Monday, July 17, 2023

மனமே முருகனின் மயில்வாகனம்- மயிலாடுதுறை தேவாரம் அறிவோம்

 தென்னக இசையின் தாயான காரைக்கால் அம்மையின் வழியாக தான் இந்தளம் என்ற பண் அறிமுகம் ஆனது. இந்தோள ராகமும் இதுவே.

இந்த ராகத்தில் அமைந்த மனமே முருகனின் மயில்வாகனம் என்ற திரையிசைப்பாடல், மயில் ஆடும் துறையைப்பற்றிய சிந்தனைகளைக் கொண்டு வந்தது.

அம்பிகை மயிலாகத்தவம் செய்த இரண்டு தலங்கள்- மயிலாப்பூர் (திருமயிலை) மற்றும் மயிலாடுதுறை.

திருமயிலை சென்னை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
மயிலாடுதுறை இப்போது மாவட்டத்தலைநகராக இருக்கிறது. பல பாடல் பெற்ற தலங்கள் அருகில் இருக்கின்றன. 

 அம்பிகை, தட்சனின் யாகத்துக்குச் சென்று, அவமானப்பட்டு, மயில் ரூபம் எடுத்து ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் தவமிருந்து எம்பெருமானை அடைந்த தலம் மயிலாடுதுறை. 
 
Picture Courtesy: Veludharan.blogspot.com

சோழன் பெருவிரைவு ரயில் மாயவரம் எனப்படும் மயிலாடுதுறையில் முன்னெல்லாம் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நின்று செல்லும். இந்த ஊர் கோயிலுக்கு இது வரை செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. 

இந்து சமயத்தைப்பொருத்தவரை குறியீடுகளின் வழி, பல தத்துவங்கள் சொல்லப்படுகின்றன. முருகனின் பின்னால் இருக்கும் மயில் மனதைக்குறிக்கிறது என்கிறார்கள். நம் மனம் தூய்மையாக இருந்தால் அது இறைவன் அமரும் வாகனம் ஆகும்.

அம்பிகை இறைவனின் இடப்புறம் இருந்து, இறைவனின் சரிபாதியாக, உணர்ச்சிகளைக்கொண்டு முடிவெடுப்பவளாக இருக்கிறாள்.எனவே அவள் உணர்ச்சிகள் தோன்றும் மனதின் உருவாக மயில் ரூபம் கொண்டாள் என்று நான் புரிந்துக்கொள்கிறேன். 

இந்த ஊரை அருணகிரிநாதர் பாடாமல் விட்டிருக்க வாய்ப்பில்லை.
திருப்புகழில் தேடியபோது, சிகண்டியூர் என்றார் அருணகிரியார்.
சிகண்டி என்றால் மயில். 
கந்தர் அலங்காரம் பாடல் 26
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
   கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
      சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
         காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே

அருணகிரிநாதர் தன் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தபோது, முருகன் அவரை ஆட்கொண்டு உபதேசம் புரிந்தவற்றை, அவர் கந்தர் அலங்காரம் என்ற நூலில் எழுதியுள்ளார். எப்போது வேண்டுமானாலும் மயில் மீது முருகன் வள்ளியோடு வருவார். குருநாதனான அவர் சொன்ன உபதேசத்தைப்பின்பற்றுபவர் மட்டுமே காலம் கடந்து வாழ்வார்கள் என்கிறார் அருணகிரிப்பெருமான். 

மிகவும் பழமையான ஊர். காசிக்கு நிகராக சொல்லப்படும் ஊர்கள் திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர்,  திருவாஞ்சியம், சாய்க்காடு மற்றும் மயிலாடுதுறை. ஐப்பசி மாதம் முழுவதும், மயிலாடுதுறை காவிரியில் மூன்று தேவியரும், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளும் நீராடவருவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. 

இங்குள்ள அம்பிகையின் பெயர் அபயாம்பிகை. அபிராமி அம்மைப்பதிகம் போல, இங்கு வாழ்ந்த நல்லதுக்குடி கிருஷ்ணஸ்வாமி என்பவர் எழுதிய அபயாம்பிகை பதிகம் யாருமில்லாத அவருக்கு, அம்பிகை அருள் செய்ததைக்காட்டுகிறது. 



பேச்சுவழக்கில் எல்லாருக்கும் இந்த ஊர் மாயவரம். வடமொழியில் மாயூரம். அப்பர், சம்பந்தர் தேவாரங்களில் மயிலாடுதுறை என்றிருப்பதைப்பார்த்து 1980ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊர் இது. 


அப்பர் இறைவனின் திருவடி நிழலை விரும்பிப்பற்றியவர். எத்தனையோ துன்பங்கள் அவருடைய வாழ்க்கையில் வந்து சென்றன.தந்தைத்  தாயை சிறுவயதில் இழந்தது முதல், சூலை நோய் கொண்டு அவதிப்பட்டது, கடலில் கல்லைக்கட்டி இடப்பட்டது, சுண்ணாம்பு காளவாய் என்று சொல்லப்படும் சூடான அறையில் வைக்கப்பட்டது, மதம் கொண்ட யானையை எதிர்கொண்டது என்று பல உயிரைக்கூட விட்டுவைக்காத சோதனைகளை இறைவனின் பெருவருளால் தாண்டி வந்தார். 
நம்மில் பலருக்கு சோதனைகள் வரும்போது, இறைவன் இருக்கிறாரா என்ற கேள்வியும், ஏன் நான் மட்டும் அவதிப்படுகிறேன் என்ற கேள்வியும் வருவதுண்டு. 

ஏன் அப்பர் எல்லாரையும் போல சலித்துக்கொள்ளாமல், இறைவனின் திருவடியைப்பற்றினார் என்று யோசித்ததுண்டா? அது ஒன்றே வழி.  இன்றைய காலகட்டத்தில், பலரும் நேர்மறை எண்ணங்களைப்பற்றி சொல்கிறார்கள்.  (Power of Positive Thinking).

அப்பர் பெருமான் அன்று பூத்த மலர்களைக்கொண்டு அதிகாலையில் வழிபாடு செய்வதைப்பற்றி, பல தேவாரங்களில் குறிப்பிட்டிருப்பார். அவர் செய்த தொண்டால், தான் இன்றும் நமக்கு ஆலயங்களைத்தரிசிக்க முடிகிறது. 

மனதை மாற்ற சிலர் நெருக்கமானவர்களிடம் புலம்புவார்கள். சிலர் குடியைக்கையில் எடுப்பார்கள். ஆனால், இறைவனைப்பற்றுதலைப்போன்ற ஆறுதலும், நம்பிக்கையும் வேறு எதிலும் கிடைக்காது. 

ஐந்தாம் திருமுறையிலுள்ள மயிலாடுதுறை அப்பர் பெருமான் அருளிச் செய்த திருப்பதிகத்திலிருந்து சில பாடல்களைப்பார்ப்போம்.

நீற்றினான், நிமிர்புன்சடையான், விடை-
ஏற்றினான், நமை ஆள் உடையான், புலன்
மாற்றினான், மயிலாடுதுறை என்று
போற்றுவார்க்கும் உண்டோ, புவி வாழ்க்கையே.?

இந்த உலக வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது தான். ஆனால் திருநீறு அணிந்து, நிமிர்ந்து நிற்கும் பொலிவான சடையுடையவனும், நந்தியைத் தன் வாகனமாகக்கொண்டவனும், என்னை ஆள்பவனும், என்னுடைய புலன்களை மடை மாற்றம் செய்தவனும் ஆனவன் மயிலாடுதுறையில் இருக்கும் சிவபெருமான். அவனைப்போற்றுவோருக்கு உலக வாழ்க்கையும், அதனால் உண்டாகும் துன்பங்களும் இல்லை என்கிறார் அப்பர் பெருமான். 
கோலும், புல்லும், ஒரு கையில் கூர்ச்சமும்,
தோலும், பூண்டு துயரம் உற்று என் பயன்?
நீல மா மயில் ஆடு துறையனே!
நூலும் வேண்டுமோ, நுண் உணர்ந்தோர்கட்கே?

இந்த பாடலில் அப்பர் சொல்லும் கோல் என்பது யோகதண்டம் எனப்படும் மூன்று பாகங்களாகப்பிரிந்த ஒரு கோல்.  புல் என்று அவர் சொல்வது தர்ப்பைப்புல்லைக்குறிக்கிறது. கூர்ச்சம் என்பது தர்ப்பைகளை சேர்த்துக்கட்டி வைக்கப்பட்டிருப்பதைக்குறிக்கிறது. பொதுவாக, கூர்ச்சம் இறைவனையோ, உயிரையோ எழுந்தருளச் செய்யப் பயன்படும் ஒன்றாகும். தோல் என்பது மான் தோலைக்குறிக்கிறது. பூணூல் அணியும் யாருக்கும், முதன்முதலாக அவர்கள் அணியும்போது அதில், மான் தோலின் சிறுபகுதி  சேர்க்கப்படும். அது அவர்களுக்கு தியானத்தின் மேல் நிலையை அடைய உதவும்.
இந்த மூன்றும் உடையவர்கள், இறைவனை உணர வேண்டும். அப்படி இல்லாமல், இந்த பொருட்களைக்கொண்டிருந்தும் துயரத்தோடு அவர்கள் இருந்தால், இந்த பொருட்களால் பயன் ஏதும் இல்லை. 
நீல மயில் உடைய மயில்கள் ஆடும் மயிலாடுதுறை ஈசனே,  மெய்ப்பொருளான உன்னை உணர்ந்தவர்களுக்கு, நூல் எனப்படும் முப்புரிநூல் வேண்டுமா? தேவை இருக்காது என்கிறார் அப்பர்.
மறைமுகமாக இறைவனை அடைய தூய மனமே வேண்டும் என்று சொல்கிறார் என்று நான் எடுத்துக்கொள்கிறேன். 

இதன் தொடர்பில் திருமந்திரத்திலும் இதே போன்ற ஒரு பாடல் இருக்கிறது. 
நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரம்உயிர்
ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே .
 

புறத்தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு பலனில்லை. நூலும், சிகையும் தம்பால் பொருந்தப் பெற்ற அந்தணர்கள், பரமாத்மா ஜீவாத்மா  என்னும் இரண்டையும் நன்குணர்வர் எனில், அது வேதத்தை நன்கு ஓதி, வேதாந்தத்தை நன்கு உணரும் பொழுதே ஆகும்.
 இதுவே இந்த திருமந்திரப்பாடலுக்கான விளக்கம். 

அண்டர் வாழ்வும் அமர ரிருக்கையும்
கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே ((அப்பர் தேவாரம் மயிலாடுதுறை )
எது வாழ்வின் குறிக்கோள்? 
அண்டர் வாழ்வும்- தேவலோக வாழ்க்கையும் 
அமரர் இருக்கையும் - தேவலோக பதவிகளும்
கண்டு- அனுபவித்து
வீற்றிருக்கும் கருத்து ஒன்றிலோம்- அவற்றுக்கெல்லாம் தலைவனாக வீற்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
வண்டு சேர்மயிலாடுதுறை அரன்- வண்டுகள் பல மொய்க்கும் பொழில்கள் உடைய மயிலாடுதுறையில் இருக்கும் சிவனின்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே- தொண்டர்களின் பாதங்களை என் தலையில் சூடித் துதிப்பதே குறிக்கோள்

என்கிறார் அப்பர் பெருமான். பணிவு என்பதன் அடையாளமாக இருந்தவர் அப்பர் பெருமான். தொண்டு என்ற சொல்லுக்கும் பணிவு என்று பொருள் உண்டு. இறைவனின் தொண்டருக்குத்தொண்டராய் இருப்பதன் மூலம் வீடுபேறு கிடைக்கும், இந்த உலக வாழ்க்கையிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும் எனபதால் அதுவே குறிக்கோள் என்கிறார் அப்பர் பெருமான். 


Sunday, April 09, 2023

திருமுருகாற்றுப்படை- அறிவோம்- சங்க இலக்கியம் -01

 திருமுருகாற்றுப்படை என்பது பதினோராம் திருமுறையில் உள்ளது . கடைச்சங்ககாலப்புலவர் நக்கீரரால் எழுதப்பட்டது. 

சமீபத்தில் தமிழின் மூத்த எழுத்தாளர், திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் சங்க இலக்கியங்களைக்கற்பதால் கிடைக்கும் நன்மைகளைப்பற்றிப்பேசிய உரை என்னை வெகுவாகக்கவர்ந்தது. 

சென்ற பங்குனி உத்திரத்தில் சுமார் 350 வரிகளை உடைய திருமுருகாற்றுப்படையிலிருந்துத் தொடங்கலாம் என்று படித்துப்பார்த்தேன். 

யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் எழுதிய உரை, தமிழ் இணைய நூலகத்தில் கிடைக்கிறது

அதிலிருந்து நான் புரிந்துக்கொண்டவற்றை, எனக்கும் நினைவில் இருத்திக்கொள்ள ஒரு கற்றல் வாய்ப்பாக அமையும் என்று இங்கே பதிவிடுகிறேன். 



முதலில் திருமுருகாற்றுப்படை வந்த  கதையைப்பார்ப்போம். 

ஆங்கிலத்தில் "Being in the Right Place at the Right time".

என்று சொல்வது அலுவலக சூழலில் அதிகம் பயன்படுத்தப்படும் தொடர். பணி உயர்வு ஒருவருக்குக்கிடைக்கும் பட்சத்தில் அவர் சரியான இடத்தில்,சரியான நேரத்தில் இருந்தார் என்பார்கள். 

சங்கக்கால புலவர் நக்கீரர். அவர் ஒரு முறை இமயமலையை நோக்கிச்சென்றார். இன்று போல, பேருந்து, ரயில் வசதிகள், பயணம் அழைத்துச் செல்லும் முகவர்கள் என்று யாரும் இல்லாத காலம். இரண்டாயிரத்து ஐநூறு  ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தே பயணப்பட்டார்.

வழியில் ஒரு அடர்ந்தக்காட்டில் ஓர் ஆலமரமும் அதனருகே ஓர் ஆறும் இருந்தன. நக்கீரர், அங்கே குளித்துவிட்டு, அந்த மரத்தின் கரையில் சிவபூஜை செய்யத்தொடங்கினார். 

அவர் கண்கள் திறந்திருந்தன. ஒரு  பழுத்த இலை தண்ணீரில் பாதியும், தரையில் பாதியுமாக விழுந்தது. அவர் பார்த்தபோதே நீரிலிருந்த பாதி மீனாகவும், தரையிலிருந்த பாதி பறவையாகவும் மாறியது. ஒன்றை ஒன்று இழுக்க ஆரம்பித்தன. அதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த நக்கீரருக்கு, தனது பூஜையில் கவனச்சிதறல் உண்டானது. 

இன்று நாம் கவனச்சிதறல் இல்லாத கணங்களே இல்லை என்னும் இடத்தில இருக்கிறோம். ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும்போதே, நம் கண்கள் தொடுதிரையைப்பார்க்கின்றன.

அங்கு என்ன நடந்திருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? ஆம்!  

உடனே ஒரு பூதம் ஓடோடி வந்து நக்கீரரைக்கைது செய்து இழுத்துச் சென்றது. "நான் சிவபூஜையில் கவனம் இல்லாமல் இருந்தவர்களைக்  கைது செய்து, ஆயிரம் பேர் வரை  சேர்த்து,ஒரே நேரத்தில்  உண்ணலாம் என்று நினைத்திருந்தேன். நேற்று வரை 999 பேர் கிடைத்தனர். நீ தான் அந்த ஆயிரத்தில் ஒருவன். ஆயிரமாவது ஒருவன்!" என்றது பூதம். 

அந்த பூதம் குளிக்க சென்ற இடைவெளியில்,மற்ற கைதிகள் எல்லாரும் சேர்ந்து நக்கீரரைத்திட்ட ஆரம்பித்தனர். 

நக்கீரர், மற்றவர்களுக்கும் தனக்கும் வழி கிடைக்க, நம்பிக்கையோடு, நேர்மறை எண்ணத்தோடு பாடியதே திருமுருகாற்றுப்படை.

பாடியதோடு அந்த செயல் நிற்கவில்லை. அனைவரும் முருகப்பெருமானின் அருளால் விடுதலை பெற்றனர். 

இன்று நமக்கான மனவிடுதலைக்காக , நிம்மதிக்காக திருமுருகாற்றுப்படையை நாடலாம். அப்படி என்ன இருக்கிறது இந்த சிற்றிலக்கிய நூலில்? வாருங்கள். சேர்ந்தே அனுபவிப்போம். 

இந்த கதையில் அவர் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்தாரா என்பதை  அவரவர் யோசனைக்கே விட்டுவிடுகிறேன். ஆனால், நேர்மறை எண்ணங்கள் இருந்தால், எல்லா இடமும் நல்ல இடம் தான். எல்லா நேரமும் இறைவனை நினைத்தால் விடுதலை கிடைக்கும் என்பதையே இந்த கதை சொல்கிறது.

முருகு என்றால் என்றும் இளமையான என்று பொருள். தலையில் நரை இல்லாத, இளமை அழகோடு என்றும் இருப்பவர் முருகப்பெருமான் அவருடைய ஆறு படைவீடுகளையும் பற்றி விரிவாகப்  பேசுகிறது திருமுருகாற்றுப்படை.


 முதல் தொடர் : 1-6 வரிகள் 

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்

கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொள

உ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்

செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (5)

மறுவில் கற்பின் வாணுதல் கணவன்



எனக்கு இந்த செய்யுளின் தொடக்கம் மிகவும் பிடித்தது. உலகம் என்று தொடங்குவதால் மட்டுமல்ல. இந்த பாடல் தொடங்கும்போதே, உலகின் இருளை நீக்கும் சூரியனோடு தொடங்குகிறது. 

உலகம் என்ற சொல் சங்க இலக்கியங்கள் முதல் கம்பராமாயணம் வரை, பலவற்றிலும் முதல் சொல்லாக, மங்கலச் சொல்லாகப்பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

உலகம் உவப்ப- உலகத்தில் உள்ள உயிர்கள் மகிழுமாறு. சூரியனின் பூரண ஒளியை பல மாதங்களுக்குத் தொடர்ச்சியாய் அனுபவிக்காத பல ஐரோப்பிய தேசங்கள் இருக்கின்றன. இவற்றில் எல்லாம் நிறைய பேர் மனசோர்விற்கு ஆளாகி, தற்கொலைக்கூட செய்து கொள்கிறார்கள். உலகின் முதல் ஆதாரம் சூரியன். அந்த ஒளி இல்லையேல் நாம் இல்லை. எனவே சூரியனைப்போற்றியபடி, அதன் வருகையால் மகிழும் உயிர்களைச்சொல்லி ஆரம்பிக்கிறது திருமுருகாற்றுப்படை. 

ஏர்பு வலன் திரிதரு பலர் புகழ்

ஞாயிறு கடல் கண்டு ஆங்கு

ஏர்பு- எழுந்து, 

வலன் திரிதரு- சுற்றி வந்து

பலர்- பல சமயத்தவரும்

புகழ்- போற்றும்

ஞாயிறு- சூரியன்

கடல் கண்டு ஆங்கு- கடலில் தோன்றுவதைக்கண்டு 

ஓ அற - புற இருள், அக இருள் இரண்டும் அற்றுப்போகும்படி 
இமைக்கும் அவிர் ஒளி-  கண் இமைகளை மூடி மனத்தால் பார்ப்பவர்களுக்கு அவர்கள் மனதில் ஒளியாக விளங்கி (அக இருளைப் போக்குவதாகவும்) 

சேண் விளங்கு ஒளி - கண்ணினாலே பார்க்கின்றவர்களுக்கு தூரத்திலேயே தெரியும் ஒளியாக (புற இருளை நீக்குவதாகவும்)

இது வரை வெளிப்பார்வைக்கு சூரியனைச் சொல்வதாய்த்தோன்றும் பொருளிலும், முருகனை அர்த்தம் கொள்வதாக இவ்வரிகள் அமைந்துள்ளன. 
முருகனின் நிறம் இளம் சூரியனை ஒத்தது. ஞாயிறு கடற்கண்டாங்கு சேண்விளங்கொளி  என்னும் வாக்கியம் , நீல நிறமுடைய கடலின் மீது விளங்கும் சிவந்த நிறத்தையுடைய சூரியனை சொல்வதோடு, நீல மயிலின் மீது விளங்கும் செவ்வொளி போன்ற மேனியை உடைய முருகப்பெருமானையும் குறிக்கிறது.
உ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்-
யார் உறுநர்? உற்றவர்கள். அடியவர்கள். முருகனை நாடி அவரைத்துதிப்பவர்கள்.
மதனுடை- மதன் என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் இருக்கின்றன. செருக்கு, மன எழுச்சி போன்றவை அவற்றில் சில.
அவர்களைத் தாங்கும் மதனுடை , நோன்றாள்
பணை மருள் நோன்றாள் என்று ஒரு வரியை நெடுநல்வாடையில் பார்த்தேன்.
நோன்றாள் என்றால் வலிமையான தாள் (பாதங்கள்).நோன்மை+ தாள் - வலிமையான பாதங்கள் .
உ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்-
தன்னுடைய அடியவர்களை எப்படியும் தாங்க வேண்டும் என்ற மனஎழுச்சியோடு இருக்கும் முருகப்பெருமானின் வலிமையான திருவடிகள். 

செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை- இன்றைய காலத் திரைப்படங்களில் ஒரு கதாநாயகன் குறைந்த பட்சம் இருபது பேரை அடிப்பதைப்பார்க்கிறோம். நம் கதாநாயகன் முருகப்பெருமான், அவரது கை எப்படிப்பட்டது? செறுநர்- பகைவர். தேய்த்த- அழித்த, அவர்களை வலிமை இழக்கச்செய்த
செல் உழர்- செல் என்ற தேடினால், இப்போது கிடைக்கும் பொருள், உயிரின் அலகு (Basic Unit of Life:Cell). அவ்வளவே. செல் என்ற சொல்லுக்கு மேகம் என்றும் இடி என்றும் பொருள் இருக்கின்றன. இங்கு சொல்லப்படும் பொருள் இடி போல விழுந்த அடியைக்கொடுத்த 
தடக்கை- தட என்றால் பெரிய. பெரிய கைகள். 

செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை:பகைவர்களை அழிக்கும் இடி போன்ற அடிகளைக்கொடுக்கக்கூடிய பெரிய கைகளை உடைய முருகப்பெருமான் 

மறுவில் கற்பின் வாணுதல் கணவன்-

மறுவில் கற்பின்:

குற்றம் ஒன்றும் சொல்லமுடியாத உயரிய கற்புநெறியை உடைய தெய்வயானையின்  

வாணுதல்- வாள் +நுதல்- ஒளியை உடைய நெற்றியை உடைய தெய்வயானை

கணவன்- அவளுடைய கணவனான முருகப்பெருமான். 

எது பக்தியில் கற்பு? தான் வழிபடும் கடவுளைத் தன் வாழ்நாள் வரையிலும் விடாது தொடர்வது என்று ஆறுமுக நாவலர் தனது உரையில் சுட்டுகிறார். அப்படி முருகப்பெருமானை விடாது தொடரும் தெய்வயானையை நமக்கு உதாரணமாகக்காட்டுகிறார் நக்கீரர். 



Wednesday, January 26, 2022

எளிதாய்க்கற்கலாம் திருமுறை-விமர்சனம்- திரு.ஆர்.வி.எஸ்

வியாசபாரதம், ரமணர் பற்றிய கட்டுரைகள், எங்களூர் மன்னையின் வாழ்க்கையை விரித்துரைக்கும் ஹரித்ராநதி எனப்பலவும் எழுதிவரும் ஆர்.வி.எஸ் அவர்களின் விமர்சனமும் முகநூலில் உள்ளது.

அது இங்கே மீள்பதிவு :


நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள், தேவாரம் திருவாசகம் போன்ற திருமுறைகளின் மொழிச் செறிவும் அழகும் எப்போதும் வாசிப்பவர்களின் உள்ளத்தைக் கவர்பவை. இவை நம்மை “தமிழண்டா” என்று நெஞ்சு நிமிர்த்த வைப்பவை.

இறைத்தமிழின் செல்வாக்கினை நாம் பல நவீன தமிழ்ப் பாடல்களிலும் கட்டுரைகளிலும் கூட காணலாம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அப்பரின் வாக்கு சகஜமாக தற்போதும் உரையாடல்களில் புழங்கும் வரி. சுடலைப் பொடி பூசியவனை ”என் உள்ளம் கவர் கள்வன்” என்று பாராட்டிப் பாடிய சம்பந்தரின் சொற்கள் இன்று வரை நம் மனதைக் கொள்ளை கொண்டு போகிறது. எண்பதுகளில் உள்ளம் கவர்ந்த கள்வன் என்றொரு திரைப்படம் (பாண்டியராஜன் நடித்தது) கூட வெளிவந்த ஞாபகம். ”நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்பது நாவுக்கரசர் தேவாரமாக முழங்கியது. ”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!” என்ற ஸ்ரீதாயுமானவர் ஸ்வாமியின் திருவார்த்தைகள் இப்போது எதற்கு பிரசித்தி என்பது வாசிப்பவர்கள் அனைவரும் தெரிந்ததே!
திருமதி வித்யா அருண் மன்னார்குடிக்காரர். ஃபேஸ்புக்தான் எங்களின் உறவுப் பாலம். சிங்கையில் வசிக்கிறார். எங்கள் காவிரிக்கரைக்கே உரித்தான மொழி நேசம் இருப்பதோடு பாடல் பெற்ற திருமுறைத் தலங்கள் பல எங்கள் காவிரிக்கரையில் அமைந்திருப்பதினால் திருமுறையிலும் பேரார்வர்த்தோடு இருக்கிறார்.அனுதினமும் பத்து பக்கங்களாவது வாசிக்கும் பழக்கமுள்ள நான் சென்ற சில நாள்களாக அம்மாவின் தேக அசௌகரியத்தினால் எந்தவொருப் புத்தகத்தையும் தொடுவதற்குக்கூட நேரமில்லாமல் இருந்தேன். திருமுறைகளில் எனக்கிருக்கும் ஆர்வத்தைக் கண்டு திருமதி வித்யா அருண் தானெழுதி அகநாழிகை வெளியிட்ட “எளிதாய்க் கற்கலாம் திருமுறை” என்ற புத்தகத்தை பரிசாக அனுப்பியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் (25-30 நாள்கள்) நான் படித்த புத்தகம் இது.
திருவான்மியூர் பண்ணிசைப் பாணர் மா. கோடிலிங்கம் ஐயாவிடம் முறையாக மூன்றாண்டுகள் திருமுறைக் கற்றிருக்கிறார் திருமதி வித்யா அருண். கர்நாடக சங்கீதம் அறிந்தவர்.
பதினோராம் திருமுறையில் அதிரா அடிகள் எழுதிய திருமும்மணிக்கோவையிலிருந்து புத்தகம் துவங்குகிறது. எதற்கும் மனம் தளராமல் இருக்க வேண்டும் என்பதற்காக விநாயகனை வேண்டும் இப்பாடலில் உந்தத் தளரா, சந்தத் தளரா என்று வரிக்கு வரி தளரா எழுதி மந்தத் தளரா மலர்ச்சரணங்கள் வாழ்த்துமினே என்கிறார் அதிரா அடிகள்.
தண்ணீர் உறிஞ்சாத நெட்டி போல இறைபக்தியை உறிஞ்சாத என் நெஞ்சினிலும் நீ நிறைந்தாயே என்று கருவூர்த் தேவர் உருகும் ஒன்பதாம் திருமுறைப் பாடலைக் கொடுத்திருப்பது இந்நூல் ஆசிரியரின் தெய்வ பக்தியையும் திருமுறையினை உள்வாங்கியிருக்கும் பாங்கினையும் காட்டுகிறது.
தருமபுரம் யாழ்முறிநாதர் கோயில் சைவநெறியைப் பின்பற்றும் அனைவரும் அறிந்த தலம். தனது நண்பரான திருநீலக்கண்ட யாழ்ப்பாணர் தனது யாழினால் மீட்டமுடியாத பண்ணை ஞானசம்பந்தப் பெருமான் இந்தத் தலத்தில் பாடியதாக வரலாறு. அந்தத் திருத்தலத்துப் பாடலான “மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்...” இடம்பெற்றிருக்கிறது.
ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பாவில் கருவூரார் எழுதிய பெரியவா கருணை என்று தொடங்கும் பாடல் திருத்துறைப்பூண்டி அருகிலிருக்கும் திருச்சாட்டியக்குடி இறைவின் மீது பாடப்பெற்றது. வார்த்தைகளில் விளையாடிருக்கும் அப்பாடலில் இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்து என்ற வரிகளில் வரும் இளநிலா எண்பதுகளில் எழுதப்பட்ட இளையநிலா பொழிகிறதுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. 🙂 பெரியவா கருணை என்று சேர்த்துப்படிக்கும் போது காஞ்சிப் பெரியவா ஞாபகம் நமக்கு வருவது போல இந் நூல் ஆசிரியருக்கும் வருவதில் ஆச்சரியமென்ன!!
மன்னார்குடியரான அவர் எங்கள் ஊர் பாமணி நாகநாதர் ஆலயத்தினைப் பற்றியும் இந்நூலில் எழுதியிருக்கிறார். பாதாளேச்வரம் என்றழக்கப்படும் தலத்தினை “வயல் சூழ்ந்த பாதாளே” என்று சம்பந்தர் பாடும்போது மன்னையின் மண்வளம் தெரிகிறது. சிவ வைணவ பேதமின்றி இந்தக் கட்டுரையில் எங்கள் கோபாலனின் திருப்படமும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
புத்தகம் முழுக்க ஆங்காங்கே ஆழ்வார்களின் பாசுரங்களும், வள்ளலார், பட்டினத்தடிகள் ஆகியோரின் பாடல்களும் பாயசத்தில் மிதக்கும் முந்திரி போல திருக்குறள்களும் இடம்பெற்றிருக்கின்றன. பக்கங்களைத் திருப்பும் போதும் விரல்கள் உராயாமல் வழவழத் தாளில் அச்சிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் அதில் சம்பந்தப்பட்ட பொருள்கள் மலர்கள் தெய்வங்கள் மனிதர்கள் ஆகியோரின் படங்களும் ஆங்காங்கே பொருத்தமாக இடம்பெற்றிருக்கின்றன. பொன் வாசுதேவனுக்கும் பாராட்டுகள்!
திருமதி வித்யா அருண் அவர்களின் முதல் நூலாம். இன்னும் நிறைய எழுத என் மனமார்ந்த
வாழ்த்துகள்
!
குறிப்பு: புத்தகத்தின் கடைசியில் இதில் இடம்பெற்றிருக்கும் பாடல்களை இணையத்திலும் படித்து ரசிக்கும்படியாக QR code கொடுத்திருப்பது புதுமை! மொபைலில் க்ளிக்கி படிக்கலாம்! 🙂

எளிதாய்க்கற்கலாம் திருமுறை புத்தகம் வெளியீடு

 திருமுறை ஆர்வலர்களுக்கு,

அன்பும் பணிவும் கலந்த வணக்கம். என்னுடைய முதல் நூல் எளிதாய்க்கற்கலாம் திருமுறை வெளியீடு கண்டுள்ளது.

தீநுண்மி சூழலில், எங்களால் விழா எடுக்க முடியாவிட்டாலும், சிங்கப்பூரில் உள்ள தமிழ் சான்றோர்கள், திரு.சுப.திண்ணப்பன் மற்றும், திரு.அ.கி.வரதராசன் அவர்களிடமும் வாழ்த்துப்பெற்றோம்.

ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய ஓதுவார் திரு.சுந்தரமூர்த்தி அவர்களிடமும், எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் அவர்கள் முன்னிலையில் ஆசி பெற்றோம்.




சிங்கப்பூரில் உள்ள ஓதுவாமூர்த்திகள் பலரும், இந்நூல் பல புதிய பாடல்களைக்கொண்டு அமைந்துள்ளதாக பாராட்டுதெரிவிக்கின்றனர்.



தமிழிலும், ஆங்கிலத்திலும் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளாக முத்திரை பதித்துள்ள எழுத்தாளர் ,திருமதி ஜெயந்தி சங்கர் அவர்கள் முகநூலில் பகிர்ந்த மதிப்புரை இதோ.



நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்களும் இந்நூலுக்காக மதிப்புரை ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில் தமிழ் இலக்கிய சுவைக்காகவும் இந்நூல் நல்ல வாசிப்பு அனுபவம் என்ற தன் கருத்தைப்பதிந்துள்ளார் 






இந்நூலை வாங்க விருப்பமுள்ளவர்கள், இந்தியாவில் ,கீழ்க்கண்ட முகவரியைத்தொடர்புகொள்ள வேண்டுகிறேன்.

https://www.aganazhigai.com/shop/Elithai_Karkalam_Thirumurai/

சிங்கப்பூர் அல்லது மற்ற நாடுகளில் இருப்போர் என்னைத்தொடர்பு கொள்ளலாம். (Fb profile: Vidhya Krish) 

அன்புடன்

வித்யா அருண் 


Saturday, September 25, 2021

ஆயிரத்தில் ஒருவன் -திருஆக்கூர் (தான்தோன்றி மாடம்)-சிறப்புலி நாயனார் புராணம்

 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்பது உடைத்து.(குறள்:1057)

இகழ்ந்து, கேலி செய்யாது, கொடுத்து உதவுபவரைக்கண்டால், உதவி கேட்பவரின் மனம் உள்ளுக்குள் மகிழும் என்கிறார் திருவள்ளுவர். 

மனதில் அருள் இருந்தால் மட்டுமே, இரப்பவரை கேலி செய்யாமல், அவர்கள் மனம் மகிழுமாறு உதவ முடியும். 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் பெருமான் அருளுக்கு உருவம் ஆனார். 

இன்றைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலருக்கும் பல வித துன்பங்கள்!.

 நிறைய பேர் வேலை இழக்கின்றனர். தானத்தில் பெரிதாய் சொல்லப்படும் அன்னதானத்தை முடிந்தவர்கள் மனமுவந்து செய்யவேண்டியது இப்போது தான். 

இறைவனுக்கு பால், தயிர், மஞ்சள், தேன்,சந்தனம், இளநீர், விபூதி போன்ற திரவியங்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை எல்லாவற்றிலும் சிறப்பானது ஐப்பசி பௌர்ணமி நாளில் செய்யப்படும் அன்னாபிஷேகம். 

அன்னம் பரப்பிரம்மம் . ஒருவர் என்ன வகையான உணவை சாப்பிடுகிறாரோ, அதைக்கொண்டு, அவர்களின் குணநலன்கள் இருக்கும் என்று ஸ்ரீமத் பகவத் கீதையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. 

தான்தோன்றி என்ற சொல் இலங்கை போன்ற நாடுகளில், தானாக மனம் போன போக்கில் நடப்பவரைக்  குறிப்பிடும் சொல்லாக இன்றைய நாளில் இருக்கிறது. முகக்கவசம் அணியாமல் தான்தோன்றியாய் அலைகிறார்கள் என்று திட்டுகிறார்கள்.

தான் தோன்றி என்ற சொல் மறைந்து இன்றைய தமிழக நாளிதழ்கள் பரவலாக சுயம்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன.

சுயம்பு என்ற சொல் வடமொழி மூலம் கொண்டது. தான் தோன்றி என்ற சொல்லே தமிழ் மூலம் உடையது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை தானாக தோன்றி  சுயம்புவாக இறைவன் காட்சியளித்த தலங்கள் பல இருக்கின்றன. அவற்றில், உறையூர் தான்தோன்றிநாதர் கோயில், கரூர் பக்கத்திலிருக்கும் வைணவ ஆலயமான தான்தோன்றிமலை, மற்றும் திரு ஆக்கூர் எனப்படும் தான்தோன்றிமாடத்தில் இருக்கும் சிவாலயம் போன்வையும் அடங்கும்.

தான்தோன்றிமாடம் எனப்படும் திருஆக்கூரின் சிறப்பு, இங்கு அரசர் ஒருவர் ஆயிரம் பேருக்கு செய்த அன்னதானத்தில், ஒருவர் குறைவாக இருக்க, ஆயிரமாவது நபராக- ஆயிரத்தில் ஒருவராக, சிவபெருமான் வந்து உணவருந்தினார். இன்றும் உற்சவருக்கான திருநாமம் ஆயிரத்தில் ஒருவன்;கையில் கோலேந்தி நிற்கிறார்.
  
மாடக்கோயில்கள் என்னும் வகையான கோயில்கள் தமிழகத்திலுள்ள பலவகையான கோயில்களில் ஒரு வகை.

மாடக்கோயில் மற்றும் கரக்கோயில் :
(உள்படம்: திருக்கடம்பூர் ஆலயம் )

தேர் போன்ற அமைப்புள்ள கருவறை உள்ள கடம்பூர் கரக்கோயில் வகையை சார்ந்தவை. 

மாடக்கோயில் என்பது யானை ஏறமுடியாத வகையில் படிக்கட்டுகளோடு அமைந்த கருவறைக்கொண்டவை.

குடவாசல், அம்பர்மாகாளம், திருமருகல், திருஆக்கூர் எனப்படும் தான்தோன்றிமாடம் போன்றக் கோயில்கள் மாடக்கோயில் வகையை சேர்ந்தவை. 



Attribution: Ssriram mt, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons for the picture of Kudavasal


நாம் இந்தப்பதிவில் பார்க்கப்போவது திருஆக்கூர் என்னும் தான்தோன்றிமாடம் பற்றிய பாடல்களைத்தான்!
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கணான் என்னும் மன்னன் எழுப்பிய 64 மாடக்கோயில்களில் ஒன்று திருஆக்கூர் எனப்படும் தான்தோன்றி மாடத்தில் அமைந்துள்ள சிவாலயம் ஆகும்.
சிறப்புலி நாயனாரின் ஊர் திருஆக்கூர்.

 இந்தப்பதிவில் ,பெரியபுராணத்தில் வரும் சிறப்புலி நாயனார் பற்றிய பாடல்களைப் படித்து உணரப்போகிறோம். 

சிறப்புலி நாயனாரைப் பற்றி பெரியபுராணத்தில் ஆறு பாடல்கள் இருக்கின்றன. சிறப்புலி நாயனார், சிவனடியார்களுக்கு அமுதூட்டும் தொண்டினைத்  தன் வாழ்நாள் முழுவதும் செம்மையாகச் செய்தார். 

சிறப்புலி நாயனார், 63 நாயன்மார்  வரிசையில் முப்பத்தைந்தாவது நாயன்மார். இவருக்கு அடுத்து வருபவர், பிள்ளைக்கறியோடு திருஅமுதுபடைத்த சிறுத்தொண்ட நாயனார் என்பது குறிப்பிடத்தக்கது 


Friday, April 02, 2021

சிவபெருமானின் திருவடியைக்காண விளமல் செல்வோம்!

 

நாம் எல்லாரும் பரவலாக அறிந்த எழுத்தாளர் திரு.கோமல் ஸ்வாமிநாதன். எனக்கு விளமல் என்ற ஊரின் பெயரைக் கேட்டதும் கோமல் ஞாபகம் வந்தது. இரண்டு ஊர்களுமே திருவாரூர் அருகில் இருக்கின்றன. 

பதஞ்சலி மனோஹரர் கோயில்,விளமல்



இந்த கோயில் திருவாரூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 

இம்மையே உம்மை சிக்கென்னப்பிடித்தேன் என்று மாணிக்கவாசகர் ஈசனின் திருவடியைத்தான் பற்றினார். இறைவனின் திருவடிப்பெருமையை நமக்கு உணர்த்தும் தலம் விளமல். 

பதஞ்சலி என்பது இன்றைய அளவில் வர்த்தகபெயராக  பலரும் அறிந்த ஒரு பெயர். பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தை எழுதியவர் .பாதி உடலில் பாம்பின் உருவம் கொண்டவர்.

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்

என்றிவர் என்னோ டெண்மரு மாமே.  

இந்த திருமந்திரத்தில் திருமூலர், தம்மோடு சேர்த்து, சிவபெருமானின் (நந்தியின்) அருள் பெற்ற நால்வரான சனகர், சனந்தனர், சனாதனர் , சனற்குமாரர், சிவயோக முனிவர் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கிரபாத முனிவர் ஆகிய எட்டுப்பேரையும் குறிப்பிடுகிறார். 

சிதம்பரம் கோயில்- தில்லை, ஆதித்தலமாக போற்றப்படுவதாகும்.

சிதம்பரம் கோயில், பதஞ்சலி முனிவரும்,வியாக்கிரபாத  முனிவரும் ஆனந்த தாண்டவத்தைக் காண தவம் செய்ததால், அவர்களுக்கு சிவபெருமான் ஆனந்த தாண்டவத்தைக்காட்டி அருளிய தலம் . 

அதே போல  அஜபா நடனமும், திருவடித்தரிசனமும் அவர்கள் இருவரும் வேண்ட, அஜபா நடனத்தை அவர்கள் இருவருக்கும் திருவாரூரில் காட்டி அருளினார்.

பதஞ்சலி முனிவர், மண்ணால் ஆன சிவலிங்கத்தைப்பிடித்து விளமல் தலத்தில் வழிபட்டதால், அவர் பெயரோடு சேர்த்து, பதஞ்சலி மனோஹரர் என்று இறைவனும் அழைக்கப்படுகிறார். 

இந்த விளமல் தலத்தில் ,  பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாத முனிவரும் திருவடித்தரிசனம் அருளப்பெற்றனர். 

இங்கு கோயில் கொண்டிருக்கும் அம்மையின் பெயர் மதுரபாஷினி . இன்றும் வாய்ப்பேச்சு வராத குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்துகொள்ளும் கோயிலாகவும் இந்த கோயில் இருக்கிறது. 

திருஞானசம்பந்த பெருமான் விளமல் திருப்பதிகத்தில்,  இறைவனின் திருவடியைப் பற்றிப் பாடுகிறார். 

அந்தப்பதிகத்தின் பாடல்கள் சிலவற்றைத்தான் இந்தப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

மத்தக மணிபெற மலர்வதொர்

  மதிபுரை நுதல்கரம்

ஒத்தக நகமணி மிளிர்வதொர்

  அரவினர் ஒளிகிளர்

அத்தக வடிதொழ அருள்பெறு

  கண்ணொடும் உமையவள்

வித்தகர் உறைவது விரிபொழில்

  வளநகர் விளமரே.  (03-088)


அருள்பெறு கண்ணோடும் உமையவள் -அருளை பொழிபவள் அம்பிகை, அருள் நிறைந்த கண்களை உடையவள். அடியவரின் துயரம் பொறுக்காது, அருள் செய்பவள் 

வித்தகர்- வித்தகர்- ஞானம் உடையவர்,சிவபெருமான். பல திருப்புகழ்களில் அருணகிரிநாதரும் வித்தகா என்று முருகப்பெருமானைப் போற்றியுள்ளார்.  வித்தகா என்ற சொல் ஞானமூர்த்தி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

உறைவது விரிபொழில்

  வளநகர் விளமரே-அம்பிகையும் சிவபெருமானும் உறைகின்ற விரிந்த சோலைகள் சூழ்ந்த வளமான நகர் விளமல் 

மத்தகம் அணி (அழகு) பெற,  -மத்தகம் என்ற சொல்லை , யானையின் நெற்றிக்கு தான் இப்போது பயன்படுத்துகிறோம். 

அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய குறுநாவல் ஒன்றின் பெயர் மத்தகம் .

மத்தகம் என்பது சிவபெருமான் தலையின் மேல் என்ற பொருளில் இந்த பதிகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த தலையின் முகப்புப்பகுதிக்கு அழகு சேர்க்குமாறு,

மலர்வது ஓர் மதி -ஒரு பிறை சந்திரன் மலர்ந்திருக்கிறது. பூவைப்போல, மதியை மலர்ந்திருக்கிறது என்று சொல்கிறார் சம்பந்தப்பெருமான்.

புரை நுதல்-புரை (ஒத்த)- நுதல் (நெற்றி)- இந்த நெற்றி அழகுக்கு அந்த நெற்றியைத்தவிர ஈடாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

நகமணி ஒத்தக-கரங்களில் உள்ள நகங்களைப்போல 

  மிளிர்வதொர்

  அரவினர் -ரத்தினங்களை வாயில் கொண்ட ஐந்து தலை நாகத்தை 

ஒளிகிளர் கரம்-ரத்தினங்களின் ஒளி மிளிர்கின்ற பாம்பினைத்தன். தன் கையில் கங்கணமாகச்சூடியிருப்பவர் சிவபெருமான்.

அத்தக வடிதொழ- அவரின் மேலான திருவடியைத்தொழ, நாம் விளமலுக்குச் செல்வோம் 

அதே பதிகத்தின் மற்றொரு பாடல் :

பண்டலை மழலைசெய் யாழென

  மொழியுமை பாகமாக்

கொண்டலை குரைகழ லடிதொழு

  மவர்வினை குறுகிலர்

விண்டலை யமரர்கள் துதிசெய

  அருள்புரி விறலினர்

வெண்டலை பலிகொளும் விமலர்தம்

  வளநகர் விளமரே.

இந்தப்பாடல் சொல்வது சிவபெருமான் அடியவர்களை வினைகள் சாராது என்னும் நம்பிக்கை மொழி. 

பண்டலை மழலைசெய் யாழென

  மொழியுமை பாகமாக்

கொண்டு 

பண் தலை மழலை செய் யாழ் என மொழி உமை பாகமாக கொண்டு-

சிலர் பேசுவதே பாடுவதைப்போல இருக்கும். உமை அம்மையின் பேச்சு, பண்ணோடு கூடிய இசை மழலையாக இருக்கிறது. அது யாழின் இனிமையை ஒத்ததாக இருக்கிறது. இத்தனை இனிமையான பேச்சுமொழியைக்கொண்ட உமையவளைத்தன் உடலில் ஒரு பாகமாகக்கொண்டவர் சிவபெருமான் .

அலை குரைகழ லடிதொழு

  மவர்வினை குறுகிலர்-அலை (அசைகின்ற), குரை (ஒலிக்கும்), கழலடி தொழும் ,அவர் வினை குறுகிலர்.

வீரக்கழல் அணிந்திருக்கும் சிவபெருமானின் திருவடியைத்தொழுபவர்க்கு வினைகள் சாராது. 

விண்டலை யமரர்கள் துதிசெய

  அருள்புரி விறலினர்- விண் தலை அமரர்கள் (தேவர்கள்),துதி செய்ய அவர்களுக்கு அருள்செய்யும் விறலினர் (அருட்பெருக்கோடு கூடிய வலிமை உடையவர்) சிவபெருமான். 

வெண்டலை பலிகொளும் விமலர்தம்

  வளநகர் விளமரே."பிரம்மன் தலையாம் ஓடுடையார் " என்று திருக்கழிப்பாலை தேவாரத்தில் ஒரு வரி வரும். அதே தான் இங்கும் சொல்லப்படுவது. 

பிரம்மன் தலையை ஓடாகக்கொண்டு , வீடுகள் தோறும் பலி ஏற்றவர் சிவபெருமான். 

விமலர்- பாசம் என்னும் பற்று நீக்கியவர்; தெளிவானவர். அந்த விமலனாகிய சிவபெருமான் வீற்றிருப்பது, வளநகராகிய விளமல் ஆகும். 

அந்த சிவபெருமானின் திருவடியைத்தொழ தொழ, நமக்கும் மனதில்  தெளிவு பிறக்கும், வினைகள் நம்மை வந்து சேராது. 

இந்தக்கோயில் பற்றிய மேல் விவரங்களுக்கு, திரு.வேலுதரன் அவர்களின் இணையப்பக்கத்தையும் கொடுத்துள்ளேன் 

https://veludharan.blogspot.com/2021/03/vilamal-patanjali-manohar-temple.html

Saturday, March 13, 2021

மனக்கவலை மாற்றும் திருக்கோளிலி தேவாரம்!

 சப்த விடங்க தலங்களில் ஒன்று திருக்கோளிலி. உளியைக்கொண்டு செய்யப்படாத, சுயம்புமேனி சிவலிங்கங்களைக்கொண்ட தலங்கள் சப்தவிடங்க தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில், ஆதித்தலமான திருவாரூரும் ஒன்று. 

திருக்கோளிலி தலத்தில் தேவார மூவரும் பாடியிருக்கிறார்கள். எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் இருந்தாலும், மனக்கவலையோடு, இங்கே தூக்கம் தொலைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

உலகமே கொரோனா தீநுண்மியின் தாக்கத்தில், பயணங்கள் இல்லாமல், ஸ்தம்பித்துபோய் இருக்கும் இந்தக்காலத்தில், நம் அனைவரின் மனதிலும்  எதிர்காலம் பற்றிய கவலை இல்லாமல் இல்லை.

கோள் என்ற சொல் இந்தத்தேவாரத்தில், மாறுபாடு, நவகிரஹங்களால் ஏற்படும் துன்பம் என்ற பொருளில் ஞானசம்பந்தப்பெருமானால் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப்பதிவில் உள்ள தேவாரப்பாடல், முதல் திருமுறையில் உள்ள தேவாரப்பதிகம் ஆகும் (01-062).

இன்றைய நாளில் இந்த ஊரின் பெயர் திருக்குவளை என்றும் சொல்கிறார்கள். குவளை மலர்களால் தினமும் அர்ச்சனை செய்யப்படுகிறது. 


குவளை என்பது அல்லிமலரைக்குறிக்கும். நீர் வளமுள்ள நிறைய குளங்கள் அமைந்திருக்கும் பகுதியில் அமைந்த சிவாலயம். 

அல்லி மலரை, ஆம்பல் ,செங்கழுநீர் என்றும் சொல்கிறார்கள். சென்னையில் திருவல்லிக்கேணி அல்லி மலர்கள் அதிகம் இந்தப்பகுதி. 

இப்போது கலங்கிய நீரை தெளிவாக்குவதற்குக்கூட ரசாயனங்களைப்பயன்படுத்துகிறோம். சென்னை போன்ற நகரங்களில், குடிநீரை காசுக்கொடுத்து வாங்குபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். 

இந்தத்திருக்கோளிலி தலத்தின் தலவிருட்சம் தேற்றா மரம். கலங்கிய நீரில் இந்த மரத்தின் கொட்டைகளை அரைத்துப்போட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். எந்த விதமான உடல் நலிவு உள்ளவர்களையும் தேற்றும் வகையானது இந்த தேற்றா மரம். 


கிளை கிளைக்கும் :

நாளாய போகாமே 

  நஞ்சணியுங் கண்டனுக்கே

ஆளாய அன்புசெய்வோம் 

  மடநெஞ்சே அரன்நாமம்

கேளாய்நங் கிளைகிளைக்குங் 

  கேடுபடாத் திறம்அருளிக்

கோளாய நீக்குமவன் 

  கோளிலியெம் பெருமானே

அறியாமை உடைய மடநெஞ்சே!. நாளை என்று தள்ளிப்போடாமல், இன்றே நஞ்சைத்தன் தொண்டையில் அடக்கி, தம் அடியவரைக்காத்த திருநீலகண்டரை நினைந்து அன்பு செய். அரன் நாமத்தைக்கேள். அதனால், உன் கிளை, கிளைக்கும். நீ மட்டுமல்ல, உன் சுற்றத்தினரின் (கிளை) துன்பங்களும் தீரும். கேடுபடாத திறம் அருளி (துன்பம் இல்லாத வகை அருளி) ,கோள்களால் ஏற்படும் துன்பத்தையும் போக்குவான் திருக்கோளிலியில் வீற்றிருக்கும் எம்பெருமான். 

ஆடரவத் தழகாமை யணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.

மலர்போன்ற மென்மையான சேவடிகளைக்கொண்டவர் சிவபெருமான். அவ்ரதுதிருவடிகளை மென்மையான குவளை மலர்களைக்கொண்டு அர்ச்சிப்பது எத்தனை பொருத்தம் கொண்டது!

கேழல்- பன்றி 

ஆடரவத்து-ஆடுகின்ற பாம்பை அணிந்து 

அழகு ஆமை அணி - அழகிய ஆமை ஓட்டையும்  

கேழல் கொம்பு ஆர்த்த -பன்றியின் கொம்பையும் மாலையாகக்கோர்த்து அணிந்திருக்கிறார் சிவபெருமான். 

தோடு அரவத்து ஒரு காதன்- ஒரு காதில் பாம்பே தொடங்க இருக்கிறது (ஒப்பிட்டு நோக்க. தோடுடைய செவியன் )

துணைமலர் நல்சேவடிக்கே -இருமலர்களைப்போன்ற மென்மையான சேவடியை 

 பாடு அரவத்து இசை பயின்று பணிந்தெழுவார்  - பாட்டோசையுடன் துதிபாடல்களைப்பாடி தொழுபவர்களுக்கு 

தம்மனதில் கோடு அரவம் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே-

மனதில் உள்ள மாறுபாட்டை நீக்குபவர் திருக்கோளியில் உள்ள திருக்கோளிலி நாதர் ஆவார்.



இந்தத்தலத்தில் மற்றொரு அற்புதம் சுந்தர மூர்த்தி நாயனாருக்காக குண்டையூர் கிழார் கொடுத்த நெற்பொதிகளை சுமந்து வர ஆட்கள் இல்லாமல் போகவே, சுந்தரமூர்த்தி நாயனார், நீள நினைந்தடியேன் எந்தத்தொடங்கும் தேவாரப்பாடலைப்பாடியவுடன், பூதகணங்கள் அவருக்கு உதவின. இதை மாசிமகத்தன்று ஒரு திருவிழாவாக இன்றும் கொண்டாடுகின்றனர்.

Monday, January 04, 2021

வடதிருமுல்லைவாயில் -லயம் ஜதி பிழையாத நடனம் !- திருமுல்லைவாயில் சுந்தரர் தேவாரம்- ஏழாம் திருமுறை

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்

    கொடியிடை உமையவள் காண

ஆடிய அழகா அருமறைப் பொருளே

    அங்கணா எங்குற்றாய் என்று

தேடிய வானோர் சேர்திரு முல்லை

    வாயிலாய் திருப்புகழ் விருப்பால்

பாடிய அடியேன் படுதுயர் களையாய்

    பாசுப தாபரஞ் சுடரே!

திருமுல்லைவாயில் சுந்தரர் தேவாரம்- ஏழாம் திருமுறை 



(Picture Courtesy: Veludharan.blogspot.com)

திருமுல்லைவாயில் பாடல் பெற்ற 22வது தொண்டை நாட்டுத்தலம்.மேலே உள்ள சிற்பம், தலவரலாற்றைக்குறிக்கிறது.

 தொண்டைமானின் யானையின் கால்களில் முல்லைக்கொடி சுற்றிக்கொண்டது. அவற்றை நீக்கும் போது, எழுந்த குருதியில் தான் இந்தத்தலம் சிவபெருமானின் உறைவிடம் என்று அறியப்பட்டது

பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அடையாற்றில் உள்ள புற்றுநோய் மையத்தில் பணியாற்றிய திரு.செல்வம் என்பவரின் குழுவோடு சேர்ந்து உழவாரப்பணி செய்யும் பேறு கிட்டியது. நாங்கள் சென்ற கோயில் ஆவடிக்கு அருகில் உள்ள வடதிருமுல்லைவாயில். 



டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் சிங்கப்பூரில் நடந்த நாற்பதாவது திருமுறை மாநாட்டில், மேலே கொடுத்துள்ள பாடலை, மாணவியர்கள் அருமையாகப்பாடினார்கள். அவர்கள் பாடிய ராகம் காம்போதி (தக்கேசி பண்).



அதைக்கேட்டபோது மீண்டும் திருமுல்லைவாயில் பற்றிய நினைவுகளை அசைபோடலானேன். 

தோழராக இறைவனைப்பாவித்த சுந்தரர், கம்பீரம் கலந்தத்தொனியில் பாடுகிறார்.

பாடலின் பொருளைப்பார்ப்போம். 

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்

    கொடியிடை உமையவள் காண

ஆடிய அழகா


எப்போதும் தாளத்தோடும் சுருதியோடும் அமைந்த பாடல் சுகமானது. மனக்கவலைகளை மாற்றும் அருமருந்தாக வல்லது. அப்படித்தான், அழகர் ஆடும் நடனமும், லயம் எனப்படும் தாளம் பிசகாமல் இருக்கிறது. அதைக்கொடியிடை கொண்ட அம்மை பார்க்கிறாள். இந்த வடதிருமுல்லைவாயிலில் உள்ள அம்மையின் பெயர் கொடியிடை அம்மை. 

அருமறைப் பொருளே

மூவர் பாடிய தேவாரப்பாடல்களில் பல இடங்களில் வேதமாகவும், வேதத்தின் பொருளாகவும் சிவபெருமான் போற்றப்படுகிறார். சுந்தரரும், அருமறையின் பொருளே என்று பாடுகிறார். 

 அங்கணா எங்குற்றாய் என்று

தேடிய வானோர் சேர்திரு முல்லை

    வாயிலாய்

அழகான கண்களை உடையவனே (அங்கணா). ஸ்ரீரங்கம் ரங்கநாதப்பெருமானின் கமலக்கண்ணழகைப்பாடும் பாசுரங்கள் பல. சிவபெருமானின் கண்ணழகைபோற்றும் தேவாரம் இது. 

நீ எங்கே இருக்கிறாய் என்று உன்னைத்தேடிய வானவர்களுக்கு கூட அகப்படாமல், நீ இந்தத் திருமுல்லைவாயில் தலத்தை சேர்ந்தாய். 

திருப்புகழ் விருப்பால்

பாடிய அடியேன் படுதுயர் களையாய்

    பாசுப தாபரஞ் சுடரே!

உனது திருப்புகழைப்பாடுகின்ற விருப்பத்தோடு, பல தலங்களுக்கும் சென்று பாடும் எனது, துயரத்தை (துன்பத்தை) போக்குவாய்.

பாசுபதா- உயிர்களின் தலைவனே
பரஞ்சுடரே- மேலான ஒளி போன்றவனே.

இந்தப்பாடலில் திருப்புகழ் என்ற சொல் வருகிறது.


 பின்னாளில் வந்த அருணகிரிநாதர் திருப்புகழ் இந்தத்தலத்திலும் பாடியிருக்கிறார். Thirupugazh link:

இந்தத் திருப்புகழில் சிவபெருமான் நடனம் ஆடுவது பற்றிக்குறிப்பிடப்படுகிறது. உன் அடியார்களோடு சேர்ந்து, சிறந்த நெறியைப்பிடித்தொழுகும் வாழ்வை எனக்குத்தருவாய் என்று அருணகிரியார் இறைஞ்சுகிறார். 

வள்ளலார் பாடல் :

தேன் என இனிக்கும் திருவருட்கடலே எனத்தொடங்கும் அருளியல் வினாவல் திருவருட்பாவில் சுந்தரா, சுந்தரன் தூதா என்று வள்ளலார், சிவபெருமானை அழகன் என்றும், சுந்தரமூர்த்தி நாயனாரின் தூதர் என்றும் பாடிப்பரவுகிறார். 

சுந்தரமூர்த்தி நாயனார், அருணகிரிநாதர், மற்றும் வள்ளலார் பாடியத்தலம் இது.

சென்னையை சுற்றி, திருவுடை(மேலூர்), வடிவுடை ( திருவொற்றியூர்) மற்றும் கொடியிடை (வடதிருமுல்லை வாயில்)அம்மன் கோயில்களுக்கு பௌர்ணமி தோறும் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகம்.

இதில் கொடியிடை அம்மன் க்ரியா சக்தியாவாள். நாம் சரியாகக்கேட்டால், அள்ளிதருவாள் அம்மை.

அம்மையையும் அப்பனையும் தரிசித்து வாருங்கள் !

Saturday, September 21, 2019

திருவேகம்பம் - திருவிருக்குக்குறள்

குறள் என்றாலே நமக்கெல்லாம் திருக்குறள் தான். 

சிறிய ,இரண்டு அடிக்குள் உள்ள பாடல்வகையை குறள் என்று அழைத்திருக்கிறார்கள். 
திருமுறையில் உள்ள பலவகையான செய்யுள் வகைகளில் திருவிருக்குக்குறளும் ஒன்று. 

திருக்குறள் தெரியும்;அது என்ன திரு+இருக்கு+குறள்? 

ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்கள் ஒலிப்பண்புகள் கொண்டவை.அவற்றை சரியாக சொல்வதன் மூலம், மனஒருமையும், மற்ற நலன்களும் அமையப்பெறும்.

சரி, வடமொழி  எனக்கு பழக்கமான மொழி அல்ல; அதை ஒரு சாரார் மட்டுமே எடுத்துக்கொண்டு விட்டார்கள் என்று சொல்பவர்களுக்கு, எல்லாருக்கும் தினமும் மனதில் மந்திரம் போல நிற்க, சிறிய அளவிலான சொற்களைக்கொண்டு, அதே நற்பலன்களைத்தரும் வகையில் திருஞானசம்பந்தர், பல திருவிருக்குக்குறள் பதிகங்களைப்பாடி உள்ளார். 

இந்தப்பதிவில் இருக்கும் திருவிருக்குக்குறள், காஞ்சி ஏகாம்பரேஸ்வரரைப்பற்றியது. பெரும்பாலான பாடல்கள் "வினை"என்ற சொல்லில் தான் முடிகிறது. 

இதைப்போலவே  சீர்காழி, திருவாரூர், மதுரை, திருவீழிமிழலை, திருவிடைமருதூர் போன்ற தலங்களுக்கும் திருவிருக்குறள்களைப்பாடியுள்ளார் திருஞானசம்பந்தர். 

மனம், சொல், செயல் என்ற மூன்றாலும் நாம் பிறருக்கு செய்யும் நன்மையையும் தீமைக்கும் நமக்கு புண்ணியபலன்களும் பாவங்களும் வந்து சேருகின்றன.

சில மதங்களில் ஏன் துன்பமான பிறவி இருக்கிறது என்பதற்கு பதிலே கிடையாது. சனாதன தர்மம் எனப்படும் இந்துமதத்தில் முழுமையான விடைகள் எல்லாவற்றுக்கும் இருக்கின்றன. விடைகள் அவரவர் தேடுகின்ற அளவிலேயே கிடைக்கின்றன.

என் தேவார ஆசிரியர், பெரும்பாண நம்பி திரு.கோடிலிங்கம் ஐயா சொல்லுவார், என்ன பாத்திரம் கொண்டு வருகிறாயோ, அந்த அளவில் தான் நிறைக்க முடியும் என்று. 

ஏன் நமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்று நம் மனம் ஆராயும்போது, பலநேரங்களில் நாம் பிறருக்கு ஏற்படுத்திய கஷ்டம் நினைவில் இருப்பதில்லை. 
வினைகள் யாவும் நினைவில் நிற்பவை அல்ல. வாழ்க்கை அவர் அவர் வினை வழி தான். 

"தர்மம் தலைகாக்கும் ;தக்க சமயத்தில் உயிர்காக்கும் "என்ற திரைப்பாடலுக்கு தலையாட்டும் நம் மக்கள், ஏன் தர்மம் தலையைக்காக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும்!. நல்ல செயல்களின் பலனாகத்தான் நம் தலை காக்கப்படும்.

"நகரேஷு காஞ்சி" என்று ஒரு வாக்கியம் சொல்வார்கள். நகரங்களில் காஞ்சிபுரம் போன்ற சிறப்புடையது ஒன்றுமில்லை என்று. தமிழ் பேசும் மக்களின் கோயில்களில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் , காலத்தால், நாலாயிரம் வருடங்களுக்கு முன்பானது என்பதற்கான சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியங்களிலும் காஞ்சிபுரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. 
இந்தக்கோயிலை பெரிதாக நிர்மாணித்துக்கட்ட ஆதி சங்கரர் அரும்பங்கு ஆற்றி இருக்கிறார். 

முத்துசாமி தீக்ஷிதர், பட்டினத்தார் , சைவக்குரவர்கள் நால்வர் என்று பலரும் இந்தத்தலத்தைப்பாடி இருக்கிறார்கள். 

பக்தியின் வழி அறத்தைப்பற்றி நட என்று தான் சமய இலக்கியங்கள் சொல்கின்றன.
சந்தக்கவிகளில் அருணகிரிநாதரைப்போல, திருஞானசம்பந்தரைப்போல, இனி வரும் காலங்களில் யார் எழுதப்போகிறார்கள்?  

இந்தப்பதிகம்,காஞ்சி திருவிருக்குக்குறள்  மூன்றாம் திருமுறையில் இருக்கிறது. 

கருவார்கச்சித் , திருவேகம்பத்
தொருவாவென்ன , மருவாவினையே

(கருவார் கச்சி திருஏகம்பத்து ஒருவா என்ன மருவா வினையே)
ஏகாம்பரம் என்ற பெயர் பரவலாக தமிழ் மக்களிடையே இருக்கிறது.

ஏகம் என்றால் ஒன்று. ஆம்பரம் என்றால் மாமரம். ஒற்றை மாமரத்தின் கீழே உமை அம்மை கையால் பிடித்த மண்ணால் ஆன திருமேனி கொண்டவர் ஏகாம்பரேஸ்வரர். இந்தத்தலம் பஞ்சபூதங்களில் பூமிக்கான தலமாகும். 

ஆதி பகவான் முதற்றே உலகு என்கிறது வள்ளுவரின் குறள். கருவாக -எல்லாவற்றுக்கும் கருப்பொருளாக இருப்பவர் கச்சி ஏகாம்பரேஸ்வரர். அவரை வணங்க நம்மை வந்து தீயவினைகள் சேராது. 

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

நல்வினை தீவினை இரண்டுமே மீண்டும் பிறப்பைத்தரும். திருவள்ளுவர், இறைவனின் பெருமையை, புகழை மட்டுமே விரும்புகிறவர்களுக்கு, இந்த இருவினைகளும் அண்டாது என்கிறார்.
அதே போல சம்பந்தப்பெருமானும் ,
படமார்கச்சி , இடமேகம்பத்
துடையாயென்ன , அடையாவினையே.என்கிறார் .

படமார்கச்சி= சித்திரவேலைப்பாடுகள் கொண்ட,  (படம்-கொடி), கொடிகள் அசைந்து ஆடும் மாடங்களைக்கொண்ட காஞ்சிபுரத்தைத்தன் இடமாகக்கொண்ட ஏகாம்பரேஸ்வரரை, எங்கள் தலைவன் என்று கொண்டு, அவரை போற்ற, வினைகள் வந்து சேராது.

"விநாயகனே வினைதீர்ப்பவனே"; வேலுண்டு வினையில்லை" போன்ற பாடல்களை அடுத்த முறைகேட்டால், வினைப்பற்றிய இந்தப்பதிகமும் நிச்சயம் நினைவில் இருக்கும். 

மனம், வாக்கு, செயல் என்ற மூன்றிலும் எந்த வினை செய்கிறேனோ, அவை அனைத்தும் இறைவனுக்கு நான் பிரசாதமாகப்படைப்பவை என்ற எண்ணம் தோன்றிவிட்டால், கெட்ட எண்ணங்களோ, சொல்லோ, செயலோ எங்கிருந்து உருவாகும்? 

செப்டம்பர் 11 மஹாகவி பாரதியாரின் நினைவுநாள்.
எந்தமொழியில் எழுதி இருந்தாலும், துக்காராம், தியாகராஜர், பாரதியார் என எல்லாரும் சொல்வது ஒன்று தான்! மனதை வெளுக்க கடவுளின் பெயரைத்தவிர  வேறு வழி இல்லை. 

துணி வெளுக்க மண்ணுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல் வெளுக்க சாம்பலுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மணி வெளுக்க சாணையுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம் வெளுக்க வழியில்லை—எங்கள்

முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

முழுபதிகமும் கீழே:
காஞ்சி திருவிருக்குக்குறள்:

கருவார் கச்சித், திருவே கம்பத்
தொருவா வென்ன, மருவா வினையே.  1 

மதியார் கச்சி, நதியே கம்பம்
விதியா லேத்தப், பதியா வாரே.  2 

கலியார் கச்சி, மலியே கம்பம்
பலியாற் போற்ற, நலியா வினையே.  3 

வரமார் கச்சிப், புரமே கம்பம்
பரவா ஏத்த, விரவா வினையே.  4 

படமார் கச்சி, இடமே கம்பத்
துடையா யென்ன, அடையா வினையே.  5 

நலமார் கச்சி, நிலவே கம்பம்
குலவா வேத்தக், கலவா வினையே.  6 

கரியின் னுரியன், திருவே கம்பன்
பெரிய புரமூன், றெரிசெய் தானே.  7 

இலங்கை யரசைத், துலங்க வூன்றும்
நலங்கொள் கம்பன், இலங்கு சரணே.  8 

மறையோன் அரியும், அறியா வனலன்
நெறியே கம்பம், குறியால் தொழுமே.  9 

பறியாத் தேரர், நெறியில் கச்சிச்
செறிகொள் கம்பம், குறுகு வோமே.  10 

கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்
மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே.  11