Thursday, June 30, 2016

பொய்யாத விநாயகர்- பதினோராம் திருமுறை- நம்பியாண்டார் நம்பி

மலேசியாவில் உள்ள மலாக்காவுக்கு போன வருடம் சென்றியிருந்தோம்.
ஊர் சுற்றி பார்க்கும்போது, ஒரு நாள் மாலையில் இந்த பொய்யாத விநாயகர் கோயிலுக்கு போனோம்.
அந்த நாள் பாணி செட்டியார் கோயில். உள்ளே கிணறு இருந்தது, பல விக்கிரகங்கள் வெண்கலத்தில் இருந்தன. அந்த காலத்து ஓட்டு வீடு பாணி அமைப்பு.






பக்கத்திலேயே ஒரு தர்கா, அந்த பின்னர் ஒரு சீனக்கோயில் என நாங்கள் மாலை 6.30 மணிக்கு திரும்பும்போது, ரொம்பவே சிலிர்க்கும் அனுபவம். கோயில் மாலை நேர தீபாராதனையை அடுத்து, தர்காவிலும், சீனக்கோயிலிலும் பிரார்த்தனைகள் நடந்தன.
அந்த பக்கம் போனால் நீங்களும் பார்த்து வாருங்கள்!!!.நம் பிரார்த்தனைகளை இந்த பொய்யாத விநாயகர் நிச்சயம் பொய்க்க விடமாட்டார்.

இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது, பதினோராம் திருமுறையில் உள்ள, நம்பியாண்டார் நம்பி அவர்கள் அருளி செய்த பாடல்.
திருநாரையூரில் உள்ள பொல்லா பிள்ளையாரைப்பற்றிய பாடல்.
பொல்லா என்ற சொல்லுக்கு உளியால் செதுக்கப்படாத என்று பொருள்.

தானாக சுயம்புவாய் வந்தவர் இந்த பொல்லா பிள்ளையார். நம்பியாண்டார் நம்பி  ராஜராஜ சோழரின் கட்டளைப்படி, திருமுறைகளைத்தொகுத்துக்கொடுத்தார். அவர் இந்த பொல்லா பிள்ளையாரின் ஆசி பெற்று தன் பணியைச்செய்தார்.

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய்
பின்னவலம் செய்வதென்னோ பேசு.


இந்த பாடல் ரொம்பவே அழகாக இருக்கிறது.


நெஞ்சே! பூங்கொம்பு போன்ற(கொம்பனைய) வள்ளியின் கணவன் (முருகன்), குறுகாமே (வந்து அடையும் முன்னரே), வம்பனைய மாங்கனியை (புதிதாக வந்த மாங்கனியை), பெற, நாரையூர் நம்பனை(தன் தாய் தந்தையரை) வலம் வந்தார். உலகை வலம் வருதலை விட, இந்த வழியே சிறந்தது என்று தேர்ந்தார்.

தாய் தந்தையரை வலம் வந்து, தன் துதிக்கையைதாழ்த்தி துதித்து, மாங்கனியை பெற்றார். அந்த விநாயகரை சொல் நெஞ்சே. சொன்னால், நோய் (வினைகள்), மற்றும் அவலம் (துன்பம்) நம்மை என்ன செய்யும்?

Sunday, June 19, 2016

பிறவாமை காக்கும் பிரான்(பதினோராம் திருமுறை- காரைக்கால் அம்மை)

இன்று மாங்கனித்  திருவிழா!!!.

காரைக்கால் அம்மையின் வாழ்வில் இறைவன் ஒரு பெரும் அற்புதத்தை நிகழ்த்திய நாள்!.

ஒரு வணிகரின் மனைவியாய் ,இல்லறத்தில் வாழ்ந்து சிவனாரை துதித்து வந்தார். ஒரு நாள் ஒரு சிவனடியார்  வந்து அவர் வாசலில் நிற்க, தன் கணவர் முந்தைய நாள் வாங்கி வந்த மாங்கனிகளில் ஒன்றை, சிவனடியாருக்கு கொடுத்தார். 

மதிய உணவுக்கு வீடு வந்த அம்மையின் கணவன் பரமதத்தன், மாம்பழத்தை கேட்க, ஒன்றை பரிமாறினார். இன்னொரு மாம்பழத்தை கேட்க, என்ன செய்வது என்று தெரியாமல், சிவனை வேண்டினார். அவர் கைகளிகளில் ஒரு மாம்பழம் வந்து இறங்கியது. 

அந்த பழத்தை அரிந்து பரிமாறினார்.

அதை உண்ட பரமதத்தன், இந்த மாம்பழம் முற்றிலும் வேறு சுவையில் இருக்கிறது. எப்படி இது வந்தது? என்று கேட்க, சிவன் அருளால் கிடைத்த பழம் என்றார். பயந்து போன பரமதத்தன், வேறு ஊருக்கு சென்று மற்றொரு திருமணம் செய்து கொண்டான். அம்மையின் கால்களில் விழுந்து விட்டான். 
அது காலும், மனித பெண்ணாய் இருந்த அம்மை, எனக்கு பேய் வடிவு கொடு என கேட்க, இறைவன் அவரின் அழகு கோலத்தை மாற்றி, பேய் வடிவு தந்தார். 

எப்படி அவ்வை, தனக்கு முதியவர் கோலம் வேண்டும் என பிள்ளையாரை கேட்டாரோ, அது போல காரைக்கால் அம்மை, பேய் உரு கேட்டார்.

காரைக்காலில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இந்த நிகழ்ச்சி மாங்கனி திருவிழாவாக கடைப்பிடிக்கபடுகிறது. பக்தர்களும் மாங்கனியை வாங்கி சிவனுக்கு படைக்கின்றனர்.

இந்த பதிவில்  உள்ள பாடல்கள், காரைக்கால் அம்மை இயற்றிய திருவிரட்டை மணி மாலை, என்னும் பதினோராம் திருமுறையில் உள்ளன .

கட்டளைக் கலித்துறையும், நேரிசை வெண்பாவும் அந்தாதியாய் மாறி மாறி வர இருபது பாடல்களால் தொகுக்கப்படுவது ‘இரட்டைமணி மாலை’  ஆகும்.
இரு விதமான பாக்களால் ஆன அழகிய தமிழ் மாலை.!!!

நிறைய அவ்வையாரின் மூதுரை, நல்வழி போன்ற செய்யுள்களில் நேரிசை வெண்பாக்களை காணலாம். 

நேரிசை வெண்பா என்பது பொதுவாய் நான்கு அடிகளைகொண்டு இருக்கும். நான்காவது அடி மட்டும் 3 சொற்களைக்கொண்டு இருக்கும். இரண்டாவது அடியில் தனிச்சொல் இருக்கும்.
இந்த பதிவில் இருக்கும் இரண்டு பாடல்களும் நேரிசை வெண்பாக்கள் தான்.
ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான். 


மிக எளிமையாய் விளங்கும் பாடல்!!!. ஈசன் இல்லாமல் நாம் இல்லை என்பதை புரிந்து, நம்மைக்குறித்து நாம் என்ன கர்வம் கொண்டிருந்தாலும், இறைவன் இல்லாமல் நாம் இல்லை என்று எண்ணி, அவர் முன்னே நாம் மிக சிறியவர் என்று கூசி, அவரை மனதில் எப்போதும் எண்ணி கொண்டிருப்பவர்களை, மீண்டும் பிறவாமல் காப்பார் இறைவன்.

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை. 


நம்மை பிறவாமல் காப்பாற்றும் பிரானை எப்போதும் ஓவாது (இடைவிடாது) நெஞ்சே நீ உரை என்கிறார் அம்மையார்.

நம்மை பிறவிக்கடலில் ஆழாமல் காக்க வல்லவர் சங்கரனார். அவர் தாழ் சடை உடையவர்; பாம்பினைத்தன் (பொங்கு அரவம்) தலையில் வைத்திருப்பவர். நம் இறுதி நாளில் (அங்கொரு நாளில்) நம்மை மீண்டும் பிறவி என்னும் கடலில் ஆழாமல் காப்பவனை, நெஞ்சே நீ இடைவிடாது உரைத்திடுவாய்!

இந்த மாதிரி 4 வரி பாடல்கள், எளிதில் நம்மால் மனதில் உள்வாங்க முடியும். இவற்றை நம் அன்றாட பிரார்த்தனையில் சொல்லலாமே!!!

Friday, June 17, 2016

பிள்ளையின் அழகில் மயங்கிய ஆளுடைய பிள்ளை!!!

இந்த தேவாரத்தை பாருங்கள்!!!. ஒவ்வொரு சொற்றொடரிலும் ஒரு யானை இருக்கும். 

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.



இது முதல் திருமுறையில் உள்ள சம்பந்தர் தேவாரம். எந்த ஊர் என்று உங்களால் சொல்ல முடிகிறதா?

இந்த கோயில் மேலிருந்து பார்த்தால் சோழ நாட்டின் பச்சை வயல்களின் அழகு தெரியும். 

இங்குள்ள சிவனார், ஒரு பெண்ணின் பிரசவ காலத்தில் அவள் தாயின் உருவத்தில் அந்த பெண்ணுக்கு உதவினார். தாயுமானவ சுவாமி என பெயரும் பெற்றார். 

இது திருச்சிராப்பள்ளி தேவாரம்!.மலையே இல்லாத பகுதியில்   உள்ள
ஒரு குன்று கோயில். முன்னாளில் சமண பள்ளியாக இருந்தது. பள்ளி என்று முடியும் ஊர்கள் பெரும்பாலும் சமண பள்ளியாக இருந்திருக்கின்றன.

(Image courtesy:tamilrasigan.wordpress.com)

Audio Link: http://shaivam.org/gallery/audio/tis-sat-nalamnalgum-nalvarnatramizh.htm




என் தேவார ஆசிரியர் திரு. மா.கோடிலிங்கம் சொல்வார்:தந்தையை பாட வந்த சம்பந்தர், பிள்ளையின் அழகில் மயங்கி,( ஆனை முகனை எண்ணி), யானை யானை  என்றே வருமாறு இந்த தேவாரத்தைபாடினார் என்று.


இந்த பாடல் குறிஞ்சி பண்ணில்- ஹரி காம்போஜி ராகத்தில் பாடுவார்.


பாடும்போது ,யானை கட்டி வைத்த இடத்தில  எப்படிமெதுவாக ஆடுமோ  அது மாதிரி அசைத்து அசைத்து  பாடணும் என்பார். சிரித்துகொண்டே நடக்கும் எங்கள் வகுப்பு!!!.

மிக எளிமையான பாடல் இது. 

நன்றுடையானை- நன்மைகளையே தன் உடைமையாகக் கொண்டவனை


தீயதிலானை-தீயது ஒன்றும் இல்லாதவனை 

நரை வெள்ளேறு ஒன்றுடையானை -மிக வெண்மையான எருதை தன் வாகனமாக கொண்டவனை  
உமை ஒரு பாகம் உடையானைஉமையாளை தன் உடலில் ஒரு பாகத்தில் கொண்டவனை 

சென்றடையாத திருவுடையானை-

அவனது அருளில்லாமல்  அடைய  முடியாத முக்தி என்னும் செல்வத்தை உடையவனும் 
சிராப்பள்ளி குன்றுடையானை - சிராப்பள்ளி குன்றை உடையவனை 
கூற என் உள்ளம் குளிருமே -இந்த சிவனாரை போற்றி பணிவதில் என் உள்ளம் குளிருமே.

Sunday, June 05, 2016

இல்லை ஆனா இருக்கு!

ஒரு பூவையோ, பொருளையோ விவரிக்க சொன்னால், விவரிக்க முடியும். ஆனால் இறைவனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
இந்த பதிவில் அப்பரின் இரண்டு பதிகங்களை பார்க்க போகிறோம்.

முதல் பாடல் திருவொற்றியூர் பதிகம்.  எது இறைவன் இல்லை என்பதாய் பாடும் பதிகம்.


கால்களில் கடல் மணல் தொட, இந்த பழமையான சிவாலயம்  ஒரு மாறுபட்ட அனுபவம்!!!.
திருவொற்றியூருக்கு  பல சிறப்புகள் உண்டு.

 தினம் தோறும் தியாகேசருக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்ட,கலிய நாயனார் வாழ்ந்த ஊர்;

ராமலிங்க அடிகளார் இந்த கோயிலுக்கு தினம் வருவார். நிறைய பாடல்களை இந்த கோயில் இறைவன், அம்பாளின் மேல் பாடியுள்ளார்;

சுந்தரர் சங்கிலி நாச்சியாரை மணந்தது இந்த கோயிலில் உள்ள மகிழ மரத்தடியில். அந்த மரம் இன்றும் இருக்கிறது. இந்த கோயிலில்,சகஸ்ர லிங்கம் இருக்கிறது.
பட்டினத்தார் இங்கு தான் சமாதி ஆனார்.
ராஜேந்திர சோழர் காலத்துக்கற்றளி.

மனது எளிதில் பிரார்த்தனையில் லயிக்கும் சூழ்நிலை உள்ள கோயில். 
அதிக கூட்டம் அலை மோதும் கோயில்களை பார்க்க, இங்கு அத்தனை கூட்டம் இல்லை. எனவே பிரார்த்தனை செய்ய இது உகந்த கோயில்.


திருவொற்றியூர் அப்பர் தேவாரம் :

(Image courtesy: chennai.wordpress.com)

மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை 
    மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
    யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
    பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
    உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே

இறைவன் மண்,விண், சூரியன் (வலயம்) அல்லர்; மலை அல்லர்; கடல் அல்லர்; காற்றும் அல்லர்.  எண், எழுத்தும் அல்லர்; இரவு, பகல் என மாறி வரும் ஒளியும் அல்லர். பெண் அல்லர், ஆண் அல்லர், மூன்றாம் பாலினமும் அல்லர்

இவை எல்லாவற்றிலும் பரந்து நிற்கின்ற பெரியவன் இறைவன்.அவர் தம்பால் அன்பு கொண்டவர்க்கு என்றும் தீமை செய்யாதவர்.

உணர்வுகளால் அறியவல்லவர் ஒற்றியூரின் அரசனான சிவ பெருமான்!!!

இதற்கு முற்றிலும் மாறுபட்ட பதிகம் அப்பர் திருவலிவலத்தில் பாடியது.




திருவலிவலம் அப்பர் தேவாரம்:

பெண்ணவன் காண் ஆணவன் காண் பெரியோர்க்கென்றும்
பெரியவன் காண் அரியவன் காண் அயனானான் காண்
எண்ணவன் காண் எழுத்தவன் காண் இன்பக்கேள்வி
இசையவன் காண் இயலவன் காண் எல்லாங் காணுங்
கண்ணவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லுங்
கதியவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லுங்
மண்ணவன் காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே


பெண்ணாகவும், ஆணாகவும், பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாகவும், அயன்(பிரம்மா), அரியாகவும் (விஷ்ணு)  இறைவன் இருக்கிறார்.
எண்ணாகவும், எழுத்தாகவும், கேள்வி இன்பம் தரும் இசையாகவும் இருக்கிறான். எல்லாம் வல்லவன் இறைவன். 

அவர்  எல்லாவற்றையும் நமக்கு காட்டும் கண்ணாகவும், கருத்தாகவும் இருக்கிறார்.இந்த உலகை விட்டு கழிந்தோர் செல்லும் கதியாகவும், அவர்கள் அடங்கும் மண்ணாகவும் இருக்கிறார்.

வானவர்களும் வணங்கி ஏத்தும் இந்த இறைவன் என் மனதில் இருக்கிறார். அவர் மனத்துணை நாதர்.

நாம் காணும் பொருட்களுக்கு அப்பாற்பட்டு எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவர் இறைவன் என்பதையே இந்த இரு பதிகங்களும் சொல்கின்றன.

திருவலிவலம் பற்றிய மற்றொரு பதிவை இங்கே (காண்க:)