Sunday, July 24, 2016

பாரில் அறங்கள் வளரும், அம்மா!

மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல
     மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்
     பாரில் அறங்கள் வளரும், அம்மா!

இது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வரிகள்.

பரவலாக எல்லாருக்கும் முதல் இரண்டு வரிகள் தெரிந்திருக்கும்.
ஒரு குடும்பம் தர்ம வழியில், அறம் சார்ந்த வழியில் செல்ல வேண்டுமானால், அது அந்த வீட்டின் பெண் நினைத்தால் மட்டுமே நடக்கும்.
அதனால் தான் கவிமணி, பெண்ணின் கைநயத்தால் வளரும் அறங்கள் என்றார்.

இந்த பதிவில் நாம் அறம் வளர்த்த நாயகி உடன் உறை ஐயாறப்பர் பற்றிய தேவாரத்தைப்பார்க்க  போகிறோம்.


அப்பர் தன்னுடைய முதிய பருவத்தில் திருக்கைலாய காட்சிக்கு ஏங்குகிறார். கைலை யாத்திரை மேற்கொள்கிறார். இறைவன் அவரை திருவையாறு செல்லுமாறும் அங்கு திருக்கைலாயக்காட்சி காணலாம் என்றும் அனுப்பி வைக்கிறார்.
அரிசிலாறு , வெண்ணாறு , வெட்டாறு , குடமுருட்டியாறு  மற்றும்  காவேரியாறு ஒன்று கூடும் ஊர், திருவையாறு.

ஐந்து ஆறுகள் சேர்ந்தது திரு ஐ ஆறு= திருவையாறு .

இந்த ஊரில் கால் வைத்ததும் எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாய் அப்பரின் கண்ணுக்குத்தெரிகின்றன. அம்மை அப்பனாய் இறைவன் இருக்கிறார் என்பதற்கும், இல்லறம் என்பதை நம் சைவ பெரியவர்கள் எப்படி மதித்தார்கள் என்பதற்கும், இதுவே நல்ல எடுத்துக்காட்டு.



இந்த பதிகத்தில் ஒவ்வொரு பத்தியின் இறுதியிலும் கண்டறியாதன கண்டேன் என்று வரும்.
அப்பர் சிவபெருமானை மட்டுமே அது வரை பெரிதாய் வழிபட்டவர். அவருக்கு இறைவன், அம்மையும் அப்பனும் வேறல்ல என்று அவர் இது வரை காணாத உண்மையை சொல்கிறார்.
தண்மதிக் கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி
உண்மெலி சிந்தையானாகி உணரா உருகா வருவேன்
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

தண்மதி= குளிர்ந்த நிலவு.

அன்றில் பறவை தன் இணை இல்லாமல் உயிர் வாழாது. அந்த அன்றில் பறவை, தன் இணையோடு தன் எதிர் வந்ததாக சொல்கிறார் அப்பர்.

தண்மதிக் கண்ணியினானைத்

குளிர்ந்த சந்திரனது தனது சடையில் அணிந்து கொண்ட சிவபிரானை

தையல் நல்லாளொடும் பாடி

பெண்களில் சிறந்தவளாகிய உமை அம்மையுடன் இணைத்துப் பாடியபடியே
(பெண்களில் நல்லவள் அதனால் தானே அம்மையின் பெயர் அறம் வளர்த்த நாயகி.)


உண்மெலி சிந்தையானாகி உணரா உருகா வருவேன்
குழைந்த உள்ளத்துடன் 
சிவபிரானது திருவடிச் சிறப்பினை உணர்ந்து உருகி வந்த நான் திருவையாறு தலத்தினை அடைந்தேன்

அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது

தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் திருவையாற்றை அடையும்போது 
வண்ணப் பகன்றிலொடாடி வைகி வருவன கண்டேன்

அழகிய வண்ணமுடைய அன்றில் பறவை தனது துணையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.

தஞ்சாவூரிலிருந்து  12 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள  தலம். வாய்ப்பு இருந்தால் நிச்சயம் சென்று வாருங்கள். அருகில் தியாகராஜரின் சமாதியையும் காணலாம். இயற்கை அழகு உடைய ஊர்.

நமக்கும்  திருக்கைலாய  காட்சி  திருவருளால் கிடைக்கட்டும்  !

No comments: