Tuesday, March 06, 2018

திருவெறும்பூர் அப்பர் தேவாரம்

சமீபத்தில் திரு.இந்திரா பார்த்தசாரதி அவர்களின், " மரத்தில் மறைந்தது பூச்சி" என்ற சிறுகதையை வாசித்தேன். கதை முற்றிலும் நகைச்சுவையாக கரப்பான் பூச்சிக்கு பயப்படும் ஒரு பெரியவரை பற்றியதாக இருந்தது. 

அந்த பெரியவர், உலகில் மனிதன் தோன்றும் நாட்களுக்கு முன்னரே தோன்றிவிட்ட கரப்பான் பூச்சியை வைத்து ஏன் ஒரு தலப்பெயர் கூட இல்லை என்று யோசிப்பார். 


எறும்புக்கு கூட திருவெறும்பூர் என்ற தலம் இருக்கிறதே!
ஆமாம். ஏன் கரப்பானை விட்டு விட்டார்கள்? எறும்புக்கு உள்ள சுறுசுறுப்பும், கூட்டமாக நகரும் ஒழுங்கும் மற்ற பூச்சிகளுக்கு நிச்சயம் இயல்பு இல்லை. 


இந்த கதையை படிக்கும் போது எனக்கு திருவெறும்பூர் நினைவுக்கு வந்தது. 
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை போய் இருக்கிறேன். 


திருச்சியில் ,பாரத வெகுமின் நிறுவனத்திற்கு மிக அருகில் இருக்கும் தலம் திருவெறும்பூர். அறுவதடி உயர குன்றுக்கோயில். 
ஆதித்த சோழர் (871-907AD),  திருபுறம்புயம் போரில் சோழர்களுக்கு கிடைத்த வெற்றிக்கு காணிக்கையாக கட்டிய பல கோயில்களில் இதுவும் ஒன்று என்று விக்கி (Wiki) அண்ணன் சொன்னார். 




காவிரி தென்கரை கோயில்களில் ஏழாவது பாடல் பெற்ற தலம். 
கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டாகத் திட்டென்னை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே


நம் உடல் மெல்ல மெல்ல தின்னப்படுகிறது. இளமையில் உள்ள உடல், நிச்சயம் முதுமையில் இல்லை. தோல் சுருக்கம் பெற்று, உடலின் பாகங்கள் சரிவர இயங்காமல் போய் விடுகிறது. இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பல வருடங்களில் நடக்கும் மாற்றங்கள். 

ஐம்பொறிகளும் எறும்புகளை போல மெல்ல ஊர்ந்து, நம் உடலை தின்றுகொண்டிருக்கின்றன. 

கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள

கறும்பி - சிறிது சிறிதாகத் தின்று .
மெய்,கண், மூக்கு, வாய், செவி- ஐம்பொறிகள். நாள்பட்ட பயன்பாட்டில் என்ன ஆகும் என்பது நமக்கு தெரியும்.

திறம்புதல்-மாறுபடுதல்  (Not Aligned). மற்றும் பல உள- அந்தக்கரணங்கள்- மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும் வெளிப்பார்வைக்கு தெரியாத, நாம் எது மெய்ப்பொருள் என்பதை அறிய நமக்கு உதவும் பொருட்கள். 

எல்லா நேரங்களிலும் நம் அந்தக்கரணங்கள் ஒன்றுபட்டா இருக்கின்றன? இன்றைய உலகில் இருக்கும் மனசிதறல்களில், திறம்புதலே அதிகம். 

குறும்பி யூர்வதோர் கூட்டாகத் திட்டென்னை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே

குறும்பி- அழுக்கு 
கூட்டகத்து - உடலிடத்துள் . இட்டு - அடைத்து .

இறைவனாகிய திருவெறும்பியூரர், இயற்கையாக செய்த காயம் இது. இதில் எறும்புகள் போல ஐம்பொறிகளும் ஊறிக்கொண்டிருக்கின்றன. அந்தக்கரணங்கள், திறம்பி திரிகின்றன.உடலும் அழுக்கை உற்பத்திசெய்துகொண்டே இருக்கிறது. இந்த கூட்டில் இறைவன் என்னை அடைத்திருக்கிறார். 

அப்பர் சொல்வது இறைவனின் திருவடியை மட்டுமே வேண்டும் மனநிலை. 

உடலை மிக கொண்டாடாமல், காயத்தை வெறும் உயிரை அடைத்த கூடாக எண்ணி, இறைவா எனக்கு பிறவா நிலை தா என வேண்டும் மனநிலை. இதை போன்ற பாடல்களை தாயுமானவரின் பாடல் திரட்டிலும் பார்க்கலாம். 


(Photo Credit: TheHindu, Wiki)

Sunday, November 19, 2017

கார் எட்டு-பதினோராம் திருமுறை

திருமுறை எங்கும் பலவிதமான செய்யுள்கள் இருக்கின்றன.

 நக்கீரர் அருளிய கார் எட்டு என்னும் இந்த இலக்கியம், யாரை நோக்கி பாடப்பட்டு இருக்கிறது என்ற நோக்கில், தனித்து நிற்கிறது.


நம்மில் யாருக்கு தான் மழைக்காலம் பிடிக்காது? "வான் மழை வழாது பெய்க" என்ற ஒரு வாழ்த்து பாடலும் எல்லா கோயில்களிலும் தீப ஆராதனைக்கு முன்னர் பாடுகின்றனர்.


காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்
பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே - ஏந்தொளிசேர்
அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்
கண்டம்போல் மீதிருண்ட கார்.







இந்த பாடல் மேகத்தை முதன்மை பாடுபொருளாகக்  கொண்டு, இறைவனை - மேகத்துக்கு உவமையாக்கி பாடப்பட்டு இருக்கிறது. அந்நாளில் புது முயற்சியாக இருந்திருக்க வேண்டும். இதை எதிர் நிலை உவமை அணி என்கிறார்கள்.



ஏந்தொளிசேர் அண்டம்போல்-அண்டம் என்னும் சொல் பிரபஞ்சத்தைகுறிக்கும். எண்ணிலடங்காத நட்சத்திரங்களையும், கோள்களையும், ஒன்றுமில்லாத வேற்று வெளியையும் உள்ளடக்கியது பிரபஞ்சம்.பல ஒளிகொண்ட பொருட்களால் ஒளியை தன் மேல் கொண்டிருக்கிறது. அந்த அண்டத்தை போல இருக்கிறது மேகம் .

மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்
கண்டம்போல்-
ஆதியான் = சிவபெருமான். சிவபெருமானை எப்போதும் அழல் வண்ணத்தினார் என்று தான் பல பாடல்களில் சொல்லி இருப்பார்கள். உலகத்தைகாப்பாற்ற விஷத்தை உண்டு அதைதன் மணிகண்டத்தில் அடக்கியதால், கண்டம் மட்டுமே கருத்தவர்.அந்த கண்டத்தைபோல கருத்திருக்கிறது மேகம். கருத்த மேகங்கள் தான் மழைக்கு ஆரம்பம்.


காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்-மழை இல்லையென்றால் இந்த மண்ணில் பூக்கள் ஏது?
காந்தள் மலர்களும், பொன்னைபோல பூக்களையும் சொரியும் கொன்றையும் 

பூந்தளவம்-தவளம் என்னும் சொல் வடமொழியில், வெண்மை என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. 

இங்கே பூந்தவளம் என்னும் சொல், பூக்களால் நிறைந்த முல்லை நிலத்தைகுறிக்கிறது .

ஆரப் புகுந்தின்றே-ஆரத்தழுவினான் என்று நிறைய படித்திருப்போம். ஆரப்புகுந்தது- முல்லை நிலம் மகிழுமாறு, அதில் புகுந்தது இருண்ட மேகம்.

Wednesday, May 24, 2017

தன்னடக்கத்தின் பெருமையை நினைவுபடுத்தும் யாழ்மூரி பண்!


பண்டைய தமிழ் இசைக்கருவிகளில் யாழ் முதன்மையானது. யாழ் என்ற வாத்தியம் இந்தியா,இலங்கை , சீனா என்று பல பழமையான தேசங்களிலும் இருந்திருக்கிறது.
இலங்கையின் முக்கிய ஊர்களில் ஒன்று யாழ்ப்பாணம்.யாழ் வாசிக்கும் பாணர்கள் அதிகம் இருக்கும் பகுதியாக இருந்திருக்க வேண்டும்.

இன்று நாம் பார்க்கும் பல தந்தி வாத்திய கருவிகளின் தாயாக யாழ் இருந்திருக்கிறது.
எதைத்தேடினாலும் விக்கிபீடியா போல திருக்குறள் ஒரு விடை தருவது அதிசயம் .

யாழ் திருவள்ளுவர் காலத்துக்கு முன்பே பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும். ஏதாவது திருக்குறளில், யாழ் என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறாரா என்று தேடியபோது, கிடைத்தது இன்ப அதிர்ச்சி.
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.

இந்தப்பதிவில் நாம் பார்ப்பது யாழ்மூரிப்பண்!சம்பந்தர் அருளியது !

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர் 
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர் 
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை 
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை 
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

தேவாரத்தின் பங்கு இசைத்தமிழுக்கு அதிகம்.
தமிழ் ஆசிரியர்களுக்கு பெரிய வலி- எப்படி , , மூன்றையும் ஒழுங்காக சொல்லித்தருவது என்பது தான்.
எழில், பொழில், குயில், பயில்- இந்த மாதிரி பதிகங்கள் நிச்சயம் சரியான உச்சரிப்பை சொல்லித்தர உதவும்.


ஒரு பதிகத்தைப்படிக்கும் போதே, அதன் சூழலையும், என்ன என்ன மரங்கள் இருந்தன என்பதான குறிப்பில் சொல்லும் சம்பந்தரின் பதிகங்கள்.
திருத்தருமபுரம்நெய்தல் நிலப்பகுதி. கடல் சார்ந்த பகுதி. புன்னை மரங்கள் அதிகம் இருக்கும் பகுதி.


தருமபுரம் காரைக்காலுக்குபக்கத்தில் இருக்கிறது
உற்சவ மூர்த்தியின் பெயர் யாழ்மூரி நாதர்.

மதுர மின்னம்மைஅம்மையின் பெயர்.  எல்லாப்பதிகங்களிலும் "வாக்கினிலே இனிமை வேண்டும்" என்று பாரதியார் சொல்வதைப்போல இனிமை மொழியையே பேசும் அம்மை.

இந்தப்பதிகத்தைப்பற்றிய கதை, எத்தனை தன்னடக்கத்தோடு, பக்தர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு நல்ல உதாரணம்.
திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் 63  நாயன்மார்களில் ஒருவர். இவர் எங்கு சம்பந்தர் சென்றாலும், யாழில் அவர் பாடும் பதிகத்தைதன் யாழில் மீட்டுவார். தருமபுரத்தில் யாழ்ப்பாணரின் மனைவி வழி உறவினர் அதிகம் இருந்தனர். அவர்கள் சம்பந்தரின் பாடல் பெருமை பெறுவது, யாழ்ப்பாணரின் திறமையினால் தான் என்று பேசினர். இதனால் மனவருத்தம் அடைந்த யாழ்ப்பாணர், தாமாகவே, தன்னால் இசைக்கமுடியாத  ஒரு பதிகத்தைப் பாடுமாறு வேண்டிக்கொண்டார்.

இந்த பதிகத்தைப்பாடும் போது, சம்பந்தரை விடவும், தன்னைதாழ்த்தி கொள்பவன் உயர்த்தப்படுவான் என்னும் வசனத்திற்கு, உதாரணமாய் நிற்கும் திருநீலகண்டர் தான் அதிகம் நினைவில் நிற்கிறார்.

நிறைய வருடங்களுக்கு முன்பு ஒரு முறை சென்னை சேக்கிழார் விழாவில்இலங்கை ஜெயராஜ் அவர்கள், தொண்டு என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுத்தார். தொண்டு என்றால் பணிவு. வளைந்து இருக்கும் நெற்பயிரை போல இருப்பது; அடக்கமாக இருப்பவர் தொண்டர். சிறந்த தொண்டர் திருநீலகண்ட யாழ்ப்பாணர்.

மாதர் மடப்பிடியும் மடஅன்னமும் அன்னதோர்
நடை உடைமலைமகள் துணை என மகிழ்வர்-

மட-இளம்பிடி-பெண் யானைமாதர்-அழகு,காதல் 
அழகான இளம் பெண் யானை, மற்றும் இளம் அன்னம் போன்ற நடை உடைய மலைமகளை துணையாகக்கொண்டு மகிழ்கிறார் ஈசன்.

பூத இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர் -
திருவிளையாடல் திரைப்படம் தொடங்கும்போது உள்ள காட்சி எல்லாருக்கும் நினைவில் வரும் என்று நினைக்கிறன். பூதப்படைகள் இசையோடு பாடல் பாடுகின்றனர்.

அவர் படர்சடை நெடுமுடியதொர் புனலர்சிவனின் சடை நீண்டு, நெடியதாய் இருக்கிறது. அதில் புனலாய் கங்கையும் பொங்குகிறது.
நெடுமுடி என்ற ஊர் கேரளாவில், சிவனாரின் தொண்டர் யாரோ சூடிய பெயர்கொண்டதாய் இருக்கக்கூடும்.

வேதமொடு ஏழிசை பாடுவர்- ஈசன் இசைப்பிரியர்.அவர் வேதங்களோடு, ஏழுஸ்வரங்கள் உள்ள இன்னிசையை பாடும்போது மகிழ்கிறார்.எல்லைக்கோயில்களிலும், சிவபெருமானுக்கு உகந்த சங்கராபரணத்தை வாசிப்பதைப்பார்க்கிறோம்.
ஆழ்கடல் வெண்திரை இரைந் நுரை கரை பொருதுவிம்மி நின்று-
பொருது-கும்மாளம் ;ஆழ்கடலின் மேல் எழுப்பும் வெண்மையான நுரைகள்கொண்ட அலைகள், கரையைத்தொட்டு தொட்டு விளையாடுகின்றன.
 அயலே- அதற்கு அப்பால்

தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை 
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
மகரந்தத்தோடு கூடிய மலர்கள், புன்னைமரத்தில் அசைகின்றன. அவற்றில் வண்டுகள் அமர்ந்து ரீங்காரம் செய்கின்றன. அழகான சோலைகளில் குயில்கள் கூவுகின்றன. இயற்கை எழில் கொஞ்ச இருக்கும் தருமபுரம் என்ற ஊரில் வீற்றியிருக்கிறார் இறைவன்.