இன்றைய சூழலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எந்த மனிதனும் சொல்வது இல்லை.
முன்பு தீபாவளிக்கு வாங்கும் ஒற்றை சேலையில் இருந்த சந்தோஷம் இன்று மாதம் இரண்டு சேலையாவது வாங்குவோருக்கு நிச்சயம் இல்லை.
துய்ப்பதே இன்பம் என்று நினைத்தோம். ஆனால் நிறைவு என்பது வாழ்க்கையில் இல்லாமல் போய் விட்டது.
மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்பதை எப்படி சொல்வீர்கள்?
மட்டற்ற மகிழ்ச்சி என்பதற்கு வைரமுத்துவின் மடை திறந்து தாவும் நதி அலை நான் பாடல் தான் ஞாபகம் வருகிறது.
ஆனால் இந்த பாடல் சொல்வதும், அந்த நிமிட சந்தோஷம் தான் .
சுந்தர மூர்த்தி நாயனார் சிதம்பரம் கோயிலுக்கு சென்ற போது, இறைவனின் நடனத்தை எப்படிக்கண்டார்? அவருக்கு ஆயிரம் கண்கள் தேவைப்பட்டதா? மனம் எத்தகைய மகிழ்ச்சியை அனுபவித்தது என்பதை சேக்கிழார் பெருமான் சொல்லும் பெரிய புராணப்பாடல் இதோ.
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும்
ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும்
ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
மனிதனுக்கு புலன் வழி அறிவுகள் ஐந்து.அவை கண், மூக்கு, செவி, வாய் மற்றும் மெய் வாயிலாய் இயங்குவன.
காதுகளும், செவிகளும், மூக்கும், மெய்யும், கண்களாக செயல் புரிந்தால் எப்படி இருக்கும்? அதை தான் ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள என்கிறார் சேக்கிழார்.
மனது ஒரு நிலைப்பட்டிருப்பதால், எல்லா புலன்களும் கண்களாக
செயல்பட்டு இறை அனுபவம் சுந்தரருக்கு கிட்டியது.
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆக
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கும் அந்தக்கரணங்கள் என்று சொல்லப்படுகின்றன. இதில் சித்தம் மட்டுமே செயல்பாட்டில் இருக்க, மனம், புத்தி மற்றும் அகங்காரம் எந்த செயலும் இல்லாமல் அடங்கி இருக்கின்றன. சித்தம் சிவனை மட்டுமே காண்கிறது.
குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
ரஜோ குணம், தமோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களில், சத்துவ குணமே மேலோங்கி இருக்க.
இந்துவாழ் சடையான்
ஆடும்
ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
பாயசத்தில் உள்ள ஏலம் மூக்கு வழி நுகர் புலனுக்கு இன்பம் தருகிறது.
ஐந்து புலன்களும் இன்பம் அனுபவிக்கிற ஒரு இன்பம் உலகில் உண்டு. அதுவே ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தருகின்ற இன்பம். ஆனால் இது சிற்றின்பம், உலகில் உள்ள சில பொழுதுகளில் மட்டும் தீரும் இன்பம்,
அனால் இறைவனை அனுபவிக்கிற இன்பம் என்பது, இன்பத்தில் நிலையானதாக இருக்கும். அதில் நாம் கரையுமாறு இருக்கும் என்றார்.
கண்ணில்லா மனிதர் யானையைபற்றி விளக்குவதாக தான் இருக்கிறது. நான் எழுதும் இவ்வரிகள்.
பேரின்பத்தை அனுபவிக்காத ஒருவர் எப்படி இதை விளக்க முடியும்?
திளைத்து என்ற சொல் மகிழ்ச்சியில் மூழ்கி, இன்னும் இதிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதை சுட்டுகிறது.
அதற்கு அடுத்த அடி இன்னும் சுகம்.
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
நாம் உலகில் அனுபவிக்கும் எந்த மகிழ்ச்சியும் அடுத்த நிமிஷமோ,நாளோ, மாதமோ மாற கூடியது. மாற்றம் இல்லாத, மகிழ்ச்சியில் இருந்த சுந்தரர், அந்த மகிழ்ச்சியில் தானும் இறைவனின் திருவடித்தாமரையில் மலர்ந்தார்.
5 comments:
அருமையான பதிவு. நன்றி
அந்த இன்பத்தை அனுபவித்தவர்க்கு மட்டுமே இந்த பாடலின் முழு அர்த்தம் புரியும்
Experiment this song in your prayers, to experience the Divine cosmic dance.
ஓம் நமசிவாய
மிகவும் அருமை யான மேன்மை யான விளக்கம் . தொடர்க தங்கள் தொண்டு. வளர்க.வாழ்க வளமுடன். ஓம் சிவாய நம
Wonder ful
Post a Comment