Friday, June 17, 2016

பிள்ளையின் அழகில் மயங்கிய ஆளுடைய பிள்ளை!!!

இந்த தேவாரத்தை பாருங்கள்!!!. ஒவ்வொரு சொற்றொடரிலும் ஒரு யானை இருக்கும். 

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.



இது முதல் திருமுறையில் உள்ள சம்பந்தர் தேவாரம். எந்த ஊர் என்று உங்களால் சொல்ல முடிகிறதா?

இந்த கோயில் மேலிருந்து பார்த்தால் சோழ நாட்டின் பச்சை வயல்களின் அழகு தெரியும். 

இங்குள்ள சிவனார், ஒரு பெண்ணின் பிரசவ காலத்தில் அவள் தாயின் உருவத்தில் அந்த பெண்ணுக்கு உதவினார். தாயுமானவ சுவாமி என பெயரும் பெற்றார். 

இது திருச்சிராப்பள்ளி தேவாரம்!.மலையே இல்லாத பகுதியில்   உள்ள
ஒரு குன்று கோயில். முன்னாளில் சமண பள்ளியாக இருந்தது. பள்ளி என்று முடியும் ஊர்கள் பெரும்பாலும் சமண பள்ளியாக இருந்திருக்கின்றன.

(Image courtesy:tamilrasigan.wordpress.com)

Audio Link: http://shaivam.org/gallery/audio/tis-sat-nalamnalgum-nalvarnatramizh.htm




என் தேவார ஆசிரியர் திரு. மா.கோடிலிங்கம் சொல்வார்:தந்தையை பாட வந்த சம்பந்தர், பிள்ளையின் அழகில் மயங்கி,( ஆனை முகனை எண்ணி), யானை யானை  என்றே வருமாறு இந்த தேவாரத்தைபாடினார் என்று.


இந்த பாடல் குறிஞ்சி பண்ணில்- ஹரி காம்போஜி ராகத்தில் பாடுவார்.


பாடும்போது ,யானை கட்டி வைத்த இடத்தில  எப்படிமெதுவாக ஆடுமோ  அது மாதிரி அசைத்து அசைத்து  பாடணும் என்பார். சிரித்துகொண்டே நடக்கும் எங்கள் வகுப்பு!!!.

மிக எளிமையான பாடல் இது. 

நன்றுடையானை- நன்மைகளையே தன் உடைமையாகக் கொண்டவனை


தீயதிலானை-தீயது ஒன்றும் இல்லாதவனை 

நரை வெள்ளேறு ஒன்றுடையானை -மிக வெண்மையான எருதை தன் வாகனமாக கொண்டவனை  
உமை ஒரு பாகம் உடையானைஉமையாளை தன் உடலில் ஒரு பாகத்தில் கொண்டவனை 

சென்றடையாத திருவுடையானை-

அவனது அருளில்லாமல்  அடைய  முடியாத முக்தி என்னும் செல்வத்தை உடையவனும் 
சிராப்பள்ளி குன்றுடையானை - சிராப்பள்ளி குன்றை உடையவனை 
கூற என் உள்ளம் குளிருமே -இந்த சிவனாரை போற்றி பணிவதில் என் உள்ளம் குளிருமே.

1 comment:

Unknown said...

Thank you so much Om nama Shivaya