Friday, March 21, 2025

ஆமாறு யார் அறிவார்?

இரண்டு லட்சத்திற்கும் அதிகமானச் சொற்களைக்கொண்ட தமிழ் மொழி, திருநெறிய தமிழ் என்று திருஞானசம்பந்தப்பெருமானால் கொண்டாடப்பட்ட மொழியாகும். இன்று தமிழில்  புழக்கத்தில் உள்ள சொற்கள் பத்தாயிரத்துக்கும் கீழே தான் இருக்கும் என்கிறார் எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன். 

இவ்வகைக்கட்டுரைகளின் நோக்கம் மெய்யின்பதோடு, தமிழ் இன்பத்தையும் சேர்ப்பதே ஆகும்.  

முதலில் காரைக்கால் அம்மையின் ஒரு பதிகத்தைப்பார்ப்போம். 

விண்வெளியில் அறுபது வயதுள்ள   அமெரிக்கப்பெண்மணி இருக்கும் அதே வேளையில், நம் வீட்டுப்பெண்கள் பொது இடங்களில்  கழிவறை செல்லக்கூட யோசிக்கவேண்டிய நிலை உள்ளது. 

பெண்களுக்கான பாதுகாப்பு என்பது எப்போதும் கேள்விக்குறியாகும் நாட்களில், நினைத்தபோது அம்மையைப்போல பேயுரு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்காத பெண்கள் இல்லை.

 இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா

றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே

மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே

இன்னுஞ் சுழல்கின்ற திங்கு (அற்புதத்திருப்பதிகம் பதினோராம் திருமுறை )

இன்று விண்வெளியில் பலமாதங்களுக்குப்பிறகு, பூமித்திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் பற்றிப்பல செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அவருடைய சென்ற ஆண்டு பதிவில், ஒரே நாளில் பதினைந்து முறை சூரிய உதயம் காண்பதாகச் சொன்னார். பூமிக்குத்திரும்பி தன் குடும்பத்தோடு சேரும் அவர் மனம், விண்வெளியைத்தொட்டுக்கொண்டே இருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும் அல்லவா? 

அதைப்போலத்  தான், இறைவனைச் சோதிப்பிழம்பாகத் தரிசனம் செய்த காரைக்கால் அம்மையின் மனமும் இருக்கிறது. 

இதுவென்றே ஈசன் திருவுருவம்: நம்மிடம் அம்மை சொல்கிறார்- இது தான் ஈசனின் திருவுருவம் 

ஆமாறிதுவன்றே:ஆமாறு என்ற சொல் நம் தமிழ் இலக்கியங்களில் பல வகைகளிலும் கையாளப்பட்டு வந்துள்ளது. 

கம்பராமாயணம், திருப்புகழ், திருவருட்பா, திவ்ய பிரபந்தம், திருமுறை என்று எல்லாவற்றிலும் இந்த சொல் பரவிக்கிடக்கிறது. 

ஆமாறு என்றால் உபாயம், சரியான வழியில் ஒன்றை முறையாகச் செய்வது

ஆமாறு= Plan/Device/A proper way of executing something/Strategy)

இறைவனே எனக்கான ஆமாறு என்கிறார் காரைக்கால் அம்மை.

என்று எனக்கோர் சேமம் இதுவன்றே:முன்புள்ள காலங்களில் அஞ்சல் அட்டைகளில் இடதுகோடி மேல் மூலையில், க்ஷேமம் என்று என் பாட்டி எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். 

க்ஷேமம் என்பது நலம் .இறைவனே எனக்கு நலம் செய்விப்பவர்; பாதுகாப்பு என்னும் சேமம் தருபவர் என்று அம்மை சொல்வதாக நான் புரிந்துக்கொள்கிறேன். 

மின்னுஞ் சுடருருவாய்: அழல் வண்ணம் கொண்ட சிவபெருமான், மின்னும் சுடர் உருவமாகக்காட்சி தருகிறார். 

மீண்டாயென் சிந்தனைக்கே,இன்னுஞ் சுழல்கின்ற திங்கு:

என் சிந்தனையை விட்டு மீளாமல், இன்னும் மனதுக்குள்ளே சுழல்கிறார் சிவபெருமான் என்கிறார் அம்மை. 

இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா

றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே

மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே

இன்னுஞ் சுழல்கின்ற திங்கு

ஆமாறு என்ற சொல்லைப் பரிமேலழகர் திருக்குறளுக்கான உரையில் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். இந்தச் சொல் திருக்குறளில் இல்லை.



ஆமாறு என்ற சொல்லை இதே வழியில் பயன்படுத்தியுள்ள  பிரபந்தப்பாடலைக் காண்போம்.

ஆமாறு அறியும் பிரானே
      அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்
      இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்  (பெரியாழ்வார் திருமொழி 1888)


இருவாட்சி என்றால் என்ன பூ என்று நீங்கள் அறிவீர்களா? 

ஆமாறு அறியும் பிரானே- ஒன்றை எப்படி முறையாகச் செய்யவேண்டும் என்று அறியும்உணர்ந்த  பிரானே 

  அணி அரங்கத்தே கிடந்தாய்
அணி அரங்கமான, திருவரங்கத்தில் கிடப்பவனே

ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்:எனக்கு ஏமாற்றம் ஏற்படாமல் தவிர்த்து
இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்-இருவாட்சி என்பது செடிமல்லிகையைக்குறிக்கிறது. பெரிய வகையிலான இந்தப் பூவுக்கானச் சிறப்புப்பெயர் இருவாட்சி. இதே பெயரில் ஒரு பறவையும் இருக்கிறது (Hornbill)

இருவாட்சி பூச்சூட்ட வாருங்கள் என்று பெரியாழ்வார், அரங்கத்து அம்மானைத்தன்னை ஒரு பெண்ணாகப்பாவித்து  அழைக்கிறார். 

 மேற்கிற்கும் கிழக்கிற்கும் ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் வேறுபாடுகள் எப்போதும் இருக்கின்றன. 

Cognito, Ergo Sum 
ரெனே டேக்கார்ட் என்ற பதினேழாம் நூற்றாண்டின் மெய்யியலாளர் ஒருவரின் கூற்று இது. "நான் சிந்திக்கொண்டிருக்கிறேன். அதனால் நான் இருக்கிறேன்" என்று பொருள்படும். 

தன்னை இறைவனுக்குக்கொடுத்து மறக்கும் கூற்றுக்கு எதிர் திசையில் இருக்கும் மாறுபட்ட சிந்தனை, இறைவன் படைத்த அதே உலகின் இறுதிசைகளிலும் இருப்பது வியப்பளிக்கிறது. 

இப்போது நாம் பார்க்க இருப்பது, மணி வாசகப்பெருமானின் மனம் குழையும் திருவாசகம். 

மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொரும் மிகஅலறிச் சிவபெருமான் என்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவாமா
றருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே 
(திரு ஏசறவு- மாணிக்கவாசகர்- எட்டாம் திருமுறை)

இந்த பாடலைப்பதம் பிரித்துப்படிப்போம். 

மருவ இனிய மலர்ப்பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருகத் 
தெருவுதொறும் மிக அலறி சிவபெருமான் என்று ஏத்தி 
பருகிய நின்பரங்கருணைத் தடங்கடலிற் படிவு ஆமாறு 
 அருள் எனக்கு  இங்கு இடை மருதே இடம் கொண்ட அம்மானே!

இடை மருதே இடம் கொண்ட அம்மானே!-திருவிடைமருதூரைத் தனது இடமாகக்கொண்ட அம்மானே (இறைவனே).

அம்மான் என்ற சொல், தாய்மாமன், அத்தையின் கணவர், மாமனார் போன்ற உறவுகளைக்குறிப்பதோடு, கடவுளையும் குறிக்கும். 

மருவ இனிய மலர்ப்பாதம் மனத்தில் வளர்ந்து-

மருவ என்ற சொல்லுக்கு பின்பற்ற என்றும் பொருள் கொள்ளலாம். எப்போதும் மணிவாசகப்பெருமான் இறைவனின் திருவடிப்பெருமையைப் பேசுவார். இம்மையே உம்மை சிக்கெனப்பிடித்தேன் போன்ற வரிகள் இங்கே நினைவுகூரத்தக்கவை.

பின்பற்றுவதற்கேற்ற மலர்போன்ற சிவபெருமானின் பாதங்களை மனதில் வைத்து, அந்த நினைவானது வளர்ந்து 

உள் உருகத் :உள்ளம் உருக 

தெருவுதொறும் மிக அலறி:தெருக்கள்தோறும் ஓலமிட்டு அலறி 

சிவபெருமான் என்று ஏத்தி :சிவபெருமானே என்று துதித்து ,

தன்னிலை மறந்தால் தான், இவ்வாறு தெருக்களில் இறைவன் பெயரைச் சொல்லி ஓலமிடுதல் நடக்கும். 

பருகிய :நுகர்ந்த/அனுபவித்த 

நின்:உன்னுடைய 

பரங்கருணைத் தடங்கடலிற்:பர என்றால் பெரிய. கடலுக்கு இன்னொரு பெயர் பரவை.

 தட என்றால் பெரிய என்றும் பொருள். 

பெருங்கருணை என்னும் பெரிய கடலில் அனுபவித்த. 

மணிவாசகர் பலமுறை இறைவன் தாமாகத்தேடி வந்து அருள் செய்த பேரனுபவம் வாய்த்தவர்.

படிவு ஆமாறு : பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் என்ற முதல் திருப்பாவையின் கடைசி அடி இங்கே நோக்கத்தக்கது. 

உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் புகழும்வண்ணம் இந்த மார்கழி நோன்பில், ஊன்றித் திளைத்திருக்க ஆண்டாள் தன் தோழியரை அழைப்பார்.

 படிவு என்ற சொல் ,இயற்கையாக படிந்திருக்கும் ஒன்றைக்குறிக்கும் (Deposit). பாசி போன்றவற்றைக்கூட சொல்லலாம். 

இறைவனுடைய கருணை என்னும் பெருங்கடலில் திளைத்து, படிவு போல ஆகுமாறு (ஆமாறு)

எனக்குஅருள்   இங்கு :எனக்கு இங்கு அருள் புரிவாயாக என்கிறார் மணிவாசகப்பெருமான்!

பாசி படியாமல் இருக்கவேண்டுமானால், ஒரு குளத்தில் அதிக நடமாட்டம் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், உன்னுடைய பெருங்கருணை என்னும் கடலில் திளைத்து, அதில் எந்த ஒரு தடுமாற்றமும் இன்றி, படிந்து இருக்குமாறு எனக்கு அருள் என்கிறார் மணிவாசகர்.  

ஆமாறு என்ற சொல்லோடு இந்த பயணத்தை அனுபவித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மீண்டும் சந்திப்போம். 

No comments: