Wednesday, March 23, 2016

புள்ளிருக்கு வேளூர்- வைத்தீஸ்வரன்கோவில் தேவாரம்

இன்று பங்குனி உத்திரம்; பங்குனி மாத பௌர்ணமி நாள்; முருகன் தெய்வ யானையை மணந்த நாள்; 
ஹோலி பண்டிகையும் இன்றே.
ஆண்டாள் ரங்க மன்னாரை மணந்த நாள்; பார்வதி பரமேஸ்வரர் திருமண நாள் என பல சிறப்பு பெற்ற நாள்.
இங்கு சிங்கையில் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள, பால சுப்பிரமணியர் கோவிலில் காவடிகள் ஆடி வந்து கொண்டிருகின்றன.

நிறைமதி சூழ் வானம் எப்படி இருள் அகன்றிடுமோ அப்படி நாம் மன இருளை இறைவன் நீக்க வேண்டும் என பிரார்த்திக்கும் அப்பர் பெருமான் தேவாரம் இங்கே.

இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி
இடர்பாவம் கெடுத்து ஏழையெனை உய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போல்
சிவலோக தெறியரிய சிந்தை தந்த
அருளானை ஆதி மா தவத்து ளானை 
ஆறங்க நால் வேதத்து அப்பால் நின்ற
பொருளானை புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே 

(ஆறாம் திருமுறை- அப்பர் தேவாரம்)


வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பண்டைய பெயர்- புள்ளிருக்கு வேளூர்.
ஜடாயு முக்தி பெற்ற தளம்; வேதங்கள் சிவ பெருமானை பூஜித்த  தலம். இங்கு முருகன் செல்ல பிள்ளை. வேள்- முருக பெருமான்.- செல்வ முத்துக்குமார சுவாமி - இவர் தன் தாய் தகப்பனை தினமும் இங்கு பூஜிக்கிறார்.

மாலை நேர கற்பூர ஆரத்திக்கு சென்று பாருங்கள்; ஒரு புடவையையும், வேட்டியையும் மாறி மாறி மேல தூக்கி போட்டு பிடிப்பார்கள். அதே நேரம் முருகனுக்கு கற்பூர தீபம் ஆகும்.
குழந்தை குமரனை தூங்க வைக்க அம்மையும் அப்பனும் காட்டும் விளையாட்டு இது.

முருகனுக்கு உகந்த பங்குனி உத்திரத்தில் புள்ளிருக்கு வேளூர் தேவாரம் பற்றி எழுதுவது பொருத்தமாக இருக்கும்.

தீராத ரோகங்களைத் தீர்த்து வைக்கிறார் இங்குள்ள வைத்தியநாதர்.
அது மட்டுமல்ல; நம் மனதில் உள்ள தேவை இல்லாத பயங்கள்; தெளிவு இல்லாத மன நிலை , இறைவன் பாதத்தில் சரணாகதி செய்த பொழுதில்  தெளிகிறது.
பிறப்பெனும் பேதைமை நீங்க- சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு என்கிறது திருக்குறள்.


உண்மை பொருளை நோக்கி பயணிக்க பயணிக்க, பிறவி பிணி தீர்ந்து, தெளிவு பிறக்கிறது.


(Image Courtesy: Dinamalar and Indianrail)


அப்பர் பெருமான் சொல்கிறார்-

 என் இருண்ட உள்ளத்தின் இருளை நீக்கி
என் தீவினைகளையும், துயரங்களையும் போக்கி , நான் உய்ய- பிறவி பிணியிலிருந்து விடுபட-என் தெளிவற்ற மனதில் (தெருளாத சிந்தை), தெளிவை உண்டாக்கி , சிவலோக நெறியை அறியும் வழியை எனக்கு வழங்கிய அருளாளன்- சிவ பெருமான்.
இவர்  தொடக்கத்திலிருந்தே  (ஆதி நாள் முதலாகவே) பெரிய தவத்தில் நிலை பெற்று இருப்பவர். நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் அப்பால் நின்றவர்; புள்ளிருக்கு வேலூரில் உள்ள இந்த இறைவனை போற்றாமல் நாட்களை வீணடித்து விட்டேனே.


No comments: