Sunday, June 09, 2024

மானமும், தானமும், ஞானமும், வானமும்- திருவாழ்கொளிபுத்தூர் தேவாரங்கள்

 தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் ஆசானான திரிசிரபுரம்.மஹாவித்துவான்.மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் ஒரு பாடலோடு இந்த பதிவைப்பார்ப்போம்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை தான் கந்தர் சஷ்டி கவசம் இயற்றிய தேவராய சுவாமிகளுக்கும் தமிழ் ஆசான். அன்றைய நாளில் மாயூரம் உட்பட பல சிவாலயங்களுக்கு இவர் புராணம் இயற்றியுள்ளார்.

கீழேக்காணும் இந்தப்பாடல் திருவாளொளி புற்றூர் புராணத்தில் இருக்கிறது.


பரிப்பவன் பரிக்கும் போதும் -. அதென்ன பரிப்பவன்? 

இப்போது தான் பாரதம் ஒரு தேர்தலைச் சந்தித்திருக்கிறது. பரதன் என்ற சொல்லுக்குத் தாங்குபவன் என்பது ஒரு பொருளாகும்.  

இந்த செய்யுளில் உள்ள பரிப்பவன் என்ற சொல்லுக்கு, காப்பாற்றுபவன் தாங்குபவன் என்பது பொருள். பரிப்பவன்-காப்பாற்றுபவன். பறிப்பவன் அல்ல. 

தமிழ் இருநூற்றண்டுகளில் எத்தனை சொற்களை இழந்திருக்கிறது என்பதை இதுபோன்ற பாடல்களைக்கொண்டு அறியலாம். 

மும்மூர்த்திகளுக்கும் அவரவருக்கான வேலைகள் இருக்கின்றன. ஒருவர் படைக்கிறார், ஒருவர் பரிக்கிறார்-காப்பாற்றுகிறார், மற்றவர் துடைக்கிறார்-நம் வாழ்க்கையை முடித்துவைக்கிறார். இந்த மூன்று தொழில்கள் நடக்கிறபடி நடக்கட்டும். நாம் இந்த மூன்றின்போதும், நல்ல நறுமணம் கமழுமாறு செய்து, துதிகள் பாடி, தேங்காய் உடைக்கும்போது அந்த ஊற்றை உற்றவனும், நம்முடைய பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சிக்கான வாயிலை அடைப்பவனுமாகிய சித்தி விநாயகரை எண்ணுவோம் என்கிறார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று நான் புரிந்துகொண்டேன். 

தேங்காய் உடைப்பது என்பது நம்முடைய துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை வேண்டும் என்பதற்காக விநாயகருக்குச் செய்யும் பிரார்த்தனை. பிறவி என்ற துன்பத்தைப்போக்க, அவரைப்பற்றிக்கொள்வோம். 

இணையத்தில் எங்கும் மேலே சொன்னப்பாடலுக்கு விளக்கம் இல்லை. 

திருவாள் ஒளி புற்றூர் :

காவிரி வடகரையில் பாடல் பெற்ற 29ஆவது தலம். வைத்தீஸ்வரன் கோயில் அருகே இருக்கிறது.

வாசுகி என்னும் பாம்பு பாற்கடலைக்கடைந்த பிறகு தன் உடல் வேதனைத்தீர வேண்டிக்கொண்டத் திருத்தலம்- அதனால் புற்றூர்.

அர்ச்சுனன் கானகவாசம் செய்தபோது தண்ணீர் தேடி இங்கு வந்த போது, ஒரு முதியவர் உருவத்தில் வந்த சிவபெருமான், அர்ச்சுனனின் வாளை வாங்கிக்கொண்டு ஒரு கோலைக்கொடுத்து . அதை அங்கிருந்த இடத்தில் தட்டிப்பார்த்து நீர் இருக்கும் இடத்தை அறிந்துக்கொள்ளச் சொன்னார்.

முதியவர் மறைந்துவிட்டார்.

தண்ணீர் கிடைத்த இடத்தில் ஒரு புற்றும் அந்த புற்றுக்குள் ஒரு லிங்கமும் இருந்ததாகவும், அர்ச்சுனனின் வாள் அந்த புற்றுக்குள் ஒளி மிகுந்து காணப்பட்டதாகவும் தலபுராணம் சொல்கிறது.

இந்த தலத்திற்கு சம்பந்தரின் தேவாரமும், சுந்தரரின் தேவாரமும் அழகு சேர்க்கின்றன.

சுந்தரரின் தேவாரத்தில் அவர் மண்ணி ஆற்றைப்பற்றியும் குறிப்பிடுகிறார் .

  குடமுனி கரத்தில் ஏந்துங் குண்டிகை இருந்து நீங்கிப்

படிதனில் வேறு வேறாய்ப் பற்பல நாமந் தாங்கிக்

கடல்கிளர்ந் தென்னச் செல்லுங் காவிரி யென்னு மாற்றின்

வடகரை மண்ணி யின்பால் வந்தனன் கருணை வள்ளல்! (கந்தபுராணம் )

கந்தபுராணம் அகத்தியரின் குண்டலத்திலிருந்து வந்து , பலப்பல பெயர்களோடு, கடல்போலத் திகழும் காவிரியின் வடகரையில் உள்ள மண்ணி என்னும் ஆற்றுக்குக் கந்தன் வந்ததாகச் சொல்கிறது. 

தமிழ்க்கடவுள் வந்த இடம் என்றால், இந்த இடத்தின் பழமைக்கும் மாட்சிக்கும் வேறு ஏதேனும் சொல்ல அவசியம் இல்லை. 

மண்ணுதல் என்ற சொல்லுக்கு கழுவுதல் என்றும் பொருள் இருக்கிறது.

நம்முடைய தீவினைகளைக்கழுவும் வகையில் இந்த தலத்தில் மண்ணி ஆறு பரவியிருக்கிறது. 

மண்ணி ஆற்றின் மலர் நீலோத்பவம். சோழநாட்டில் நீர்வளம் உள்ள இடங்களில் எல்லாம் இந்த மலரைப்பார்க்கலாம். இந்த மலர் இலங்கை நாட்டின்தேசிய  மலரும் கூட. 



படைக்கண் சூலம் பயில வல்லானை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,

கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை, காமன் ஆகம்தனைக் கட்டு    அழித்தானை,

சடைக்கண் கங்கையைத் தாழ வைத்தானை, தண்ணீர்மண்ணிக் கரையானை, தக்கானை,

மடைக்கண் நீலம் மலர் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, -மறந்து என் நினைக்கேனே? . (7.57 திருவாழ்கொளிபுத்தூர்)

இன்றைய நாளில் வாள் ஒளி புற்றூர் மருவி திருவாழ்கொளிப்புத்தூர் என்று வழங்கப்படுகிறது.

படைக்கண் சூலம் பயில வல்லானை- தன் கரங்களில் தங்கியுள்ள படைக்கருவிகளில் சூலம் என்ற ஒன்றைப்பழக வல்லவனும்

பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை- இந்த வரியைப்பாருங்கள். இதே போல பாவிப்பார், மனம் பாவிப்பானை என்று திருக்கச்சி ஏகம்பத்தின் தேவாரத்தில், தனக்கு இடக்கண் கிடைத்தபோதும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார். 

அந்த தேவாரத்தைக்கீழே காணலாம் 

உற்றவர்க்கு உதவும் பெருமானைஊர்வது ஒன்று உடையான்உம்பர் கோனை,

பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைபாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,

அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற

கற்றை வார் சடைக் கம்பன் எம்மானைகாணக் கண் அடியேன் பெற்ற ஆறே! . (கச்சி ஏகம்பம்-சுந்தரர் தேவாரம்) 


பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை-தன்னை மனதில் பாவிப்பவர்களின் மனதில் பரவி, அதைத்தன் அகமாகக்கொள்வார் சிவபெருமான் 

கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை-விரும்பி, மனதில் கர்வமேதுமின்றி, மண்டையோட்டுத்தலையில் பிச்சை வாங்குகிறார் சிவபெருமான்.

நம்மில் பலபேருக்கு செய்யும் தொழிலைப்பற்றிய கர்வம் இருக்கிறது. ஆன்மீக முன்னேற்றம் வேண்டுவோருக்கு இருக்க வேண்டிய மற்றொரு குணம் கர்வம் துறத்தல் என்பதையும் சிந்திப்போம். 

காமன் ஆகம்தனைக் கட்டு    அழித்தானை-உடலழகு மீது கர்வம் கொண்ட மன்மதனை உடல் அழியச் செய்தார். 

ஒரே அடியில் கர்வமில்லாத சிவபெருமானையும், கர்வம் கொண்ட மன்மதனையும் சொன்னது சிறப்பு !

சடைக்கண் கங்கையைத் தாழ வைத்தானை-கங்கையைச்  சடையில் அது அங்கிருந்து உலகுக்கு வரும்படி தாழ  வைத்தவனும் 

தண்ணீர்மண்ணிக் கரையானை-

கங்கையைச்  சொன்ன அதே அடியில் மண்ணி ஆற்றையும் சொல்கிறார் சுந்தரர்.

 தண்ணீர்-குளிர்ந்த நீரை உடைய மண்ணி ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான் 

தக்கானை- எல்லாத் தகுதிகளும் உடையவனை  (Ultimate Fit)

மடைக்கண் நீலம் மலர் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை-நீர்மடைகளில் நீலோத்பவ  மலர் மலர்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போன்ற  பெருமானை

மறந்து என் நினைக்கேனே? மறந்து வேறொன்றையும் நினைக்க முடியாது.

தக்கேசி எனப்படும் பண்ணில் அமைந்த இந்த பாடல், எப்படி சிவபெருமானை மறக்க முடியும் என்ற பொருளில் அமைந்ததாக இருக்கிறது. 

திருஞானசம்பந்தர் தன்னுடைய இளம்வயதில் முக்தி அடையப்பெற்றவர். அவருடைய திருவாழ்கொளிபுத்தூர் தேவாரம் பாடல் அமைந்த விதத்தில் வித்யாசமாக இருக்கிறது.

ஓராயிரம் பாடலிலே உன் பாடலை நான் அறிவேன், ஆயிரம் மலர்களே போன்ற பல திரையிசைப்பாடல்களில் ஆயிரம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வருவதைப்பார்க்கலாம். இந்த தேவாரத்தில், ஆயிரம் என்ற சொல் சிவபெருமானுக்கு அடைமொழியாக பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

எண்ணில் ஈரமும் உடையார்; எத்தனையோ இவர் அறங்கள்

கண்ணும் ஆயிரம் உடையார்; கையும் ஓர் ஆயிரம்

                                                       உடையார்;

பெண்ணும் ஆயிரம் உடையார்; பெருமை ஓர் ஆயிரம்

                                                       உடையார்;

வண்ணம் ஆயிரம் உடையார் வாழ் கொளிபுத்தூர் உளாரே

எண்ணில் ஈரமும் உடையார்:மனதில் இரக்கம் மிகுந்தவர் சிவபெருமான். தொண்டர்களின் மனக்கவலைகளுக்கு இறங்குபவர். 
எத்தனையோ இவர் அறங்கள்-அவர் பல அறச்செயல்கள் செய்பவர். 

கண்ணும் ஆயிரம் உடையார்; கையும் ஓர் ஆயிரம்

                                                       உடையார்

கண்களும், கரங்களும் ஆயிரம் உடையவர். எத்தனைக்கோடி உயிரினங்களையும் காப்பாற்றுபவர் என்பதால், அவருக்கு ஆயிரம் கண்களும், கரங்களும் தேவை தானே. 
பெண்ணும் ஆயிரம் உடையார்-
ஆயிரம் பெண்களைக்கொண்டவர் என்று பொருள் கொள்ளக்கூடாது. ஆற்றல் என்பது பெண்வடிவம். சிவனும் சக்தியும் ஒன்றே என்பதால், ஆயிரம் விதமான ஆற்றல்களைக்கொண்டவர்.

பெருமை ஓர் ஆயிரம்

                                                       உடையார்-

 தன்னுடைய இயல்பின் மூலமாகவும், செயல்களின் மூலமாகவும், ஆயிரம் பெருமை உடையவர். 
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ் கொளிபுத்தூர் உளாரே
ஆயிரம் வண்ணம் கொண்டவர்- திருவாழ்கொளிபுதூரில் வாழும் சிவபெருமான் .
அதே தேவாரத்தில் உள்ள இன்னும் இரண்டு பாடல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

பரவுவாரையும் உடையார்; பழித்து இகழ்வாரையும்

                                                      உடையார்;

விரவுவாரையும் உடையார்; வெண் தலைப் பலி கொள்வது

                                                      உடையார்;

அரவம் பூண்பதும் உடையார்; ஆயிரம் பேர் மிக

                                                      உடையார்;

வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

பரவுவாரையும் உடையார்-பரவுவார்- புகழ்வோரையும் தன்னுடையவர்களாக நினைப்பவர் சிவபெருமான். இது பெரும்பாலான மக்களின் இயல்பு. தங்களுக்கு வாழ்க வாழ்க என்று புகழ்பவர்களை எல்லாருக்கும் பிடிக்கும்.
ஆனால், 
பழித்து இகழ்வாரையும்   உடையார்- தன்னை இகழ்ந்து பேசுபவர்களை வெறுக்காது அவர்களையும் தன்னுடையவர்களாக நினைப்பவர் சிவபெருமான். விருப்பு, வெறுப்பு போன்ற குணநலன்களைக்கடந்தவர். 

விரவுவாரையும் உடையார்-
பரவுவார்
இமையோர்கள்... விரவுவார் மெய்யன்பின் அடியார்கள்’ என்கிறது திருவாசகம்
உண்மையான அன்போடு, கூடி இறைவனில் கலக்கும் அளவுக்கு அன்புடைய தொண்டர்களையும் உடையவர்.

வெண் தலைப் பலி கொள்வது

                                                      உடையார்,அரவம் பூண்பதும் உடையார்-பிரம்மனின் தலையோட்டில் பலி தேர்பவர்;பாம்புகளை அணிந்திருக்கிறார் 

ஆயிரம் பேர் மிக   உடையார்-ஆயிரம் பேர் கொண்டவர்

வரவும் ஆயிரம் உடையார்-வரமும் ஆயிரம் உடையார்

வாழ்கொளிபுத்தூர் உளாரே

சிவபெருமான் யாரிடமும்  வரவு எதிர்பார்க்கவில்லை. அவர் நமக்கு ஆயிரம் வரங்கள் அருள்பவர். அவர் வாழ்கொளிபுத்தூரில் உள்ளவர்.


ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு படிநிலைகளைக்கடந்து வாழ்கிறோம். இருபது வயதுத்துடிப்பில், மானம் பெரிதாகத்தோன்றும். கொஞ்சம் முதிர்ச்சி வந்தபிறகு, தானம் செய்வது மனதுக்கு அமைதி அளிப்பதாக நினைக்கிறோம். பிறகு ஞானத்தை நோக்கிய தேடலுக்கு நகர விழைகிறோம். முடிவாக வானுலகம் நோக்கிப்பயணிக்கிறோம். 

இந்த எல்லா வாழ்க்கையையும் உடையவர் சிவபெருமான்.
அவருக்கு நம்மைப்புரியும் என்பதான ஆறுதலைத்தருகிறது இந்தப்பாடல் .

மான வாழ்க்கைய துடையார்
     மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்
தான வாழ்க்கைய துடையார்
     தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த
ஞான வாழ்க்கைய துடிடயார்
     நள்ளிருண் மகளிர்நின் றேத்த
வான வாழ்க்கையை துடையார்
     வாழ்கொளி புத்தூ ருளாரே. 

மான வாழ்க்கை அது உடையார்-மானமுள்ள பெருமையான வாழ்க்கையை உடையவர் சிவபெருமான் 
மலைந்தவர்-தம்மை எதிர்த்தவர் 
(வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட மட்டித்திட்டு
உயர் கொக்கைக் குத்தி மலைந்த வீரா ...திருப்புகழ் )

மதிற்பரி சறுத்தார்- மதில்களை அழித்தார். (திரிபுரங்களை அழித்தவர் )
 தான வாழ்க்கை அது உடையவர்-தானங்கள் பல செய்கின்ற வாழ்க்கை உடையவர் 
தவத்தோடு நாம் புகழ்ந்தேத்த ஞான வாழ்க்கையது உடையார் -தவத்தின் மூலமாக வரும் ஞானமும் அடையப்பெற்றவர் 
நள்ளிருளில் மகளிர் நின்றேத்த வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளி புத்தூருளாரே-
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் சிவபெருமான். அவருக்கு நள்ளிரவில் இன்னிசை கீதங்கள் பாடுகின்றனர் வானுலக மங்கையர். அவர்களின் புகழ்வான கீதங்களைக்கேட்டபடியே வானுலக வாழ்க்கையும் கொண்டவர் திருவாழ்கொளிபுத்தூரில் உள்ள ஈசனார். 

அவரைப்புகழ்ந்து ஏத்துவதால் நமக்கும் சிறப்பான மான, தான, ஞான, வான வாழ்க்கை அமையப்பெறலாம். (முற்றும்) 

2 comments:

Krithika said...

Excelling sharing of knowledge. Thank you so much. Keep the good work going.

Anonymous said...

அருமை