உந்தத் தளரா வளைத்தனம் முன்னம்மின் ஒடைநெற்றிச்
சந்தத் தளரா ஒருதனித் தெவ்வர்தம் தாளிரியூர்
விந்தத் தளரா மருங்குற் கிளிபெற்ற வேழக்கன்றின்
மந்தத் தளரா மலர்ச்சர ணங்கள் வழுத்துமினே
வேழ முகத்து விநாயகனை தொழ வாழ்வு மிகுத்து வரும். இது அவ்வையின் வாக்கு.
இந்த பதிவில் நாம் பார்க்கும் பாடல்
பதினோராம் திருமுறையில் உள்ள செய்யுள்.
தளரா என்ற சொல் எல்லா அடிகளிலும் வருகிறது. விநாயக பெருமான், இடையில் வரும் இடையூறுகளால் நாம் மனம் தளரும்போது, அந்த இடையூறுகளைகளைந்து, நாம் தளராமல் முன்னேறி செல்ல உதவுகிறார். அதனால் தான் அவர் முழு முதற் கடவுள்.
பொருள் பார்க்கும்போது மூன்றாவது அடியிலிருந்து தொடங்குவோம்.
ஊர் விந்தத்தள்-விந்திய மலையை தன் இருப்பிடமாக கொண்டவள். துர்க்கை.
அரா மருங்கு - பாம்பு போலும் இடை. முற்றிலும் வேறுபட்ட உவமை
கிளிபெற்ற வேழக்கன்றின்-கிளி போல பேசும் அம்பிகையின் வேழக்கன்று. சிறிய ஆண் யானை (வேழம்)
மந்தத் தளரா மலர்ச்சர ணங்கள் வழுத்துமினே-
மந்தம்- மெதுவாக செல்கின்ற, தளரா மலர்ச்சரணங்கள்- ஆனால் தளர்வுறாமல்முன்னேறி செல்கின்ற மலர்பாதங்களை
வழுத்துமினே- போற்றுங்கள். உங்களுக்கு சகல நலன்களும் கிடைக்கும்.
இப்போது முதல் இரண்டு அடிகளைப்பார்ப்போம்.
உந்தத் தளரா வளைத்தனம் முன்னம்மின் ஒடைநெற்றிச்
சந்தத் தளரா ஒருதனித் தெவ்வர்தம் தாளிரி-
ஒருதனித் தெவ்வர்-ஒப்பற்ற பகைவர்
தம் தாள் இரி- தம்முயற்சிகளில் பின்வாங்கி ஓடும்படி செய்த வேழக்கன்று
யானையின் நெற்றி அழகு. அதன் பட்டத்தின் அழகு. அதில் ஒளி மின்னும் அழகு.
உந்த - வெளிப்படுத்த. தளரா வளைத்தன - தளர்ச்சியடையாது எல்லாப் பொருள்களையும் உள்ளடக்கு வனவாகிய ஒளிக்கதிர்கள்
முன்னம் மின் ஓடை நெற்றிச் சந்தம் - முன்னே மின்னுகின்ற பட்டத்தையுடைய நெற்றியின் அழகு.
ஒளி பொருந்திய முகத்தோடு இருக்கிறார் விநாயகர்.
தளரா- என்பது என்னைப்பொறுத்த வரை விநாயகருக்கான அடைமொழியாக தான் இருக்க வேண்டும். பகைவர்கள் எத்தனை ஒப்பற்றவராக இருந்தாலும், தளராமல் இருப்பதால் வெற்றிகளை நமக்கு பெற்றுதருகிறார் விநாயகர்.
விநாயகரின் மலர்ப்பாதங்களை வாழ்த்துவோம்.
சிறிய நாலடி செய்யுள் தான். மனப்பாடம் செய்தால் தினமுமே சொல்லலாம். 😊
1 comment:
Thalara venda Thalara venda Ungal muyarchigal anaithum vetri perum.
Post a Comment