Sunday, April 24, 2016

என்னிலும் இனியன் ஈசனே -திரு இன்னம்பர் -அப்பர் தேவாரம்

திரு இன்னம்பர் எழுத்தறிநாதர் கோவில் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன்பு போனோம். புகைப்படம் எடுக்க வில்லை.
எங்களோடு வந்த ஒரு பெண்மணி தன் பேரன் நன்றாக படிக்க வேண்டும் என்று நோட்டு புத்தகமும் பென்சிலும் வாங்கி சிவனுக்கு சமர்ப்பித்தார்; விந்தையாக இருந்தது.


(Pics: from Internet)
திரு இன்னம்பர் :ஊர் பெயர்ரொம்பவே வித்யாசமாக இருக்கிறது. பெரும்பாலும் நம் தமிழ் நாட்டு திருத்தல பெயர்களின் முடிவு, ஊர், ஈச்சரம், குடி, காடு, கோயில், மலை பள்ளி வாயில் என்றே முடியும்.

உதாரணம்
ஊர்: ஒற்றியூர் 
ஈச்சரம்: பசுபதீச்சரம், கபாலிச்சரம்
குடி: கற்குடி
காடு: திருமறைக்காடு
கோயில்: காளையார்கோவில்
மலை: திரு ஈங்கோய் மலை
பள்ளி: சிராப்பள்ளி
வாயில்: திருமுல்லைவாயில்.

அம்பர் என்பது ஆகாயத்தைக் குறிக்கிறது.ஆகாயத்தில் வலம் வரும் சூரியன் இழந்த தன் ஆற்றலைப் பெற வேண்டி இத்தல இறைவனை பூஜித்துள்ளான். சூரியன் பூஜித்ததால் இத்தலம் இன்னம்பர் என்று பெயர் பெற்றது. 

பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரிய ஒளி காலையில் சிவலிங்கத் திருமேனி மீது படுகின்றது.
பெரிய ருத்ராக்ஷ பந்தல்; அதில் பெரிய லிங்க திருமேனியாய்சிவனார்.
பார்க்கவே பரவசம் தரும் அனுபவம்.

இப்பகுதியை ஆண்டு வந்த மன்னனிடம் கணக்கராக பணியாற்றி வந்தார் சுதஸ்மன் என்ற ஆதிசைவர். கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்து வந்த இவரிடம் ஒரு முறை அரசன் வரவு செலவு கணக்குகளைப் பற்றி விசாரித்தான். அரசரிடம் கணக்கை ஒப்படைத்தார் சுதஸ்மன். கணக்கில் அரசருக்கு ஐயம் ஏற்பட்டது. தன் மீது வீண் பழி வருமோ என்று கவலைப்பட்ட சுதஸ்மன் இத்தல இறைவனிடம் வேண்டினார். ஈசன் சுதஸ்மன் உருவில் மன்னரிடம் சென்று மன்னருக்கு கணக்கில் ஏற்பட்ட ஐயத்தைப் போக்கினார். அதனாலேயே இத்தல இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்ற பெயர்
ஏற்பட்டது. (Courtesy:shivatemples.com)

இறைவன் குழந்தைகள் நன்கு படிக்க அருள் பாலிக்கிறார்.

போன வாரம் தான் சித்ரா பௌர்ணமி முடிந்தது. என் பள்ளி நாட்களில், பொய் சொன்னால்
சித்ரகுப்தன் கணக்குல எழுதிடுவார்னு ஒரு நம்பிக்கை உண்டு.
இந்த அப்பர் தேவாரத்தைப்பாருங்கள்.

தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும் 
எழுதும் கீழ்கணக்கு இன்னம்பர் ஈசனே.

வீண் பொழுது நிறைய வழிகளில் போகிறது. தொலைக்காட்சி முன்னே, தேவையில்லாத வம்பு பேச்சுகளில் என பல வழிகளில் போகிறது.
இறைவன் இறைபக்தியில் நிலைத்து இருப்பாரையும், வீண் பொழுது போக்குபவரையும் கீழ் கணக்கு (குறிப்பு) எழுதுகிறார் என்கிறார் அப்பர் பெருமான்.

இன்னொரு பாடல் :

என்னில் யாரும் எனக்கினியார் இல்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என்னுள்ளே உயிர்ப்பாய் புறம்போந்து புக்
கென்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே

நம் எல்லோருக்குமே மிகவும் பிடித்த நபர் முதலில் நாம் தான்.
நம்மை விட நமக்கு இனியவர் யாரும் இல்லை.

என்னை விட எனக்கு இனிமையானவன் ஒருவன் இருக்கின்றான். அவன் இன்னம்பர் ஈசனே.


என்னுள்ளே உயிர்ப்பாய் புறம்போந்து புக்
கென்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே

கடைசி இரண்டு அடிகள் மிக நுட்பமானவை.
திருமந்திரம் சொல்லும்
உள்ளம் பெருங்கோயில் ஊருடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தார்க்கு ஜீவன் சிவ லிங்கம்
கள்ள புலன் ஐந்தும் காளா மணி விளக்கே என்று.


உயிர்ப்பாய்= பிராணனாய்
உள்ளக்கமலத்தில் உள்ள இறைவனை மந்திர முறைப்படி வெளி கொணர்ந்து முறையாய் ஆவாகனம் செய்து, அவரை உள்ளே நிறுத்தும் சிவ பூஜையை குறிக்கின்றன இந்த அடிகள்.
நாயன்மார் வரலாற்றில் பூசலார் இதைத்தான் செய்தார். வாயிலார் நாயனாரும் தன் இதயத்தில் தான் தன்னிலும் இனியானுக்கு இடம் கொடுத்தார்.


8 comments:

Ushashankar (கண்மணி) said...

Nice post. Aptly described. God bless

Vidhya Arune said...

thanks sir

Unknown said...

Excellent presentation.Fine R.K

Vidhya Arune said...

Thanks appa

Vidhya Arune said...

Thanks appa

திருஞான சம்பந்தர் said...

படிக்கவே மனம் நிறைகிறது....

Hari said...

Madam super🤗🤗🤗🤔🤔🤔

VENKATESAN said...

🙏வணக்கம்
🌹 *மரகதாம்பிகை உடனுறை இருதயாலீஸ்வர் அருளால்*
🌷 *நல்லதே நடக்கும்*
🌸 *வாழ்க வளமுடன்*
🌸 *வாழ்க வையகம்*
🙏நன்றி!!!💐திருநின்றவூர்TN