Saturday, March 13, 2021

மனக்கவலை மாற்றும் திருக்கோளிலி தேவாரம்!

 சப்த விடங்க தலங்களில் ஒன்று திருக்கோளிலி. உளியைக்கொண்டு செய்யப்படாத, சுயம்புமேனி சிவலிங்கங்களைக்கொண்ட தலங்கள் சப்தவிடங்க தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில், ஆதித்தலமான திருவாரூரும் ஒன்று. 

திருக்கோளிலி தலத்தில் தேவார மூவரும் பாடியிருக்கிறார்கள். எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் இருந்தாலும், மனக்கவலையோடு, இங்கே தூக்கம் தொலைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

உலகமே கொரோனா தீநுண்மியின் தாக்கத்தில், பயணங்கள் இல்லாமல், ஸ்தம்பித்துபோய் இருக்கும் இந்தக்காலத்தில், நம் அனைவரின் மனதிலும்  எதிர்காலம் பற்றிய கவலை இல்லாமல் இல்லை.

கோள் என்ற சொல் இந்தத்தேவாரத்தில், மாறுபாடு, நவகிரஹங்களால் ஏற்படும் துன்பம் என்ற பொருளில் ஞானசம்பந்தப்பெருமானால் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப்பதிவில் உள்ள தேவாரப்பாடல், முதல் திருமுறையில் உள்ள தேவாரப்பதிகம் ஆகும் (01-062).

இன்றைய நாளில் இந்த ஊரின் பெயர் திருக்குவளை என்றும் சொல்கிறார்கள். குவளை மலர்களால் தினமும் அர்ச்சனை செய்யப்படுகிறது. 


குவளை என்பது அல்லிமலரைக்குறிக்கும். நீர் வளமுள்ள நிறைய குளங்கள் அமைந்திருக்கும் பகுதியில் அமைந்த சிவாலயம். 

அல்லி மலரை, ஆம்பல் ,செங்கழுநீர் என்றும் சொல்கிறார்கள். சென்னையில் திருவல்லிக்கேணி அல்லி மலர்கள் அதிகம் இந்தப்பகுதி. 

இப்போது கலங்கிய நீரை தெளிவாக்குவதற்குக்கூட ரசாயனங்களைப்பயன்படுத்துகிறோம். சென்னை போன்ற நகரங்களில், குடிநீரை காசுக்கொடுத்து வாங்குபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். 

இந்தத்திருக்கோளிலி தலத்தின் தலவிருட்சம் தேற்றா மரம். கலங்கிய நீரில் இந்த மரத்தின் கொட்டைகளை அரைத்துப்போட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். எந்த விதமான உடல் நலிவு உள்ளவர்களையும் தேற்றும் வகையானது இந்த தேற்றா மரம். 


கிளை கிளைக்கும் :

நாளாய போகாமே 

  நஞ்சணியுங் கண்டனுக்கே

ஆளாய அன்புசெய்வோம் 

  மடநெஞ்சே அரன்நாமம்

கேளாய்நங் கிளைகிளைக்குங் 

  கேடுபடாத் திறம்அருளிக்

கோளாய நீக்குமவன் 

  கோளிலியெம் பெருமானே

அறியாமை உடைய மடநெஞ்சே!. நாளை என்று தள்ளிப்போடாமல், இன்றே நஞ்சைத்தன் தொண்டையில் அடக்கி, தம் அடியவரைக்காத்த திருநீலகண்டரை நினைந்து அன்பு செய். அரன் நாமத்தைக்கேள். அதனால், உன் கிளை, கிளைக்கும். நீ மட்டுமல்ல, உன் சுற்றத்தினரின் (கிளை) துன்பங்களும் தீரும். கேடுபடாத திறம் அருளி (துன்பம் இல்லாத வகை அருளி) ,கோள்களால் ஏற்படும் துன்பத்தையும் போக்குவான் திருக்கோளிலியில் வீற்றிருக்கும் எம்பெருமான். 

ஆடரவத் தழகாமை யணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.

மலர்போன்ற மென்மையான சேவடிகளைக்கொண்டவர் சிவபெருமான். அவ்ரதுதிருவடிகளை மென்மையான குவளை மலர்களைக்கொண்டு அர்ச்சிப்பது எத்தனை பொருத்தம் கொண்டது!

கேழல்- பன்றி 

ஆடரவத்து-ஆடுகின்ற பாம்பை அணிந்து 

அழகு ஆமை அணி - அழகிய ஆமை ஓட்டையும்  

கேழல் கொம்பு ஆர்த்த -பன்றியின் கொம்பையும் மாலையாகக்கோர்த்து அணிந்திருக்கிறார் சிவபெருமான். 

தோடு அரவத்து ஒரு காதன்- ஒரு காதில் பாம்பே தொடங்க இருக்கிறது (ஒப்பிட்டு நோக்க. தோடுடைய செவியன் )

துணைமலர் நல்சேவடிக்கே -இருமலர்களைப்போன்ற மென்மையான சேவடியை 

 பாடு அரவத்து இசை பயின்று பணிந்தெழுவார்  - பாட்டோசையுடன் துதிபாடல்களைப்பாடி தொழுபவர்களுக்கு 

தம்மனதில் கோடு அரவம் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே-

மனதில் உள்ள மாறுபாட்டை நீக்குபவர் திருக்கோளியில் உள்ள திருக்கோளிலி நாதர் ஆவார்.



இந்தத்தலத்தில் மற்றொரு அற்புதம் சுந்தர மூர்த்தி நாயனாருக்காக குண்டையூர் கிழார் கொடுத்த நெற்பொதிகளை சுமந்து வர ஆட்கள் இல்லாமல் போகவே, சுந்தரமூர்த்தி நாயனார், நீள நினைந்தடியேன் எந்தத்தொடங்கும் தேவாரப்பாடலைப்பாடியவுடன், பூதகணங்கள் அவருக்கு உதவின. இதை மாசிமகத்தன்று ஒரு திருவிழாவாக இன்றும் கொண்டாடுகின்றனர்.

Monday, January 04, 2021

வடதிருமுல்லைவாயில் -லயம் ஜதி பிழையாத நடனம் !- திருமுல்லைவாயில் சுந்தரர் தேவாரம்- ஏழாம் திருமுறை

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்

    கொடியிடை உமையவள் காண

ஆடிய அழகா அருமறைப் பொருளே

    அங்கணா எங்குற்றாய் என்று

தேடிய வானோர் சேர்திரு முல்லை

    வாயிலாய் திருப்புகழ் விருப்பால்

பாடிய அடியேன் படுதுயர் களையாய்

    பாசுப தாபரஞ் சுடரே!

திருமுல்லைவாயில் சுந்தரர் தேவாரம்- ஏழாம் திருமுறை 



(Picture Courtesy: Veludharan.blogspot.com)

திருமுல்லைவாயில் பாடல் பெற்ற 22வது தொண்டை நாட்டுத்தலம்.மேலே உள்ள சிற்பம், தலவரலாற்றைக்குறிக்கிறது.

 தொண்டைமானின் யானையின் கால்களில் முல்லைக்கொடி சுற்றிக்கொண்டது. அவற்றை நீக்கும் போது, எழுந்த குருதியில் தான் இந்தத்தலம் சிவபெருமானின் உறைவிடம் என்று அறியப்பட்டது

பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அடையாற்றில் உள்ள புற்றுநோய் மையத்தில் பணியாற்றிய திரு.செல்வம் என்பவரின் குழுவோடு சேர்ந்து உழவாரப்பணி செய்யும் பேறு கிட்டியது. நாங்கள் சென்ற கோயில் ஆவடிக்கு அருகில் உள்ள வடதிருமுல்லைவாயில். 



டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் சிங்கப்பூரில் நடந்த நாற்பதாவது திருமுறை மாநாட்டில், மேலே கொடுத்துள்ள பாடலை, மாணவியர்கள் அருமையாகப்பாடினார்கள். அவர்கள் பாடிய ராகம் காம்போதி (தக்கேசி பண்).



அதைக்கேட்டபோது மீண்டும் திருமுல்லைவாயில் பற்றிய நினைவுகளை அசைபோடலானேன். 

தோழராக இறைவனைப்பாவித்த சுந்தரர், கம்பீரம் கலந்தத்தொனியில் பாடுகிறார்.

பாடலின் பொருளைப்பார்ப்போம். 

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்

    கொடியிடை உமையவள் காண

ஆடிய அழகா


எப்போதும் தாளத்தோடும் சுருதியோடும் அமைந்த பாடல் சுகமானது. மனக்கவலைகளை மாற்றும் அருமருந்தாக வல்லது. அப்படித்தான், அழகர் ஆடும் நடனமும், லயம் எனப்படும் தாளம் பிசகாமல் இருக்கிறது. அதைக்கொடியிடை கொண்ட அம்மை பார்க்கிறாள். இந்த வடதிருமுல்லைவாயிலில் உள்ள அம்மையின் பெயர் கொடியிடை அம்மை. 

அருமறைப் பொருளே

மூவர் பாடிய தேவாரப்பாடல்களில் பல இடங்களில் வேதமாகவும், வேதத்தின் பொருளாகவும் சிவபெருமான் போற்றப்படுகிறார். சுந்தரரும், அருமறையின் பொருளே என்று பாடுகிறார். 

 அங்கணா எங்குற்றாய் என்று

தேடிய வானோர் சேர்திரு முல்லை

    வாயிலாய்

அழகான கண்களை உடையவனே (அங்கணா). ஸ்ரீரங்கம் ரங்கநாதப்பெருமானின் கமலக்கண்ணழகைப்பாடும் பாசுரங்கள் பல. சிவபெருமானின் கண்ணழகைபோற்றும் தேவாரம் இது. 

நீ எங்கே இருக்கிறாய் என்று உன்னைத்தேடிய வானவர்களுக்கு கூட அகப்படாமல், நீ இந்தத் திருமுல்லைவாயில் தலத்தை சேர்ந்தாய். 

திருப்புகழ் விருப்பால்

பாடிய அடியேன் படுதுயர் களையாய்

    பாசுப தாபரஞ் சுடரே!

உனது திருப்புகழைப்பாடுகின்ற விருப்பத்தோடு, பல தலங்களுக்கும் சென்று பாடும் எனது, துயரத்தை (துன்பத்தை) போக்குவாய்.

பாசுபதா- உயிர்களின் தலைவனே
பரஞ்சுடரே- மேலான ஒளி போன்றவனே.

இந்தப்பாடலில் திருப்புகழ் என்ற சொல் வருகிறது.


 பின்னாளில் வந்த அருணகிரிநாதர் திருப்புகழ் இந்தத்தலத்திலும் பாடியிருக்கிறார். Thirupugazh link:

இந்தத் திருப்புகழில் சிவபெருமான் நடனம் ஆடுவது பற்றிக்குறிப்பிடப்படுகிறது. உன் அடியார்களோடு சேர்ந்து, சிறந்த நெறியைப்பிடித்தொழுகும் வாழ்வை எனக்குத்தருவாய் என்று அருணகிரியார் இறைஞ்சுகிறார். 

வள்ளலார் பாடல் :

தேன் என இனிக்கும் திருவருட்கடலே எனத்தொடங்கும் அருளியல் வினாவல் திருவருட்பாவில் சுந்தரா, சுந்தரன் தூதா என்று வள்ளலார், சிவபெருமானை அழகன் என்றும், சுந்தரமூர்த்தி நாயனாரின் தூதர் என்றும் பாடிப்பரவுகிறார். 

சுந்தரமூர்த்தி நாயனார், அருணகிரிநாதர், மற்றும் வள்ளலார் பாடியத்தலம் இது.

சென்னையை சுற்றி, திருவுடை(மேலூர்), வடிவுடை ( திருவொற்றியூர்) மற்றும் கொடியிடை (வடதிருமுல்லை வாயில்)அம்மன் கோயில்களுக்கு பௌர்ணமி தோறும் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகம்.

இதில் கொடியிடை அம்மன் க்ரியா சக்தியாவாள். நாம் சரியாகக்கேட்டால், அள்ளிதருவாள் அம்மை.

அம்மையையும் அப்பனையும் தரிசித்து வாருங்கள் !

Saturday, September 21, 2019

திருவேகம்பம் - திருவிருக்குக்குறள்

குறள் என்றாலே நமக்கெல்லாம் திருக்குறள் தான். 

சிறிய ,இரண்டு அடிக்குள் உள்ள பாடல்வகையை குறள் என்று அழைத்திருக்கிறார்கள். 
திருமுறையில் உள்ள பலவகையான செய்யுள் வகைகளில் திருவிருக்குக்குறளும் ஒன்று. 

திருக்குறள் தெரியும்;அது என்ன திரு+இருக்கு+குறள்? 

ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்கள் ஒலிப்பண்புகள் கொண்டவை.அவற்றை சரியாக சொல்வதன் மூலம், மனஒருமையும், மற்ற நலன்களும் அமையப்பெறும்.

சரி, வடமொழி  எனக்கு பழக்கமான மொழி அல்ல; அதை ஒரு சாரார் மட்டுமே எடுத்துக்கொண்டு விட்டார்கள் என்று சொல்பவர்களுக்கு, எல்லாருக்கும் தினமும் மனதில் மந்திரம் போல நிற்க, சிறிய அளவிலான சொற்களைக்கொண்டு, அதே நற்பலன்களைத்தரும் வகையில் திருஞானசம்பந்தர், பல திருவிருக்குக்குறள் பதிகங்களைப்பாடி உள்ளார். 

இந்தப்பதிவில் இருக்கும் திருவிருக்குக்குறள், காஞ்சி ஏகாம்பரேஸ்வரரைப்பற்றியது. பெரும்பாலான பாடல்கள் "வினை"என்ற சொல்லில் தான் முடிகிறது. 

இதைப்போலவே  சீர்காழி, திருவாரூர், மதுரை, திருவீழிமிழலை, திருவிடைமருதூர் போன்ற தலங்களுக்கும் திருவிருக்குறள்களைப்பாடியுள்ளார் திருஞானசம்பந்தர். 

மனம், சொல், செயல் என்ற மூன்றாலும் நாம் பிறருக்கு செய்யும் நன்மையையும் தீமைக்கும் நமக்கு புண்ணியபலன்களும் பாவங்களும் வந்து சேருகின்றன.

சில மதங்களில் ஏன் துன்பமான பிறவி இருக்கிறது என்பதற்கு பதிலே கிடையாது. சனாதன தர்மம் எனப்படும் இந்துமதத்தில் முழுமையான விடைகள் எல்லாவற்றுக்கும் இருக்கின்றன. விடைகள் அவரவர் தேடுகின்ற அளவிலேயே கிடைக்கின்றன.

என் தேவார ஆசிரியர், பெரும்பாண நம்பி திரு.கோடிலிங்கம் ஐயா சொல்லுவார், என்ன பாத்திரம் கொண்டு வருகிறாயோ, அந்த அளவில் தான் நிறைக்க முடியும் என்று. 

ஏன் நமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்று நம் மனம் ஆராயும்போது, பலநேரங்களில் நாம் பிறருக்கு ஏற்படுத்திய கஷ்டம் நினைவில் இருப்பதில்லை. 
வினைகள் யாவும் நினைவில் நிற்பவை அல்ல. வாழ்க்கை அவர் அவர் வினை வழி தான். 

"தர்மம் தலைகாக்கும் ;தக்க சமயத்தில் உயிர்காக்கும் "என்ற திரைப்பாடலுக்கு தலையாட்டும் நம் மக்கள், ஏன் தர்மம் தலையைக்காக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும்!. நல்ல செயல்களின் பலனாகத்தான் நம் தலை காக்கப்படும்.

"நகரேஷு காஞ்சி" என்று ஒரு வாக்கியம் சொல்வார்கள். நகரங்களில் காஞ்சிபுரம் போன்ற சிறப்புடையது ஒன்றுமில்லை என்று. தமிழ் பேசும் மக்களின் கோயில்களில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் , காலத்தால், நாலாயிரம் வருடங்களுக்கு முன்பானது என்பதற்கான சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியங்களிலும் காஞ்சிபுரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. 
இந்தக்கோயிலை பெரிதாக நிர்மாணித்துக்கட்ட ஆதி சங்கரர் அரும்பங்கு ஆற்றி இருக்கிறார். 

முத்துசாமி தீக்ஷிதர், பட்டினத்தார் , சைவக்குரவர்கள் நால்வர் என்று பலரும் இந்தத்தலத்தைப்பாடி இருக்கிறார்கள். 

பக்தியின் வழி அறத்தைப்பற்றி நட என்று தான் சமய இலக்கியங்கள் சொல்கின்றன.
சந்தக்கவிகளில் அருணகிரிநாதரைப்போல, திருஞானசம்பந்தரைப்போல, இனி வரும் காலங்களில் யார் எழுதப்போகிறார்கள்?  

இந்தப்பதிகம்,காஞ்சி திருவிருக்குக்குறள்  மூன்றாம் திருமுறையில் இருக்கிறது. 

கருவார்கச்சித் , திருவேகம்பத்
தொருவாவென்ன , மருவாவினையே

(கருவார் கச்சி திருஏகம்பத்து ஒருவா என்ன மருவா வினையே)
ஏகாம்பரம் என்ற பெயர் பரவலாக தமிழ் மக்களிடையே இருக்கிறது.

ஏகம் என்றால் ஒன்று. ஆம்பரம் என்றால் மாமரம். ஒற்றை மாமரத்தின் கீழே உமை அம்மை கையால் பிடித்த மண்ணால் ஆன திருமேனி கொண்டவர் ஏகாம்பரேஸ்வரர். இந்தத்தலம் பஞ்சபூதங்களில் பூமிக்கான தலமாகும். 

ஆதி பகவான் முதற்றே உலகு என்கிறது வள்ளுவரின் குறள். கருவாக -எல்லாவற்றுக்கும் கருப்பொருளாக இருப்பவர் கச்சி ஏகாம்பரேஸ்வரர். அவரை வணங்க நம்மை வந்து தீயவினைகள் சேராது. 

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

நல்வினை தீவினை இரண்டுமே மீண்டும் பிறப்பைத்தரும். திருவள்ளுவர், இறைவனின் பெருமையை, புகழை மட்டுமே விரும்புகிறவர்களுக்கு, இந்த இருவினைகளும் அண்டாது என்கிறார்.
அதே போல சம்பந்தப்பெருமானும் ,
படமார்கச்சி , இடமேகம்பத்
துடையாயென்ன , அடையாவினையே.என்கிறார் .

படமார்கச்சி= சித்திரவேலைப்பாடுகள் கொண்ட,  (படம்-கொடி), கொடிகள் அசைந்து ஆடும் மாடங்களைக்கொண்ட காஞ்சிபுரத்தைத்தன் இடமாகக்கொண்ட ஏகாம்பரேஸ்வரரை, எங்கள் தலைவன் என்று கொண்டு, அவரை போற்ற, வினைகள் வந்து சேராது.

"விநாயகனே வினைதீர்ப்பவனே"; வேலுண்டு வினையில்லை" போன்ற பாடல்களை அடுத்த முறைகேட்டால், வினைப்பற்றிய இந்தப்பதிகமும் நிச்சயம் நினைவில் இருக்கும். 

மனம், வாக்கு, செயல் என்ற மூன்றிலும் எந்த வினை செய்கிறேனோ, அவை அனைத்தும் இறைவனுக்கு நான் பிரசாதமாகப்படைப்பவை என்ற எண்ணம் தோன்றிவிட்டால், கெட்ட எண்ணங்களோ, சொல்லோ, செயலோ எங்கிருந்து உருவாகும்? 

செப்டம்பர் 11 மஹாகவி பாரதியாரின் நினைவுநாள்.
எந்தமொழியில் எழுதி இருந்தாலும், துக்காராம், தியாகராஜர், பாரதியார் என எல்லாரும் சொல்வது ஒன்று தான்! மனதை வெளுக்க கடவுளின் பெயரைத்தவிர  வேறு வழி இல்லை. 

துணி வெளுக்க மண்ணுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல் வெளுக்க சாம்பலுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மணி வெளுக்க சாணையுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம் வெளுக்க வழியில்லை—எங்கள்

முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

முழுபதிகமும் கீழே:
காஞ்சி திருவிருக்குக்குறள்:

கருவார் கச்சித், திருவே கம்பத்
தொருவா வென்ன, மருவா வினையே.  1 

மதியார் கச்சி, நதியே கம்பம்
விதியா லேத்தப், பதியா வாரே.  2 

கலியார் கச்சி, மலியே கம்பம்
பலியாற் போற்ற, நலியா வினையே.  3 

வரமார் கச்சிப், புரமே கம்பம்
பரவா ஏத்த, விரவா வினையே.  4 

படமார் கச்சி, இடமே கம்பத்
துடையா யென்ன, அடையா வினையே.  5 

நலமார் கச்சி, நிலவே கம்பம்
குலவா வேத்தக், கலவா வினையே.  6 

கரியின் னுரியன், திருவே கம்பன்
பெரிய புரமூன், றெரிசெய் தானே.  7 

இலங்கை யரசைத், துலங்க வூன்றும்
நலங்கொள் கம்பன், இலங்கு சரணே.  8 

மறையோன் அரியும், அறியா வனலன்
நெறியே கம்பம், குறியால் தொழுமே.  9 

பறியாத் தேரர், நெறியில் கச்சிச்
செறிகொள் கம்பம், குறுகு வோமே.  10 

கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்
மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே.  11


Saturday, June 22, 2019

திருஆண்டார் கோவில் -பாண்டிச்சேரிக்கு அருகில் !

பாண்டிச்சேரிக்கு அருகிலிருக்கும் ஒரு சில பாடல் பெற்றத்தலங்களில் ஒன்று திருஆண்டார் கோவில். 
விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் வழியில் இருக்கிறது இந்தப்பழமையான சிவாலயம். சோழர்காலத்திய கோயில், இந்திய தொல்லியல்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இந்தக்கோயிலுக்கு நாங்கள் போகும்போது மாலை மணி ஆறு அளவில் இருக்கும். சூரிய அஸ்தமனத்தோடு உள்ளே சென்ற நாங்கள், வெளியே வரும்போது இருள் கவிந்து கோயிலின் கோபுரம் வேறு ஒரு ரூபம் காட்டியது. கோயிலுக்கு முன்னர் ஒரு மாரியம்மன் கோயிலும், பின்பக்கம் தனியாக ஒரு வடுகபலமுருகன் கோயிலும் உள்ளன. 

சோழர்காலத்திய கோயிலில் வடுகீஸ்வரர் என்று சிவனுக்கு  பெயர். உள்ளே வடுகபைரவர் என்ற சந்நிதியும் இருந்தது. கோயிலுக்கு உள்ளே ஒரு சிலரே இருந்தனர்.

வடுக என்ற சொல்லுக்கு எல்லை என்பதான பொருள் இருக்கிறது. ஒருகாலத்தில் இது முல்லைநிலமாக இருந்திருக்கிறது. ஒரு குறுநில அரசின் எல்லையாகவும் இருந்திருக்கலாம். 

அமைதியான சூழல், எங்களை வெகு எளிதில் மனஅமைதி கொள்ள வைத்தது. 

சுற்றுப்பிரகாரத்தில் வரும்போது, பிச்சாண்டவர், தலையை ஒருபுறமாக சாய்த்து சடைமுடிகொண்ட தட்சிணாமூர்த்தி, விநாயகர், ஆறுமுகத்தோடு மயில்மேல் அமர்ந்த முருகக்கடவுள், துர்க்கை, சிவபெருமானும் அம்மையுமாக ஒரு ரூபம், சண்டிகேஸ்வரர், சூரியன் சந்திரன் என்று எல்லாரையும் வணங்கி வந்தோம்.

என் மாமனாரின் ஆசை- எங்களின் இந்த இந்தியப்பயணத்தில் எங்களுக்கு இந்தக்கோயிலை காணும் பேறு கிட்டியது.

இந்தக்கோயிலில் திருஞானசம்பந்தப்பெருமான் ஒரு பதிகம் பாடி இருக்கிறார். சிவபெருமானின் கோலத்தைமட்டுமே விளக்குவதாக இந்தப்பதிகம் இருக்கிறது.
தளருங் கொடியன்னா டன்னோ டுடனாகிக்
கிளரு மரவார்த்துக் கிளரு முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
ஒளிரும் வடுகூரி லாடும் மடிகளே
(கொடிபோன்ற அம்பிகையோடு இருக்கும் பிறைசூடிய பெருமானை  மேலே உள்ள படத்தில் இருக்கும் சிற்பத்தில் காணுங்கள்)


அந்தப்பதிகத்திலிருந்த மற்றொரு பாடல் என்னை வெகுவாக ஈர்த்தது.
வழக்கமாக பழந்தமிழ் இசைக்கருவிகளில், குழல், யாழ், வீணை போன்றவை த்தான் அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தப்பாடலில், பறையைப்போலவும், அதிர்கின்ற குழலைபோலவும், பலவண்டுகள் சத்தமிடும் வடுகூர் என்னும் திருஆண்டார்கோயிலில் இறைவன் இருக்கிறார் என்கிறார் சம்பந்தர்.

பிறையு நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
பறையு மதிர்குழலும் போலப் பலவண்டாங்
கறையும் வடுகூரி லாடும் மடிகளே.

Friday, May 10, 2019

திருமந்திரம் சொல்லும் பேறு

பத்தாம் திருமுறையாக வகுக்கப்பெற்ற  திருமூலரின் திருமந்திரம், தேவார மூவரின் பாக்களை விட நடையிலும், சொல்ல வரும் பொருளிலும் மாறுபட்டதாகும். 

தேவாரம் இறைவனின் பெருமையை வியந்து பாடும் அழகுடையது.

திருமந்திரம் பேசும் விஷயங்கள் பல. ஒன்பது தந்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ள திருமந்திரத்தில், முதல் இரு தந்திரங்கள் பேசும் பொருள்கள் , திருக்குறளை ஒத்திருக்கின்றன . 

திருக்குறளில், இருப்பதை போல  கொல்லாமை, நிலையாமை, இன்னா செய்யாமை முதலியவற்றை முதல் தந்திரம் விரித்துரைக்கிறது.

திருக்குறளில் நாற்பத்தி ஐந்தாவது அதிகாரம் பெரியாரை துணைக்கோடல்.
(அரசியல்).
திருவள்ளுவர் பெரிய வல்லமையாக சொல்வது, பெரியவர்களை நம்முடைய சுற்றத்தவராக அவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு நடத்தல்
"தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை"

நாட்டை ஆள்பவர்களுக்கும் பெரியவர்களின் துணை வேண்டும் என்றால், சாமானியர்களுக்கு வேண்டாமா என்ன ?
இரண்டாம் தந்திரத்தில் குருநிந்தை என்ற தலைப்பில் கீழே உள்ள பாடல் தான் முதலாக வருகிறது.

பெற்று இருந்தாரையும் பேணார் கயவர்கள்
உற்று இருந்தாரை உளைவன சொல்லுவர்
கற்று இருந்தார் வழி உற்று இருந்தார் அவர்
பெற்று இருந்தார் அன்றி யார் பெறும் பேறே.

(மேலும் படிக்க )



பெற்று இருந்தார்- பெற்றோர்
உற்று இருந்தார்- உறவினர்கள்
உளைவன- மனதில் நினைத்து, நினைத்து வருந்தும்படியான தீய சொற்கள் 
கயவர்கள்- கீழானவர்கள் 

கீழானவர்கள் பெற்றவர்களையும் நல்லபடியாக வைத்து காப்பாற்றமாட்டார்கள். தம் உறவினர்கள் மனதில் நினைத்து மருகும்படியான தீய சொற்களை சொல்லுவார்கள். 

நல்லபடியாக பெற்றோரைப்பேணுபவர்களும், உறவினர்களை தீய சொற்களால் நோக செய்யாதவர்களும், நன்றாக கற்றக்பெரியவர்கள் சொன்ன வழியில் இருப்பவர்கள் தான். அவர்கள் அதனை பெரியவர்களை பின்பற்றுவதால் கிடைக்கும் பேறு- பாக்கியம் என்றே கருதுவார்கள்  .

Sunday, November 25, 2018

பட்டினத்தார் அருளிய திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (பதினோராம் திருமுறை)

"காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே"

என்ற பட்டினத்தாரின் வாக்கிலுள்ள உண்மை

எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே.
பட்டினத்தார் தன் உலக வாழ்க்கையின் கடைசி வருடங்களை

திருவிடைமருதூரில் கழித்தார்.

அவர் அருளிச்செய்த திருவிடைமருதூர் மும்மணிக்கோவையிலிருந்து
ஒரு சில பாடல்களை இந்தபதிவில் பகிர்கிறேன்.

ஒரு சில பாடல்கள் எழுபது அடிகள் கூட கொண்டவையாக
இருக்கின்றன. மும்மணிக்கோவை என்பது, வெண்பாவும், ஆசிரியப்பாவும்,
கட்டளைகளித்துறையில் அமைந்த பாடல்களையும் மாறிமாறி
கொண்டிருக்கிறது. ஒரு சில பாடல்களில் அந்தாதி அமைப்பை
பார்த்தேன். இது தமிழின் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். 

அம்பாளின் சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில்
மகாலிங்க ஸ்வாமி அருள்பாலிக்கிறார்.


மருது என்ற பெயரைக்கேட்டால் பெரும்பாலும் தமிழர்களுக்கு
மருதுபாண்டியர்கள் நினைவு தான் வரும்.

"மருதா மருதா" என்று சிவனை
அருந்தமிழில் அழைக்கிறார் பட்டினத்து பிள்ளை.

ஐந்து தேர்கள் கொண்ட சிறப்புடையது இந்தக்கோயில்.
சமீபத்திய வருடங்களில் பூஜ்யஸ்ரீ தயானந்த ஸ்வாமிகளின் அருளாசியுடன்,
ஐந்து தேர்களோடு சிறப்பாக திருவிழா நடந்தேறியது.



கண்ணெண்றும் நந்தமக்கோர்
  காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல
  எழுத்தென்றும் - ஒண்ணை
மருதஅப்பா என்றும் உனை
  வாழ்த்தாரேல் மற்றும்
கருதஅப்பால் உண்டோ கதி.

அப்பா... மருதப்பா, உன்னை கண்ணென்றும்,
எங்களை காக்கும் காப்பென்றும், நாங்கள் கற்ற எண்ணும்,
எழுத்தும் நீயே என்றும் உன்னை வாழ்த்துவதே எங்களுக்கு கதியை,
நல்ல வழியைத்தரும். அப்படி வாழ்த்தாவிடில் எங்களுக்கு ஏது கதி?


திருமுறையில் உள்ள அனைத்து பாடல்களுமே, பெரும்பாலும், தீயவினை மாளும் வழியைக்காட்டுவனவாக உள்ளன. கெட்ட செயல்களை செய்தால் தான் பாவம் என்றில்லை. 


விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசி பாடல், மனம் வாக்கு, செயல் 
என்று நான் எதை செய்தாலும், அதை நாராயணனுக்கு 
அர்ப்பணிக்கிறேன் என்று முடியும். இப்போதுள்ள நுகர்வு
 கலாச்சாரத்தில், அளவுக்கு மீறிய ஆசையும், பொறாமை,
 போட்டிகளும் இல்லாத மனிதர்கள் இல்லை.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
என்கிறார் வள்ளுவர்.

கப்பலில் பெருவணிகம் செய்த செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்
பட்டினத்தார். பெருநெறியை பிடித்தொழுகினார்;
அனைத்தையும் உதறினார்.

வழிபிழைத்து நாமெல்லாம்
  வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்கள்
  எல்லாம் - பொழில்சூழ்
மருதிடத்தான் என்றொருகால்
  வாய்கூப்ப வேண்டா
கருதிடத்தாம் நில்லா கரந்து.
எப்படியோ இறைவனின் கருணையால் இதுவரை
பிழைத்துவந்துவிட்டோம். வந்த வழியில் சேர்த்த பாவங்கள் எல்லாம்,
பொழில் சூழ்ந்த மருதனை வாயால் கூட அழைக்கவேண்டாம்.
மனத்தால் நினைத்தாலே அந்த பாவங்கள் மறைந்துவிடும் என்கிறார்
பட்டினத்தார்.


அன்றென்றும் ஆமென்றும்
  ஆறு சமயங்கள்
ஒன்றொன்றொடு ஒவ்வா
  துரைத்தாலும் - என்றும்
ஒருதனையே நோக்குவார்
  உள்ளத் திருக்கும்
மருதனையே நோக்கி வரும்.

பட்டினத்தார் காலத்திலும், சமயப்பிரிவினைகள் இருந்திருக்கின்றன.
ஒன்றோடு ஒன்று அவை ஒவ்வாமை கொண்டிருந்திருக்கின்றன.

ஒருவனே இறைவன் என்ற கருத்தை கொண்டிருக்கும் மனிதர்களுக்கு

குழப்பம் இல்லை. அவர்கள் உள்ளம் மருதனைதான் நோக்கி ஓடி வரும்
என்கிறார் பட்டினத்தார். எளிதில் தினமும் சொல்லும்படியான எளிமையான
பாடல்களைத்தான் இந்தப்பதிவில் பகிர்ந்துள்ளேன்.

Sunday, August 26, 2018

வாழ்ந்தே போம் இறைவா!- பதிகமும் பாசுரமும் !

இறைவனை தாயாக, தோழனாக, தன் குழந்தையாக என்று பல உறவுநிலைகளில் வைத்து நாயன்மார்களும், ஆழ்வார்களும் ,பக்தி செய்வதைப்பார்க்கிறோம். பல நாள் விண்ணப்பம் செய்தாலும், நம் பிரார்த்தனைகள் ஈடேற வில்லை என்றால்  ஒரு ஏமாற்ற நிலை வரும். அந்த நிலையில் சிலர், கடவுள் உண்மையாக இருக்கிறாரா என்ற கேள்வியை முன்வைப்பார்கள். ஒரு சிலர் இறைவனோடு கொண்ட கோபத்தில், கோவிலுக்கு போவதைத்தவிர்ப்பார்கள். 
( Thiruvarur Temple-Pic Credit-gosthala.com)

உண்மையான பக்தி கொண்டவர்களால் ஒரு போதும் கடவுளை விட்டு விலகி இருக்க முடியாது. "வேண்டத்தக்கதை அவன் அறிவான், நம் விருப்பத்தையும் இன்னொரு முறை அவனிடம் சொல்லிடலாமே" என்றே விழைவார்கள். 
அப்படிச்செய்யும்  மறு விண்ணப்பமாய் விரியும் ஒரு பதிகமும், பாசுரமும் இந்தப்பதிவில் பகிர்கிறேன். 

இறைவனைத்தன் தோழனை எண்ணிய சுந்தரர் பாடிய பதிகத்திலிருந்து -
அன்றில் முட்டா தடையுஞ் சோலை
ஆரூ ரகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த
காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார்
தங்கண் காணாது
குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால்
வாழ்ந்து போதீரே!


(படத்தில் இருப்பது தான் அன்றில் பறவை ) அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே- 
 நாள் தவறாமல், அன்றில் பறவை உணவுத்தேடி வருகின்ற சோலைகளை உடைய திருவாரூரை தன்னுடைய வீடாகக்கொண்ட  தியாகேசரே!

கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி யவைபோல-கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக் கன்றுகள் போல

என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணாது- நாள்தோறும் தப்பாது பாடியே உம்மிடத்துப் பயன்பெறுகின்ற அடியார்கள் , பலநாள் பாடியபின்னும் தங்கள் கண் காணப்பெறாது

குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே!- கோபம் வந்தால் இந்நாளில் சிலர், "எங்கியாவது போய் முட்டிக்கறேன். நீ நல்லா இரு!" என்று வழக்கு மொழியில் சொல்வதைப்போல, அந்நாளில் குன்றில் முட்டி, குழியில் விழுகிறேன் என்று சொல்லி இருப்பார்கள் போலத்தெரிகிறது. இறைவனே நீ மட்டும் நன்றாக இரு என்று இறைவனைக் கோபத்தோடு வாழ்த்துகிறார் சுந்தரர். 


ஆசை வழுவா தேத்து

          மெமக்கிங் கிழுக்காய்த்து - அடியோர்க்கு
 தேசமறிய உமக்கே
          யாளாய்த் திரிகின்றோமுக்கு
 காசினொளியில் திகழும்
          வண்ணம் காட்டீர் எம்பெருமான்
   வாசி வல்லீர் இந்த
          ளூரீர் வாழ்ந்தே போம்நீரே

                      பெரியதிருமொழி 4-9-4 (1331)


ஒன்பதாம் திருமொழியில் உள்ள பாசுரம் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்தது.  திருஇந்தளூர் என்ற தலம் மாயவரத்தில் உள்ளது. பரிமள ரங்கர் கோயில் என்று அழைக்கப்படும் இந்தத்தலம் 108 திவ்யதேசங்களில் ஒன்று. 

எனக்கு இந்த பாசுரத்தைப்படிக்கும் போது, "வாசி தீரவே" என்ற திருஞானசம்பந்தர் தேவாரம் தான் நினைவுக்கு வந்தது.

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கிங்கு இழுக்காய்த்து- இறைவன் மீது கொண்ட அன்பு, ஆசையில் எந்த குறையும் இன்றி,  ஏத்துகின்ற எங்களுக்கு இழுக்காகி விட்டது. 

தேசமறிய உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு -இந்த நாடே அறியும்படி,உன்னுடைய அடியவராக திரிகின்ற எனக்கு 

காசினொளியில் திகழும்   வண்ணம் காட்டீர்- காசு என்ற சொல்லுக்கு பொன் என்றும் பொருள் உண்டு. தங்கம் போல மிளிர்கின்ற உனது மேனி வண்ணத்தை காண்பியுங்கள். 
(Thirundhalur- temple Gopuram-PC-mayuram-raja.blogspot.com)

திருஇந்தளூர் தலத்தில் திருமங்கை ஆழ்வார் வரும்போது கருவறை கதவு சாத்தியிருந்தது. இறைவன் தனக்கு முகம் காட்டவில்லை என்ற வருத்தத்தை அவர் பதிவு செய்கிறார். 

         வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம்நீரே
வாசி -வேறுபாடு. என்னிடம் வேறுபாடு காட்டுவதில் வல்லவராய் இருக்கிறீர், இந்தளூரில் இருக்கிற பெருமாளே, நீர் நல்லபடியாய் வாழ்ந்தேபோம்! என்கிறார் ஆழ்வார்.

Wednesday, May 02, 2018

பெருவியப்பை போன்ற இறைவன்- திருநெல்வாயில் அரத்துறை

நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார்
ஐயொப் பானை யரத்துறை மேவிய
கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.





அப்பர் தேவாரங்களில் நம்மை அதிகம் சிந்திக்கவைப்பவை அவர் பயன்படுத்தும் உவமைகள். அவர் அனுபவித்த பரம்பொருளை, நம்மையும், அந்த உவமைகள் வழி அனுபவிக்க வைக்கிறார். 

நெய் ஒப்பானை- இறைவன் நெய்யை போன்று இருக்கிறார். ஒரு லிட்டர் பாலில் நம் கண்முன்னே அந்த பாலில் இருக்கும் நெய் தெரிகிறதா என்ன? தயிரை கடைந்தால் மட்டுமே வெண்ணை மேலெழும்.இறைவனும் அப்படி தான். நம் மனதில் இருக்கிறார் என்பதே தெரியாமல் மறைந்து இருக்கிறார். பக்தி உணர்வு மேலெழ, நாம் இறைவனை உறவாக எண்ணி அருகே அன்பால் உருக உருக மட்டுமே, இறைஇன்பம் கிட்டும். 

நெய்யிற் சுடர் போல்வதோர் மெய் ஒப்பானை -நெய் தீபத்தில் தெரியும் புகையில்லாத அழகான சுடரின் ஒளி போன்றவர் இறைவன். 

விண்ணோரும் அறிகிலார் -தேவர்களும் அறியாத இறைவன்.நம் நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ வழிபாட்டுத்தலங்களில், பணம் இருப்பவர் ஒரு விதமாகவும், பணமில்லாதவர்கள் வேறு விதமாகவும் நடத்தப்படுவதை பார்க்கிறோம். ஆனால் கருவறையில் இருக்கும் இறைவனை அறிய பக்தி மட்டுமே போதுமானது. தேவர்கள், மேலானவர்கள் என்று சொல்லப்பட்டாலும், அவர்களும் அறியக்கூடிய ஒருவர் இல்லை இறைவன். 

ஐயொப்பானை- ஐ - வியப்பு -எதைப் பார்த்து நமக்கு வியப்பு உண்டாகும்? என்ன அழகான உவமை இது!.  ஒரு வீட்டில் பேச ஆரம்பிக்கிற வயதில் ஒரு குழந்தை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த குழந்தை புதிதாய் சொல்லும் ஒரு சொல்லே, பெற்றவர்களுக்கு பெரு வியப்பையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கிவிடும். 

அல்லது, இயற்கையின் பேரழகு நிறைந்த இடங்களில், பெரிய நீரருவி போன்ற இடங்களில் இருக்கும் போதோ, நமக்கு எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று நாம் நினைக்கும் தருணங்களில், இத்தகைய பெருவியப்பு சாத்தியமே. 

அரத்துறை மேவிய கையொப்பானை -கை ஒப்பானை - 
(கை- ஒழுக்கம்-அறம் )-ஒழுக்கத்தை போல இருக்கிறார் இறைவன். இந்த சொல் கோர்வை தான் இந்த பதிகத்தின் மொத்த சாரம்.
நாம் எந்த வேலை செய்தாலும், அதை ஒழுக்கத்தோடு செய்தால், அந்த ஒழுக்கத்தில் இறைவன் இருக்கிறார்.  

கண்டீர் நாம் தொழுவதே -இப்படிப்பட்ட இறைவனை கண்ணார கண்டு தொழுங்கள்.