Monday, December 29, 2014

மனத்துணை நாதர் (திருவலிவலம்)- அப்பர் தேவாரம்

பெண்ணவன் காண் ஆணவன் காண் பெரியோர்க்கென்றும்
பெரியவன் காண் அரியவன் காண் அயனானான் காண்
எண்ணவன் காண் எழுத்தவன் காண் இன்பக்கேள்வி
இசையவன் காண் இயலவன் காண் எல்லாங் காணுங்
கண்ணவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லுங்
கதியவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லுங்
மண்ணவன் காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே.
                                            (புகைப்பட உதவி: ஆலய வாணி)

பல சிவாலயங்களில் இறைவனின் பெயரே மனதிற்கு நிம்மதி அளிக்கிறது.
திருப்பாதிரிப்புலியூர் சிவனாரின் பெயர்- தோன்றாத்துணை நாதர்.

இம்மாதிரி பெயர்கள் (சிவ நாமங்கள்) "தெய்வம் நமக்குத்துணை பாப்பா- ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா "என்ற பாரதியாரின் வரிகளை முன்னிறுத்துகின்றன.

இறைவனை பல வடிவங்களிலும், வகைகளிலும் கண்டார் அப்பர் பெருமான்.

இந்தப்பாடலிலும் எண், எழுத்து, இசை முதலியவாக இருக்கிறார் இறைவன் என்கிறார்.

பெண்ணாகவும், ஆணாகவும், பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாகவும், அயன்(பிரம்மா), அரியாகவும் (விஷ்ணு)  இறைவனைக்காண்கிறார்.
கண்டேன் அவர் திருப்பாதம்- கண்டறியாதன கண்டேன் என்ற திருவையாறு தேவாரத்தில், காணுகிற உயிர்கள் அனைத்தும் அதன் இணையோடு வர- ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பவர் சிவனே எனத்தெளிந்தார்.

இந்தத் தேவாரமும் அப்பர் பெருமான் கண்கள் காணுகின்ற பலவற்றிலும், காணாத மனம் உணர்கிற பலவற்றிலும், இறைவனே இருப்பதாய் சொல்கிறார்.

இந்த மண்ணில் வாழ்வோர் சென்றடையும் கதியாகவும், அவர்கள் உடல் சென்றடையும் நிலமாகவும் இருக்கிறார் இறைவன்.

உயிரற்ற உடலுக்கும், உயிரான ஜீவனுக்குமான கதியாய் நிற்கிறார்;
வானவர்களும்  வணங்கும் வலிவலம் மேவிய- மனத்துணை நாதர்!