Friday, April 02, 2021

சிவபெருமானின் திருவடியைக்காண விளமல் செல்வோம்!

 

நாம் எல்லாரும் பரவலாக அறிந்த எழுத்தாளர் திரு.கோமல் ஸ்வாமிநாதன். எனக்கு விளமல் என்ற ஊரின் பெயரைக் கேட்டதும் கோமல் ஞாபகம் வந்தது. இரண்டு ஊர்களுமே திருவாரூர் அருகில் இருக்கின்றன. 

பதஞ்சலி மனோஹரர் கோயில்,விளமல்



இந்த கோயில் திருவாரூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 

இம்மையே உம்மை சிக்கென்னப்பிடித்தேன் என்று மாணிக்கவாசகர் ஈசனின் திருவடியைத்தான் பற்றினார். இறைவனின் திருவடிப்பெருமையை நமக்கு உணர்த்தும் தலம் விளமல். 

பதஞ்சலி என்பது இன்றைய அளவில் வர்த்தகபெயராக  பலரும் அறிந்த ஒரு பெயர். பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தை எழுதியவர் .பாதி உடலில் பாம்பின் உருவம் கொண்டவர்.

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்

என்றிவர் என்னோ டெண்மரு மாமே.  

இந்த திருமந்திரத்தில் திருமூலர், தம்மோடு சேர்த்து, சிவபெருமானின் (நந்தியின்) அருள் பெற்ற நால்வரான சனகர், சனந்தனர், சனாதனர் , சனற்குமாரர், சிவயோக முனிவர் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கிரபாத முனிவர் ஆகிய எட்டுப்பேரையும் குறிப்பிடுகிறார். 

சிதம்பரம் கோயில்- தில்லை, ஆதித்தலமாக போற்றப்படுவதாகும்.

சிதம்பரம் கோயில், பதஞ்சலி முனிவரும்,வியாக்கிரபாத  முனிவரும் ஆனந்த தாண்டவத்தைக் காண தவம் செய்ததால், அவர்களுக்கு சிவபெருமான் ஆனந்த தாண்டவத்தைக்காட்டி அருளிய தலம் . 

அதே போல  அஜபா நடனமும், திருவடித்தரிசனமும் அவர்கள் இருவரும் வேண்ட, அஜபா நடனத்தை அவர்கள் இருவருக்கும் திருவாரூரில் காட்டி அருளினார்.

பதஞ்சலி முனிவர், மண்ணால் ஆன சிவலிங்கத்தைப்பிடித்து விளமல் தலத்தில் வழிபட்டதால், அவர் பெயரோடு சேர்த்து, பதஞ்சலி மனோஹரர் என்று இறைவனும் அழைக்கப்படுகிறார். 

இந்த விளமல் தலத்தில் ,  பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாத முனிவரும் திருவடித்தரிசனம் அருளப்பெற்றனர். 

இங்கு கோயில் கொண்டிருக்கும் அம்மையின் பெயர் மதுரபாஷினி . இன்றும் வாய்ப்பேச்சு வராத குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்துகொள்ளும் கோயிலாகவும் இந்த கோயில் இருக்கிறது. 

திருஞானசம்பந்த பெருமான் விளமல் திருப்பதிகத்தில்,  இறைவனின் திருவடியைப் பற்றிப் பாடுகிறார். 

அந்தப்பதிகத்தின் பாடல்கள் சிலவற்றைத்தான் இந்தப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

மத்தக மணிபெற மலர்வதொர்

  மதிபுரை நுதல்கரம்

ஒத்தக நகமணி மிளிர்வதொர்

  அரவினர் ஒளிகிளர்

அத்தக வடிதொழ அருள்பெறு

  கண்ணொடும் உமையவள்

வித்தகர் உறைவது விரிபொழில்

  வளநகர் விளமரே.  (03-088)


அருள்பெறு கண்ணோடும் உமையவள் -அருளை பொழிபவள் அம்பிகை, அருள் நிறைந்த கண்களை உடையவள். அடியவரின் துயரம் பொறுக்காது, அருள் செய்பவள் 

வித்தகர்- வித்தகர்- ஞானம் உடையவர்,சிவபெருமான். பல திருப்புகழ்களில் அருணகிரிநாதரும் வித்தகா என்று முருகப்பெருமானைப் போற்றியுள்ளார்.  வித்தகா என்ற சொல் ஞானமூர்த்தி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

உறைவது விரிபொழில்

  வளநகர் விளமரே-அம்பிகையும் சிவபெருமானும் உறைகின்ற விரிந்த சோலைகள் சூழ்ந்த வளமான நகர் விளமல் 

மத்தகம் அணி (அழகு) பெற,  -மத்தகம் என்ற சொல்லை , யானையின் நெற்றிக்கு தான் இப்போது பயன்படுத்துகிறோம். 

அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய குறுநாவல் ஒன்றின் பெயர் மத்தகம் .

மத்தகம் என்பது சிவபெருமான் தலையின் மேல் என்ற பொருளில் இந்த பதிகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த தலையின் முகப்புப்பகுதிக்கு அழகு சேர்க்குமாறு,

மலர்வது ஓர் மதி -ஒரு பிறை சந்திரன் மலர்ந்திருக்கிறது. பூவைப்போல, மதியை மலர்ந்திருக்கிறது என்று சொல்கிறார் சம்பந்தப்பெருமான்.

புரை நுதல்-புரை (ஒத்த)- நுதல் (நெற்றி)- இந்த நெற்றி அழகுக்கு அந்த நெற்றியைத்தவிர ஈடாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

நகமணி ஒத்தக-கரங்களில் உள்ள நகங்களைப்போல 

  மிளிர்வதொர்

  அரவினர் -ரத்தினங்களை வாயில் கொண்ட ஐந்து தலை நாகத்தை 

ஒளிகிளர் கரம்-ரத்தினங்களின் ஒளி மிளிர்கின்ற பாம்பினைத்தன். தன் கையில் கங்கணமாகச்சூடியிருப்பவர் சிவபெருமான்.

அத்தக வடிதொழ- அவரின் மேலான திருவடியைத்தொழ, நாம் விளமலுக்குச் செல்வோம் 

அதே பதிகத்தின் மற்றொரு பாடல் :

பண்டலை மழலைசெய் யாழென

  மொழியுமை பாகமாக்

கொண்டலை குரைகழ லடிதொழு

  மவர்வினை குறுகிலர்

விண்டலை யமரர்கள் துதிசெய

  அருள்புரி விறலினர்

வெண்டலை பலிகொளும் விமலர்தம்

  வளநகர் விளமரே.

இந்தப்பாடல் சொல்வது சிவபெருமான் அடியவர்களை வினைகள் சாராது என்னும் நம்பிக்கை மொழி. 

பண்டலை மழலைசெய் யாழென

  மொழியுமை பாகமாக்

கொண்டு 

பண் தலை மழலை செய் யாழ் என மொழி உமை பாகமாக கொண்டு-

சிலர் பேசுவதே பாடுவதைப்போல இருக்கும். உமை அம்மையின் பேச்சு, பண்ணோடு கூடிய இசை மழலையாக இருக்கிறது. அது யாழின் இனிமையை ஒத்ததாக இருக்கிறது. இத்தனை இனிமையான பேச்சுமொழியைக்கொண்ட உமையவளைத்தன் உடலில் ஒரு பாகமாகக்கொண்டவர் சிவபெருமான் .

அலை குரைகழ லடிதொழு

  மவர்வினை குறுகிலர்-அலை (அசைகின்ற), குரை (ஒலிக்கும்), கழலடி தொழும் ,அவர் வினை குறுகிலர்.

வீரக்கழல் அணிந்திருக்கும் சிவபெருமானின் திருவடியைத்தொழுபவர்க்கு வினைகள் சாராது. 

விண்டலை யமரர்கள் துதிசெய

  அருள்புரி விறலினர்- விண் தலை அமரர்கள் (தேவர்கள்),துதி செய்ய அவர்களுக்கு அருள்செய்யும் விறலினர் (அருட்பெருக்கோடு கூடிய வலிமை உடையவர்) சிவபெருமான். 

வெண்டலை பலிகொளும் விமலர்தம்

  வளநகர் விளமரே."பிரம்மன் தலையாம் ஓடுடையார் " என்று திருக்கழிப்பாலை தேவாரத்தில் ஒரு வரி வரும். அதே தான் இங்கும் சொல்லப்படுவது. 

பிரம்மன் தலையை ஓடாகக்கொண்டு , வீடுகள் தோறும் பலி ஏற்றவர் சிவபெருமான். 

விமலர்- பாசம் என்னும் பற்று நீக்கியவர்; தெளிவானவர். அந்த விமலனாகிய சிவபெருமான் வீற்றிருப்பது, வளநகராகிய விளமல் ஆகும். 

அந்த சிவபெருமானின் திருவடியைத்தொழ தொழ, நமக்கும் மனதில்  தெளிவு பிறக்கும், வினைகள் நம்மை வந்து சேராது. 

இந்தக்கோயில் பற்றிய மேல் விவரங்களுக்கு, திரு.வேலுதரன் அவர்களின் இணையப்பக்கத்தையும் கொடுத்துள்ளேன் 

https://veludharan.blogspot.com/2021/03/vilamal-patanjali-manohar-temple.html