Thursday, February 12, 2015

செடியாய வல்வினைகள் தீர்ப்பாய்!

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 
                                                                                 (அப்பர் தேவாரம் 6.61.2)

இறைவனின் பெருமையைப் பாடுகின்ற தேவாரப்பதிகங்களில்,சாதாரண மக்களுக்குக்கான இறைவழிபாடு குறித்த 

அறிவுரைகளையும் இலைமறைக்காயாக அங்கங்கே புகுத்தியிருக்கிறார் அப்பர் பெருமான்.

1.எப்போது வழிபட வேண்டும்? 

வழிபாட்டுக்கு மிக உகந்த நேரமாக சொல்லப்படுவது, அதிகாலைப்பொழுது.

நாம் அதிகமாய் அறிந்த திருப்பாவையும், திருவெம்பாவையும், வைகறைப்பொழுதில் எழுந்து, இறைவனை எண்ணி கசிந்துருகி வழிபட வலியுறுத்துகின்றன.


இப்போதெல்லாம்,தினமும் 
சீக்கிரம் எழுந்திருப்பவர்கள் குறைந்து வருகிறார்கள்.
பெரும்பாலானோர்க்கு, ஒரு பக்கம் வேலை பளு; மற்றவை நாமாக வரவழைத்துக்கொள்ளும், எண்ண சிதறல்கள் (இரவில் நெடு நேரம் கைப்பேசி, கணிணி என)- அதனால் நேரமாக தூங்க முடிவதில்லை.

சின்னப்பிள்ளைகள் கூட சொல்கின்றன- பள்ளி நாட்களில் ஒரு நேரத்திலும், விடுமுறையில்,வேறு நேரத்திலும், எழுகிறோம் என.


 ஒப்பிட்டுக்காண்க:.
மலர்ந்த மலர்த்தூவி மாமனத்தைக்கூப்பிப்
புலர்ந்தும் புலராத போதும்-கலந்திருந்து
கண்ணீர் அரும்பக்கசியவர்க்குக் காண்பெளியன்
செண்ணீர் சடைக்கரந்ததே!
(திருவிரட்டை மணிமாலை- கபில தேவர்)

விடிவதுமே திரு நீறு அணிந்து வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்கிறார் அப்பர்.
கபில தேவரும், புலர்ந்தும் புலராத பொழுதில் வழிபட வேண்டும் என்கிறார்.

அதிகாலையில் கோயிலிலுக்கு சென்று, வழிபடும் போது, மனம் மிக எளிதாக, இறைவழிபாட்டில் ஒன்றும்.

எண்ணிலடங்கா பல சமய இலக்கியங்கள் 
அதிகாலையில் இறைவனை வழிபட வேண்டும் என்பதைச் சொல்லி, அப்படி வழிபட்டால்இறைவனின் திருவருள் கிட்டும் என்ற பயனையும் சொல்கின்றன.

2.என்ன எடுத்துச்செல்ல வேண்டும்?
இறைவன் மிக எளிய பொருட்களை சமர்ப்பித்தாலும் அவற்றை அன்போடு ஏற்றுக்கொள்கிறார்.

கோயிலுக்கு செல்லும் போது அன்று பூத்த அழகிய மலர்களை இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் பல தேவாரங்களில் சொல்கிறார் அப்பர்.

(காண்க: திருவான்மியூர் அப்பர் தேவாரம்)
விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர் 
அண்டர் நாயகன் தன்னடி சூழ்மின்கள் 
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும் 
வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே.

(விண்ட=மலர்ந்த; பறைந்திடும்- மறைந்திடும்)



மலர்கள் பிரார்த்தனைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. 

பாண்டிச்சேரி அன்னையை வேண்டுவோர், தம் வீடுகளில் மலர்களால் அவர் படத்தின் முன்னே அலங்கரித்து வழிபடுவதைக்காணலாம்.

மலர்களில் எத்தனைஆயிரம் ஆயிரம் வகைகள்!- தாமரை, அல்லி, அரளி, மல்லிகை, முல்லை,...... என. 

எத்தனை வகைகள், எத்தனை எத்தனை அமைப்புகள், வண்ணங்கள்!
http://enpadhivu.blogspot.sg/2014/11/blog-post.html

ஒரு சங்கப்புலவர் பாடிய  நூறு பூக்களின் பெயர்களை சமீபத்தில் கூட சினிமாவில் பார்த்ததுதான் நினைவுக்கு வருகிறது.

நாகலிங்கப்பூ- இதை பார்த்திருக்கிறீர்களா?

அழகாய் சர்ப்பக்குடையுடன், உள்ளே சிவலிங்கமுமாக.!!!


                                              (Courtesy: Nilal.com for the picture)
ஆம்-ஒவ்வொரு பூவுக்குள்ளும் ஒரு அதிசயம் இருக்கிறது.

பூப்பூத்ததை யார் பார்த்தது; பூக்கள் பூக்கும் தருணம் யாரும் பார்த்ததில்லையே என்று
அன்றாடம்  நம் காதில் விழும் பல திரைப் பாடல்கள், பூக்கள் கவிதைகளின் கருப்பொருளாய் இருப்பதையும் காட்டுகின்றன.

உண்மையில் பூக்களில் பஞ்ச பூதங்களின் அம்சம் இருக்கிறது. அவற்றின் மணமும், தோற்றமும்,
மலர்ச்சியும், சொல்லில் அடங்காத அதன் பண்பும், அவற்றை, இறைவனுடன் தொடர்புக்கொள்ளும் கருவியாக்குகின்றன.
இதனால் தான் பூஜைகளில் பூக்கள் முக்கியமாக இருக்கின்றன.

"மலர்ந்த மலர்த்தூவி மாமனத்தைக்கூப்பி":  கையில் உள்ள மலர்கள் மலர்ந்தும், நம் மனம் இறைவனை நோக்கிக்குவிந்தும் இருக்க வேண்டும் என்கிறார் கபில தேவர்!

3. நம் பிரார்த்தனை என்னவாக இருக்க வேண்டும்?

கார் வாங்க பணம் வேண்டும், வீடு வாங்க வேண்டும், பதவி உயர்வு வேண்டும், ...- இப்படியா?

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் 
  உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் 
    பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசா திருக்க வேண்டும் .....- இப்படியா?இப்படிக்கேட்போர் நம்மில் எத்தனை பேர்?

மாணிக்க வாசகர் சொல்வார்- வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ என.


பிறவிக்குக்காரணமான வினைகள் தீர வேண்டும் என்பது தான் சரியான வேண்டுதல்.! 

திருக்குறள் உள்பட பல நூல்கள் பிறவிப்பிணியைப்பற்றிப்பேசுகின்றன.

இந்த பதிவின் தொடக்கத்தில் உள்ள, திருகன்றாப்பூர் தேவாரத்தில்,செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய்: 
(செடி-துன்பம்).
துன்பத்தை உடைய/உண்டாக்குகின்ற
 வல்வினைகளைத்தீர்ப்பாய் என்று கேட்கிறார் அப்பர் பெருமான் .

ஒப்பிட்டுக்காண்க:

குலசேகர ஆழ்வாரின் பாசுரம்

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே 
நெடியானே வேங்கடவா நின்கோயிலின்  வாசல் 
அடியாரும் வானவரு மரம்பையரும் 
கிடந்தியங்கும் 
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !

செடியாய = செடியைப்போல. 
செடி வெட்டினால் திரும்ப வேரூன்றுவதைப்போல பிறவி வரக்காரணமான வல்வினைகள், திரும்ப திரும்ப முளைக்கின்றன.
அத்தகைய வல்வினைகளைத்தீர்க்கும் திருமால் என்கிறார் குலசேகர ஆழ்வார்.

செடியாய என்று ஆழ்வாரும், செடியுடைய என்று அப்பர் பெருமானும், சொல்லுகிற வல்வினை நோய் தீரவேண்டும்;செல்கதிக்கு காட்ட வேண்டும் என்றும் நம் வேண்டுதல் இருக்க வேண்டும்.

இப்படி வேண்டுவோரின் நெஞ்சினுள்ளே இறைவனைக்காணலாம் என்கிறார் அப்பர் பெருமான்.

நடுதறி- கன்றினைக்கட்ட பயன்படும் குச்சி;

சைவ பெண் ஒருத்தி, திருமணமான பின்னர் அவள் கணவன் வீட்டில் இருப்போர், அவளை சிவ பூஜை செய்ய விடாமல் தடுக்க அவள், கன்றினைக்கட்டியிருந்த தறியில் சிவன் இருப்பதாய் எண்ணி வேண்டினாள்; அவளுக்கு இறைவன் காட்சி தந்தார்.

இந்தச் செய்தி அறிந்த அப்பர்- திருக்கன்றாப்பூர் இறைவனைக்குறித்து பதிகம் பாடினார்.

பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் கன்றாபூர் நடுதறி என்று சிவபெருமானைக்குறிக்கிறது.

திருக்கன்றாப்பூர் தலத்தைப்பற்றி மேலும் படிக்க:



Saturday, January 10, 2015

எப்படி சொல்லித்தர வேண்டும் தேவாரம்?

"அம்மா பார்வதி!, தண்ணி கொண்டாந்து வை. வித்யா வந்துட்டாப்பாரு!."என்ற குரல் கேட்கும்.

நான் காலணிகளைக்கழட்டும் போதே என்னிடம் வித்யா! " - 8 மணி வகுப்புக்கு சரியா 7.50க்கு வந்து இறங்கிடுறியேமா !. நல்லது!!".என்பார்.

இப்படித்தான் தினமும் எனக்கு வரவேற்பு இருக்கும் என் திருமுறை ஆசிரியர்- பெரும்பாண நம்பி திரு.மா.கோடிலிங்கம் அவர்கள் இல்லத்தில்.


நானாக தேவாரம், வள்ளலார் பாடல்கள் எனப்படிக்கத்தொடங்கி,யார் சொல்லித்தருவார்கள் எனத்தேடிக்கொண்டிருந்த சமயம்!- என் அத்தை மகன் திரு.சேகர் அவர்கள் எனக்கு, கோடிலிங்கம் அய்யாவை அறிமுகம் செய்து வைத்தார்.


என்னிடமுள்ள பல திருமுறை புத்தகங்கள் இவர் தந்தவை. மிக சுத்தமான பராமரிக்கப்படும் அவர் இல்லத்தில், சின்ன சின்ன விஷயத்தில் கூட நேர்த்தியான பாங்கு மிளிரும்.

பல நேரங்களில், என் கணிணி சார் தொழில் நுட்பத்துறையில் உள்ள என் வேலையிடத்தில், என்ன நடக்கிறதென்று கதை சொல்லுவேன். அலுவலக சூழல், வீட்டுச்சூழல் கதைகளுக்கு மத்தியில் பாடம் ஆரம்பிக்கும்.

முதல் முறை செய்யுளைப்பதம் பிரித்து வாசிப்பார்.பென்சிலால் எழுதிக்கொள்வேன்.
பிறகு அழகாய் அடி அடியாய் பொருள் சொல்லுவார். 

எங்கள் நேர்பார்வையில் ரிஷபாரூடர் காலண்டர் இருக்கும்.எந்த சூழலில் ஒரு பாடலை அருளினார்கள் என்பதையும் விளக்குவார்.

மனதில் சட்டெனப்பதியும்!. அடுத்த வகுப்பில் புத்தகத்தைப்பார்க்காமல் பாடுவேன்.

மிகக்கடினமான வேலைப்பளுவிலும், இவர் சொல்லித்தந்த திருப்புகழ் என்னை, திருவான்மியூரிலிருந்து OMR ரோடில் உள்ள சத்யம் அலுவலகம் வரை நிம்மதியாய் கொண்டுச்சேர்க்கும்.


வேலை அதிகம் என செல்லாமல் இருந்தால்,தொலைப்பேசியில்  சனிக்கிழமை வாயேன் என்பார்.

ஒரு முறை சொல்லித்தந்த பாடலில், நாமாக அதிகப்படி சங்கதிகளைக்கூட்டிப்
பாடினாலும், அந்த சங்கதிகளையும் ரசிப்பார். ஒவ்வொரு முறையும், நெய்யும் பாலும் எனத்தொடங்கும் சுந்தரர் தேவாரத்தை இந்தோளம் ராகத்தில் பாடி, இருவரும் சேர்ந்தே ரசிப்போம்.

இந்த வயதிலும் 60 க்கும் மேற்பட்டோருக்கு கற்றுத்தருகிறார். பொள்ளாச்சி மகாலிங்கம் அய்யாவிடம் மிகுந்த அபிமானம் இவருக்கு.

எனக்கு இவரிடம் மிகப்பிடித்த விஷயம்.- திருமுறை, வள்ளலார் பாடல்கள், சித்தர் பாடல்கள் என பலவற்றிலும், இவரது ஆழ்ந்த ஞானம்;இவர் மாணவர்களிடம் காட்டும் அளவு கடந்த பரிவு.

" சார். எனக்கு இந்த தேவாரம் சொல்லித்தாங்க!" என்று உரிமையாக இவரிடம் கேட்க முடியும். எதைக்கேட்டாலும் அவர் அறியாதது இல்லை.

இன்றைய புகழ் பெற்ற கர்னாடக இசைக்கலைஞர்களில் பலர் திருமுறை பயில வருகிறார்கள்.

ஒவ்வொரு முறை நான் வேலைக்காக வெளி நாடு செல்லும் போதும், இவரிடம் ஆசி பெற வருவேன்.

கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து எனக்கு விபூதி, குங்குமம் தருவார்கள்; இடையே வித்யா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ என்பார்.

என் வீட்டில் நடந்த எங்கள் நிச்சயதார்த்தத்தில், மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழிலிருந்து தொடுக்கும்  கடவுள் எனத்தொட்ங்கும் வருகைப்பருவப்பாடலை, நான் சபைக்கு வரும் நேரம் எங்களை வாழ்த்திப்பாடினார்,

எல்லாரிடமும் வித்யா எங்கள் வீட்டுப்பொண்ணு என்பார்.அந்த அன்பை சொற்களைத்தாண்டி, பல முறை மனதார உணர்ந்திருக்கிறேன்.

உத்யோகம் ஸ்தீரீகளுக்கும் லட்சணம் தான். நல்லா மேல வரணும்; வேலையை விடாதே என அறிவுரை சொல்வார்.

இந்த முறை சிங்கப்பூரிலிருந்து போகும்போது வெகு நாட்கள் கழித்து அவர் வீட்டுக்குப்போனேன். அன்பாக உரையாடி, சாப்பிட வைத்து பை நிறைய புத்தகங்களும், மனம் நிறைய வாழ்த்துக்களோடும், வழி அனுப்பினார்.

தாய் தந்தை, குரு, மற்ற உறவுகள், நண்பர்கள் என யார் அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் தான்.
அந்த வகையில் என் குருவாய் வந்த கோடிலிங்கம் சார் எனக்கு ஒரு வரம். அவர் நல்ல மன, உடல் நலத்தோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்!.

Monday, December 29, 2014

மனத்துணை நாதர் (திருவலிவலம்)- அப்பர் தேவாரம்

பெண்ணவன் காண் ஆணவன் காண் பெரியோர்க்கென்றும்
பெரியவன் காண் அரியவன் காண் அயனானான் காண்
எண்ணவன் காண் எழுத்தவன் காண் இன்பக்கேள்வி
இசையவன் காண் இயலவன் காண் எல்லாங் காணுங்
கண்ணவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லுங்
கதியவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லுங்
மண்ணவன் காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே.
                                            (புகைப்பட உதவி: ஆலய வாணி)

பல சிவாலயங்களில் இறைவனின் பெயரே மனதிற்கு நிம்மதி அளிக்கிறது.
திருப்பாதிரிப்புலியூர் சிவனாரின் பெயர்- தோன்றாத்துணை நாதர்.

இம்மாதிரி பெயர்கள் (சிவ நாமங்கள்) "தெய்வம் நமக்குத்துணை பாப்பா- ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா "என்ற பாரதியாரின் வரிகளை முன்னிறுத்துகின்றன.

இறைவனை பல வடிவங்களிலும், வகைகளிலும் கண்டார் அப்பர் பெருமான்.

இந்தப்பாடலிலும் எண், எழுத்து, இசை முதலியவாக இருக்கிறார் இறைவன் என்கிறார்.

பெண்ணாகவும், ஆணாகவும், பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாகவும், அயன்(பிரம்மா), அரியாகவும் (விஷ்ணு)  இறைவனைக்காண்கிறார்.
கண்டேன் அவர் திருப்பாதம்- கண்டறியாதன கண்டேன் என்ற திருவையாறு தேவாரத்தில், காணுகிற உயிர்கள் அனைத்தும் அதன் இணையோடு வர- ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பவர் சிவனே எனத்தெளிந்தார்.

இந்தத் தேவாரமும் அப்பர் பெருமான் கண்கள் காணுகின்ற பலவற்றிலும், காணாத மனம் உணர்கிற பலவற்றிலும், இறைவனே இருப்பதாய் சொல்கிறார்.

இந்த மண்ணில் வாழ்வோர் சென்றடையும் கதியாகவும், அவர்கள் உடல் சென்றடையும் நிலமாகவும் இருக்கிறார் இறைவன்.

உயிரற்ற உடலுக்கும், உயிரான ஜீவனுக்குமான கதியாய் நிற்கிறார்;
வானவர்களும்  வணங்கும் வலிவலம் மேவிய- மனத்துணை நாதர்!




Friday, November 14, 2014

திருமந்திரம் அறிவோம்!

2014 தொடக்கத்திலிருந்து, ஒரு கையேட்டில், அழகான, ஆழமான பொருள் கொண்ட பாடல்களைத்தேடி எழுதி வைக்கலானேன்.

இறையருளால், இம்முயற்சி அழகாக கை வரப்பெற்றது.

பல பதிகங்களும், திருமந்திரம், வள்ளலார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், குற்றாலக்குறவஞ்சி, பிரப்பந்தம் முதலியவற்றிலிருந்து, எனக்குப் பல புதிய (#100) பாடல்கள்  அறிமுகம் ஆயின.

புத்தாண்டின் தொடக்கத்தில் எடுக்கும் புதிய தீர்மானங்களில், இது போன்ற தீர்மானங்களால், நமக்கு,பலன்கள் பல.

தேடித்தேடிப்படிக்கத்தூண்டுவதால்,  நல்ல உற்சாகம் தரும் முயற்சி இது; இறையருளை நாடி மனம் பயணிக்க உதவுகிறது; எளிதில் மனம் ஒன்றுகிறது.

என் திருமுறை ஆசிரியர், திரு.மா. கோடிலிங்கம் ,கடந்த முறை பார்த்த போது பல புத்தகங்களைத்தந்தார்.அந்த புத்தகங்களும், சைவம், மதுரை மின் தொகுப்புப்பக்கங்களும், இதற்கு, மிக மிக உதவின.

இந்த தொகுப்பை, தினசரி வழிபாட்டுக்கு என வைத்துக்கொண்டுள்ளேன். சிற்றுந்திலோ, மின் தொடர் வண்டியிலோ போகும் போதும், படித்துக்கொண்டே செல்லலாம்.

திருமந்திரத்திலிருந்து ஒரு பாடல் இங்கே!இந்த பாடல், எல்லோரும் வாழ்க்கையில் கடைப்பிக்க வேண்டிய நல்ல செயல்களை நினைவு படுத்துகிறது.

யாவர்க்குமாம் இறைவர்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுரை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே

நான்கு அடிகளுமே, நாலு விதமான அறங்களை வலியுறுத்துகின்றன. 1.இறைத்தொண்டு,
2.ஜீவகாருண்யம்,
3. மனித நேயம்
4.இனியவை கூறல்,

இன்னொரு வகையில் பார்த்தால், 2-4  அடிகளில் உள்ள அறங்களைக்கடைப்பிடித்தால்,இறைவன், உங்கள் அருகில் இருப்பார்; ஒரு சிறு இலையை சமர்ப்பித்து வழிபட்டால் போதும்.

1.கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார்- "ஒரு பக்தன் உண்மையான பக்தியோடு, ஒரு இலையோ, ஒரு பூவோ, கனியோ, தண்ணீரோ சமர்ப்பித்தாலும், அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்".

அதே பொருளை நினைவுப்படுத்துகிறது, முதல் அடி!

2."பசுவிற்கு வாயுரை- அது உண்ண புல் போன்ற உணவு ஒரு வாய் அளவேனும் தாருங்கள்.".பசுவை பேணிக்காப்பது நம் பெரியவர்கள் காட்டும் நெறிமுறையே.

3."ஐயமிட்டு உண் என்கிறது ஆத்திசூடி":-யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி.
உண்ணும்போது, ஒரு கைப்பிடியாவது, பிறருக்குக்கொடுத்து உண்ணுங்கள்;
அவ்வைப்பாட்டியும், வள்ளுவரும், சொன்ன மொழியே இது.

4.பாரதியார்- நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர்; இல்லை என்றோர்- இன்சொல் அருளீர் என்றார்.

யாராவது துன்பப்பட்டால், அவர்களுக்கு, ஆறுதலால், இன்மொழி சொல்லுங்கள்.
இன்சொல் மனதில் சோர்வை நீக்கும்;மனதில் தெம்பை அளிக்கும்.
இனியவை கூறல் என்றே ஒரு அதிகாரம் வைத்தார் திருவள்ளுவர். இன்றைய நவீன மேலாண்மை கொள்கைகளும் இதையே தான் வலியுறுத்துகின்றன.

Saturday, June 14, 2014

The Great Brahadeeswaram- Thanjavur Big Temple that has crossed 1000 years....


தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் (Brihadeswara Temple, Thanjavur), 1000 ஆண்டுகளைக் கடந்து, வானளாவி நிற்கும் நிறைஅழகு அதிசயம் ;

தமிழர் நாகரீகத்தின் உச்சத்தை பறைசாற்றும், இந்தக்கோயில்- ஒவ்வொருவரும்,

கண்ணாரக் கண்டும், கையாரக்கூப்பியும், எண்ணார எண்ணத்தால், எண்ணியும், இன்புற வேண்டிய ஒரு சிவாலயம்.

ராஜராஜ சோழர், தேவாரப்பாடல்களைத்தேடி, நம்பியாண்டார் நம்பியின் துணையோடு, திருமுறைகளாய்த்தொகுத்து, நமக்கு தந்தார்.அவர் இறையன்பில், எழுப்பிய சிவாலயம் இது.

வாயிலார் நாயனார், மனதில் சிவாலயம் எழுப்பினார்; ராஜ ராஜ சோழர், தம் மக்களையும், கருவூலத்தையும் கொண்டு, சிவாலயத்தை, உலகில் அமைத்தார்.

இலங்கையின், பெரிய புத்தர் சிலைகளையும், விகாரங்களையும், கண்டு, அதைப்போல பெரிய கோயிலாய்,பொன்னியின் செல்வர், அமைத்தார்.

"இறைவன் எவ்வளவு பெரியவன்"

என்று, எத்தனை சாதாரணமான மனிதர்களுக்கும், சொல்லாமல் சொல்லும் இந்த அழகிய கற்றளி:-

"ஒரு சின்னமலையோ, மடுவோ இல்லாத தஞ்சைப்பகுதியில்", 60 கிலோமீட்டர் தூரத்திலிருந்து, கருங்கற்களைக்கொண்டு வந்து, கணக்கிலடங்காத சிற்பங்களுடனும், ஓவியங்களுடன், சிவபெருமானுக்கு, மிகுந்த அன்புடன், ராஜராஜ சோழரால், கட்டித்தரப்பட்ட வீடாகும்.

மிக துல்லியமான வடிவியல் கணக்கீடுகளைக்கொண்டு,அமைத்து, ஆகம விதிப்படிக்கட்டப்பட்ட இக்கோயில், சோழர்கள் காலத்தில், முக்கிய அரசு விழாக்கள், நடக்குமிடமாக இருந்திருக்கிறது.

(பட உதவி: விக்கிபீடியா)

இந்த கோயிலின் பல சிறப்புகளில், எனக்கு தெரிந்த சில:

1.கருவறை மேலுள்ள விமானம்,  216 அடி உயரமுள்ளது. முன் கோபுரம், 30 அடி உயரமே உடையது. கருவறை மேலுள்ள விமானம் மிக உயரமாய் இருப்பது இந்த கோயிலின் சிறப்பு. இந்த கோயிலின் கருவறை கோபுரத்தின் நிழல் தரையில் விழாது
2.கோபுரக்கலசம், 80 டன் எடையினாலான ஒரே கல்லில் ஆனது.
3.இந்த கோயிலின் நந்தி, 16 அடி நீளமும், 13 அடி உயரமும் உடையது. ஒரே கல்லில், செதுக்கப்பட்டது.
4.கோயிலின், முதல் தளத்தில், பரத நாட்டியத்தின் 81  முத்திரைகளை  விளக்கும், சிற்பங்கள் உள்ளன.

தஞ்சை கோவிலை பற்றி தேவாரப்பாடல்கள் இல்லை. ஏனெனில் இந்த கோயில், தேவார மூவர் காலத்திற்கு பின்னரே கட்டப்பட்டது.

 சூரியன் உள்ள வரை, சிவபெருமானின், பெருமையையும், சோழரின், புகழையும், முன்னிறுத்தும், இராஜ இராஜேசுவரம்.இதன் அழகைப்பாடினார் கருவூர் தேவர்.இவர், ராஜராஜ சோழரின் குரு; பதினெண் சித்தர்களில், ஒருவரான கருவூர் தேவருக்கும், இந்தக்கோயிலில், சன்னதி இருக்கிறது.

கருவூர் தேவர் தஞ்சை பெரிய கோயிலைப்பற்றி பாடிய பாடல்கள், ஒன்பதாம் திருமுறையில் உள்ளன.

அவற்றில் ஒரு பாடலை இங்கு கொடுத்துள்ளேன்.

உலகெலாம் தொழ வந்து எழு கதிர்ப்பரிதி
ஒன்று நூறாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ
அங்ஙனே அழகிதோ 
அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்து இவர்க்கே.

எத்தனை அழகு இந்த கோயில்?
(பரிதி= சூரியன்;அரணம் = கோட்டை; பருவரை=பெரிய மலை;
இஞ்சி= கோட்டை;ஞாங்கர்=சூரியன்)

உலகம் என்பது ஒரு மங்கல சொல்; பெரிய புராணமும் உலகெலாம் என்றே தொடங்குகிறது.

உலகெலாம் தொழ வந்து, ஒன்று நூறாயிர கோடி,எழு கதிர்ப்பரிதி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ
அங்ஙனே அழகிதோ 

ஒரு 100,000 கோடி சூரியன்கள், உலகம் தொழ எழுந்தால், அந்த ஒளி எப்படி இருக்குமோ அப்படி ஒரு பேரழகாம், இராஜ ராஜேசுவரத்தில், உள்ள சிவன்.

பலஅரணம்,குலாம்
 படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்து இவர்க்கே.

கோயிலின் அழகு எப்படி?தஞ்சையின் அழகு எப்படி?


கோட்டைகள் பல; அழகிய, பெரும்பொருள் கொண்டு எழுப்பப்பட்ட எழு நிலை மாடங்கள் இருக்கின்றன. அந்த மாடங்களின் மேற்பகுதியில், வெள்ளித்தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கின்றன.அந்த தகடுகள், ஒரு பெரிய மலையின், மேல் சந்திரன் தவழ்வது போன்றே இருக்கிறது.இப்படிப்பட்ட அழகான கோட்டைகள் சூழ்ந்தது தஞ்சை.அங்கு கோயில் கொண்டுள்ளார், சிவனார்.

இந்த பதிவு நம்மை இன்னும் பல முறை தஞ்சைக்கோயிலை நோக்கிப்பயணிக்கத்தூண்டுமென்று நம்புகிறேன்!!!

Wednesday, March 12, 2014

அப்பரின் அரிய பதிகங்கள்- ஒரு பார்வை (1)

தேவாரப்பாடல்கள், ஓதுவாமூர்த்திகளாலும், இறையன்பர்களாலும், ஓதப்பெற்றாலும், எல்லா தேவாரப்பதிகங்களும், மக்களை சென்றடைவதில்லை.

மிக எளிமையாய், அன்பின் உருவாய், உழவாரப்பணி செய்து, இறைப்பணியில், உயர்ந்தவர் திரு நாவுக்கரசர் (அப்பர் பெருமான்).

அவரது பாடல்களில், பலரும் அறிந்தது - "மாசில் வீணையும் மாலை மதியமும்" எனும் பாடலும், என் கடன் பணி செய்து கிடப்பதே எனும் வரிகளும், "கூற்றாயின வாறு விலக்ககலீர்" எனும் பதிகம் முதலியன.

தமிழ் மீது ஆர்வமுள்ளவர்கள், தேவாரப்பதிகங்களை மனம் ஊன்றிப்படித்தால்,சொல் வளமும், சொல்லாற்றலும், வளரும்.
அப்பரின் தேவாரப்பாடல்கள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளைப்படித்துக்கொண்டிருந்தேன்.

கீழ்காணும் அப்பரின் பதிகத்தைப்பாருங்கள்!

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே
 ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே
உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே

பாட்டுவித்தால் ஆர் ஒருவர்  பாடாதாரே
பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாங்காலே

இந்தப்பாடலின் முதல் வரியைத்தான், கவிஞர் கண்ணதாசன், திரைப்பாடலில், பயன்படுத்தி இருக்கிறார்.

செந்தமிழும் நாப்பழக்கம் இல்லையா? நல்ல தமிழ் ஆளுமை, படித்தால் தானே வரும்,
இது போன்ற எடுத்துக்காட்டுகள் என் போன்ற தமிழ் மாணவர்களை, ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன்!

தமிழை ஆழமாக படித்து, அதன் இன்பத்தை நுகர்வோம்; பிறருக்கும் பகிர்வோம்

Sunday, February 14, 2010

திருவாசகம்- திருவம்மானை


பண்சுமந்த பாடல், பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தான், பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன்
கண்சுமந்த நெற்றி கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த மேனி பாடுதுங்காண் அம்மானாய்!



பொருள்:

இந்த பாடல், மாணிக்க வாசகரின், வாழ்க்கையில், ந்டந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறது.
பண்சுமந்த பாடல், பரிசு படைத்தருளும், பெம்மான் பெருந்துறையான்
: இறைவனைப் பற்றி பாடும், இசைப்பாக்களுக்கு, பரிசு தரும்,திருப்ப்பெருந்துறை ஈசன்.

மாணிக்கவாசகர், இருமுறை, வரகுண பாண்டியரால், தண்டிக்கப்பட்டார். முதல் முறை, அரசன், குதிரை வாங்கக் கொடுத்த பணத்தை, குதிரை வாங்காமல், செலவு செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார். அப்போது, இறைவன், தலையிடவில்லை.

இரண்டாவது முறை, குதிரைகள், நரிகள், ஆனபோது, அந்த குற்றத்தை, மாணிக்க வாசகர் செய்யவில்லை. ஆதலால், அவருக்காக இரங்கி, இறைவன், வந்தார்.

கண்சுமந்த நெற்றி கடவுள் கலிமதுரை,மண்சுமந்து கூலிகொண்டு, அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த மேனி பாடுதுங்காண் அம்மானாய்.

பிட்டுக்கு மண் சுமந்து, வரகுண பாண்டியரிடம், கோலால், மொத்துண்டார்.

இவ்வாறு இறைவன், இரங்கி வரக்காரணம், அவரிடம், உள்ள தாய் உள்ளம். அதற்குக்காரணம், அவர், பெண்சுமந்த பாகத்தானாய், இருப்பதே ஆகும் என்கிறார், மாணிக்க வாசகர்.

Wednesday, December 02, 2009

வேண்டதக்கது அறியோய் நீ !

வேண்டதக்கது அறியோய் நீ ! வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ! வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில், அதுவும் உந்தன் விருப்பன்றே!

திருவாசகம்-குழைத்த பத்தில், உள்ள இப்பாடல், உண்மையான பக்தியுடையோர், இறைவன், எதைத் தந்தாலும், அதை விருப்பத்தோடு, ஏற்றுக்கொள்ளும் தெளிவான மன நிலையைக்கொண்டிருப்பர் என்பதை தெளிவுபடுத்துகிறது

உண்மை பக்தி, இறைவன், சொல்லின்படி நடப்பது. இறைவன், நாம், வேண்டும்,எதையும், முழுதாய், தரும், கருணை வடிவானவர். ஆதலால், வேண்டத்தகாதவற்றை வேண்டினாலும், தருபவர். ஆனால், இறைவனிடத்தில், உண்மை அடியவர், இறைவன், தரும், எதையும், ஏற்றுக்கொள்வர்.

இறைவன், மாணிக்க வாசகருக்கும், மற்ற நாயன்மாருக்கும், துன்பம், தந்த போதும், அவர்கள், பக்தி நிலையில் இருந்து மாறவில்லை.

'இடரினும் தளரினும், எனதுறு நோய் தொடரினும், உனகழல், தொழுதெழுவேன்'- சம்பந்தரின் பதிகம், ஒப்பு நோக்கத் தக்கது.

Saturday, September 05, 2009

அழகிய பிரார்த்தனை

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளையேற்றான் தன்னைத்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றன்
தாயானைத் தவமாய தன்மையானைத்
தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானைத் தென்கூடல் திருவாலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே

-அப்பர் பெருமான் அருளிய பதிகம்.

வாயானை- திரு ஆலவாயானை (மதுரையில் வீற்றிருப்பவரும்)
மனதில் இருப்பவரும், மனதில் எண்ணமாய் இருப்பவரும், அந்த எண்ணத்தை, நிறைவேற்றுபவரும், தூய்மையானவரும், தூய வெள்ளை யானை உடையவரும், என் தாய் போன்றவரும், தவமே உருவானவரும், தேவர்களுக்கு என்றும், சேய்மையானை ( தூரமாய் இருப்பவரும்),ஆகிய திருவாலவாய் ஈசன், திருவடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.


ஒப்பு நோக்க:

புறத்தார்க்கு சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க- மாணிக்க வாசகர்

Thursday, May 28, 2009

திருத்தாளமுடையார், ஓசைக்கொடுத்த நாயகி......!

தலம்: திருக்கோலக்கா
தலப்பெயருக்கானக் காரணம்:
அம்பிகையின் அண்ணனாகிய திருமால், ஈசனின் திருமணக்கோலத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க விரும்பினார். திருமாலின வேண்டுகோளுக்கு இணங்கி, ஈசன் தன் மணக்கோலத்தைக்காட்டியதால், இந்த ஊருக்கு, திருக்கோலக்கா என்ற பெயர் வந்தது. (சீர்காழிக்கு அருகில் உள்ள தலம்).

தலப்பெயர் சரி, இறைவனுக்கும் , இறைவிக்கும், இந்த பெயர்கள் வந்ததற்கு , சம்பந்தர் வாழ்க்கையில், நடந்த ஒரு திருவிளையாடலே காரணம்
.

சம்பந்த பெருமான், சிறுபிள்ளையாய், தன் சின்னக்கைகளில், தாளம் போட்டவாறு, " மடையில் வாளை" என்ற பதிகம் பாடி திருக்கோலக்கா வந்தார். இறைவன், அந்த பிள்ளைக்கு இரங்கி, ஒரு பொன் தாளம் தந்தார்; தாளம் ஒலிக்கவில்லை.!!.. அம்பிகை, அந்த தாளத்தில், ஓசைக்கொடுத்தாள். அதனால், இறைவனுக்கு திருத்தாளமுடையார் என்றும், இறைவிக்கு ஓசைக்கொடுத்த நாயகி என்றும், பெயர்கள் உண்டானது.
"தோடுடைய செவியன்" என்ற முதல் பதிகத்துக்கு அடுத்து, சம்பந்தர் பாடிய பதிகம் " மடையில் வாளை பாய" எனத் தொடங்கும் திருக்கோலக்காப் பதிகம் ஆகும். அந்த பதிகம் பின்வருமாறு: (சம்பந்தர் சுவாமிகள் அருளியது)
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையும் கொண்ட வுருவம் என்கொலொ.

பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே

நலங்கொள் காழி ஞானசம் பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.

மிக அழகான பதிகம் இது!. முதல், இரண்டு அடிகளில், திருக்கோலக்காவின் அழகையும், அடுத்த இரண்டு அடிகளில், இறைவனின் அழகையும், பாடினார், சம்பந்தர்.

Tuesday, July 17, 2007

எல்லாம் சிவமே! (Ellam Sivame)

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ


துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீ
-அப்பர்

தேவாரத்தில் உள்ள இந்த பாடலை,சமிஸ்கிருதத்தில், உள்ள Thvameva maathacha pitha thvameva என்ற பாடலோடும் நாம் ஒப்பிட்டு நோக்கலாம்.

சிவனே, நீரே எனக்கு அம்மாவாகவும், அப்பாவாகவும், அண்ணனாகவும், மனைவியாகவும், மாமனாகவும், மாமியாகவும் உள்ளீர்; நல்ல வழியில் வந்த செல்வமாகவும் (ஒண்பொருள்) நீர் உள்ளீர்;

என் சுற்றமாகவும், கிளையாகவும், ஊராகவும் இருப்பவரும் நீரே. நான், உபயோகிக்கும் பொருளாகவும், நான் பயன்படுத்தும் ஊர்தி வகையாக இருப்பவரும் நீர்.பொன்னாகவும், மணியாகவும், முத்தாகவும் இருப்பவர் நீரே.


எல்லாம் நீரே என்று சொல்லும், அப்பர், இறைவனை என்ன வேண்டுகிறார்? விடையேறும் பெருமானே! துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ - எனக்கு துணை நின்று சுற்றம், ஊர், நுகர்பொருள் போன்றவற்றில் உள்ள பற்றினை முழுமையாகத்துறக்குமாறு அருள் புரிவாயாக!

Thursday, July 05, 2007

First Formal Letter in the World....

Tamil is one of the most ancient languages in the world. (உலகின் ஆறு தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ்!.)
It is interesting to know about the first poem/song that had the format of formal letter written these days.

"பிரபஞ்சமே இறைவனின் கவிதை" என்றாலும், இறைவனே ஒரு புலவராய் பாடல் எழுதிய பெருமை உடையது தமிழ் மொழி.


மதுரை கோவிலில், சங்கப் புலவர்கள் 41 பேருக்கு, சன்னிதி உள்ளது. இந்த 41 புலவர்களில், சிவபெருமானும் (இறையனார்) ஒருவர்.



கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல், பாணபத்திரர் என்னும் ஏழை பாடகருக்கு, பொருள் தரச்சொல்லி, சேர மன்னனுக்கு, சிவபெருமான் எழுதிய கடிதம்.இது 11-ம் திருமுறையை சேர்ந்தது ஆகும்.

இறையனார் அருளிய திருமுகப் பாசுரம்.


மதிமலி புரிசை மாடக்கூடல்

பதிமிசை நிலவு பானிற வரிச்சிறகு

அன்னம் பயில்பொழில் ஆலவாயின்

மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்


பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு

உரிமையின் உரிமையின் உதவி யொளிதிகழ்

குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்

செருமா வுகைக்கும் சேரலன் காண்க


பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்

தன்போல் என்பால் அன்பன்; தன்பாற்

காண்பது கருதிப் போந்தனன்;

மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே.



We all know that any formal letter starts with From, To and then the subject of the letter.
இங்கும், இந்த பாடலின் முதல் நாலு அடிகள் (From:), சிவபெருமானைக்குறிக்கும்.
அடுத்த நாலு அடிகள் (To:),சேர மன்னனைக் குறிக்கும்.கடைசி நாலு அடிகள் (Subject), கடிதத்தின், நோக்கத்தைச் சொல்கின்றன.
As in any poetry, the beauty of the place goes well described. In the from part, God describes the beauty of Madurai town excellently.

மதி= சந்திரன். சந்திரன் தவழும் மதில்கள் சூழ்ந்த மாடங்களைக்கொண்ட கூடல் நகரில் (மதுரையில்), பால் போன்ற வெள்ளை வரிகளை உடைய சிறகுகள் கொண்ட அன்னப் பறவைகள் நடைபயிலும் பொழில்கள்சூழ்ந்த திருவாலவாயில் (மதுரையில்) நிலைபெற வீற்றிருக்கும் சிவனாகிய நான்,சொல்லும் இச்செய்தியினைப் பருவக்காலத்து மேகம் போலப் பாவலர்க்கு இருபாலும் உரிமையுடனே வேண்டுவன எல்லாவற்றையும் தந்து உதவி, ஒளி விளங்கிய பெரிய பூர்ணசந்திரன் போன்று விளங்கும் வெண்கொற்றக் குடையின்கீழ் அமர்ந்து, போர் வல்ல யானையினைச்செலுத்தும் சேரமன்னனே! காண்பாயாக!

We can see that the Chera king is also well praised as one who gives whatever one seeks... like the cloud that showers good rain!!!

இறுதியில்,சிவன் சொல்லும் செய்தி என்ன?

யாழ் வாசிக்கும் பாணபத்திரன், உன்னைப் போலவே என்னிடத்தில், பக்தி உள்ளவன். அவன், உன்னைக் காண, (இந்த திருமுகப்பாசுரத்தோடு) வருவான். அவனுக்கு பெரும் பொருள் கொடுத்து அனுப்பி வைப்பாயாக!

Sunday, December 03, 2006

பன்னிரு திருமுறைகள்:

1-3:சம்பந்தர் அருளிய தேவாரப் பதிகங்கள்

4-6:அப்பர் பெருமான் அருளிய தேவாரப் பதிகங்கள்

7: சுந்தரர் அருளிய தேவாரப் பதிகங்கள்

8:மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்

9:திருவிசைப்பா, சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு முதலியன

10.திருமூலர் அருளிய திருமந்திரம்

11.திரு ஆலவாய் ஈசன் அருளிய திருமுகப்பாசுரம், கபிலரின் திருவிரட்டை மணிமாலை, காரைக்கால் அம்மையாரின் அற்புத திருவந்தாதி முதலியன

12.சேக்கிழார் அருளிய பெரிய புராணம்

நால்வர் வாழ்த்து

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!


விளக்கம்:
இப்பாடலில், ஒவ்வொரு அடியும், சைவக்குரவர்களில், ஒவ்வொருவரைக் குறிக்கும்.

சைவத் திருமுறைகளைப் பாடத்துவங்குமுன், சைவக்குரவர், நால்வரையும், வாழ்த்துவது மரபாகும்.

1.பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி

இந்த அடி, சம்பந்த பெருமானைக் குறிப்பதாகும்.
பூமியை ஆளுகிற அரசன், (கூன் பாண்டியனின்), வெப்பு நோய் தீர்த்த, சம்பந்தரின் ( சரண் புகுபவர்களின் காவலனின்), கழலடிகளைப் போற்றுவோம்.


2.ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி

இந்த அடி அப்பர் பெருமானைக்குறிப்பதாகும்."கற்றுணைப் பூட்டி ஓர், கடலில், பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே.."என்று உலகுக்கு விளங்க வைத்த திருநாவுக்கரசர் அடிகளைப் போற்றுவோம்.


3.வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி

திரு நாவலூரில் பிறந்த சுந்தரரின், (வன் தொண்டரின்), பாதங்களைப் போற்றுவோம்.

இறைவனைப் பாடும் போது, வசை மொழிகளால், (பித்தா !) எனப் பாடியதால், வன் தொண்டர், என்ற பெயரும், சுந்தரருக்கு உண்டு.


4. ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

உலகம், உய்ய, தம், அன்பால், இறைவனைச் சிக்கெனப்பிடித்த, திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரின், திருவடிகளைப் போற்றுவோம்.