Thursday, May 28, 2009

திருத்தாளமுடையார், ஓசைக்கொடுத்த நாயகி......!

தலம்: திருக்கோலக்கா
தலப்பெயருக்கானக் காரணம்:
அம்பிகையின் அண்ணனாகிய திருமால், ஈசனின் திருமணக்கோலத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க விரும்பினார். திருமாலின வேண்டுகோளுக்கு இணங்கி, ஈசன் தன் மணக்கோலத்தைக்காட்டியதால், இந்த ஊருக்கு, திருக்கோலக்கா என்ற பெயர் வந்தது. (சீர்காழிக்கு அருகில் உள்ள தலம்).

தலப்பெயர் சரி, இறைவனுக்கும் , இறைவிக்கும், இந்த பெயர்கள் வந்ததற்கு , சம்பந்தர் வாழ்க்கையில், நடந்த ஒரு திருவிளையாடலே காரணம்
.

சம்பந்த பெருமான், சிறுபிள்ளையாய், தன் சின்னக்கைகளில், தாளம் போட்டவாறு, " மடையில் வாளை" என்ற பதிகம் பாடி திருக்கோலக்கா வந்தார். இறைவன், அந்த பிள்ளைக்கு இரங்கி, ஒரு பொன் தாளம் தந்தார்; தாளம் ஒலிக்கவில்லை.!!.. அம்பிகை, அந்த தாளத்தில், ஓசைக்கொடுத்தாள். அதனால், இறைவனுக்கு திருத்தாளமுடையார் என்றும், இறைவிக்கு ஓசைக்கொடுத்த நாயகி என்றும், பெயர்கள் உண்டானது.
"தோடுடைய செவியன்" என்ற முதல் பதிகத்துக்கு அடுத்து, சம்பந்தர் பாடிய பதிகம் " மடையில் வாளை பாய" எனத் தொடங்கும் திருக்கோலக்காப் பதிகம் ஆகும். அந்த பதிகம் பின்வருமாறு: (சம்பந்தர் சுவாமிகள் அருளியது)
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையும் கொண்ட வுருவம் என்கொலொ.

பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே

நலங்கொள் காழி ஞானசம் பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.

மிக அழகான பதிகம் இது!. முதல், இரண்டு அடிகளில், திருக்கோலக்காவின் அழகையும், அடுத்த இரண்டு அடிகளில், இறைவனின் அழகையும், பாடினார், சம்பந்தர்.