்றியூர் உறையும்
                                         அண்ணாமலை அண்ணல்


Courtesy:http://www.tantra-kundalini.com/sahasrara.htm
இறைவனை உள்ளத்தில் வைத்து தியானிப்பவர்களுக்கு, முடிவில் சஹஸ்ரஹார சக்ரம் எனப்படும் (ஆயிரம் இதழ் கொண்ட தாமரை) அவர்களின் உச்சியில் பூக்கும். இந்த நிலை உள்ளவர்கள் தான் சமாதி நிலை அடைந்தவர்கள். சமீப நூற்றாண்டுகளில், ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் முதலிய பெரியவர்கள் அடைந்த நிலை இது.

இறைவனைதத்யானிப்பவர்களுக்கு அவர்கள் உச்சியில் இருப்பவர் , ஒற்றியூர், காஞ்சிபுரம் மற்றும் அண்ணாமலையின் இறைவனாகிய சிவன்.

 எனது உரை தனது உரை ஆக விளம்புவான்
தெய்வத்தமிழ் என்பது இது தான். என் வாயில் வருகின்றன தேவாரம் எனதல்ல, அது இறைவனின் உரை என்கிறார் சம்பந்தர். அவர் வாயில் வருவன, இறைவனின் மொழிகளே.

வெள்ள நீர் விரிசடைத்
                                                             தாங்கிய விமலன்

கங்கையின் வெள்ளைத்தைதன் விரி சடையில் தாங்கிய தூயவர்.

இறைவனின் பண்புகளையும், இலம்பையங்கோட்டூரின் அழகையும் சொல்லி, இவர் என் அழகைக்கொள்வது இயல்போ? என வியந்து பாடுகிறார்.