சும்மாடு என்ற சொல்லை அறிந்திருக்கிறீர்களா? இப்போதுள்ள 2k kids எனப்படும் தலைமுறை, தெரியாது என சொல்லக்கூடும்.
இந்தப்படத்தைப் பார்த்தபடி வாசியுங்கள். பல எளிதான தமிழ் சொற்களைப்புழக்கத்தில் கொண்டுவர இது உதவும்.
எப்போதாவது மனம் எதோ இனம்புரியாத சஞ்சலத்தில் இருந்தால், திருமுறையை எடுத்து அதில் ஏதாவது பாடலைப்படிக்கும் போது அது என் மனதுக்கு ஆறுதல் அளிப்பதை உணர்ந்திருக்கிறேன்.
அப்படிதான் இந்த வாரம், பணியிடத்தில் உள்ள சுமை கொஞ்சம் அதிகம், அதோடு நாள்பட்ட சளி, இருமல் என்று உடல் வலி, திடீரென மனதில் வந்த பெற்றோர், உடன்பிறந்தோரின் முகங்கள், யாரை எப்போது பார்ப்பது என்ற ஏக்கம், என எல்லாமும் கலந்ததாய் இருந்தது மனது. அப்பரின் பாடல் கண்முன்னே தென்பட்டது. உடனே ஒரு தெளிவும் பிறந்தது!
நம்மில் பெரும்பாலானோரை விட அதிக சிக்கலானது தான் அப்பர் பெருமானின் வாழ்க்கை. ஆனால், இறைவனின் திருவடி ஒன்றைப்பற்றிக் கொண்டதனால் அவரது வாழ்க்கை பெருவாழ்வாக, இன்றும் சிந்திக்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது.
இன்றளவும் நமக்கு கோயில்கள், சுத்தமாய்க் கிடைத்திருப்பதற்கு, அவர் செய்த உழவாரப்பணியே காரணம்.
அப்பர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டில் இன்று நாம் வாழ்வது இருபத்தோராம் நூற்றாண்டு. இந்த சும்மாடு என்ற சொல் அப்போதே வழக்கத்தில் இருந்திருக்கிறது.
படத்தில் உள்ள கூடை சுமக்கும் அம்மா தன் கூடைக்குக்கீழே சுருட்டி வைத்திருக்கும் துணி தான் சும்மாடு- சுமையை சுமக்க உதவும் ஒன்று, (ஒரு செல்வம் ).
அதே போல அத்தா என்ற சொல், அப்பாவைக்குறிக்கும்.இறைவனையும் குறிக்கும் இன்றும் இஸ்லாமியக்குடும்பங்களில் அத்தா என்று அப்பாவைச் சொல்வார்கள்.
மணிவாசகப்பெருமான், அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே என்பார்.
இவை இரண்டையும் ஒரே பாடலில் திருவானைக்காத் தேவாரத்தில் கண்டேன்.
இன்று வரை இந்த தலம் காணக் கிடைக்கவில்லை. "கோனைக்காவி" என்று தொடங்கும் தேவாரத்தைப்பயின்றிருக்கிறேன். என்றாவது அது வாய்க்கும் என்றே நம்புகிறேன்.
அப்பர் பெருமான் தாய் தந்தை இருவரையும் இழந்த பின்னர், சமண மதத்தைப்பின்பற்றினார். மீண்டும் சைவத்தைத் தழுவியபிறகும், வாழ்வின் நிலையாமை பற்றிய எண்ணங்கள் அவரிடம் மேலோங்கி இருப்பதைக்காணலாம்.
திருவானைக்காத் தலத்திற்கென்று ஒரு தலபுராணம் உள்ளது. ஒரு யானையும், ஒரு சிலந்தியும் ஒரே நேரத்தில் சிவபூஜை செய்யலாயின. சிலந்தி தன் எச்சிலைக்கொண்டு சிவலிங்கத் திருமேனியின் மேலே உருவாக்கிய வலையை, யானை பிய்த்தெறிந்தது. சிலந்தி யானையின் தும்பிக்கைக்குள் போய், யானையை வருத்தியது. இரு விலங்குகளும் சிவலோகம் சென்ற பின்னர், சிலந்தி கோச்செங்கச்சோழனாகப்பிறவி எடுத்தது. முற்பிறவியில் செய்த முயற்சியைத்தொடர்ந்து , சோழ அரசனாக யானை புகாத மாடக்கோயில்கள் பலவற்றைத் தன் தேசம் முழுக்க எழுப்பினான். அவ்வகையான எழுப்பப்பட்ட ஆலயங்களுள் ஒன்று திருவானைக்கா ஆலயம்.
மற்ற ஆலயங்கள், திருஆக்கூர்,குடவாசல், உறையூர்(திருமுக்கீஸ்வரம்),நல்லூர், முதலியவை ஆகும்.
கோச்செங்கட்சோழ நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர்.
இவர் வாழ்ந்த காலம் கி.மு. 500 ஆக இருக்கலாம். கரிகாலச் சோழன், கிள்ளி வளவன், கோச்செங்கச் சோழன் போன்றோர், ராஜராஜ சோழனை விட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள். இவர்களின் காலம் சங்க காலம் என்றே அறியப்படுகிறது.
வழக்கமாக வைணவர்கள் சைவர்களைப்புகழ மாட்டார்கள் என்ற கருத்து நிலவுகிறது. திருமுறைகளைத்தொகுத்தவர், நம்பியாண்டார் நம்பி. அவருடைய ஊர் திருநாரையூர். அந்த ஊரில் உள்ள வைணவ ஆலயத்தைப்பாடிய திருமங்கை ஆழ்வார், வீரமுள்ள அரசரான கோச்செங்கட்சோழனனின் பெருமையைப்பாடுவதாக பல பாசுரங்கள் இருக்கின்றன.
பைங்கணாள் அரி உருவாய் வெருவ நோக்கிப்
பருவரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்
அங்குருதி பொங்குவித்தான் அடிக் கீழ் நிற்பீர்
வெங்கண் மாகளிறு உந்தி வெண்ணியேற்ற
விறல் மன்னர் திறல் அழிய வெம்மா உய்த்த
செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (1501-பிரபந்தம் )
பைங்கணாள்-குளிர்ந்த கண்களை உடைய பெருமாள் -விஷ்ணு
பருவரை -பருமனான மலை
ஆகம்-உடல்
விறல் -வீரம்
திறல்-வலிமை
வெம்மா-கோபம், வெம்மை
குளிர்ந்த கண்களையுடைய பெருமாள், சிங்க உருவம் கொண்டு, ஹிரண்யன் அச்சப்படுமாறு அவனை நோக்கி, தனது பருத்த மலை போன்ற தோள்களால் இரண்யனைபிடித்து வாங்கி, தனது கைகளால், வாழ் போன்ற கூர்மையான நகங்களால், அவனது உடலைக்கிழித்தி, இரத்தத்தைப் பொங்க வைத்தார். அவரின் அடிநிழனில் கீழ் நில்லுங்கள். வெண்மையான கண்களையுடைய யானையை உந்தி நகர்த்தி, வெண்ணியாற்றங்கரையில், பல வீரமான மன்னர்களின் வலிமை அழியுமாறு, கோபம் கொண்ட, சிவந்த கண்களை உடைய கோச்செங்கெங்கச்சோழன் சேர்ந்த கோயிலான திருநறையூர் மணிமாடம் சேருங்கள்.
இந்த திருநாரையூரில் உள்ள மாடக்கோயில் , கோச்செங்கட்சோழரால் எழுப்பப்பட்ட்டது. இன்றைய நாளில் இந்த ஊர் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
திருவானைக்கா பஞ்சபூத தலங்களுள் , நீருக்கானது. இறைவன் இருக்கும் கருவறை எப்போதும் காவேரி நீரால் சூழப்பட்டிருக்கும். அம்மை அகிலாண்டேஸ்வரியின் புகழும் உலகறிந்த ஒன்றாகும். காளமேகப்புலவர், அகிலாண்டேஸ்வரியின் அருள் பெற்ற பின்னர் தான் கவி ஆனார். இந்த தலத்தில் ஆதி சங்கரர், ஸ்ரீ சக்ரங்களை அன்னையின் காதணிகளாக அணிவித்துள்ளார்.
இப்போது தேவாரத்தைப்பார்ப்போம்
எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே (06-62-01)
எம்மாடு சும்மாடாம்? மாடு என்றால் செல்வம். எந்த செல்வம் நம்மை சுமக்கும்? நம்முடைய வாழ்வு முடியும்போது அம்பானி அளவு செல்வம் இருந்தாலும், அந்த செல்வம் நம்மை சுமக்காது.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. (திருக்குறள்: 40)
ஒருவருக்கு அழியாத செல்வம் கல்வி மட்டுமே என்கிறார் திருவள்ளுவர். மாடு என்ற சொல் செல்வத்தைக்குறிக்கிறது.
எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் ஏவர் நல்லார்?
எத்தாயர்:
அப்பர் பெருமான் வாழ்ந்த காலத்தில் ஆண்கள் பரவலாக பலதாரம் கொண்டவர்களாக இருந்திருக்கக்கூடும். தாய் என்று வரும்போது அது பெற்றவளையோ, வளர்த்தவர்களையோ, அல்லது அன்னை என்ற இடத்தில் இருப்பவர்களையோ குறிக்கலாம் என்பதால் அங்கு பன்மை விகுதி உள்ளது.
எத்தாயர் என்பது, எத்தனை சிறந்த தாயாராக இருந்தாலும் என்ற பொருளிலும் கையாளப்படலாம்.
தாயாக இருப்பவர்களிலும், தந்தை எனப்பட்டவரிலும், சுற்றத்தவர்கள் என்றிருப்பவர்களிலும் யார் நல்லவர்?
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை:
நம் வாழ்க்கை முடிந்தால் இதில் யாரும் வந்து உதவமாட்டார்கள்.
சித்தாய வேடத்தாய்:சித்து என்பது அறிவு, ஞானம், ஞானம் வந்தால், துன்பம் போய்விடும். அறிவு வடிவான பெருமானே !
நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா:நீண்டு ஓடும் பொன்னி எனப்படும் காவிரிக்கரையில் உள்ள திருவானைக்காவின் தலைவனே,செல்வனே
அத்தா:இறைவனே
உன் பொற்பாதம் அடையப் பெற்றால்:உன்னுடைய பொன்னான திருவடிகளை நான் அடைந்தால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே:அதென்ன அல்லகண்டம்? இந்த வரி இந்த பதிகத்தின் எல்லா பாடல்களிலும் கடைசியில் வருகிறது. கண்டம் என்றால் என்ன என்று தமிழர்களில் யாரைக்கேட்டாலும், ஆசிய கண்டம், ஐரோப்பா கண்டம் என்று சொல்வார்கள். தமிழில் கண்டம் என்ற சொல்லுக்கு பல பொருட்கள் இருக்கின்றன. யானையின் கழுத்தில் உள்ள கயிறு, தாள வகையில் ஒன்று, பகுதி,ஜோதிடக்காரர்கள் மொழியில் வர இருக்கும் ஆபத்து இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதில் கண்டம் என்ற சொல், தொண்டை என்ற பொருளில் பயன்படுத்தப்படும் போது அது வடமொழியிலிருந்து வந்திருப்பதை உணரலாம். நீலகண்டம், நீலம்பாய்ந்த கழுத்து/தொண்டைப்பகுதி.
அல்லகண்டம் என்ற சொல் துன்பத்தைக்குறிக்கும்.இப்போது பலரும், நல்லை அல்லை என்ற திரையிசைப்பாடலை முணுமுணுக்கிறார்கள். அல்லை என்ற சொல் நல்லது அல்லாத - கெட்ட என்ற பொருளில் அறியப்படும்.
உன் திருப்பாதத்தை நான் அடையப்பெற்றால் நான் துன்பம் அடைவேனா?
உன் திருவடியை அடைந்தபிறகு எனக்கு துன்பங்கள் ஏற்படாது.
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்வேன்: துன்பம் என்ற ஒன்று எனக்கு ஏற்படாது. அப்படி இல்லாத ஒன்றைக்கொண்டு நான் என்ன செய்வேன். ஒன்றும் செய்யமாட்டேன் என்கிறார் அப்பர் பெருமான்.
இந்த பாடல் என்னோடு உங்களுக்கும் ஆறுதலைத்தந்திருக்கும் என்றே நம்புகிறேன் !
2 comments:
அப்பரின் பதிகத்தைப்
படித்ததுமே கண்ணீர் ததும்பினேன். சும்மாடு செய்தி அருமைங்க மேடம். நன்றி.
அருமை!!!
Post a Comment